பிரீமியம் ஸ்டோரி

லகில் நாம் காணும் புறப் பொருள்கள் நமக்குச் சூசகங்களை மட்டுமே தருகின்றன. அவற்றின் மீது நாம் நமது லட்சியங்களை ஏற்றி, நமக்கான பொருட்களை உண்டாக்கிக் கொள்கிறோம். இந்த உலகைத் தீயவர்கள் முழு நரகமாகக் காண்கின்றனர்; நல்லவர்கள் பூரண சொர்க்கமாகக் காண்கின்றனர். ஆம்! நிறை மனிதன் ஒருவன் இறைவனைத் தவிர வேறு எதையும் காணமாட்டான்.

இது சுவாமி விவேகானந்தரின் ஞான வாக்கு. மாயங்களைத் தேடி ஓடும் உலகில் தனக்குள் இருக்கும் இறைவனை உணரும் மனிதர்கள் சொற்பமே! இதை ஒரு கதையின் மூலம் விளக்குகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

கலைகளில் இறையின் சாந்நித்தியத்தை உணர்ந்து அனுபவிக்கும் கலைஞன் ஒருவன் அழகான மண்டபம் ஒன்றைக் கட்டினான். அது எண்கோண வடிவில் இருந்தது. அதன் எட்டு பக்கச் சுவர்களிலும் நிலைக் கண்ணாடியைப் பதித்திருந்தான். எந்த உருவமும் எந்தத் திசையில் பார்த்தாலும் தெரியும்படி அமைக்கப்பட்டிருந்தது.

அந்த மண்டபத்தின் நடுவே அழகான ஒரு மலரைக் கொண்டு வந்து வைத்தான் பக்தன். அழகான மலர், எட்டு பக்கங்களிலும் எட்டு மலர்களாகத் தோற்றம் அளித்தது.

அவன் கதவை மூடுமுன் அந்த மண்டபத்துக்குள் சிறு வெண் புறா ஒன்று நுழைந்து விட்டது. அது கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்தது. கண்ணாடியில் தெரியும் பிம்பத்தையே உண்மை என்று எண்ணி அதை நோக்கிப் பாய்ந்து பறந்தது.

எட்டு திசைகளிலும் அது மாறி மாறிப் பறந்தது. கண்ணாடியில் மோதிற்று. ஆனால், அந்தப் பறவையால் வெளியேற முடியவில்லை. கடைசியில் புறா சோர்ந்து போய்த் தரையில் விழுந்தது. அதன் அருகே இருந்த அழகான மலரை அது அப்போதுதான் பார்த்தது. அந்த இடத்தில் அதுவே உண்மை என்பதை உணர்ந்து கொண்டது.

வாழ்க்கையில் அந்தப் புறாவைப் போலவே, நாம் மாய நிழல்களைத் தேடி அலைகிறோம். நமக்குள்ளேயே இருக்கும் இறைவனை நாம் உணருவதில்லை. வாழ்க்கையில் தோல்விகளை அடைந்து, மனம் சலித்துப் போய் விழும் வேளையில் நிதர்சனமான உண்மை எது என்பதை உணருகிறோம்.

தொகுப்பு: வி.ரமேஷ், திருநெல்வேலி-4

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு