Published:Updated:

பொக்கிஷம் எது தெரியுமா

ஆன்மிகக் கதை
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகக் கதை

ஆன்மிகக் கதை!

பொக்கிஷம் எது தெரியுமா

ஆன்மிகக் கதை!

Published:Updated:
ஆன்மிகக் கதை
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகக் கதை

கிராமவாசி ஒருவன் இருந்தான். பேராசைக்காரனான அவன் ‘‘எனக்கு ஏராளமான செல்வம் வேண்டும்!’’ என தினமும் பகவானை வேண்டி வந்தான். தீவிர பக்தனாக இருப்பதால் அவன் கோரிக்கையை பகவானால் நிராகரிக்க முடியவில்லை.

ஆன்மிகக் கதை
ஆன்மிகக் கதை


ஒரு நாள் இரவு அவன் கனவில் இறைவன் தோன்றி, ‘‘நாளை காலை கிராம எல்லைக்குப் போ! அங்கு ஒரு சந்நியாசி இருப்பார். அவரிடம் விலை மதிக்க முடியாத ஒரு வைரம் இருக்கிறது. அதைக் கேள். அவரும் தந்து விடுவார். அது உன்னைப் பெரிய பணக்காரனாக்கி விடும்!’’ என்றார்.

கிராமவாசி மகிழ்ந்தான். அதன் பிறகு அன்று அவன் தூங்கவில்லை. விடிந்ததும் கிராம எல்லைக்கு ஓடினான். கனவில் பகவான் சொன்ன மாதிரியே அங்கு மரத்தடியில் ஒரு சந்நியாசி அமர்ந்திருந்தார். அவரை நெருங்கி கனவு விவரத்தைச் சொன்ன கிராமவாசி, விலையுயர்ந்த வைரத்தைத் தனக்குத் தரும்படி கேட்டான். அந்த சந்நியாசி ஒரு நொடிகூட யோசிக்கவில்லை. தன்னிடம் இருந்த துணி மூட்டையைப் பிரித்து, அதற்குள் இருந்த வைரத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

வைரத்தைக் கண்டு வியந்தான் கிராமவாசி. அளவில் பெரியதாய் இருந்தது அது. பெரும் விலைக்குப் போகும். கிராமவாசி பிரமிப்புடனும் ஒருவித மயக்கத்துடனும் சந்நியாசிக்கு நன்றி சொல்லக் கூட மறந்தவனாக வீட்டுக்குத் திரும்பினான்.

இப்போது அவனுக்குள் பலவிதமான ஆசைக் கனவுகள். வைரத்தை விற்றுக் கிடைக்கும் பணத்தில் என்னென்ன வாங்கலாம் என பட்டியல் போட்டான். ஆனால், இரவு வந்ததும் பயம் வந்தது. ‘யாராவது திருடன் வந்து வைரத்தைத் தூக்கிச் சென்று விட்டால் என்ன செய்வது?’ அவனால் தூங்க முடியவில்லை! வைரத்தைப் பாதுகாப்பாக எங்கே வைப்பது என சுற்றுமுற்றும் பார்த்தான். எந்த இடமும் அவனுக்குப் பாதுகாப்பாகத் தெரியவில்லை.

காலையில் வைரம் கையில் கிடைத்தபோது இருந்த சந்தோஷம், சுத்தமாக வடிந்துவிட்டது. வைரத்தைக் கவர்ந்து செல்ல வரும் திருடர்கள் தன்னைக் கொன்று விடுவார்களோ என யோசித்தபோது அவனுக்கு திகில் ஏற்பட்டது. இரவு பூராவும் தூங்காமல் படுக்கையில் புரண்டபடி இருந்தான்.

ஒருகட்டத்தில் ‘இந்த வைரம் கிடைப்பதற்குமுன் இரவு நேரத்தில் நிம்மதியாகத் தூங்கினோமே!’ என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்த வைரத்தை சர்வ சாதாரணமாக வைத்திருந்த... அவன் கேட்டதும் தயங்காமல் கொடுத்த அந்த சந்நியாசி மீது அவனுக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது.

மறு நாள் விடிந்ததும் சந்நியாசியைத் தேடி ஓடினான்; வைரத்தை அவரிடமே ஒப்படைத்தான். அத்துடன் ‘‘சுவாமி! விலைமதிக்க முடியாத வைரத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் என்னிடம் தரக் கூடிய அளவுக்கு உங்கள் உள்ளத்தில் என்ன செல்வம் இருக்கிறதோ அதை எனக்குக் கொடுங்கள்!’’ என பணிவாகக் கேட்டுக்கொண்டான்.

கிராமவாசி விரும்பிக் கேட்ட அந்த பெரும் செல்வம் ஆன்மிகம்!

-அ.திருமலை, முசிறி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism