கட்டுரைகள்
Published:Updated:

அகம் புறம் அழகு!

அகம் புறம் அழகு!
பிரீமியம் ஸ்டோரி
News
அகம் புறம் அழகு!

ஓவியம்: மகேஸ்

`அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.’ இது நாமறிந்த பழமொழிகளில் ஒன்று. மேலைநாட்டு உளவியல் அறிஞரான ஜேம்ஸ் ஆலன் என்பவரும் தம்முடைய கருத்துரைகளால் இதை உறுதிப் படுத்துகிறார். `அகம் புறத்தை மாற்றும்; புறம் அகத்தை மாற்றும்’ என்பது அவர் எடுத்துச் சொன்ன உளவியல் தத்துவம்.

ராமாயணத்தை அடியொற்றிச் சொல்லப்படும் ஒரு கதை. அசோகவனத்தில் சீதாதேவி வியப்புடன் ஒரு காட்சியைப்பார்த்துக்கொண்டிருந்தார். மரக்கிளையில் ஒரு குளவி, சின்னஞ்சிறு புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து தன் கூட்டில் வைத்து, அதைத் தன் கொடுக்கால் மீண்டும் மீண்டும் கொட்டிக்கொண்டே இருந்தது. அது ஏன் அவ்வாறு செய்கிறது என்று அருகிலிருந்த திரிசடையிடம் கேட்டார்.

``அம்மா, அந்தக் குளவி புழுவைக் கொட்டிக் கொட்டி, ஒரு கட்டத்தில் அதைத் தன்னைப் போன்றதொரு குளவியாகவே மாற்றிவிடும். எப்போதும் அந்தக் குளவியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால், அந்தப் புழு தானும் குளவியாகவே உருமாறிவிடும்!’’ என்றாள் திரிசடை.

உடனே சீதாதேவி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார். சிறிது நேரம் கழித்து மீண்டும் திரிசடையிடம் கேட்டார் ``தோழி, நான் எப்போதும் ராமனையே நினைத்துக்கொண்டு இருக்கிறேனே... எனில் நானும் விரைவில் ராமனாக மாறிவிட்டால் என்னாவது?’’

அகம் புறம் அழகு!

அதைக் கேட்டு திரிசடை சிரித்துவிட்டாள். பிறகு சொன்னாள்: ``அன்னையே, ஒருவேளை நீங்கள் அப்படி ராமனாக மாறிவிட்டால், உங்களையே எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் ராமன் சீதையாகிவிடுவார். ஆகவே பிரச்னை இல்லை!’’ என்றாள்.

`எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ என்று ஞானியர் சொல்வார்களே... அப்படி, அகத்தில் என்ன நினைக்கிறோமோ, அதில் எதையெல்லாம் பதியவைக்கிறோமோ, அகத்தை எப்படி வைத்துக்கொள்கிறோமோ, அதற்கேற்பவே புறத்தில் நம் செயல்களும் அவற்றுக்குண்டான விளைவுகளும் அமையும்.

ஆகவே, அகத்தை, நம் உள்ளத்தைச் செம்மையாக வைத்துக்கொண்டால் போதும். `நான் அழகானவன், வலிமையானவன், என் செயல்கள் அனைத்தும் உன்னதமானவை’ போன்ற நேர்மறைச் செய்திகளை அழுத்தம் திருத்தமாக உங்கள் உள்ளத்தில் பதியவையுங்கள். அப்போது நீங்கள் எந்நாளும் பலவானாகவும் வெற்றியாளராகவும் திகழ்வீர்கள்.

அதேநேரம், இப்படியான உயர்வுச் சிந்தைகளோடு எக்காரணம் கொண்டும் அகங்காரத்தைக் கலந்து விடாதீர்கள். இறைச் சிந்தையோடு மனதை மலர்ந்திருக்கச் செய்யுங்கள், பீஷ்மர் சுட்டிக்காட்டும் சுவேதகேதுவைப் போல!

தேவலர் என்ற பிரம்மரிஷி தன் மகள் சுவர்ச்சலைக்கு மணம் செய்துவைக்க நினைத்தார். ஒழுக்கத்தில் சிறந்தவனும் உள்ளத்தில் வல்லவனுமான ஒருவனை அவளுக்கு நாயகனாக்க விரும்பினார். அவரின் மனக்குறிப்பை அறிந்த மகள் சுவர்ச்சனை, அதை நிறைவேற்றும் விதம் ஒரு நிபந்தனை விதித்தாள்.

‘‘குருடும், குருடு இல்லாதவருமான ஒருவரையே நான் மணக்க விரும்புகிறேன்’’ என்றாள். தேவலர் திகைத்தார். அப்படி ஒருவன் எங்கு கிடைப்பான்? இதன் காரணமாக திருமணம் காலதாமதம் ஆகிக்கொண் டிருந்தது.

ஒருநாள் உத்தாலகரின் மகனான சுவேதகேது வந்தான். சுவர்ச்சலையைத் தனக்கு மணம் செய்துவைக்கக் கோரினான். அவனிடமும் நிபந்தனை தெரிவிக்கப் பட்டது.

உடனே சுவர்ச்சலையிடம் சென்ற சுவேதகேது, ‘`பெண்ணே, உன் நிபந்தனைப் படி நான் குருடும் குருடு அல்லாதவனுமாக இருக்கிறேன். எந்தக் கண்ணால் மனம் நினைக்கிறதோ, புத்தி உண்மையை அறி கிறதோ, உலகம் வசப்படுகிறதோ, அந்த ஞானக்கண் எனக்கு இல்லை. ஆகவே ஒருவகையில் நானும் பார்வை அற்றவனே.

அதேநேரம் சாதாரண உலகப் பார்வையில், நாள்தோறும் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்கிறேன். காரியமான பிரபஞ்சத்தையும், காரணமான பரம்பொருளையும் நெஞ்சில் சிந்தித்த வண்ணம் செயல்படுகிறேன். இந்த வகையில் நான் குருடு அல்லாதவனாக இருக்கிறேன்!’’ என்றான். சுவர்ச்சலை மகிழ்ச்சியுடன் சுவேதகேதுவுக்கு மாலையிட்டாள்.

இது அம்புப் படுக்கையில் ஆரோகணித்த படி தருமனுக்கு பீஷ்மர் சொன்ன தத்துவக் கதை. நாமும், சுவேதகேதுவைப் போல் எல்லாச் செயல்களிலும் இறைவனைக் காணும் உலகப் பார்வை உடையவர்களாக இருந்தால் போதும். நம் அகம் - மனம் எப்போதும் சுத்தமாக செம்மையாகத் திகழும்; நம் செயல்கள் சிறக்கும்!

அகம் புறம் அழகு!

சில ஆசாமிகள் இருக்கிறார்கள். யார் என்ன முயன்றாலும் அவர்களை மாற்றுவது கடினம். அவர்களாலும் தங்களை மாற்றிக் கொள்ள முடியாது.

மனநல மருத்துவரைச் சந்திக்க வந்தான் ஒருவன். மருத்துவர் அவனிடம் கேட்டார்.

``என்ன பிரச்னை உனக்கு?’’

``நான் செத்துட்டேன்... அதான் பிரச்னை.’’

மருத்துவருக்குப் புரிந்தது. கவுன்சலிங் மூலம் அவனைச் சரிப்படுத்த நினைத்தார். மெள்ள பேச்சுக் கொடுத்தார்.

``அது சாத்தியமே இல்லை. நீ இருக்கிறாய்... உன் எதிரில் நான் இருக்கிறேன்... உன்னோடு பேசிக்கொண்டி ருக்கிறேன். ஆக, நீ உயிரோடுதான் இருக்கிறாய்...’’

``இல்லை, நீங்கள் பேசிக்கொண்டிருப்பது என் ஆவியோடு!’’

திடமாகப் பதிலளித்தான் வந்தவன். மருத்துவரும் விடவில்லை. விஞ்ஞான பூர்வ விளக்கத்தால் அவனை மசியவைக்க யத்தனித்தார்.

``சரி... இப்ப பாரு... உயிருள்ளவங்க உடம்புல ரத்தம் ஓடும். செத்துப்போனவங்க உடம்புல ரத்தம் ஓடாது, சரியா?’’

``மிகச் சரி... டாக்டர்.’’

மருத்துவருக்குப் பெருமிதம், தன் திறமையை நினைத்து. அவனுடைய ஒரு விரலைப் பிடித்தார். ஸ்பிரிட்டால் துடைத்தார். ஊசியால் லேசாகக் குத்தினார். துளி ரத்தம் வெளிப்பட்டது. மருத்துவருக்கு மகிழ்ச்சி.

``இப்பவாவது ஒத்துக்கிறியா... நீ சாகலை!’’

அந்த மனிதன் சத்தம் போட்டுச் சொன்னான்... ``டாக்டர், பலே ஆளு சார் நீங்க... செத்துப்போன உடம்பிலேயே ரத்தத்தை எடுத்துட்டீங்களே!’’