தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ஆன்மிகத் துளிகள்...

இரணியாட்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
இரணியாட்சன்

ஒருமுறை அசுரன் இரணியாட்சன், பூமியைப் பாய் போல் சுருட்டி, கடலுக்கு அடியில் ஒளித்துவைத்தான்.

ஶ்ரீசுவேத வராஹர்!

லகில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட திருமால் எடுத்த அவதாரங்கள் பல உண்டு. அவற்றில் பத்து - தசாவதாரங்கள் எனப்படுகின்றன. அந்த தசாவதாரத்தில் மூன்றாவது - ஶ்ரீவராஹ அவதாரம். பிரளயத்துக்குப் பிந்தைய இந்தக் கல்ப ஆரம்பத்தில் பூமி, வெள்ளத்தில் அமிழ்ந்து கிடந்ததாம். திருமால் வெண்ணிறப் பன்றியாக அவதரித்து பூமியை வெள்ளத்தில் இருந்து மீட்டார். எனவே, அவர் பெயராலேயே இந்த கல்பம், ‘சுவேத வராஹம்’ எனப்படுகிறது.

இரணியாட்சன்
இரணியாட்சன்

ஒருமுறை அசுரன் இரணியாட்சன், பூமியைப் பாய் போல் சுருட்டி, கடலுக்கு அடியில் ஒளித்துவைத்தான். அப்போது திருமால் வராஹ அவதாரம் எடுத்து, இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டார். இதனால் அவர் பூவராஹர் என்று போற்றப்படுகிறார். அப்படிப்பட்ட, வராஹ மூர்த்தியாக திருமால் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களுள் ஒன்று மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தை. இங்கு இவர் சுவேத வராஹர் என்ற திருநாமத்துடன் திகழ்கிறார். சுவேத வராஹ மூர்த்தியின் உடலில் எண்ணற்ற தேவதைகள் எழுந்தருளியிருப்பதாக ஐதிகம். இதற்கு எடுத்துக்காட்டாக, கஜுராகோ எனும் இடத்தில் அமைந்துள்ள பெரிய வராஹரின் உடல் மீது 274 தேவர்களின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் கூறலாம்.

- இ.ராமு, சென்னை-51

சொற்கோயிலும் கற்கோயிலும்!

நபாய சோழன் என்னும் இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி 1133-1150) அவையில் பிரதான அமைச்சராக இருந்தவர் சேக்கிழார். தில்லை நடராஜப் பெருமானால் ‘உலகெலாம்...’ என்று அடியெடுத்துக் கொடுக்கப்பட்டு, சிவனடியார்கள் 63 பேர் மற்றும் தொகை அடியார்கள் 9 பேரின் வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் எனும் பெயரில் (பெரிய புராணம்) எழுதினார்.

சொற்கோயிலும் கற்கோயிலும்
சொற்கோயிலும் கற்கோயிலும்

அநபாய சோழன், சேக்கிழாரைக் கொண்டு தில்லை சிதம்பரம் திருக்கோயிலில் (383 நாள்கள்) பெரிய புராணத்தை அரங்கேற்றம் செய்தான். அநபாயனின் மகன் இரண்டாம் ராஜராஜன், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ராஜராஜேச்வரம் எனும் திருக்கோயிலைக் கட்டி அதில் 63 நாயன்மார்களின் வரலாற்றைப் புடைப்புச் சிற்பங்களாக அமைத்தான். சேக்கிழார் நாயன்மார்களுக்கு சொற்கோயிலைக் கட்டினார்; இரண்டாம் ராஜராஜன் அதைக் கற்கோயிலாக அமைத்தான்!

வாழ்வில் ஒருமுறையேனும் இந்தக் கற்கோயிலை தரிசிப்போம்.தினமும் ஒருமுறையேனும் சொற்கோயிலின் நாயன்மார் ஓருவரின் சரிதத்தை வாசித்து மகிழ்வோம்; சிவனருள் பெற்றுச் சிறப்போம்.

- திருப்புகழ் அமுதன்

படம் : கே.எம்.பிரசன்னா