புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

அரசன் எழுதிய ஆண்டாள் காவியம்!

ஆண்டாள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்டாள்

பி.சந்திரமௌலி

ஆண்டாளின் பக்தி மயமான வாழ்க்கையை 900 பாடல்களில் விவரிக்கும் அற்புதமான நூல் ‘ஆமுக்த மால்யதா’. தெலுங்கின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகச் சிறப்பிக்கப்படும் இந்த நூல் எழுதப்பட்டதற்குக் காரணமான சம்பவமே சிலிர்ப்பைத் தருவ தாகும்.

ஆண்டாள்
ஆண்டாள்


விஜயநகர சாம்ராஜ்யத்தை சக்ரவர்த்தி கிருஷ்ணதேவராயர் ஆண்டு வந்த காலம். அப்போது, தமிழ்நாட்டிலும் பல பகுதிகள் அவரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. வில்லிபுத்தூரில் இருந்து தெற்கே ஏறக்குறைய 30 கி.மீ. தூரத்தில் இருக்கும் கரிவலம்வந்த நல்லூரில் இருந்தபடி, கிருஷ்ணதேவராயரின் பிரதிநிதி ஒருவர் ஆட்சி செய்து வந்தார்.

ஒரு முறை கரிவலம்வந்த நல்லூருக்கு வந்த கிருஷ்ண தேவராயர், அங்கிருந்து வில்லிபுத்தூரை அடைந்தார். ‘கோதை பிறந்த ஊர்... கோவிந்தன் வாழும் ஊர்’ என்று பக்தர்களால் துதிக்கப்படும் வில்லிபுத்தூரின் வளமையும், அந்த திவ்விய க்ஷேத்திரத்தின் மகிமையும் கிருஷ்ண தேவராயரின் உள்ளத்தில் குடிபுகுந்தன. அதைவிட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பிய கிருஷ்ண தேவராயர், காகுளம் எனும் ஊரை அடைந்தார்.

விஜயவாடாவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள இந்த காகுளத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாளின் திருநாமம் திருவேங்கடம் உடையான்.

காவியங்கள் இயற்றுவதிலும் கல்வி கேள்விகளிலும் தலைசிறந்தவ ரான கிருஷ்ண தேவராயர் இந்த ஊரில் சிறிது காலம் தங்கியிருந்தார். அப்போது ஒரு நாள் அவர் கனவில் திருவேங்கடமுடையான் தரிசனம் தந்தார்.

‘‘கிருஷ்ணதேவராயா! நீ வடமொழியில் பல நூல்கள் எழுதி இருக்கிறாய். ஆனால், உன் தாய்மொழியான தெலுங்கில் ஒரு நூல் கூட எழுதவில்லை. உனது குறை அதுதான். அதே போல் எனக்கும் ஒரு குறை உண்டு.

துவாபர யுகத்தில் சுதாமா (குசேலர்), மிகுந்த பக்தியுடன் எனக்கு மாலை சூட்டி வழிபட்டான். இருந்தாலும், ஆண் மகன், பெண் ஒருத்தியிடம் இருந்து மாலை பெறுவது அல்லவா சரியானது? இந்தக் குறையைப் பிற்காலத்தில் வில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் தீர்த்து வைத்தாள். அவள், பூலோக வைகுண்டமான ரங்கம் வந்து மாலையிட்டு, என்னை மகிழ்வுறச் செய்தாள். எனது மனக் குறை இதுதான்... அந்த ஆண்டாளின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் ஒரு காவியமாக்கு. அதன் மூலம் நமது குறைகள் நீங்கும்!’’ என்றார்.

கனவு கலைந்தது. சங்கு- சக்கரங்களுடன் காட்சியளித்த கார்மேக வண்ணனின் வடிவமும், வாக்கும் கிருஷ்ண தேவராயரின் சிந்தனையில் சிறகடித்தன. பகவானின் ஆணையை நிறைவேற்ற சித்தமானார். ஆண்டாளின் காவியத்தைத் தெலுங்கில் எழுதினார். அதுவே ‘ஆமுக்த மால்யதா’ ஆகும்.

கல்யாண வரம் தரும் வைபவம்!

எண்ணெய் காப்பு
எண்ணெய் காப்பு

வில்லிப்புத்தூரில் மார்கழி நீராட்ட உற்ஸவம், மார்கழி மாதம் 23-ஆம் தேதி இரவு தொடங்கும். தை மாதப்பிறப்பு வரை கொண்டாடப்படும். இதையொட்டி நடைபெறும் எண்ணெய்க் காப்பு வைபவம் அற்புதமானது.

உற்சவத்தின் 8 நாள்களும் திருமுக்குளம் கரையில் உள்ள நீராட்ட மண்டபத்தில், மாலை 3 மணிக்கு ஆண்டாளுக்கு ‘எண்ணெய் காப்பு’ வைபவம் நடைபெறும். நெற்றிச்சுட்டி, தலை நாகர் தங்க ஜடை, சூரிய சந்திரர், ராக்கொடி ஆகிய தலை அலங்காரத்துடன், சவுரி தரித்து கோதா ராணியாக அமர்ந்த நிலையில் காட்சி தரும் ஆண்டாளின் அழகுக் கோலத்தைத் தரிசிப்பது பக்தர்கள் செய்த பாக்கியமே!

பிறகு, தலையில் அணிந்துள்ள ஆபரணங்களை ஒவ்வொன்றாக எடுத்து, தலையைக் கோதி, சிடுக்கு நீக்கி, சுகந்த தைலம் சாத்துவர். இவ்வாறு மூன்று முறை எண்ணெய் காப்பு சாற்றி, சவுரியை பெரிய கொண்டையாக முடித்து மலர் மாலைகள் அணிவிப்பர். தொடர்ந்து, ‘பத்தி உலாத்துதல்’ வைபவம் நடைபெறும்.

அடுத்து நீராட்ட வைபவம். அப்போது சங்க நிதி, பத்ம நிதி மற்றும் ஆயிரம் துளைகள் கொண்ட வெள்ளித் தாம்பாளம் கொண்டு மஞ்சள் மற்றும் திரவியப் பொடிகளால் அபிஷேகம். முடிவில் தங்கக் குடத்தால் (நாடக மேதை கன்னையா அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது) அபிஷேகம் செய்வார்கள்.

இந்த வைபவத்தில் ஆண்டாளைத் தரிசித்தால் திருமணம் வேண்டுவோருக்கும், மக்கள் செல்வம் இறைஞ்சுவோருக்கும் அந்த வேண்டுதல்கள் கைகூடும் என்பது ஐதிகம்.