சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

துளித்துளிக் கடல்கள்

துளித்துளிக் கடல்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
துளித்துளிக் கடல்கள்

எஸ்.ராஜகுமாரன்

மிகப் பெரிய புத்த மடாலயம் அது. அங்கு பிரமாண்டமான, அழகான புத்தர் சிலை ஒன்று இருந்தது. அந்தச் சிலையின் தோற்றம் கைகளை உயர்த்தி ஆசிர்வதிப்பது போல் இருக்கும். முதிய துறவி ஒருவர் தினமும் அந்த மடாலயத்துக்கு வருவார்.

துளித்துளிக் கடல்கள்
துளித்துளிக் கடல்கள்

நெடு நேரம் புத்தரின் சிலை முன், தரையில் அமர்ந்திருப்பார். துறவியின் விழிகள் அமைதியாக புத்தரின் முகத்தைக் கூர்ந்து நோக்கியபடியே இருக்கும். அதைப் பார்ப்பவர்களுக்கு, அவர்கள் இருவரும் மெல்லிய குரலில் ஏதோ உரையாடுவது போல் தெரியும். இது வெகு காலமாக நடந்து கொண்டிருந்தது.

தினசரி நடக்கும் இந்தச் சம்பவத்தை மடாலயத்தின் தலைமை குரு கவனித்துக்கொண்டே இருந்தார்.

அன்றும் வழக்கம் போல் மடாலயத்துக்கு வந்தார் முதிய துறவி. புத்தர் சிலையை நீண்ட நேரம் உற்று நோக்கியபடி அமர்ந்திருந்தார். பிறகு எழுந்து புறப்பட்டவரை, வாசலில் எதிர்கொண்டார் தலைமை குரு.

முதியவரிடம் தனது சந்தேகத்தை மென்மையான வார்த்தை களால் எழுப்பினார்:

“ஐயா! உங்களைத் தினந்தோறும் இங்கு பார்க்கிறேன். நெடுநேரம் அமர்ந்து தியானம் செய்கிறீர்கள். புத்தரின் முகத்தை உற்று நோக்கிய படியே இருக்கிறீர்கள். அவர் உங்களிடம் ஏதோ சொல்வது போல் தெரிகிறது. புத்தர் உங்களிடம் என்ன சொன்னார்?’’

முதியவர் சிறு புன்னகையுடன் பதில் சொன்னார்: “புத்தர் எதுவும் சொல்லமாட்டார். ஆனால் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்!”என்றார்.

அதைக் கேட்டதும் மடாலயத்தின் தலைமை குருவுக்கு ஆச்சர்யம்.

“ஓ... அப்படியா! சரி... தினசரி தியானத்தில் அவரிடம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

“நானும் எதுவும் சொல்லமாட்டேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்!” என்றார் துறவி.

தலைமைக் குரு, ஒரு நிமிடம் முதியவரையே பார்த்துக் கொண் டிருந்தார். அவரோ புன்னகை மாறாமல் இவரைக் கடந்து சென்றார்.

அவர் போன பிறகு, மடாலயத்துக்குள் சென்ற குரு புத்தர் சிலையின் முன் அமர்ந்தார். முதிய துறவியைப் போன்றும் தானும் புத்தரின் திருமுகத்தைப் பார்க்கத் தொடங்கினார்.

‘தியானம் என்பது, எதையும் கேட்பதும் அல்ல; பெறுவதும் அல்ல. தனக்குள் மூழ்கி தன்னைத்தானே அறிந்துகொள்வது ஆகும். பேசாமல் இருப்பது மட்டுமே தியானம் ஆகாது. மலைப் பாறை இடுக்கிலிருந்து மெளனமாக ஓர் இன்னிசை கசிவதுபோல் அது பொங்கி வழிய வேண்டும். ஆம், தியானம் என்பது மெளனத்தை இசைக்கும் புல்லாங்குழல்!’ என்ற சொற்கள் அசரீரி போல் அவரின் ஆழ்மனதில் ஒலித்தன!

- பருகுவோம்...

`எப்போது தியானம் கற்பது?’

ஜென் குருவிடம் ஒருவன் வந்து, ‘`எப்படி தியானத்தில் ஈடுபடுவது?’’ என்று கேட்டான். `‘என்னைப் பார்த்துக் கொண்டிரு. தியானம் உனக்குக் கை வரும்’’ என்றார் குரு. அவனும் சம்மதித்தான்.

காலையில் குரு எழுந்தார். குளித்தார். பகல் முழுவதும் தோட்ட வேலையில் ஈடுபட்டார். உணவு வேளையில் உண்டார். வழிபாடு, பிரார்த்தனை, தியானித்தல், படித்தல் என்றெல்லாம் செய்யவில்லை. இதில் மனம் சலித்த சீடன், ‘`எப்போது நான் தியானம் கற்பது?’’ என்றான்.

குரு சொன்னார்: ‘`நான் குழி வெட்டியதும் தியானம்தான். தோட்டம் போட்டதும் தியானம்தான். உணவு உண்டதும் தியானம்தான். எனது வாழ்வே தியானம்தான். எனது வாழ்வில், தியானம் என்ற ஒன்று தனியாக இல்லை’’ என்று சிரித்தபடி சொன்னார் ஜென் குரு. மாசற்ற மனம் உள்ளவர், விழி மூடி அமர்ந்திருக்க அவசியமில்லை.

- கே.கீர்த்தனா, சென்னை-44