Published:Updated:

‘ஆசையோடு சேர்த்த தயிர் தங்கமே தங்கம்’

‘ஆசையோடு சேர்த்த தயிர் தங்கமே தங்கம்’
பிரீமியம் ஸ்டோரி
‘ஆசையோடு சேர்த்த தயிர் தங்கமே தங்கம்’

ஆன்மிகம் - ஓவியம்: ஜீவா

‘ஆசையோடு சேர்த்த தயிர் தங்கமே தங்கம்’

ஆன்மிகம் - ஓவியம்: ஜீவா

Published:Updated:
‘ஆசையோடு சேர்த்த தயிர் தங்கமே தங்கம்’
பிரீமியம் ஸ்டோரி
‘ஆசையோடு சேர்த்த தயிர் தங்கமே தங்கம்’

பாலின் உள்ளே தயிர் இருக்குது தங்கமே தங்கம்

அது பார்ப்பதற்குத் தெரிந்திடாது தங்கமே தங்கம்

உடலுக்குள்ளே உயிர் இருக்குது தங்கமே தங்கம்

உருவம் ஏதும் தெரிந்திடாது தங்கமே தங்கம்

தயிர் வாங்கலியோ தயிர்...

தயிர் வாங்கலியோ தயிர்...

குமராயியின் பாடலும் கூவலும் அந்தத் தெருவைக் கொஞ்சம் உயிர்ப்பித்தது. சின்னப்பிள்ளைகள் வாசலுக்கு ஓடி வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

“ஏ... நீ பாரு... அந்த அம்மா பானையைப் பிடிக்கவே மாட்டாங்க. அதுவும் கோபுரத்துல ஏத்திவச்ச கலசம் போல அசையாம நிக்குது பாரு” என்றாள் இன்னும் முதிராத பாலகி ஒருத்தி. அவள் சொல்லைக் கேட்டு வியந்து பார்த்த சிறுவனுக்கு, ‘அது சரிதான்’ என்று தோன்றியது. அந்தத் தயிர்க்காரப் பெண், குளக்கரை மண்டபத்தின் தூண்கள் ஒன்றில் இருக்கும் பெண் ஒருத்தியின் சிலையைப்போலவே இருப்பதாகப் பட்டது. அவனை அறியாமல் கையெடுத்துக் கும்பிட்டான்.

பாலகி சிரித்தாள். “மக்கு... அவ தயிர்க்காரி... அவளை யேன் கும்புடுற...” என்று சொல்லிவிட்டு ஓடினாள்.

தயிருக்குள்ளே வெண்ணெய் உண்டு தங்கமே தங்கம்

அது கடைந்திடாமல் கிடைத்திடாது தங்கமே தங்கம்

உயிருக்குள்ளே உண்மை உண்டு தங்கமே தங்கம்

அது அலைவுறாமல் புரிந்திடாது தங்கமே தங்கம்

தயிர் வாங்கலியோ தயிர்...

தயிர் வாங்கலியோ தயிர்...

குமராயி நடந்துகொண்டே இருந்தாள். அவள் குரல் மட்டும் அனைத்து வீடுகளின் கதவையும் தட்டியது. திண்ணையில் படுத்துக்கொண்டிருந்த ஒருவன், அவளின் குரல் கேட்டுத் தலைதூக்கிப் பார்த்தான். வீட்டின் உள்ளிருந்து வந்த அவன் மனைவி, “என்ன அங்கே பார்வை, போங்க உள்ளே...” என்று அவனைத் துரத்தினாள்.

அவன் குமராயியை மீண்டும் ஒரு கணம் திரும்பிப் பார்த்தான். அவள் கண்கள் ஒரே திசையைப் பார்த்தபடி இருந்தன. ‘தன்னைப் பார்க்காத பெண் எத்தனை அழகியாக இருந்தால்தான் பயன் என்ன’ என்று அவன் வெறுப்போடு உள்ளே போனான்.

‘ஆசையோடு சேர்த்த தயிர் தங்கமே தங்கம்’

வெண்ணெய்க்குள்ளே நெய்யும் உண்டு தங்கமே தங்கம்

அனலில் உருகிடாமல் கிடைத்திடாது தங்கமே தங்கம்

உண்மைக்குள்ளே சிவனும் உண்டு தங்கமே தங்கம்

அன்பில் மருகிடாமல் தெரியமாட்டான் தங்கமே தங்கம்

தயிர் வாங்கலியோ தயிர்...

தயிர் வாங்கலியோ தயிர்...

குமராயி நடக்கும்போது ஏக்கத்தில், பொறாமையில், கோபத்தில், வருத்தத்தில், வியப்பில், மகிழ்ச்சியில் இந்த ஊரின் கண்கள் எல்லாம் ஒருகணம் அவள் மேல் பட்டுத் திரும்புகின்றன. ஆனால், அவளோ தன் பார்வையை அந்த ஈசனின் கோயில் கோபுரத்திலிருந்து எடுப்பதேயில்லை. காற்றில் ஆடாத ஒரு சுடர் அவள் முகத்தில் எப்போதும் சுடர்விட்டுக்கொண்டிருந்தது. அதைக் கண்டுகொண்டவர் சங்கர பட்டர்தான்.

“அம்மா, இந்தச் சின்னவயசிலே உனக்கு அமைந்திருக்கும் பக்குவம் இவாளுக்கெல்லாம் எத்தனை ஜன்மம் ஆனாலும் ஸித்திக்காது. எல்லாத்தையும் அற்பமா பார்க்கும் ஜனங்க. அற்பங்கள் அற்பமாத்தானே இருக்கும். நீ அவா தூஷணம் பண்றதைப் பொருட்படுத்தாதே” என்று பட்டர் கூற, அவள் சிரித்துவிட்டு நகர்ந்தாள்.

“உனக்குப் புத்தி சொல்றேன் பாரு... எனக்குத் தெரியும், இதெல்லாம் உன் செவியில் விழவே விழாது. நீ அவன் புகழைத் தவிர வேறு எதை உன் காதால கேட்டிருக்க. அவன் ஒருத்தன்தானே நீ ஏறெடுத்துப் பார்த்த ஒரே ஆண். நெருப்பை யாராவது தீண்டி சீண்டி விளையாட முடியுமா... நீ ஜோதிம்மா... அசை யாத அவன் சந்நிதியின் ஜோதி நீ...”

பட்டர் அவருக்குள்ளேயே பேசிக்கொண்டார்.

அத்தனைக்கும் காரணமே தங்கமே தங்கம் - துளி

ஆசையோடு சேர்த்த தயிர் தங்கமே தங்கம்

இத்தனையும் நிகழ்வதற்குத் தங்கமே தங்கம் - ஒரு

நல்ல குரு நாதனடி தங்கமே தங்கம்

தயிர் வாங்கலியோ தயிர்...

தயிர் வாங்கலியோ தயிர்...

சந்நிதி வீதிகளையும் சுற்றி வந்த குமராயி, கோயில் வாசலுக்கு வந்தபின் தன் மடியைப் பிடித்தாள். அதில் ஒருபிடி அரிசி இருந்தது. மடியில் சேர்ந்திருக்கும் பொருளுக்கு ஏற்ப தயிர்ப்பானையின் எடை குறைந்திருக்கும். ஆனால், இன்றைக்கு ஒரே ஒரு வீட்டில்தான் தயிர் கேட்டார்கள். அவர்களும் சிறு உழக்கு ஒன்றில் தயிர் வாங்கிக்கொண்டு, அதற்கு இணையான பிடி அரிசியை அவள் மடியில் கொட்டினார்கள். வேறு யாரும் தயிர் கேட்கவேயில்லை.

இவள் தன் வீட்டு வாசலில் நின்று விடக்கூடாது என்று ஊர்ப் பெண்களின் மனமெல்லாம் அடித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டன.

வீட்டு ஆண்களின் பார்வையில் அவள் படுவதையே அவர்கள் விரும்பவில்லை. ஆண்களோ, அவளை ஆசையோடு பார்த்து எச்சில் விழுங்குகிறார்களே தவிர, அவளை நெருங்கத் துணிவுகொண்டார்கள் இல்லை.

சம்சாரிகள் அசந்து உறங்கும் அதிகாலையில் அவள் விழித்துக்கொள்வாள். சிவநாமம் சொன்னபடி காவிரிக் கரைக்குப் போவாள். அவளோடு சேர்ந்து பஜனை செய்வதைப்போல சில குருவிகள் சத்தமிட்டபடி கூடவே பறந்து வரும். பனி படர்ந்து சிலிர்த்துக் கிடக்கும் பொழுதுகளில்கூட காவிரி இவளுக்காக வெதுவெதுப்பாகிக் காத்திருப்பாள்.

காவிரியில் இறங்கும்போது, அவளுக்குத் தன் அன்னையின் மடியில் சாய்ந்துகொள்வதுபோன்ற சுகம் உண்டாகும். எப்போதும் ஈசன் பெயரையே சொல்லிக்கொண்டிருப்பவள், அந்தக் கணத்தில் மட்டும் `அம்மா’ என்று காவிரியை அழைத்துத் தன் கைகளால் அவள் நீர்மேனியைத் தழுவுவாள்.

`அவள் அன்னைதான்' என்பதற்கு உதாரணம், இதுவரை ஒருமுறைகூட குமராயி முங்கி எழும்போது மூக்கில் தண்ணீர் புகுந்து சிரமம் தந்ததேயில்லை. பிள்ளையைக் கையிலேந்திப் பக்குவமான தாய்போலத் தன்னைக் காவிரி அன்னை தாலாட்டுவதாக எண்ணிக்கொள்வாள் குமராயி.

அன்று காவிரியில் மூன்று முறை அவன் நாமம் சொல்லி முங்கி எழுந்து கோபுர தரிசனம் பார்த்தாள். அந்த வைகறைப் பொழுதிலும் மங்காது, கோபுரத்துக்கு நேர் மேலே ஒளிர்ந்துகொண்டிருந்தான் தேய்பிறைச் சந்திரன். சிவபிரான் சடையில் சந்திரனைச் சூடிக்கொண்டதைப் போன்ற ஒரு தோற்றம். அவள் உடல் சிலிர்த்தது. அந்த நாள் திரயோதசி திதி என்று புரிந்துவிட்டது. திரயோதசியில் அவள் மனம் ஈசனைத் தவிர வேறு எதிலும் செல்லாது. பிரதோஷ வேளையில் அசலதீபேஸ்வரராகக் கோயில்கொண்டிருக்கும் அந்த ஈசன், நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நடமிடும் காட்சி அவள் மனக்கண்ணில் நிழலாடிக்கொண்டேயிருக்கும்.

அதே சிந்தையோடு தயிர் விற்பனைக்காக ஊரைச் சுற்றி வந்தவள், இதோ கோயிலை அடைந்தாள். பானையை இறக்கினாள். எடுத்துப்போனது அப்படியே இருந்தது. அவள் மனம் மகிழ்ந்தது. இன்று நந்தியம்பெருமானுக்கும் சிவனுக்கும் அபிஷேகிக்க எவ்வளவு தயிர் என்று மனம் கூத்தாடியது. மீதமான தயிரை அவனுக்கு அபிஷேகிப்பதாக வேண்டுதல். இன்று அவனுக்கு நிறைய தயிர் வேண்டும் என்று விரும்பிவிட்டான்போலும். அவன் விருப்பத்தை நிறைவேற்றுவதைவிட வேறென்ன வேலை. கையில் இருக்கும் ஒருபிடி அரிசியை அன்னம் ஆக்கலாம். நிவேதிக்கலாம்.

பிரதோஷ பூஜைக்கு சங்கர பட்டர் வருவாரா... தெரியவில்லை. இப்போதெல்லாம் அவர் இரவு வேளையில் ஆலயம் வந்துபோவதை அவர் வீட்டுப் பெண்களும் விரும்புவதில்லை போலும். அல்லது ஊருக்கு பயந்து வீடடங்கியிருக்கலாம். விளக்கேற்றவும் பிரதோஷ வேளையில் அபிஷேகிக்கவும் தனக்குக் கிடைத்த பாக்கியம் இது என்று மகிழ்ந்துபோனாள் குமராயி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஆசையோடு சேர்த்த தயிர் தங்கமே தங்கம்’

மாலைப்பொழுது வந்தது. கையளவு அன்னம் தயாரானது. தயிரையும் காவிரியில் சுமந்துவந்திருந்த நீரையும் தவிர அபிஷேகிக்க வேறு பொருள்கள் இல்லை. விளக்கில் கொஞ்சம் நெய்யைச் சேர்த்தாள். நெய் திரியில் பட்டதும் ‘சுர்ர்’ என்னும் சத்தத்தோடு ஜோதி படபடத்தது. தான்... தீபம்... ஈசன்... நந்தி... வேறு யாரும் இல்லாத அந்த வேளை அவளுக்குள் பேரானந்தத்தை உண்டாக்கியது.

`நமசிவாய வாழ்க... நாதன்தாள் வாழ்க...

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...’

அவள் நா அவளையும் அறியாமல் பாடியது. தயிர்ப்பானையை அப்படியே தூக்கி லிங்கத்தின் மீது வார்த்தாள். அதுவரை தீபம் இருந்தும் தெரியாத லிங்கம் இப்போது நிறம் மாறி சிறு பனிமலைபோல ஜொலித்தது. கயிலாயமே சிறியதாக உருமாறித் தன் முன் நிற்பதாகத் தோன்றியது. இதுநாள் இல்லாத ஏக்கம் அவளை வாட்டியது. ஒருகணம் தன்னை மறந்து லிங்கத் திருமேனியை அணைத்துக்கொண்டாள். மிகவும் பழகிய ஸ்பரிசம்போல் இருந்தது.

‘இவர் என் இறைவன். எனக்கானவர். என்னில் பாதி. இல்லையில்லை, அவரில் பாதி நான். எப்பிறப்பில் செய்த வினையோ, நான் அந்தப் பவித்ரமான பாகத்திலிருந்து நழுவினேன். ஈசனே என்னை எப்போது ஆட்கொள்வாய்... அப்படியே லிங்கம் பிளந்து உள்ளிழுத்துக்கொள்ளக்கூடாதா... இறைவா... இன்னும் எவ்வளவு காலம் இந்த உடலைச் சுமந்துகொண்டு கிடப்பது... எத்தனை பேரின் மனதில் இந்த உடல் பாவத்தை விதைக்கிறது. அதைத் தடுக்கவாவது இந்த உடல் அழியத்தான் வேண்டும். இப்போதே என்னை உன்னோடு சேர்த்துக்கொள்...'

குமராயி குரல் வெடித்து அழுதாள். அடுத்த கணம் அந்த மாயம் நிகழ்ந்தது.

அது மாயமா இல்லை மகா தருணமா... இந்த மண்ணுயிர் யாருக்கும் வாய்க்காத பாக்கியமா... தன்மேல் காதல் கொள்வோருக்குக் கிடைக்காத பேறே இல்லை என்பதை மூவுலகுக்கும் விளக்க நிகழ்ந்த அருளாடலா...

அசலம் சலனமுற்றது. குமராயி உடல் சிலிர்த்த வண்ணம் இருந்தாள். அது அவளுக்கு ஒரு கனவுபோல இருந்தது. லிங்கம் குரு வடிவாகித் தன் திருவடி காட்டி அருளியது. குமராயி பாய்ந்து அதைப் பற்றிக்கொண்டாள். காட்சிக்கும் எளியனாகி வந்து நிற்கும் அந்த குருவின்... இல்லை இல்லை திருவின் திருவடிகளைத் தொழுதாள்.

`குமராயி! உனக்கு மாயை நீக்கும் மந்திர உபதேசம் செய்கிறேன். அதுதான் பிரணவம். அதுதான் மூலமந்திரம். அதை இனி நீ சுமப்பாய். உரிய காலத்தில் என்னை வந்து சேர்வாய்’ என்று அவள் காதுகளில் கிசுகிசுத்தது.

சிவம் ஓர் அலையின் சத்தத்தையும் மலையின் அமைதியையும் நெருப்பின் வெப்பத்தையும் ஓசையாகச் செய்ததுபோன்ற மந்திரம் ஒன்றை அவள் காதுகளில் உபதேசித்தது. அதைக் கேட்கக் கேட்க குமராயி புத்துயிர் கொண்டாள். அவள் உடல் நட்சத்திரம்போல் ஜொலித்தது. ஒரு கணம் உபதேசித்து மறுகணம் மறைந்தது சிவம்.

குமராயிக்கு இப்போது சிவம் தன்னுள் புகுந்துவிட்டதுபோன்ற உணர்வு. காதுகளின் வழிபுகுந்த பிரணவம் அவள் கர்ப்பத்தில் சென்று தங்குவதுபோல உணர்ந்தாள். சிவம் சிவம் சிவம் என்று கூத்தாடினாள். ‘இன்று பிரதோஷத்தில் ஆனந்த நடம்புரிவது சிவனில்லை இந்த சக்திதான்’ என்று சொல்லிக்கொண்டாள். அந்த நாளிலிருந்து அவள் பக்தியைப் போல அவளுள் பிரணவம் ஓர் உருவம் கொண்டு வளரத் தொடங்கியது.

‘ஆசையோடு சேர்த்த தயிர் தங்கமே தங்கம்’

“என்ன சங்கர பட்டரே... எவ்வளவு சொல்லியும் அந்தப் பெண்ணை ஆலயத்திலிருந்து துரத்த மாட்டேன் என்று நீர் சொல்லும்போதே தெரியும், இப்படியெல்லாம் நடக்கும் என்று! பாரும்... தயிர்ப்பானையைப் போன்ற பெரிய வயிறோடு அவள் வெட்கமில்லாமல் இந்த ஊரில் திரிகிறாள். எல்லாம் நீர் கொடுத்த இடம்” என்று சொன்னவனை மதிக்காமல் விலகினார் சங்கர பட்டர்.

குமராயி நிறைமாதக்காரி போலவா நடக்கிறாள்... அவள் நடையில் தளர்வு இல்லை. அதே நிமிர்ந்த தேகம். அவள் கண்களில் ஒரு புது தீட்சண்யம் துலங்குவதை அவர் அறிவார். அதை தரிசிக்க இந்த ஊர்க்காரர்களுக்குத் தகுதியில்லை.

சங்கர பட்டர் குமராயியை இன்னும் மரியாதையோடே பார்த்தார். அவருக்கு அவள் ஏதும் பிழை செய்துவிட்டதுபோலத் தோன்றவேயில்லை. அவளின் மனம் கவர்ந்த யாரோ ஒருவன் அவளுக்கு இந்த நிலையைத் தந்திருக்க வேண்டும். அதை அவளும் விரும்பிச் சுமக்கிறாள். இதில் என்ன தவறு... இந்த உலகில் யாரும் செய்யாத தவறு... அவளை ஆட்கொண்டவன் யார் என்று அவளுக்குத் தெரிந்தால் போதாதா... ஊருக்கு ஏன் தெரியவேண்டும்?

அவள் அக்னி சொரூபம். சிவனே ரூபம் கொண்டுவந்தால் தவிர அவளைச் சேர இணையானவன் யார்... அப்படி நடந்திருந்தால் அது வைபவம் அல்லவா... கொண்டாட வேண்டிய ஊர் வெறுப்பில் இப்படித் திண்டாடுகிறதே. ஒரு நாள் உண்மை அறிந்து கொண்டாடும் என்று நம்பினார்.

ஒருநாள், அவர் புறப்படும்போது ஆலய மண்டபத்தில் அமர்ந்திருந்த குமராயி எழுந்துகொள்ளாமலேயே பட்டரை வணங்கி விடைகொடுத்தாள். முதன்முதலாக குமராயி உடல் சோர்ந்து காட்சி தருகிறாள். அவளைக் கையோடு தாங்கிப் பிடித்து வீட்டுக்கு அழைத்துச் சென்று பேறுகாலம் முடிந்து கொண்டுவந்துவிடலாம் என்று தோன்றியது. ஆனால், இந்த ஊரும் உலகமும் என்ன சொல்லுமோ...

பட்டர் அந்த நாளின் கறுத்திருந்த மேகத்தைப் போன்ற மங்கிய முகத்தோடு விடைபெற்றார். அந்த நாளின் இரவில், ‘அப்பனே...’ என்று குமராயி கூச்சல் போடும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார். அவரின் மனைவி ‘என்ன ஆச்சு... ஏன் பதற்றம்... இடி பக்கத்தில் எங்கோ விழுந்திருக்கிறது அவ்வளவுதான், தூங்குங்கள்’ என்றாள்.

பட்டருக்கு இருப்புக் கொள்ளவில்லை. குமராயிக்கு ஏதோ ஆகியிருக்கிறது என்று பதறினார். வெளியே பார்த்தார். சாலையை அடைத்துக்கொண்டு மழைநீர் ஓடிக்கொண்டிருந்தது. மனைவியை எழுப்பினார்.

“அம்மா! கோயிலில் குமராயி தவிக்கிறாப்போல சொப்பனம். வாயேன் ஒரு நடை பார்த்துட்டு வந்திடுவோம்.”

தூக்கக் கலக்கத்திலும் பட்டரின் வார்த்தைகள் அவளுக்குத் தெளிவாகக் கேட்டன.

`ஏற்கெனவே ஊர் வாயில் விழுந்து படுகிறது போதாதா இந்தப் பிராமணனுக்கு? இது

வேறா...’ என்று ஒரு கணம் நினைத்தாள். அடுத்தகணம், குமராயியின் நிலை மனக்கண்ணில் தோன்ற அந்தக் கலக்கம் விலகியது. பிள்ளையில்லாத தன் வயிற்றை ஒரு முறை தடவிக்கொண்டாள். ஓடி வந்து சேவை செய்ய இவர்களுக்கு ஆயிரம் பேர் கிடைப்பார்கள். ஆனால், இன்னும் அந்த பாக்கியம் வாய்க்கவில்லை.

ஆனால், யாருமேயில்லாத அநாதை... யாருமே சொந்தம் கொண்டாடாத நிலம்... கொஞ்சம் நீர்வார்க்கக்கூட ஆள் இல்லாத செடி... இன்று பூத்துக் காய்த்துக் கனி கண்டு நிற்கிறது. இதை இறைவனின் விருப்பம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

பட்டரின் இல்லாள் எழுந்து தன் கேசத்தை வாரிக் கொண்டை போட்டுக்கொண்டாள். கையில் அரிக்கேன் லைட்டை எடுத்துக்கொண்டாள். தலையை மறைக்கும் ஒரு துணியைப் போர்த்திக்கொண்டு இருவரும் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தனர். பெருமழை தூறலாகியிருந்தது. குளிர்காற்று அவர்கள் மேனியை ஊடுருவி நடுங்கச் செய்தது. கணுக்கால் மூழ்க ஓடும் நீர் பனிபோலச் சிலிர்ப்பூட்டியது.

இருவரும் அவசர அவசரமாக நீரில் எடுத்துவைக்கும் சப்தம் காளை மாட்டின் சலங்கைகளின் சத்தம்போலக் கேட்டது. அதில் விழித்துக் கொண்ட ஓரிருவர் சாலையை எட்டிப்பார்த்துவிட்டுத் தம் தலையில் அடித்துக்கொண்டு மீண்டும் படுத்துக்கொண்டனர்.

காரிருளில் ஆலயத்தின் கோபுரம் ஒரு திட்டுபோலத் தெரிந்தது. பழக்கப்பட்ட பாதை என்பதால், எந்தத் தயக்கமும் இல்லாமல் நுழைந்தார்கள். ஆலய மண்டபத்துக்குள்ளும் நீர் புகுந்திருந்தது. பட்டர் மெள்ளக் குரல் கொடுத்தார்.

“குமராயி... குமராயி.. “ பதில் குரல் வரவில்லை.

அடுத்த முறை குரல் கொடுக்க வாய் திறந்தபோது, குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த திசை நோக்கி விளக்கைத் திருப்பினாள் பட்டரின் மனைவி. மண்டபத்தின் கடைசியில் குமராயி படுத்துக்கிடந்தாள். அவள் அருகில் பிஞ்சு ஒன்று தன் கைகால்களை அசைத்தபடி சத்தமிட்டுக்கொண்டு இருந்தது.

இருவரும் அருகே ஓடினர். விளக்கை பட்டரிடம் கொடுத்துவிட்டுப் பிள்ளையை அள்ளி எடுத்தாள் பட்டரின் மனைவி. அந்த நிமிடத்தின் குளிர் அனைத்தையும் விலகி ஓடச்செய்யும் வெதுவெதுப்பு அவள் கைகளில் பரவியது.

‘குமராயி... குமராயி...’ என்றபடி பட்டர் குமராயியின் முகத்துக்கு நேரே விளக்கைக் காட்டினார். அடுத்தகணம் கொஞ்சம் அதிர்ந்தார். அவள் மயக்கத்தில் இல்லை. நன்கு சுயநினைவோடு சிரித்தாள். விளக்கின் வெளிச்சத்தில் அவள் முகம் அம்பாளின் திருமுகம்போல ஜொலித்தது. தன்னை மறந்து கைகூப்பி அவளை வணங்கினார் பட்டர். பட்டரின் மனைவி வேகமாக அந்த இடத்தை சுத்தம் செய்தாள். பாலூட்டப் பிள்ளையைத் தூக்கிக் குமராயியிடம் கொடுத்தாள். பட்டர் விலகி சிவன் சந்நிதிக்கு நேராகச் சென்று அமர்ந்தார். சந்நிதியில் இன்னும் தீபம் எரிந்துகொண்டிருந்தது. எப்போதும் அசையாத அந்த தீபம் இன்று அசைந்தாட, அதன் ஒளி லிங்கத்தின் மீது நடனமிட்டது. சிவமே ஆனந்தக் களி நடனம் புரிவதுபோல இருந்தது.

இருவருமாக வீடு திரும்பும்போது கிழக்கு வெளுக்கத் தொடங்கிவிட்டிருந்தது.

ஊர் இப்படிக் கோயில் முன் கூடுவது திருவிழாவுக்குப் பிறகு இன்றுதான். குமராயி, பிள்ளையைத் தன் கையில் ஏந்தியபடி நின்றாள்.

“இதெல்லாம் பாவம். கோயிலா இல்லை என்ன இது... ஆசாரம் சுத்தமாகப் போய்விட்டது” ஒரு பெரியவர் கூச்சலிட்டார்.

“இதிலென்ன ஆசாரக் கேடு வந்தது...” பட்டர் துணிந்து கேள்வி எழுப்பினார்.

“நீர் பேசாதீரும். இதெல்லாம் நீர் கொடுத்த இடம். யார் கண்டா? ஒருவேளை இது நீர் கொடுத்த பிள்ளையாகக்கூட இருக்கலாம்.”

பட்டர் ‘சிவ சிவா’ என்று சொல்லித் தன் காதுகளை மூடிக்கொண்டார்.

குமராயி புன்னகை மாறாமல் இருந்தாள். இந்த உலகில் நிகழும் பைத்தியக்காரத் தனங்களைக் கண்டு முகிழும் பேரன்னையின் புன்னகை அது. அதை எதிர்கொள்ள அனைவரும் தயங்கினர். அவள் முகத்தைப் பார்க்காமலேயே அவளைத் தூற்றினர்.

“நிறுத்துங்கள்...”

முதன்முதலாக குமராயி குரல் கொடுத்தாள்.

சிறிது நேரத்தில் படபடக்கும் புறாக்கள் ஒரு முறை சுற்றிவந்து கோபுரத்தில் அடைவது போன்ற அமைதி கூடியது.

‘ஆசையோடு சேர்த்த தயிர் தங்கமே தங்கம்’

“இந்தப் பிள்ளைக்கு அப்பன் யார் என்று தெரிய வேண்டும் அல்லவா... உள்ளே போங்கள். ஒருவன் லிங்க ரூபமாய் அமர்ந்திருப் பான். அவன்தான்” என்றாள்.

மீண்டும் மக்கள் கூட்டத்திலிருந்து சத்தம் புறப்பட்டது. `‘இந்தப் பழிபாவத்தை எல்லாம் ஈசன் மேல் போடாதே. உன் அட்டூழியத்துக்கு அவர்தான் கிடைத்தாரா...”

குமராயி சிரித்தாள். “ஒரு பிள்ளையின் தகப்பன் யார் என்று பெற்றெடுத்தவள்தானே கூற வேண்டும். ஊரே ஊகித்தால் எப்படி?”

“இனி பேசினால் உன்னைக் கல்லால் அடித்தே கொல்வோம். நீ பாவம் செய்ததோடு நில்லாமல் சிவ அபவாதம்

வேறு செய்கிறாய்” என்றான் ஒருவன்.

“ஆம், அதுதான் சரி... இவளைக் கொலை செய்துவிடலாம்” என்றான் மற்றவன்.

பட்டரும் அவள் மனைவியும் வாய்பொத்தி அழுதனர். அடுத்து என்ன நிகழும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். குமராயி சத்தமாகப் பேசத்தொடங்கினாள்.

“என் மேல் கை வைத்தால் அந்தக் கணம் பொசுங்கிப்போவீர்கள். இது அந்த ஈசன்மீது சத்தியம்” என்று இடிபோல் முழங்கினாள். அவளைத் தாக்கப் பாய்ந்தவர்கள் அஞ்சி அப்படியே நின்றனர்.

சன்னதம் ஏறிய காளிபோல மூச்சிரைத்தாள் குமராயி. இருபுறமும் பார்த்து உறுமியபடி நடக்கும் புலிபோல ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்து பட்டர் அருகில் வந்தாள். பட்டரின் மனைவியை நோக்கினாள்.

மந்திரத்தில் வசப்பட்டதுபோல பட்டர் மனைவியின் அழுகை நின்றது. கொடுக்க இவள் கையை முதலில் நீட்டினாளா அல்லது வாங்க அவள் கையை முதலில் நீட்டினாளா என்று தெரியவில்லை. இரண்டும் ஒரே கணத்தில் நிகழ்ந்தன. பிரசாதம் பெற்றுக் கொள்வதுபோல பவ்யமாகப் பிள்ளையைப் பெற்றுக்கொண்டாள் பட்டரின் மனைவி.

“ஈசனின் பிள்ளை இனி உங்கள் பிள்ளை” என்றாள்.

பட்டரின் மனைவி அப்படியே பிள்ளையைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். பட்டர் ஆறுதலாக அவள் தோளைத் தொட்டார்.

அடுத்தகணம் விருட்டென்று திரும்பிய குமராயி, “உண்மையை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் மட்டும் என் பின்னே வாருங்கள்” என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

அவள் நடக்கும் வேகத்துக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியவில்லை. ஓட்டமும் நடையுமாகப் பின்தொடர்ந்தனர். நதிக்கரை வந்தடைந்தவள் ஒரு கணம் நின்று வணங்கினாள். நதியில் புதுமழையால் வெள்ளம் சுழன்று ஓடியது.

அவளை வரவேற்பதுபோல நுரைப்பூக்கள் கரைகளில் ஒதுங்கின. ‘போதும் மகளே வந்துவிடு’ என்பதுபோலக் காவிரித்தாய் அவளைத் தன் அலைக்கரங்களால் அழைத் தாள்.

குமராயி மெள்ள ஆற்றில் இறங்கினாள். சத்தமாக, ``ஹரஹர நமப் பார்வதி பதயே ஹரஹர மகாதேவா” என்று சப்தமிட்டபடியே இறங்கினாள். ஓடிவந்த கூட்டம் இந்தக் காட்சியைப் பார்த்ததும் உறைந்து நின்றது. தன்னையும் அறியாமல், “மகாதேவா... மகாதேவா...” என்று சப்தமிட்டது.

நடு ஆறு வரை போனவள் திரும்பி நின்று ஆலயம் இருக்கும் திசை பார்த்தாள். சூரியன் சரியாக கோபுரத்துக்கு மேல் நின்றது. கைதூக்கி வணங்கி மீண்டும் ஒருமுறை, “ஓம் நமசிவாய” என்று மும்முறை சொல்லி நீரில் மூழ்கினாள்.

அவள் கரம் வேகமாகச் சாய்ந்து மறைந்தது. அதுவரை இல்லாத சுழல் ஒன்று அங்கே ஒருவானது. மக்கள் கூட்டம் கலங்கிப்போனது. பட்டர் வாய்விட்டுப் புலம்பினார்.

“இது என்ன உண்மை தாயே... எதை எங்களுக்குக் காட்ட அழைத்து வந்தாய்...

உன்னைக் காக்க இயலாத பாவிகளாகி விட்டோமே... பிள்ளைபெற்ற ஓர் அன்னையைத் தண்ணீரோடு போகவிட்டோமே... இந்தப் பாவம் இனி எங்கு சென்று தொலையும்” அவர் புலம்பி அழ, அதுவரை கல் நெஞ்சாக நின்றவர்களும் கலங்கினார்கள். தம்மையும் அறியாமல் கையெடுத்துக் கும்பிட்டனர்.

பட்டர் தன்னிலை மறந்தார். துக்கம் அவரை வேகமாக நதியை நோக்கித் தள்ளியது. மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு குமராயி நடந்த தடங்களில் வேகமாக நடந்து நதிக்குள் பாயப் போனார். எல்லோரும் அவரைத் தடுக்க ஓடினர். அடுத்த நொடி நதியில் வீழ்ந்துவிடுவார் என்கிறபோதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

வானம் மின்னியது. மின்னலின் நடுவில் இருந்து ஒரு குரல் எழுந்தது. அது குமராயியின் குரல்தான்

“யாரும் கலங்கவேண்டாம். இது ஈசனின் திருவிளையாடல். நானே இடபாகம் நின்றவள். உயிர் சுமக்க ஆசைகொண்டு இங்கு தயிர் சுமந்து வாழ்ந்தேன். என் ஆசை நிறைந்தது. இனி இங்கேயே கோயில் கொள்வேன். பிள்ளையில்லாதவர்களுக்குப் பிள்ளைவரம் தருவேன்.”

ஊர் மீண்டும் ஆலய வாயிலில் கூடியது. குமராயிக்கு அங்கு சந்நிதி எழுப்புவது என்று முடிவானது. சில நாள்களுக்குப் பின் சிலையை பிரதிஷ்டை செய்தபோது, அது அச்சு அசலாய் குமராயிபோலவே இருப்பதாகச் சொன்னார் பட்டர்.

****

‘ஆசையோடு சேர்த்த தயிர் தங்கமே தங்கம்’

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது மோகனூர். இங்கு இறைவனின் திருநாமம் அசலதீபேஸ்வரர். அம்பிகையின் திருநாமம் மதுகர வேணியம்பிகை, குமராயி ஆகியனவாகும். இங்கு சுவாமி மேற்கு நோக்கியும் அம்பிகை கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். காவிரியில் நீராடி இத்தல இறைவனை வழிபட்டால் முன்வினைப் பாவம் நீங்குவதோடு ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. எனவே, இங்கு அதிக அளவில் ஆயுஸ் ஹோமங்கள் நடைபெறுகின்றன. அம்பிகைக்கு வஸ்திரம் சாத்தி விசேஷ அபிஷேகம் செய்து வழிபட்டால், சகல செல்வங்களும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.