சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

ஆன்மிகம்: குருவே சரணம்!

குருவே சரணம்
பிரீமியம் ஸ்டோரி
News
குருவே சரணம்

ஓவியங்கள்: பாரதிராஜா

குருவே சரணம்!

`தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே'

`குருவை தரிசிப்பதும், குருவின் திருநாமத்தை ஜபிப்பதும், குருவின் அமுதமொழிகளைக் கேட்பதும், சதாகாலமும் குருவை மனத்தால் சிந்திப்பதுமே ஒரு மனிதனுக்கு மெய்ஞ்ஞானத் தெளிவை ஏற்படுத்தும்' என்கிறார் திருமூலர்.

மனிதர்களாகப் பிறந்தவர்கள் மோட்சம் என்ற உன்னதமான நிலையை அடைய வேண்டுமென்றால், நான்கு யுகங்களிலும் பல மார்க்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. எந்த மார்க்கமாக இருந்தாலும், ஒருவர் அதைக் கடைப்பிடிக்க வேண்டுமானால், அவருக்குத் தேவை ஒரு குரு. குரு இல்லாமல் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது.

`நிரூபண குரு’, `பரம குரு’, `பரமேஷ்டி குரு’, `பராபர குரு’ என்று குருவைப் பலவிதமாகச் சொல்வது உண்டு. இந்த வரிசையானது `குரு கிரமம்.’ நிரூபண குரு என்பவர் நமக்கு உபதேசிக்கும் பிரத்யட்ச குரு. பரமகுரு, நிரூபண குருவின் குரு. பரமகுருவுக்கு குருவாக இருப்பவர் பரமேஷ்டி குரு. பல பரமேஷ்டி குருக்களுக்கு குருவாக இருப்பவர் பராபர குரு.

குருவே சரணம்
குருவே சரணம்

அஞ்ஞானத்தை அகற்றி, மெய்ஞ்ஞானத்தை அருளும் சத்குருவானவர் தாயினும் சாலப் பரிந்து அருள்செய்பவர். ஓர் அன்னையினால், தான் பெற்ற பிள்ளைகளுக்கு இந்த உலகத்தில் செய்ய வேண்டிய கடமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர, நிலையான மோட்சநிலையை அடையச் செய்ய வழிகாட்டுபவர் குருநாதர்தான்.

பகுத்து அறிகின்ற அறிவினைப் பெற்றிருக்கும் மனிதர்கள் தங்கள் ஆறாவது அறிவினாலும் தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களையும் அறியச் செய்பவர் குரு. குரு வேறு, இறைவன் வேறு அல்லர். அருணகிரிநாதப் பெருமான் தம்முடைய கந்தரனுபூதியில், `உருவாய் அருவாய்...' என்று தொடங்கும் பாடலில், `குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...' என்று குமரக் கடவுளையே குருவாகப் போற்றுகிறார்.

இந்த உலகத்தில் நமக்கு ஆதிகுருவாகத் தோன்றியவர்கள் இருவர். நாராயணன் ஹயக்ரீவராகத் தோன்றி அகத்தியருக்கு உபதேசித்தார். மறுபடியும் கிருஷ்ணராக அவதரித்து அர்ஜுனனைக் காரணமாகக்கொண்டு நமக்கு கீதையை உபதேசித்தார். சிவபெருமானோ, `கல்லாலின் புடையமர்ந்து, நான்மறை ஆறங்கம் முதற்கற்று... மறைக்கு அப்பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டி சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்' என்று மௌனத்தாலே சனகாதி முனிவர்களைக் காரணமாகக்கொண்டு நமக்கெல்லாம் சின்முத்திரையின் மூலம் பரமாத்மா - ஜீவாத்மா ஐக்கியத்தின் அவசியத்தை உபதேசிக்கிறார்.

`ஸ்பரிசவேதி’ என்ற மூலிகை இரும்பைத் தங்கமாக்கும். ஆனால், அப்படித் தங்கமாக மாறிய அந்த உலோகத்தால் மற்றொரு இரும்பைத் தங்கமாக்க முடியாது. ஆனால், ஒரு குருவானவர், தன் சீடனுக்கு உபதேசம் செய்து, அவனையும் குருவின் நிலைக்கு உயர்த்திவிடுவார்.

தெய்வரீதியில் பார்க்கும்போது தட்சிணாமூர்த்தியும், ஸ்ரீமந் நாராயணனும் முதல் குரு. பிரபஞ்ச சிருஷ்டியில் பார்க்கும்போது வேத வியாசர் முதல் குரு; அடுத்து பிறவி ஞானியாகிய சுகதேவர்.

அதற்குப் பிறகு வந்தவர்களில் ஆதிசங்கரர், ராமாநுஜர், மத்வர், சமயக் குரவர்கள், ஆழ்வார்கள் என்ற வரிசையில் அண்மைக் காலத்தில் ராகவேந்திரர், சாய்பாபா, ரமணர், வள்ளலார், மகா பெரியவா, அரவிந்த அன்னை என்று பல ஞானியர்கள் தோன்றி, சத்குருவாக விளங்கி, நமக்கெல்லாம் ஆன்ம ஞானத்தை உபதேசித்திருக்கின்றனர்.

நம்மையும் பிரம்மத்தையும் இணைக்கக்கூடிய சக்திதான் குரு. இதுவே குருவின் கிருபை. இந்த குரு கிருபை நமக்குக் கிடைத்தால்தான் நம்மால் முன்னேற முடியும். இல்லையென்றால் முடியாது.

இப்படி ஒரு சத்குருவை நாம் அடைவதற்கு மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனால்தான்,

`பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும்

உன்னருள் இல்லாவிட்டால் ஒன்றுக்கும் உதவாது

தின்னத் தெவிட்டாத தெள்ளமுதே - குரு

தேவா - தேவா - தேவா உன்னருள் பெறவே

என்ன புண்ணியம் செய்தேனோ சத்குருநாதா

எத்தனை தவம் செய்தேனோ நின்னருள் பெறவே'

என்று ஊத்துக்காடு வேங்கடகவி பாடியிருக்கிறார்.

மகா பெரியவா

‘பிறர் நம்மைத் துன்பப்படுத்தும்போது பொறுத்துக்கொள்வது மனிதத்தன்மை என்றால், மறந்து மன்னித்துவிடுவது தெய்வத் தன்மையாகும்.’

மகா பெரியவா
மகா பெரியவா

மக்கள் சேவையே மகேஸ்வர பூஜை!

மகா பெரியவா தஞ்சை மாவட்டத்துக்கு விஜயம் செய்தபோது, திருக்களம்பூர் என்ற ஊரில் ஏழை, எளிய ஹரிஜன மக்கள் மகாஸ்வாமிகளை தரிசிக்க சாலையோரத்தில் காத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் கொடுத்த காணிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஸ்வாமிகள், அதைப்போல் பல மடங்கு தொகையை மடத்துப் பணத்திலிருந்து சேர்த்து எல்லோருக்கும் வேஷ்டி, புடவை வாங்கி வரும்படி கட்டளையிட்டார். ‘புடவை வாங்குவதற்காக குடவாசல் நகருக்குச் சென்று திரும்புவதற்குள் மாலை நேரம் ஆகிவிடுமே. அடுத்த முகாமுக்குச் சென்று பூஜை முடிந்த பிறகுதானே ஆகாரம்கொள்வார்’ என்று மடத்துச் சிப்பந்திகள் கலங்கித் தவித்தனர். இரவு நெருங்கும் வேளையில் வேஷ்டி, புடவைகள் வந்து சேர்ந்தன. அவற்றை அந்த எளிய மக்களுக்குக் கொடுக்கும்படி செய்து அவர்களை ஆசீர்வதித்தார். அருகிலிருந்த ஸ்ரீகார்யம், ‘பூஜைக்குத்தான் நேரமாகிவிட்டது’ என்று கூறினார். அதைக் கேட்டு முறுவலித்த மகா ஸ்வாமிகள், ‘பூஜைக்கா, நேரமா... இதுதான் பூஜை’ என்றார்.

ஸ்ரீரமணர்

‘ `நான்’ என்ற அகந்தையானது, `எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம்’ என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. நாம் வெறும் கருவி மட்டுமே. கர்த்தா இறைவனே. இதை உணரும்போதுதான் அகந்தை நம்மை விட்டு நீங்கும்.’

ஸ்ரீரமணர்
ஸ்ரீரமணர்

உபதேசம் முக்தி தரும்!

பகவான் ரமணரின் ‘நூல் திரட்டு’ என்ற நூலுக்கு ஒரு முன்னுரை இருந்தால் நன்றாக இருக்குமே என்று பக்தர்கள் விரும்பினர். ஆனால், ‘பகவானின் நூலுக்கு நாம் எப்படி முன்னுரை எழுதுவது?’ என்று அனைவரும் தயங்கினர். பின்னர் ரமண மகரிஷியின் உத்தரவின்பேரில் டி.கே.சுந்தரேச ஐயர் முன்னுரை எழுதினார். அதை ரமண மகரிஷியிடம் காட்டி, அவருடைய ஒப்புதல் பெற வந்தார். முன்னுரை முழுவதையும் படித்துப் பார்த்துவிட்டு, மிகவும் எளிமையாகவும் நன்றாகவும் இருப்பதாகப் பாராட்டினார். பின்னர், கட்டுரையின் முடிவில் ‘மெய் சத்தியத்தை அறிய விரும்பும் அனைவருக்கும், பகவானின் அருள்வடிவமாக விளங்கும் இந்த நூல், ஆனந்தமாம் முக்தியை அளிக்கும் என்று நம்புகிறேன்’ என்று இருந்ததை, ‘அளிக்கும் என்பது திண்ணம்’ என்று மாற்றிய பகவான் ரமணர், தம் உபதேசத்தைக் கேட்டு நடக்கும் பக்தர்கள் முக்தி அடைவது உறுதி என்று உணர்த்தி அருளினார்.

ஸ்ரீராகவேந்திரர்

‘உண்மையான அன்பும், போலித்தன்மை இல்லாத பக்தியும் இருந்துவிட்டால் போதும், ஒருவன் இறைவனின் அருளைப் பெற்றுவிட முடியும்.’

ஸ்ரீராகவேந்திரர்
ஸ்ரீராகவேந்திரர்

துறவிக்குப் பொன்னும் மண்ணும் ஒன்றே!

ஒருமுறை தஞ்சாவூர் பகுதி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டது. மக்கள் உணவும் நீரும் இல்லாமல் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். அப்போது தஞ்சையை ஆண்டுவந்த மன்னரின் வேண்டுகோளின்படி ஸ்ரீராகவேந்திரர் தக்க பரிகார ஹோமங்கள் செய்தார். அதன் பலனாக மழை பொழிந்து நாடு சுபிட்சம் அடைந்தது. மன்னர் தன் நன்றிக் காணிக்கையாக விலையுயர்ந்த நவரத்தினங்கள் பதிக்கப்பெற்ற ஆரத்தை வழங்கினார். அந்த ஆரத்தை ஸ்ரீராகவேந்திரர் யாககுண்டத்தில் அர்ப்பணித்துவிட்டார். அதைக் கண்டு மன்னர் வருந்தியபோது, அந்த ஆரத்தை யாககுண்டத்தில் இருந்து திரும்பப் பெற்று மன்னரிடம் கொடுத்ததுடன், `சந்நியாசிகளுக்கு பொன்னும் மண்ணும் ஒன்றே’ என்ற பேருண்மையை உணர்த்தினார்.

வள்ளலார்

‘சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றிய நிலையில் இறைவனை வழிபடுங்கள். அதுவே உண்மையான வழிபாடு.’

வள்ளலார்
வள்ளலார்

வடலூரில் சிதம்பர ரகசியம்!

ஆண்டுதோறும் ஆனித் திருமஞ்சனம் மற்றும் திருவாதிரைத் திருவிழாக்களின்போது வள்ளலாரின் பக்தர்கள் வடலூருக்கு வந்து, வள்ளலாருடன் சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானை தரிசிப்பது வழக்கம். அப்படி ஒருமுறை பக்தர்கள் வந்திருந்தபோது, விழா நாள் நெருங்கியும் வள்ளலார் புறப்படுவதாகத் தெரியவில்லை. ‘சிதம்பர தரிசனம் தவறியதே’ என்று பலரும் வருந்தி நின்றனர். அவர்களின் வருத்தத்தை உணர்ந்த வள்ளலார், சத்திய ஞான தருமசாலையின் ஒரு பக்கத்தில் வெண் திரையிடும்படி கூறினார். அனைவரையும் திரைக்கு முன்னே வரச்சொன்ன வள்ளலார், ‘இதோ பாருங்கள் சிதம்பர தரிசனம்’ என்றார். அவர் கையை அசைத்ததும், அந்தத் திரையில் சிதம்பர தரிசனம் காட்சி தந்தது. பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஸ்ரீஷீர்டி சாயிபாபா

‘உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், நீங்கள் உங்களுடைய நல்ல குணத்தை மாற்றிக்கொள்ளாதீர்கள். கடவுள் ஒருவரே நமக்கு மேலானவர். நம் ஆசைகளைப் பூர்த்திசெய்பவர் அவரே.’

ஸ்ரீஷீர்டி சாயிபாபா
ஸ்ரீஷீர்டி சாயிபாபா

பஞ்சபூதங்களும் என் வசமாகும்!

ஒருநாள் மாலை நேரம். கடும் புயலும் பெரும் மழையும் ஷீர்டி கிராமத்தையே புரட்டியெடுத்தன. வீடுகளெல்லாம் வெள்ளத்தில் மூழ்கி, மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை சாயிபாபாதான். எல்லோரும் அவரைத் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் இரக்கம்கொண்ட பாபா, துவாரகாமாயியைவிட்டு வெளியில் வந்து வானத்தைப் பார்த்து, ‘போதும் நிறுத்து உன் சீற்றத்தை. இந்த மக்களிடம் கருணை காட்டு’ என்று கடுமையான குரலில் உத்தரவிட்டார். பாபா அப்படிக் கூறியதுதான் தாமதம், மழையும் காற்றும் மெள்ள மெள்ள ஓய்ந்து, சற்று நேரத்துக்கெல்லாம் வானம் நிர்மலமாகி, நிலவு பிரகாசித்தது. மக்கள் அனைவரும் பாபாவைப் பணிந்து வணங்கி, தங்கள் இல்லங்களுக்குச் சென்றனர்.

ஸ்ரீஅன்னமாசார்யா

`எவனொருவன் உண்மையைப் பின்பற்றுகிறானோ, பிறரைப் பற்றிய ஏளனப் பேச்சுகளை வெறுக்கிறானோ, எல்லா உயிர்களிடத்திலும் அன்புகாட்டுகிறானோ, மற்றோரைத் தன்னைப்போல் நடத்துகிறானோ அவனே மனிதன்.’

ஸ்ரீஅன்னமாசார்யா
ஸ்ரீஅன்னமாசார்யா

பெருமாளுக்கு ஊஞ்சல் உற்சவம்

`கர்னாடக சங்கீதத்தின் பிதாமகர்’ என்று போற்றப்படும் தாளப்பாக்கம் அன்னமாசார்யா, திருமலை வேங்கடவனிடம் ஆழ்ந்த பக்திகொண்டிருந்தவர். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும், அந்தக் கோயில்களில் அருளும் இறைவனைத் திருவேங்கடவனாகவே பாவித்து வழிபடுபவர். தம் வாழ்நாளில் 32,000 கீர்த்தனைகள் இயற்றியவர். இவருடைய ‘டோலாயாம் சல டோலாயாம்’ என்ற வராளி ராகத்தில் அமைந்த கீர்த்தனை மிகவும் பிரசித்தம். பெருமாளின் ஊஞ்சல் சேவையின்போது பாடப்படும் இந்தக் கீர்த்தனையில், மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களைப் பற்றிக் குறிப்பிட்டு, `அத்தனை அவதாரங்களும் இந்தத் திருமலையில் அருளும் வேங்கடவனே...’ என்று பாடியிருப்பார்.

ஸ்ரீஅன்னமாசார்யா

‘ஒருவர் எப்படி இருந்தோம் என்று நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதைவிட, எப்படி இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைத்தால், அவர் நிச்சயம் முன்னேறுவார்.’

ஸ்ரீஅன்னமாசார்யா
ஸ்ரீஅன்னமாசார்யா

இயற்கையைப் போற்றுவோம்!

ஸ்ரீஅன்னை இயற்கையிடம் மிகுந்த நேசம்கொண்டிருந்தவர். `இயற்கையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியவர்.

ஆசிரமத்தில் வயதான மாமரம் ஒன்று இருந்தது. மிகப் பரந்து விரிந்திருந்த அந்த மரம் மற்ற செடி கொடிகளின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தது. அதை வெட்டிவிட வேண்டும் என்று நினைத்த ஆசிரமப் பாதுகாவலர், மறுநாள் ஸ்ரீஅன்னையிடம் உத்தரவு கேட்டார். அதைக் கேட்ட ஸ்ரீஅன்னை, அந்த மரத்தில் வாழ்ந்துவந்த ஒரு தேவதை, `மரத்தை வெட்டிவிட வேண்டாம்’ என்று முதல்நாள் இரவு தன்னிடம் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்து, மரம் வெட்டப்படாமல் தடுத்துவிட்டார்.