Published:Updated:

ஆன்மிகத் துளிகள்

ஸ்ரீபகவத் விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீபகவத் விநாயகர்

பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக, இந்தத் தலத்தில் ஸ்ரீராமபிரான் சிவ பூஜை செய்து வரம் பெற்றார்.

தந்த அலங்காரம்!

கும்பகோணம் மடத்துத் தெருவில், கிழக்கு நோக்கி கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபகவத் விநாயகர். வேதாரண்யத்தைச் சேர்ந்த பகவர் என்ற முனிவருக்கு, `திருக்குடந்தை தலமானது காசியைவிட அதிகம் வீசம்கொண்டது’ என்பதை உணர்த்தி அருள்பாலித்த பிள்ளையார் இவர். பகவர் முனிவருக்கு அருளியதால் ஸ்ரீபகவத் விநாயகர் என்ற திருப்பெயர் இவருக்கு.

ஸ்ரீபகவத் விநாயகர்
ஸ்ரீபகவத் விநாயகர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மகா பெரியவா கும்பகோணம் வரும்போதெல்லாம், இந்த விநாயகரை வணங்கிச்செல்வாராம். 1952-ம் ஆண்டு, காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான சந்திரமௌலீஸ்வரன் எனும் யானை திருவிசநல்லூரில் இறந்தது. அப்போது காஞ்சி மகா பெரியவா யானையின் இரண்டு தந்தங்களையும் ஸ்ரீபகவத் விநாயகருக்கு அளித்து வழிபட்டார். சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி முதலான வைபவங்களில் ஸ்ரீபகவத் விநாயகருக்கு, அந்த தந்தங்களைக் கொண்டு அலங்கரித்து வழிபடுவது வழக்கமாம்!

- சு.முருகேசன், கும்பகோணம்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சகல பாவங்களும் நீங்கும்!

ஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில், தஞ்சாவூரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும் உள்ளது பாபநாசம். இந்தத் தலத்தில், ஸ்ரீராமபிரான் பிரதிஷ்டை செய்து பூஜித்த 108 சிவலிங்கங்களை தரிசிக்கலாம். ஸ்ரீராமன் வழிபட்டதால் இங்கேயுள்ள சிவனாருக்கு ஸ்ரீராமலிங்க ஸ்வாமி என்று திருநாமம். அம்பாளின் திருநாமம் ஸ்ரீபர்வதவர்த்தினி.

பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக, இந்தத் தலத்தில் ஸ்ரீராமபிரான் சிவ பூஜை செய்து வரம் பெற்றார். எனவே இந்தத் தலம், பாபங்களை நாசம் செய்கிற தலம் என்கின்றன ஞான நூல்கள்.

ஸ்ரீராமபிரான் சிவ பூஜை
ஸ்ரீராமபிரான் சிவ பூஜை

ஸ்ரீராமபிரானுக்காக, காசியம்பதியிலிருந்து அனுமனால் கொண்டுவரப்பட்ட சிவலிங்கமும் (ஸ்ரீஅனுமந்த லிங்கம்) இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எனவே, காசிக்கு நிகரான தலமாகத் திகழ்கிறது இது. இங்கு, ஸ்ரீசனீஸ்வர பகவான் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம் ரொம்பவே விசேஷம். இந்தத் தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீராமலிங்க ஸ்வாமி முதலான 108 சிவலிங்கத் திருமேனியையும் தரிசித்து, ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு எள் நைவேத்தியம் செய்து, எள் தீப மேற்றி வழிபட்டால், அனைத்து தோஷங்களும் நீங்கும்; சகல பாவங்களும் விலகும் என்பது ஐதிகம்!

- கே.கல்பனா, திருச்சி-4

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நந்தி இல்லாத சிவாலயம்

கேரளத்தின் பம்பை நதிக் கரையில் மாணார் கிராமத்தில் திருக்குரட்டி பகுதியில் உள்ளது ஸ்ரீமகாதேவர் கோயில். உயர்ந்த மதில் மற்றும் கோபுரத்துடன் திகழும் இது, ஒரே இரவில் பூதகணங்களால் கட்டி முடிக்கப்பட்டது என்கிறார்கள்.

ஒருமுறை தட்ச யாகத்துக்குச் செல்ல, ஈசனிடம் அனுமதி வேண்டினார் பார்வதிதேவி. சிவபெருமான் மறுத்தார். பிறகு, பார்வதி தேவியின் வற்புறுத்தலுக்கிணங்க, அனுமதி தந்தார். தேவிக்குத் துணையாக நந்திதேவரையும் உடன் அனுப்பினார். அதன் பிறகு, ரௌத்ரத்துடன் புறப்பட்ட சிவபெருமான், திருக்குரட்டியில் வந்து குடியேறினார். நந்தி, பார்வதி தேவிக்குத் துணையாகப் போனதால், இங்கு நந்தி சிலை கிடையாது.

சிவாலயம்
சிவாலயம்

இந்தக் கோயிலில் சிவராத்திரி விழா விசேஷம். அப்போது 10 நாள்கள் சகஸ்ர கலச அபிஷேகம் நடைபெறுகிறது. நிறைவு நாளன்று பூசாரி, தீ மீது நடனமாடி வருவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வு. இந்தக் கோயிலில் உள்ள பார்வதிதேவி சந்நிதி சிவராத்திரி நாளில் மட்டுமே திறக்கப்படும். இங்கு மகாவிஷ்ணுவுக்கும் ஒரு சந்நிதி உள்ளது. இவர், இஸ்லாமிய வியாபாரி ஒருவரை கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றியதாகக் கதை உண்டு. இன்றும் கோயில் மதிலுக்கு வெளியே சந்தன ஊதுவத்தி ஏற்றி, முஸ்லிம்கள் வணங்கிச் செல்கிறார்கள்.

- எஸ்.எஸ். மணி, திருவனந்தபுரம்-40