அலசல்
Published:Updated:

நமக்குள் மூன்றாவது மனிதன்!

நமக்குள் மூன்றாவது மனிதன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள் மூன்றாவது மனிதன்!

ஓவியம்:ஆர்செ

தன்னை, தன் வல்லமையை, திறமையை முழுமையாக உணர்ந்தவன் எப்படிப்பட்ட சூழலையும் தனக்குச் சாதகமாக்கிக்கொள்வான். பெர்னார்ட் ஷாவை அறியாதவர் எவரும் இல்லை. அவருடைய நாடகங்களில் அடித்தட்டு மக்களின் உணர்வுகள் பிரதிபலிக்கும்; பொதுவுடமைக் கருத்துகள் வெளிப்படும்.

ஒருமுறை, அவரை ஷேக்ஸ்பியரின் ரசிகர்கள், தாங்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசவைத்தார்கள். ஷாவை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காகவே ஷேக்ஸ்பியரின் ரசிகர்கள் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஷா அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அற்புதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார். தொடர்ந்து ஷேக்ஸ்பியரின் ரசிகர்கள் ஒருவர் மாறி ஒருவர் எழுந்து, அவருடைய பேச்சைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்கள். அவரோ சிரித்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார்.

நமக்குள் மூன்றாவது மனிதன்!

அனைவரும் பேசி முடித்ததும் ஷா எழுந்தார். ``அவ்வளவுதானா? வேறு ஏதும் விமர்சனம் இல்லையா?’’ என்று கேட்டார். அனைவரும் அமைதியாக இருந்தனர்.

``இங்கே நான் பேசிய அனைத்துமே ஷேக்ஸ்பியருடைய நாடகங்களி லிருந்து எடுத்தவைதான்’ என்று புன்னகையோடு சொல்லி, அனைவரையும் வெட்கப்பட வைத்தார் ஷா.

இதுதான் தோல்வியைக்கூட வெற்றியாக்கிக் கொள்கிற சாமர்த்தியம். எப்போது, எப்படி சுதாரித்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு கலை. அது தன்னை அறிந்தவர்களுக்கு எளிதில் கைகூடும்.

ராமாயணக் காலத்தில் கேகய தேசத்தில் நிகழ்ந்த ஒரு கதை. தல யாத்திரையாக கேகய தேசத்துக்கு வந்தார் துர்வாசர். அதன் அழகால் கவரப்பட்டவர், அங்கேயே சிறிது காலம் தங்கியிருந்து தவம் இருக்க ஆசைப்பட்டார். இதையறிந்த மன்னன் அசுவபதி மகிழ்ந்தான். துர்வாசர் தவமியற்ற அரண்மனையை ஒட்டிய வனத்திலேயே ஏற்பாடுகள் செய்து கொடுத்தான். மட்டுமன்றி உடன் இருந்து பணிவிடை செய்யும் பொறுப்பைத் தன் மகள் கைகேயியிடம் ஒப்படைத்தான். வெகுகாலம் நீண்டது துர்வாசரின் தவம். ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கும் துர்வாசரைக் கண்டு சிறுமி கைகேயியிக்கு ஆச்சரியம்! நாளடைவில், அந்த ஆச்சரியமே சந்தேகமாக உருவெடுத்தது.

‘முனிவர் உயிரோடுதான் இருக்கிறாரா?’ என்ற தனது சந்தேகத்துக்குத் தீர்வு காண முற்பட்டாள். அதன்பொருட்டு, ஒரு நாள் முனிவரின் நாசியில் தனது சுட்டு விரலை நுழைத்தாள். தவம் கலைந்த துர்வாசர் கோபம் கொண்டார். ``நாசித் துவாரத்தில் நுழைந்து, எனது தவத்தைக் கலைத்த உனது விரல் இரும்பாகக் கடவது!’’ என்று சபித்தார். சிறுமிதான் என்றாலும் கைகேயியிக்குத் தன்னைப் பற்றித் தெரியும். தன் தரப்பில் எவ்வித தவறும் இல்லை என்று உணர்ந்தாள். ஆகவே, எவ்வித கலக்கமும் இன்றி நிலைமையை முனிவருக்கு எடுத்துரைத்தாள்.

நமக்குள் மூன்றாவது மனிதன்!

``தங்களுக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டதோ என்ற என் சந்தேகம் பயத்தை உருவாக்கிவிட்டது. அதனால் விளைந்த தவறு இது'' என்று எடுத்துக்கூறி சாபத்தை விலக்கிக்கொள்ள கேட்டாள்.

துர்வாசர் தனது முன்கோபத்தை எண்ணி நொந்துகொண்டார். ஆயினும் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற இயலாது என்பதால் சாபத்தின் வீரியத்தைக் குறைத்தார். ``நீ விரும்பும் போது மட்டும் உனது சுட்டுவிரல் இரும்பாகும்’’ என்றார். கேகய இளவரசி மலர்ந்தாள். அவளுக்குத் தெரியும், இதையும் வரமாக மாற்றும் சாமர்த்தியம் தனக்கு உண்டு என்று!

நாட்கள் நகர்ந்தன. தசரதனின் மனைவியா னாள் கைகேயி. வைஜயந்த தேசத்துடன் நிகழ்ந்த பெரும் போர் ஒன்றில் மன்னனுடன் அவளும் கலந்துகொண்டாள். போர் தீவிரம் அடைந்திருந்த நிலையில், திடீரென, வலப் பக்கமாக சற்று சாய்ந்தது தேர். கடையாணி கழன் றிருக்க... தேர்ச் சக்கரம், அச்சில் இருந்து மெல்ல நழுவிக் கொண்டிருந்தது! சற்றும் யோசிக்க வில்லை கைகேயி. தனக்குக் கிடைத்த சாபத்தைப் பயன்படுத்தினாள். தன் விரலை இரும்பாக மாற்றி அதையே கடையாணி யாக்கி, தேர் குடை சாய்ந்து விடாமல் காப்பாற்றினாள். போரும் முடிவுக்கு வந்தது. தசரதர் பெரும் வெற்றி பெற்றார். விளைவு கைகேயிக்கு அன்புப் பரிசாக இரண்டு வரங்கள் தருவதாக வாக்களித்தார்.

இப்படிச் சாபத்தையும் வரமாக்கிக்கொள்ளும் சாமர்த்தியம் தன்னை அறிந்தவர்களுக்கே சாத்திய மாகும்!

நம்மை நாம் அறிவது இருக்கட்டும். நமக்குள் எத்தனை பேர் இருக்கிறோம் என்பதையேனும் அறிந்திருக்கிறோமா?

`இதென்ன கேள்வி, ஒருவர்தானே’ என்று சட்டென்று பதில் கூறலாம். உண்மையில் ஒவ்வொருவருக்குள்ளும் மூணு பேர் இருக்கிறோம்.

நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோமோ அப்படியான எண்ணங்களுக்குச் சொந்தக்காரன் ஒருவன். நம்மைப் பற்றி அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதற்குச் சொந்தக்காரன் ஒருவன். நமக்கும் தெரியாமல் அடுத்தவருக்கும் தெரியாமல் ஒருவன் உண்டு. அவனே மூன்றாவது மனிதன். இவனை அடையாளம் காணும் நிலையே நம்மை நாம் அறிதல் என்பது!

இது எப்படிச் சாத்தியம்? நமக்குள் இருக்கும் அகங்காரம் எனும் திரையை விலக்கினால் மூன்றாவது மனிதனை... அதாவது உண்மையில் நாம் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கிராமச் சாவடியில் சிலர் பேசிக் கொண் டிருந்தனர். திடுமென ஓடி வந்த ஒருவன், ``அடேய் கதிரேசா! உன் பொண்டாட்டிக்கு கரண்ட் ஷாக் அடிச்சிடுச்சு!'’ என்று கூவினான்.

அதைக் கேட்டதும் ஒருவன் பதற்றத்துடன் எழுந்து தலைதெறிக்க ஓடினான். மற்றவர்கள் திகைத்தனர். ஓடிப்போனவன் சில நிமிடங்களில் திரும்பி வந்தான்.

``என்னப்பா ஆச்சு, உடனே திரும்பி வந்துட்டே?''

``பாதி தூரம் ஓடிய பிறகுதான் ‘நான் யார்?’ அப்படிங்கறது எனக்குப் புரிஞ்சுது!’’

``என்ன புரிஞ்சுது?’’

``நான் கதிரேசன் இல்லை... குமரேசன். எனக் குக் கல்யாணமும் ஆகலை!’’