மகாபாரதத்தின் ஒரு பகுதியாய் அமைவது விதுர நீதி. மனம் அமைதி யின்றி தவித்த திருதராஷ்டிரனுக்கு விதுரர் சொன்ன நீதிமொழிகள், இந்த உலகின் ஒட்டுமொத்த மக்களுக்குமான பாடமாக அமைகிறது. அவர், துரியோதனனுக்கு அறிவுரை தரும் விதமாக ஒரு கதையை விவரித்தார்.
``வேடன் ஒருவன் பறவைகளைப் பிடிப்பதற்காகத் தரையில் வலை விரித்திருந்தான். நீண்ட நேரத்துக்குப் பிறகு, இரண்டு பறவைகள் அந்த வலையில் அகப்பட்டுக் கொண்டன.
முதலில் திகைத்த அந்தப் பறவைகள், பின்பு ஒன்றிணைந்து, வலையைப் பெயர்த்துக் கொண்டு வானில் பறந்தன. அதை எதிர்பார்க்காத வேடன், பறவைகளைப் பின்தொடர்ந்து ஓடினான்.
அதைப் பார்த்த முனிவர் ஒருவர், ‘வேடனே! உனது செய்கை எனக்கு ஆச்சரியமளிக்கிறது. பறவைகள் ஆகாயத்தில் பறக்கின்றன. நீயோ அவற்றைப் பிடிக்கத் தரையில் ஓடுகிறாய். இப்படியே சென்றால் உன்னால் அவற்றைப் பிடிக்க முடியுமா?’ எனக் கேட்டார்.
‘முனிவரே! இந்த இரண்டு பறவைகளும் எனது ஒரே வலையைத் தூக்கிக் கொண்டு செல்கின்றன. எங்கு பேதம் கொண்டு இவை சண்டை போடுகின்றனவோ, அங்கு என் கைகளில் இவை அகப்படும். அதற்காகத் தான் பின்தொடர்கிறேன்!’ என்றான் வேடன். அவன் நினைத்தபடியே அவை தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு ஓரிடத்தில் கீழே விழுந்தன. வேடன் சுலபத்தில் அவற்றைப் பிடித்துக்கொண்டான்.’’
இந்தக் கதையை துரியோதனனிடம் சொன்ன விதுரர், ‘‘துரியோதனா! நீயும் பாண்டவர்களும் சகோதரர்கள். நீங்கள் ஒற்றுமையாக இருக்கும் வரையில், நலம் விளையும். விரோதத்தால் சண்டை போட்டால், பறவை களின் கதிதான் உங்களுக்கும் ஏற்படும். அழிந்துபோவீர்கள்!’’ என்றார்.
விதுரரின் நீதிகளில் நாமும் சிலவற்றை அறிவோமா...
செல்வத்தை விரும்புபவன் ஆறு தோஷங்களை விலக்கவேண்டும். அவை: அதிக தூக்கம், சோம்பல், பயம், கோபம், முயற்சியின்மை, எந்தக் காரியத்தையும் தாமதமாகவே செய்தல்.
ருசியான பதார்த்தத்தைப் புசிப்பது, விஷயங்களை ஆலோசிப்பது, பெரும் பயணம்... இந்த விஷயங்களை தனியொருவராகச் செய்யக் கூடாது.
சத்தியமானது சமுத்திரத்திற்கு ஓடம் போல சுவர்க்கத்திற்குப் படியாக இருக்கிறது. பொறுமையானது பெரிய பலம். சக்தியற்றவர்களுக்கு பொறுமையானது குணமாகின்றது. சக்தி படைத்தவர்களுக்கோ அது அலங்காரம்.
தர்மம் ஒன்றே சிறந்ததான நன்மை; பொறுமை ஒன்றே உத்தமமான சாந்தி; வித்தை ஒன்றே மேலான திருப்தி; அஹிம்சை ஒன்றே சுகத்தைக் கொடுக்கிறது.
- கே.சத்தியசீலன், கோவை-2
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism