சிவபெருமானின் அட்ட வீரட்டான திருத் தலங்களில், காம தகனம் நிகழ்ந்த தலம் திருக் குறுக்கை. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இந்தத் தலம், தற்போது ‘கொருக்கை’ என்றழைக்கப்படுகிறது.
யோகீசபுரம், காமதகனபுரம், கடுவனம் என்று இந்தத் தலத்தைப் போற்றுகின்றன புராணங்கள். உலக மாயையிலிருந்து விடுபட்டு நல்ஞானம் பெற்று மகிழ அருளும் ஞானாம்பிகையுடன் இங்கு கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு யோகீஸ்வரர். இவர் சுயம்பு மூர்த்தி எனப் போற்றுகின்றன ஞானநூல்கள்.


புராணம் சொல்லும் திருக்கதை...
ஒருமுறை ‘தீர்க்கபாகு’ என்ற முனிவர் இந்தத் தலத்தில், தன்னுடைய சந்தி அனுஷ்டானங் களைச் செய்ய முனைந்தார். அதன் பொருட்டு இத்தலத்தின் `சூல கங்கை' எனும் தீர்த்தத்தைத் தவிர்த்துவிட்டு, தன் தவ வலிமையால் கங்கை தீர்த்தத்தை உருவாக்கினார்.
அதனால் பெரும் தோஷத்துக்கு ஆளானார். அந்த முனிவர் தான் உருவாக்கிய கங்கை தீர்த்தத்தை ஏந்த முற்பட்டபோது, அவரின் கரங்கள் குறுகிப்போயினவாம்.
தன் தவற்றை உணர்ந்த முனிவர் மிகவும் வருந்தினார். பின்னர், இந்தத் தலத்து ஈசனை மனமுருக வழிபட்டு, தனது குறை நீங்கப் பெற்றார் என்கிறது ஒரு திருக்கதை. இதையொட்டியே, இத்தலத்துக்குக் `குறுங்கை' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே பின்னர் `கொருக்கை’ எனத் திரிந்தது என்கிறார்கள்.
சமயக்குரவர்களில் ஒருவரான திருநாவுக் கரசு பெருமானால் பாடல் பெற்ற 26-வது காவிரி வடகரைத் தலம் இது. மகாவித்வான் ஶ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை இவ்வூருக்குத் தல புராணம் இயற்றியுள்ளது குறிப்பிடத் தக்கது.

குறுங்கைப் பிள்ளையார்!
ஆலயத்தின் விநாயகர் குறுங்கைப் பிள்ளை யார் என அழைக்கப்படுகிறார். சதுர வடிவ ஆவுடையார் ஒன்றின்மீது இந்த விநாயகப் பெருமான் எழுந்தருளியுள்ளது, வேறெங்கும் காண்பதற்கரிய விசேஷ அம்சமாகும். இந்தப் பிள்ளையாரை வழிபடும் அன்பர்களின் கவலைகள் அனைத்தும் சிறுகச் சிறுகக் குறுகி முற்றிலும் விலகியோடும் என்பது நம்பிக்கை.
இங்கு அருள்பாலிக்கும் சோகஹரேஸ்வரரை தரிசித்து வழிபட்டால், நம் மனக் கவலைகள் அழியும்; மனத்தில் நிம்மதி பிறக்கும்.

காம தகனம்!
ஒருமுறை, கடும் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவபெரு மானிடமிருந்து தோன்றிய தவாக்னியால் உலகமே தகித்தது. உலக உயிர்களின் நன்மையைக் கருதி அவரின் தவத்தைக் கலைக்க எண்ணினர் தேவர்கள். மலர்க் கணைகளை ஏவி சிவபெருமானின் தவத்தைக் கலைக்கும்படி மன்மதனைப் பணித்தனர்.
அவனும் கணை தொடுத்தான். தவம் கலைந்த சிவனர் கோபத்துடன் கண் விழித்தார். அவரின் விழிகளிலிருந்து புறப்பட்ட கோபாக்னியில் எரிந்து சாம்பலானான் மன்மதன். பின்னர் சினம் தணிந்த சிவபெருமான், ரதியின் வேண்டுதலுக்கு இணங்கி மன்மதனை உயிர்பித்து அருளினார்! ஆக, காமதகன மூர்த்தியாய் சிவம் அருளும் இத்தலம்... காமம் ஆகிய விருப்பத்தினை (உலக உயிர்களுக்குத் தோன்றும் பற்றினை) சாம்பலாக்கி, விருப்பு வெறுப்பற்ற நிலையைத் தந்து உயிர்களை ஆட்கொள்ளும் உயரிய தத்துவத்தை உணர்த்துவதாகத் திகழ்கிறது.

பிணிக்கு மருந்தாகும் தீர்த்தம்!
மூலவர் சுயம்பு மூர்த்தி. இவரை அபிஷேகித்த தீர்த்தத்தில் கடுக்காயை இழைத்து அதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் தீரும் என்பது நம்பிக்கை. கோயில் குருக்கள் சோமசுந்தரத் திடம் பேசினோம்.
“காமதகன மூர்த்தி சந்நிதி, புண்ணியம் அருளும் காமனங்க நாசனி சபை ஆகியவை இத்தலத்தின் விசேஷ அம்சங்கள். இங்குள்ள ஈசன் யோக பாவனை யில் - யோகீஸ்வரராக அருள்வதாக ஐதிகம். மன்மதனின் பாணங்களில் ஒன்றான பத்ம பாணம் சுவாமியின் பீடத்தின் அடியில் இடம்பெற்றுள்ளது.
அம்மையைப் பூரணி எனப் போற்றுவர். எதிரிலேயே ரதி, மன்மதன் இருவரையும் தரிசிக்கலாம். இவர்களைத் தரிசிப்போருக்கு இல்லற வாழ்வில் இடையூறுகள் நசிந்து மகிழ்ச்சி உண்டாகும். ராகு-கேது தோஷப் பரிகாரத் தலமாகவும், கல்யாண வரமருளும் க்ஷேத்திரமாகவும் இது விளங்குகிறது. இவ்வாலயத்திற்கு கொடிமரம் கிடையாது.
சித்திரை, ஐப்பசி முதலான மாதப் பிறப்புகளும், சிவராத்திரி முதலான வைபவங்கள் இங்கே விசேஷம். மாசி மகத்தன்று நிகழும் வீரட்டேசுவரர் அபிஷே கமும் இரவு பஞ்சமூர்த்தி திருவுலாக் காட்சியும் இத்தலத்துச் சிறப்புகள்” என்றார்.
திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்தின் பரிபாலனத்தில் உள்ள இவ்வாலயத்தில், தற்போது ஆதின கர்த்தர் 27-வது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் அருளாணையின் வண்ணம், திருப்பணி தொடங்கப் பெற்றுள்ளது.
சிவனருள் ஸித்திக்கும் இத்தலத்துக்கு நீங்களும் ஒருமுறை குடும்பத்துடன் சென்று வழிபட்டு வரம் பெற்று வாருங்களேன்.

விபூதிக் குட்டை!
மன்மதன் பஸ்மமாகி விழுந்த இடம் கோயிலுக்கு சற்றுத் தொலைவில் உள்ளது. வயல் வெளிகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த இடத்தை `விபூதிக் குட்டை' என்கிறார்கள். சிறு மண் திட்டாகக் காட்சி அளிக்கும் இப்பகுதியில், குறிப்பிட்ட சிறு இடத்தில் உள்ள மண் மட்டும் விபூதியாகவே திகழ்கிறது.
இந்த மண்ணின் நிறம், மணம், சுவை அனைத்தும் திருநீறு போன்றே உள்ளது விந்தையிலும் விந்தை. இந்த இடத்திலிருந்து எவ்வளவு எடுத்தாலும் விபூதி குறைவதில்லை. இது இந்தக் கலியுகத்தின் அதிசயம் என்கிறார்கள் பக்தர்கள்.

பக்தர்கள் கவனத்துக்கு...
தலம் - ‘கொருக்கை’
ஸ்வாமி - ஶ்ரீவீரட்டேஸ்வரர், ஶ்ரீயோகீஸ்வரர்
அம்மை - ஶ்ரீஞானாம்பிகை
தீர்த்தம் - சூல தீர்த்தம்
தல விருட்சம் - கடுக்காய் மரம்
தல சிறப்பு : காமதகனம் நிகழ்ந்த தலம். ஜாதகத்தில் ராகு, கேது, செவ்வாய் கிரக தோஷங்களுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்கு வந்து வழிபட்டு அர்ச்சனை செய்தால், திருமணம் கைகூடும்; வேலை வாய்ப்பு கிட்டும்; கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.
முருகப்பெருமான் அவதாரம் கிடைக்கக் காரணமான தலம் இது. வீரபத்திரர் உருவான தலமும் இது என்பர். இந்தத் தலத்துக்குச் சென்று இறை வழிபாடு செய்தால் தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும்; பூர்வ ஜன்ம பாவங்கள் விலகும்.
எப்படிச் செல்வது?: மயிலாடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் - மணல்மேடு செல்லும் பேரூந்து மார்க்கத்தில், கொருக்கை தலத்துக்குச் செல்லலாம் . சிற்றுந்து, கார், ஆட்டோ வசதி உண்டு.