Published:Updated:

'மழை வரும்!'

துளித்துளிக் கடல்கள்
பிரீமியம் ஸ்டோரி
துளித்துளிக் கடல்கள்

துளித்துளிக் கடல்கள்

'மழை வரும்!'

துளித்துளிக் கடல்கள்

Published:Updated:
துளித்துளிக் கடல்கள்
பிரீமியம் ஸ்டோரி
துளித்துளிக் கடல்கள்

அது ஓர் அழகிய கிராமம். வழக்கமாக பசுமை நிறைந்திருக்கும் அந்த ஊரில் சில ஆண்டுகளாக கடும் வறட்சி. மக்கள் முகங்களில் மகிழ்ச்சி இல்லை. மழை பொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. வருமானம் இல்லை. அப்புறம் மகிழ்ச்சி எங்கிருந்து வரும்?

'மழை வரும்!'


மழைதானே எல்லா உயிர்களுக்கும் வானம் வழியாக இறைவன் வழங்கும் திரவ வரம். தனி மனிதனின் மனப் பிரச்னையோ, ஊரின் பொதுப் பிரச்னையோ எல்லாவற்றுக்கும், அது தீர்வதற்கான ஒரு காலம் உண்டு‌. அது ஒரு மனிதர் வழியாகவோ ஒரு சம்பவம் வழியாகவோ உரிய காலத்தில் நடக்கும்!

அப்படித்தான் அந்த ஊருக்குள் ஒரு துறவி வந்தார். ஊர் மக்கள் துறவியைச் சந்தித்தனர். எல்லோர் முகமும் வாடி இருந்ததன. “ஏன் உங்கள் முகங்களில் சந்தோஷம் இல்லை? உங்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு பொதுப் பிரச்சினை இருப்பதுபோல் தெரிகிறதே. என்ன அது?” என்று கேட்டார் துறவி.

“சில ஆண்டுகளாக எங்கள் ஊரில் வானம் பொய்த்துவிட்டது. வான் மழை பொய்த்த ஊரில் கண் மழைதானே பெய்யும் சுவாமி?” என்று அவரிடம் முறையிட்டனர்.

“சரி! மழை இல்லை, விவசாயம் இல்லை, அதனால் வருவாய் இல்லை, நிம்மதி இல்லை என்று புலம்புகிறீர்கள். எல்லோரும் இணைந்து கடவுளிடமும் வானத்திடமும் மழை வேண்டும் என்று வேண்டினீர்களா?”

“இல்லையே சுவாமி! எங்களுக்கெல்லாம் மழை வேண்டும் என்று கடவுளுக்குத் தெரியாதா?” என்றனர் கொஞ்சம் கோபமும் வருத்தமும் கலந்த குரலில்.

துறவி சிரித்தார்!

“ஐயா! அந்தக் கடவுள் உங்களுக்கு மட்டும் கடவுள் அல்ல. இந்த உலகத்துக்கே - அண்ட சராசரத்துக்கே அவர்தான் கடவுள். எத்தனை ஊர்களின் எத்தனை மனிதர்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைக்க வேண்டும் அவர்? மனமுருக கோரிக்கை வைக்கப்படும் பிரச்சனைகள்தான் முதலில் தீர்க்கப்படும்!

சரி போகட்டும்! நாளை மழை வேண்டி நான் ஒரு யாகம் செய்கிறேன். அது நிறைவடைந்தவுடன் நல்ல மழை பொழியும். நீங்கள் எல்லோரும் தவறாமல் அந்த யாகத்தில் கலந்துகொண்டு மழைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு நிபந்தனை… அந்த யாகத்தில் கலந்து கொள்ள வரும் நீங்கள், ஒவ்வொருவரும் மழை வரும் என்று நான் உங்களுக்காக செய்யும் யாகத்தின் மேல் முழுமையாக நம்பிக்கை வைத்து, அது தொடர்பாக ஏதாவது ஒரு பொருளை எடுத்துவந்து காணிக்கையாகச் செலுத்தவேண்டும்!” என்றார்.

மழை வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் முகங்களில் மகிழ்ச்சிப் பூக்கள் மலர்ந்தன! உற்சாகமாக கலைந்து சென்றனர்.

மறுநாள் காலை…

அவரவர் கையில் ஒரு காணிக்கைப் பொருளோடு வந்து, துறவி ஏற்பாடு செய்திருந்த யாகத்தில் கலந்துகொண்டனர்.

அவர்களின் கைகளில் பூக்கள், மலர்மாலை, குங்குமச்சிமிழ், சந்தனம், கற்பூரம், பிரசாதங்கள், பழங்கள், இனிப்புகள், வஸ்திரங்கள் என்று பலவகை காணிக்கைப் பொருள்கள் நிறைந்திருந்தன.

யாகம் நடந்து முடிந்தது. “எப்போது சாமி மழை வரும்?” என்றனர் எல்லோரும் ஆர்வமாக.

“நீங்கள் செலுத்திய காணிக்கைப் பொருள்களில் கடவுளுக்கு உடன்பாடில்லை. அவற்றில் மழை தொடர்பாக ஒரு பொருளும் இல்லை என்று வருந்துகிறார். உங்களில் இன்னும் ஒருவர் மட்டும் காணிக்கைப் பொருளைச் செலுத்தாமல் இருக்கிறார். அது இங்கு வந்தால் மட்டுமே யாகம் முழுமை பெறும்; மழை வரும்’’ என்ற துறவி தொடர்ந்து, ``சரி... எல்லோரும் என் முன் வந்து, நீங்கள் யாகத்தில் எந்தப் பொருளைச் செலுத்தினீர்கள் என்பதைச் சொல்லுங்கள்!” என்றார்.

எல்லோரும் வரிசையாக அவர் முன் வந்து, தாங்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள் என்னவென்று சொல்லிச் சென்றனர். நிறைவாக ஒரு சிறுமி பின்பக்கமாக கைகளில் எதையோ மறைத்துக்கொண்டு வந்து நின்றாள்.

“என்னம்மா! யாகத்தில் செலுத்த நீ என்ன கொண்டு வந்தாய்?” என்று ஆர்வமுடன் கேட்டார் துறவி.

சிறுமி சட்டென்று பின்பக்கமிருந்து ஒரு சிறிய குடையை எடுத்துத் துறவியிடம் காட்டினாள். மற்றவர்கள் அவளை வியப்பாகப் பார்த்தார்கள். துறவியின் முகத்திலோ வெகு மகிழ்ச்சி!

“பார்த்தீர்களா? இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்க மழை தொடர்பாக ஒரு பொருளை எடுத்து வரும்படி நான் உங்களிடம் சொன்னேன். நீங்கள் யாருமே என் வார்த்தைகளில் கவனம் செலுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளவில்லை. இந்தச் சிறுமி மட்டுமே கடவுளிடம் மழைக்காக செய்யும் யாகம் முடிந்ததும் மழை வரும் என்ற நம்பிக்கையுடன் குடை எடுத்து வந்திருக்கிறாள். கடவுள்மீது நாம் செலுத்தும் பிரார்த்தனையில் வைக்கும் தீவிரமான நம்பிக்கை என்பது இதுதான். இந்த நம்பிக்கை மட்டுமே நம்முடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றும்!” என்றார்.

பின்னர் சிறுமியிடம், “அம்மா! உன் நம்பிக்கையைப் போற்றுகிறேன். குடையை கொஞ்சம் விரித்துப் பிடி!” என்றார் துறவி.

சிறுமி குடையை விரித்துப் பிடித்த சில கணங்களிலேயே வானத்தில் இடி முழங்க மழை தூறல் போட்டது. விரைவில், பெரு மழையாகக் கொட்டத் தொடங்கியது. எல்லோர் முகத்திலும் தெறித்தன சந்தோஷ மழைத் துளிகள்!

பிரார்த்தனை - வேண்டுதல்கள் மீது நாம் வைக்கும் நம்பிக்கை எவ்வளவு ஆழமாக இருக்கவேண்டும் என்பது புரிந்ததா?!

- பருகுவோம்...