திருக்கதைகள்
Published:Updated:

கங்கையில் நீராடுவதற்குச் சமம்

ராம நாமம்
பிரீமியம் ஸ்டோரி
News
ராம நாமம்

ராம நாமம்

ராம நாமம் மிகவும் புனிதமானது; வல்லமை மிக்கது. இதைத் தாரக மந்திரம் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். தியாகபிரம்மம் 96 கோடி முறை ராமநாமத்தை ஜபித்து திருவருள் பெற்றார். புரந்தரதாசர், தாம் இயற்றிய பக்திப் பாடல் ஒன்றில், ‘வேறு எந்த மந்திரமும் செய்யாததை ராம நாமம் செய்யும்!’ என்று குறிப்பிடுகிறார்.

ராம நாமம்
ராம நாமம்


ஆஞ்சநேயர் ராமநாம மகிமையால் பல காரியங்களை சாதித்த திருக்கதைகளை நாம் அறிவோம். ஒரு முறை யோகிகள் சிலர் அவரிடம் சென்று ‘‘எங்களுக்கு ராம நாமம் உபதேசியுங்கள்!’’ என்று கேட்டுக் கொண்டனர்.

அப்போது, ‘‘நீங்கள் அற்ப பலன்களுக்காக ராம நாமத்தை உபயோகிப்பீர்கள். அத்தகைய சந்தர்ப்பத்தில் நீங்கள் என்னிடம் வந்தால் உங்களது எல்லாத் துன்பங்களும் நீங்கும். தூய பக்தியுடன், பேரானந்தத்துக்காக மட்டும் ராம நாமம் ஜபிக்க வேண்டும்!’’ என்றாராம் ஆஞ்சநேயர்.

சத்ரபதி சிவாஜி தனது ராஜ்ஜியத்தைக் குரு ராமதாசரிடம் ஒப்படைத்துவிட்டு, அவரது கட்டளையை எதிர்பார்த்து நின்றார். அப்போது ராமதாசர், ‘‘மராட்டியத்தில் யார் யாருடன் பேசினாலும் முதலில் ‘ராம்’ என்று சொல்லி விட்டே பேச ஆரம்பிக்க வேண்டும் என்று மக்களுக்கு ஆணையிடுங்கள்!’’ என்று கேட்டுக்கொண்டாராம்.

சதாசிவ பிரம்மேந்திரர் என்ன சொல்கிறார் தெரியுமா? தமது பாடல் ஒன்றில், ‘‘ராம நாம ரசத்தை எப்போதும் பருகு. எல்லாத் துன்பங்களிலிருந்தும் நீ விடுபடுவாய்!’ என்று அறிவுறுத்துகிறார்.

முத்துசுவாமி தீட்சிதர் காசியில் சிவயோகி ஒருவரிடம் தீட்சை பெற்றார். அப்போது கங்கையிலிருந்து வீணை ஒன்று தோன்றியது. ராம நாமம் பொறிக்கப்பட்ட அதை முத்துசுவாமி தீட்சிதர், கங்காதேவியின் ஆசீர்வாதமாக வணக்கத்துடன் பெற்றுக் கொண்டாராம்.

‘மக்கள் ராம நாமம் சொல்வதைக் கேட்ட எமன், ‘இனி எனக்கு வேலை இருக்காது என்று கவலைப்படுகிறான்!’ என்று தியாகராஜர் தனது முகாரி கீர்த்தனத்தில் குறிப்பிடுகிறார். இதன் மூலம், ராம நாமம் எமனையே நடுங்க வைப்பது என்று உணர்த்துகிறார்.

மற்றோரிடத்தில், ‘ராமரை தியானம் செய்வது, கங்கையில் நீராடுவதற்குச் சமம்!’ என்றும், ‘ராமா, உன்னை விட்டு அரை நிமிடம் கூட என்னால் வாழ முடியாது!’ என்றும் குறிப்பிடுகிறார் தியாகராஜர்.

- கே.பாலு, திருச்சி-2