Published:Updated:

நினைத்தது நிறைவேற நட்சத்திர அலங்காரம்!

முருகா! விநாயகரே முழுமுதற்கடவுள். பிரணவ ஸ்வரூபியான அவரே மும்மூர்த்திய ரான எங்களுக்கும் அகில உலகங்களுக்கும் மூலம்.

பிரீமியம் ஸ்டோரி

முருகப்பெருமான் ஒருமுறை, உலக நன்மையை மனதில்கொண்டு ஈசனிடம், ‘`தந்தையே விரதங்கள் அனைத்திலும் சிறந்தது எது’’ என்று கேட்டார்.

அதற்கு ஈசன் புன்னகையோடு, ‘`விநாயகர் சதுர்த்தி விரதம்தான் விரதங்கள் அனைத்திலும் தலைசிறந்தது’’ என்று கூறினார். அத்துடன், மூவுலகும் அறியவேண்டிய விநாயகக் கடவுளின் தத்துவத்தையும் அவதாரச் சிறப்பினையும் ஆதிசிவன் விளக்கினார்.

நினைத்தது நிறைவேற நட்சத்திர அலங்காரம்!

“முருகா! விநாயகரே முழுமுதற்கடவுள். பிரணவ ஸ்வரூபியான அவரே மும்மூர்த்திய ரான எங்களுக்கும் அகில உலகங்களுக்கும் மூலம். அவர், பல காரண காரியங்களுக்காக பல அவதாரங்களை எடுத்துள்ளார். அப்படி ஒரு காரணத்தை முன்னிட்டே எனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறார். எனவே, சகலமும் அவருக்குள் அடக்கம்'’ என்றுரைத்தார்.

உண்மைதான்! நாம் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும், மூல மூர்த்தியுடன் பரிவார தெய்வங்களையும் தரிசிக்கலாம். ஆனால், விநாயகரின் கோயில்களில் பெரும்பாலும் பரிவார தெய்வங்கள் இருப்பதில்லை. காரணம், அவரே அனைத்து தெய்வங்களின் அம்சமாகத் திகழ்பவர் அல்லவா?!

அப்படி ஒரு மகிமைமிக்க கோயில்தான் ஈச்சனாரி விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் விநாயகப் பெருமான் மட்டுமே சந்நிதி கொண்டிருக்கிறார். அவர் இந்தத் தலத்தில் கோயில்கொண்ட நிகழ்வினைப் பார்ப்பதற்கு முன்பு, ஒரு புராண நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.

மகரிஷிகளில் முக்கியமானவர் கிருச்சமத முனிவர். அவர் விநாயக உபாஸகர். கணநாதனின் அருள் பெற்றவர்.

ஒருநாள் அவர் ஆழ்ந்த தவத்திலிருந்து கண் விழித்தபோது, அவர் பார்வையின் தீட்சண்ய சக்தியால் ‘பலி’ என்ற அரக்கன் தோன்றினான். பலியின் நல்வாழ்வுக்காகக் கணபதி மூலமந்திரத்தை அவனுக்கு உபதேசித்தார் மகரிஷி. மேலும், அவன் அஞ்ஞானம் நீங்கி நல்லறிவு பெறவேண்டும் என்று பிரணவ மூர்த்தியான கணபதியை வழிபடச் சொன்னார்.

நினைத்தது நிறைவேற நட்சத்திர அலங்காரம்!

தந்தையைவிடப் பன்மடங்கு வைராக்கிய பக்தியுடன் கணபதியை உபாசித்தான் பலி. கடுந்தவம் புரிந்தான்.

தவத்தின் பயனாக அவனுக்கு மகாகணபதியின் தரிசனம் கிடைத்தது. ‘தான் எப்படி வாழ்ந்தாலும், எப்படி அழிந்தாலும் முடிவில் பாவங்கள் எல்லாம் மறைந்து, புண்ணியங்கள் மேலோங்கி முக்தியே கிடைக்கவேண்டும்’ என வரமொன்று கேட்டான். கருணைக் கடவுளான கணபதி அவன் கேட்டபடியே வரம் அருளினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்படி வாழ்ந்தாலும் இறுதியில் பாவம் தன்னைச் சேராது என்ற செருக்கில், தன் ஆணவ ஆட்சியைத் தொடங்கினான் பலி. கரும்பொன், வெண்பொன், பசும்பொன் ஆகிய மூன்று உலோகங்களாலான கோட்டையை நிர்மாணித்து ‘திரிபுரம்’ எனப் பெயரிட்டான். தேவலோகத்தை வென்றான். சத்யலோகத்தையும் வென்றான். தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். தர்மங்களை அழித்தான். பாவ மூட்டைகளைச் சுமக்க ஆரம்பித்தான். ‘அவை தன்னை பாதிக்காது’ என்ற காரணத்தால், அது குறித்து அவன் கவலையே படவில்லை. திடீரெனத் தோன்றியவன், திடீரென மறைய வேண்டியதுதானே நியதி!

நினைத்தது நிறைவேற நட்சத்திர அலங்காரம்!

அவன் அழிவுக்கான நேரம் வந்தபோதுதான், தேவர்கள் வேண்டுகோள்படி ஆதிசிவன் போர்க் கோலம் பூண்டார். திரிபுரனை சம்ஹரிக்கப் புறப்பட்டார். அதற்கென ஓர் அற்புதத் தேரை நிர்மாணித்த தேவர்கள், அக்னி தேவனையும் - யமனையுமே தேரின் அச்சாக அமைத்திருந்தனர். ஆனால், திரிபுரத்தை எரிக்கும் வேலைக்கு அக்னியும் திரிபுரனை அழிக்கும் வேலைக்கு யமனும் தேவைப்படுவதை ஞானமூர்த்தியான விநாயகர் உணர்ந்தார். மேலும் தேர்ச் சக்கரம் தடையின்றி சுழன்று ஈசன் எடுத்த காரியம் குறையின்றி நிறைவேற, முகூர்த்தம் - காஷ்டை எனப்படும் இரண்டு காலதேவதைகள்தான் அவசியம் என்பதையும் ஞான கணபதி அறிவார்.

அதன்பொருட்டே திரிபுரம் எரிக்கப் புறப்பட்ட சிவனார் ரதத்தின் அச்சினைக் கழற்றினார் மகா கணபதி. ரதம் நின்றதும் ஆதிசிவன் தன் அருமை மைந்தனுடைய செயலுக்கான காரணத்தை அறிந்துகொண்டு, உடனே அச்சாக இருந்த அக்னியையும் யமனையும் சக்கரங்களிலிருந்து நீக்கி, அக்னியைத் தன் நெற்றிக்கண்ணிலும் - யமனை அம்பாக இருந்த மகாவிஷ்ணுவின் கரங்களிலும் ஆவாஹணம் செய்வித்தார்.

முகூர்த்த, காஷ்ட தேவதைகளைத் தேரைச் சுழலவைக்கும் அச்சாக மாற்றினார். தன் காரியத் தைச் செப்பனிட்டுத் தந்த கணபதியை ஆதிசிவன் ஆசீர்வதித்தார்.

`‘உன்னை வணங்கி உலகோர் தொடங்கும் பணிகள் தடையின்றி நிறைவேறும்’' என உறுதி தந்தார். அதேவேளையில், தான் வழிபட்ட கணபதி தன்னையே அழிக்க சதி செய்துவிட்டதாக எண்ணிய திரிபுரன், தான் பூஜித்த மூலகணபதி விக்கிரகத்தைக் கோடரியால் தகர்த்தான். கோபம் அவன் பெற்றிருந்த ஸித்தியை அழித்தது. ஆதிசிவனின் கோபாக்னி திரிபுரத்தை அழித்தது. அக்னியில் பவித்ரமாகி, தான் பெற்ற வரத்தின்படி இறைவன் திருவடியான முக்தியைப் பெற்றான் திரிபுரன். சரி, இதற்கும் ஈச்சனாரி கோயிலுக்கும் என்ன தொடர்பு?

சுமார் 450 வருடங்களுக்கு முன்பு ‘மேலைச் சிதம்பரம்’ என்று போற்றப்படும் ‘பேரூர் பட்டீஸ்வரர்’ ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற் காக, ஐந்து அடி உயரமும் மூன்று அடி பருமனும் கொண்ட விநாயகர் சிலை வடிக்கப்பட்டது. அந்தச் சிலை, ஒரு நல்ல நாளில் வண்டியில் ஏற்றப்பட்டு பட்டீஸ்வரம் கொண்டுசெல்லப்பட்டது.

விநாயகரின் வாகனம், தற்போது அவர் கோயில்கொண்டிருக்கும் ஈச்சனாரி பகுதிக்கு வந்தபோது, முகூர்த்தமும் காஷ்டையும் நன்றாக இருப்பதாகவும் அந்த இடத்தில் கோயில் கொண்டால், உலக மக்களுக்கு தம் அருள்திறன் பூரணமாகக் கிடைக்கும் என்பதையும் உணர்ந்தார் விநாயகர். விளைவு, விநாயகரைச் சுமந்து வந்த வாகனத்தின் அச்சு முறிந்தது; விநாயகர் அந்த மண்ணிலேயே சாய்ந்துவிட்டார். எவ்வளவு முயற்சி செய்தும், அவரைத் தூக்க முடியவில்லை.

நினைத்தது நிறைவேற நட்சத்திர அலங்காரம்!

அப்போது இருந்த காஞ்சி ஸ்ரீசங்கராசார்ய சுவாமிகள், இறைவனின் திருவுள்ளத்தை அறிந்து அங்கேயே விநாயகரைப் பிரதிஷ்டை செய்ய அறிவுறுத்தினார். அதன்படி, அங்கேயே சிறு மேடை அமைத்து விநாயகரைப் பிரதிஷ்டை செய்தனர்; பின்னர் கோயிலும் கட்டினர் என்பது தல வரலாறு.

மற்றொரு சம்பவமும் சொல்லப்படுகிறது.

1917-ம் வருடத்தில், மயிலை கிருஷ்ணசாமிப் பிள்ளை என்பவர், கோவை - பொள்ளாச்சி சாலையைச் சீரமைக்கும் பணியின் ஒப்பந்த தாரராகப் பணியாற்றியதாகவும், சாலை அமைக்க மண்ணை வெட்டி எடுத்தபோது விநாயகர் சிலை கிடைத்ததாகவும், பின்னர் அங்கே விநாயகருக்குக் கோயில் கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

கோவை - பொள்ளாச்சி சாலையில், சாலையை ஒட்டியபடியே அமைந்திருக்கிறது ஈச்சனாரி விநாயகர் கோயில். மூன்று நிலைகளுடன் அமைந்திருக்கும் ராஜகோபுரத்தின் வழியாக ஆலயத்துக்குள் செல்கிறோம். நமக்கு நேரெதிரில் விநாயகப் பெருமானின் சந்நிதி அமைந்திருக்கிறது. விநாயகர் உயரமான பீடத்தில் அமர்ந்திருப்பதால், சாலையில் செல்பவர்களும் தரிசிக்கமுடிகிறது. புராண காலத்தில் தந்தை சிவனார் மேற்கொண்ட திருப்பணி இனிதே நிறைவேறுவதற்காகத் தேரினைத் தடுத்து நிறுத்திய அந்த கணபதி, இந்தக் கலியுகத்தில் தம்மை வழிபடும் பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக உரிய காலமும் நேரமும் பார்த்து இந்தத் தலத்தில் கோயில்கொண்டார் என்கின்றனர் பக்தர்கள்தமிழகத்திலேயே முதன்முதலாக விநாயகருக் கென்று தங்கத் தேர், ஈச்சனாரி விநாயகருக்குத்தான் செய்யப்பட்டது. நாள்தோறும் இரவு ஏழு மணிக்கு, உபயதாரர்கள் மூலம் தங்கத் தேர் பவனி நடத்தப்படுகிறது. இங்கு, விநாயகருக்கு ஒவ்வொரு நட்சத்திரத்தன்றும் ஒவ்வொருவிதமாக மலர் அலங்காரம் செய்கிறார்கள். தினசரி காலை 6.30 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. கோயிலின் நடை காலை 5 முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

ஈச்சனாரி விநாயகரை வழிபடுவதன் மூலம் கல்வியில் மேன்மை, இனிய இல்லறம், குழந்தை பாக்கியம் போன்ற பலன்கள் கிடைப்பதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

புதிதாக வாகனம் வாங்கும் அன்பர்கள், ஈச்சனாரி விநாயகர் கோயிலுக்கு வந்து பூஜை செய்தபிறகுதான் வாகனத்துக்கான பதிவு எண் வாங்குகின்றனர். சொந்த வாகனத்தில் வெளியூர்ப் பயணம் மேற்கொள்பவர்கள், ‘விநாயகரை வேண்டிக்கொண்டு சென்றால் பயணம் இனிதாக அமையும்’ என்ற நம்பிக்கையும் இங்கே பக்தர்களிடையே காணப்படுகிறது.

நந்தவனத்துடன் அமைந்திருக்கும் ஆலயம் மிகவும் தூய்மையாகப் பராமரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திரங்களும் மலர் அலங்காரங்களும்!

அசுவினி, பூசம், அவிட்டம்: இந்த நட்சத்திர நாள்களில் தங்கக் கிரீடம் மற்றும் அறுகம்புல் அலங்காரம் செயப்படுகிறது.

பரணி, சுவாதி: அறுகம்புல் மாலை அலங்காரம்

கிருத்திகை: வெள்ளிக்கவச அலங்காரம்

ரோகிணி, பூரட்டாதி, ரேவதி: அன்னம் அலங்காரம்

மிருகசீரிடம், பூரம், உத்திரம்,

அனுஷம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரம்.

திருவாதிரை, அஸ்தம்: சந்தன அலங்காரம்.

புனர்பூசம்: தங்கக் கவச அலங்காரம்.

ஆயில்யம்: தங்க கிரீட அலங்காரம்.

மகம், கேட்டை, உத்திரட்டாதி: திருநீறு அலங்காரம்.

சித்திரை: தங்கக் கிரீடம் மற்றும் வெள்ளிக் கவச அலங்காரம்.

மூலம்: தங்கக் கிரீடம் மற்றும் ரோஜா மாலை அலங்காரம்.

பூராடம்: வெற்றிலை அலங்காரம்.

உத்திராடம்: வெள்ளிக் கவசம், அறுகம்புல் அலங்காரம்.

விசாகம், திருவோணம்: சுவர்ண அலங்காரம்.

சதயம்: குங்கும அலங்காரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு