Published:Updated:

தீபங்கள் ஏற்றுவோம்... திருப்பணியில் பங்கேற்போம்! - சங்கரன்பாடி ஸ்ரீஆத்மநாதர் ஆலயம்

படங்கள்: சுதாகர்,காஞ்சிபுரம்

பிரீமியம் ஸ்டோரி

ப்பசி அன்னாபிஷேக விழாவுக்காக ராணிப்பேட்டை மாவட்டம் - சங்கரன்பாடி கிராமத்துக்குச் சென்றிருந்தோம். காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கிராமம்.

ஐப்பசி அன்னாபிஷேக விழா மட்டுமன்றி, சங்கரன்பாடியில் அமைய வுள்ள அருள்மிகு ஆத்மநாதர் சுவாமி புதிய திருக்கோயிலுக் கான திருப்பணி தொடக்கவிழாவும் அன்று நடைபெற இருந்தது. இந்தத் திருப்பணி முழுக்க முழுக்க அடியார் பெருமக்களின் பங்களிப்பால் மட்டுமே நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. பாலாற்றின் நீர்வளத்தால் நிலவளம் செழித்த அந்தக் கிராமத்தில், இயற்கை எழில்சூழ தன்னை வெளிப்படுத்திக் கொண் டிருக்கிறார் இறைவன் என்றே சொல்லவேண்டும்!

ஊர் எல்லையை நெருங்கும்போதே அடியார்களின் நடமாட்டம் அதிகளவு இருந்ததைக் காண முடிந்தது. தேன்மலரை மொய்க்கும் வண்டு களாக ஆத்மநாதரை ஆராதிக்கும் அந்த ஆன்மாக்கள், ஆனந்த கதியில் செயலாற்றிக் கொண்டிருந்தார்கள். எங்கெங்கும் ‘சிவாயநம’ முழக்கம்தான்!

தீபங்கள் ஏற்றுவோம்...
திருப்பணியில் பங்கேற்போம்! - சங்கரன்பாடி ஸ்ரீஆத்மநாதர் ஆலயம்

கோயிலை அடைந்தபோது, அடியார்கள் சிலர் திருக்கோயில் கட்டுமானப் பணிகளுக்கான கற்களில் மஞ்சள் - குங்குமத் திலகம் இட்டுக் கொண்டிருந்தார் கள். இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து இடைவிடாது சிவவாத்தியங்களை முழங்கிக்கொண்டிருந்தார்கள். மனம் ஆனந்தத்தில் திளைத்தது!

சுவாமியை தரிசித்தோம். நம் அனைவரின் ஆன்மாக்குள்ளும் அருளோற் றும் அந்த ஈசன், அருள்மிகு ஆத்மநாதர் சுவாமியாய் ஓலைக்கொட்டகையில் எழுந்தருளியிருந்தார். அவருக்கு மகா அபிஷேகமும் அன்னாபிஷேகமும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆணும் பெண்ணுமாய் பக்தர்கள் திருப்பதிகங்கள் பாடிக்கொண்டிருக்க, சற்றே கண்மூடி சிவானந்தத்தில் லயித்த நமக்குள், அந்த இடமே திருக்கயிலையாய்க் காட்சியளித்தது.

தீபங்கள் ஏற்றுவோம்...
திருப்பணியில் பங்கேற்போம்! - சங்கரன்பாடி ஸ்ரீஆத்மநாதர் ஆலயம்

சக்தி விகடன் இதழில் `புண்ணிய புருஷர்கள்’ பகுதியில் இடம்பெற்ற சுமார் 25-க்கும் அதிகமான அடியார்கள் அங்கு ஒருங்கிணைந்து பணியாற் றிக் கொண்டிருந்தார்கள். ஒரே இடத்தில் அவர்களை தரிசிக்க நேர்ந்தது நமது கொடுப்பினையே. பாறைகளைச் சுமந்து செல்வது, ஆழமானக் குழிகளை வெட்டுவது என அவர்கள் ஆற்றிக்கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் கடினமானவை என்றாலும் முகத்தில் பேரானந்த பூரிப்பு.

``இவ்வளவு குதூகலம் ஏன் ஐயா?’’ என்று நாம் கேட்டதும் மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் ரஜினி ஐயா.

“சென்ற ஆண்டு முழுவதும் திருவாரூர் ஆழித்தேர் விழா, தில்லைக்கு நடைபயணம், ஏகாம்பரரின் திருவிழா என்று மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் இந்த வருடம் கடந்த 8 மாதங்களாக எந்த விழாவிலும் கலந்துகொள்ள இயலாத நிலைமை.

தீபங்கள் ஏற்றுவோம்...
திருப்பணியில் பங்கேற்போம்! - சங்கரன்பாடி ஸ்ரீஆத்மநாதர் ஆலயம்

அந்த ஆதங்கத்தை நீக்கும்படியும் எங்களுக் குப் பூரண திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கும் விதமாகவும் அமைந்துவிட்டது, இந்தத் திருக் கோயிலின் திருப்பணி. அத்துடன், எத்தனையோ ஊர்களிலிருந்து இங்கு வந்திருக் கும் அடியார்களை தரிசிப்பதும் அவர்களின் அருகே இருப்பதும் பேரானந்த பரவசத்தைத் தருகிறது ஐயா'' என்று நெகிழ்கிறார் ரஜினி.

``வட திருநள்ளாறு, வட தில்லை என்பது போல இந்த ஆலயம் வட திருப்பெருந் துறையாகவே எழும்பவுள்ளது ஐயா... எல்லாம் தங்களின் முயற்சி போலும்...’’ என்று நாம் சொல்ல, பதறிப் போனார் தாமோதரன் ஐயா.

``சிவ சிவா... எல்லாம் குருவின் கருணை; சிவத்தின் கருணை. இதில் நம் யாருக்கும் எந்த சிறப்பும் இல்லை.

இந்த ஊரில் ஓர் ஆலயம் இல்லையே என்று ஏங்கியிருந்த வேளையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார் ஆத்மநாதர். ஊரே மாறிப் போய் விட்டது. மழை பொழிந்தது; ஏரி நிரம்பியது; பசுமை சூழ்ந்தது எங்கள் கிராமத்தில். ஆகவே ஊரே ஒன்றிணைந்து இந்தத் திருப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். எல்லாம் ஆத்மநாதரின் கருணை’’ என்று சிலிர்ப்புடன் வணங்குகிறார் தாமோதரன் ஐயா.

அவரே தொடர்ந்து விவரித்தார்:

``ஐந்து ஆண்டுகளுக்குமுன் கண்டெடுக் கப்பட்ட ஆத்மநாதரின் லிங்கத் திருமேனி, சித்தர்களால் பச்சை வண்ணக் கல்லால் உருவாக்கப்பட்டதாம். முதலில், திருவண்ணா மலை மாவட்டம் ஜவ்வாது மலை அருகிலுள்ள ஓட்டேரி என்ற கிராமத்தில்தான் எழுந்தருள இருந்தாராம் இந்த ஐயன்.

தீபங்கள் ஏற்றுவோம்...
திருப்பணியில் பங்கேற்போம்! - சங்கரன்பாடி ஸ்ரீஆத்மநாதர் ஆலயம்

ஆனால் ஏதோ காரணம்... இறைச் சித்தம்... அங்கு எழுந்தருளவில்லை சுவாமி. பிறகு, கும்பகோணம் அருகில் ஓர் ஆலயத்துக்குக் கொண்டு செல்ல இருந்தனராம். ஆனால், புயல் தாக்கத்தின் காரணமாக அந்த முயற்சி யும் தடைப்பட்டது. பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் திருஏகாம்பரநல்லூர் கிராமத்தில் இந்த ஸ்வாமி எழுந்தருளியிருந்த வேளையில்தான் மகா சிவராத்திரி வந்தது.

அடியார்களும் சக்தி விகடன் வாசகர்களும் சிவராத்திரி வைபவத்தில் கலந்துகொண்டு ஈசனைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பிறகு அங்கிருந்து கிளம்பி, இந்த எளியோர்கள்மீது கருணை கொண்டு இங்கு வந்துவிட்டார். அன்றிலிருந்து பல்வேறு திருவிளையாடல் களை நிகழ்த்தி எங்களைக் காத்துவரும் ஆத்ம நாதராகி விட்டார் ஐயா!’’

அடியார்கள் கூறக் கூற புதிய கோயில் எப்படியிருக்கும் எனும் அறியும் ஆவல் எழுந் தது நமக்குள். அதுபற்றி விவரிக்க ஆரம்பித்தார் அடியார் விஜயன்.

“ஆன்மாவின் தலைவனான இவரே முக்தியையும் அமைதியையும் அளிப்பவர். திருப்பெருந்துறையில் அருவமாக அருளும் சுவாமி, இங்கு அருவுருவ மேனியராக வந்தமர்ந்து விட்டார்.

இங்கு சுமார் 22 அடி உயர கற்கோயில் எழும்புகிறது. அதாவது பழங்கால முறைப்படி இன்கா வடிவ ஆலய அமைப்பு... பிரமீடு போன்று சுமார் 22 உயரத்துடன் எழும்பும் பீடத்தின் உச்சியில் - திறந்தவெளியில் ஆத்ம நாதர் எழுந்தருளப் போகிறார்.

அவருக்குக் கீழே பிரமீடு அமைப்பின் உள்புறத்தில் தியான மண்டபம் அமைய வுள்ளது. அங்கு தலைவனைக் கண்டுகொள்ள விரும்பும் ஆன்மா தவத்தில் அமர்ந்திருக்கும் என்பது இந்த ஆலயத்தின் விசேஷம். காலம், இனம், மொழி என்று எந்த வேறுபாடும் இன்றி நெற்றியில் நீறணிந்த எவரும் இங்கு வந்து ஈசனைத் தொழலாம். இங்கு அர்ச்சகர் இல்லை; நந்தி இல்லை; அம்பாள் இல்லை; கொடிமரம் இல்லை; சிவத்தைத் தவிர எதுவுமில்லை. திருப்பெருந்துறையைப் போலவே, இங்கும் அடியார்களுக்கே முதல் மரியாதை. குருந்த மரமும் திருமுறைகளும் மட்டுமே இங்கு சைவ சமய திரு அடையாளங்களாக விளங்கும்.

மணி, மந்திரம், ஒளஷதம் மூன்றும் பிரதானமாகத் திகழும் நம் பழங்கால வழக்கப்படி... மணியாலான லிங்கம், திருமுறைகள் ஒலிக்கும் மந்திர வழிபாடு, பல்வேறு மூலிகைகள் (ஒளஷதம்) இங்கு வளர்க்கப்பட்டு, அவற்றால் அர்ச்சனை அபிஷேகம் ஆகியவை இங்கே உண்டு.

தீபங்கள் ஏற்றுவோம்...
திருப்பணியில் பங்கேற்போம்! - சங்கரன்பாடி ஸ்ரீஆத்மநாதர் ஆலயம்

ஈசனை தரிசிக்க வரும் அடியார்கள் 22 அடி மேலே ஏறி, ஸ்வாமிக்குத் தாங்களே நீரால் அபிஷேகம் செய்து, மலர்கள் தூவி, பதிகம் பாடி ஆராதிக்கலாம். இங்கு ஆகம விதிகளும் இல்லை. ஆன்மாவும் அதன் நாதனும் ஒன்றிணைவது மட்டுமே இங்கு நிகழப்போகிறது. மேற்கு நோக்கி அருளவிருக்கும் எங்கள் பெருமானை, தெற்கு நோக்கி படியேறி தரிசிக்கலாம் என்ற அமைப்பே எங்களுக்கு பெரும் ஆவலைத் தூண்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவத்திரு திருவடிக்குடில் ஸ்வாமிகள் அருளாசியோடும், சரவணன் ஐயா வழிகாட்டுதலோடும் தொடங்கப்பட்ட இந்தத் திருப்பணி விரைவில் முடியும்.

இங்கு ஆலயம் மட்டுமன்றி, பெரிய தியான மண்டபம், திருமுறை ஓதும் மேடை, பசு மடம், அடியார் தங்கும் குடில்கள், நந்தவனம், திருமுறை தேவாலயம், இலவச உணவு வழங்குமிடம் ஆகிய அனைத்தும் அமையவுள்ளன.பிரமாண்ட கல் பிரமீடாக எழும் ஆலய உச்சியில் முல்லைப் பந்தலின் கீழே ஈசன் அமர இருக்கிறான்! ’’ என்றார் விஜயன்.

இந்த ஊருக்கு சுவாமி வந்தபிறகு, எந்த இடத்தில் அவருக்கு ஆலயம் எழுப்பலாம் என்று ஊராரிடம் கேட்கப்பட்டது. பல இடங்கள் காண்பிக்கப்பட்டன. எனினும், நிறைவில் இந்த இடமே தேர்வானது. இதன் பழைமையான பெயர் `லிங்கத்தடி’ என்கிறார்கள்.

ஆம், ஒரு காலத்தில் காஞ்சிக்கு அருகே பெரும் நகரமாக இருந்த சங்கரன்பாடியில், இதே இடத்தில் ஒரு சிவாலயம் பிரமாண்டமாக இருந்து வந்துள்ளது.

இங்கிருந்து 5 கி.மீ தொலைவில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை. அங்கிருக் கும் பாலுசெட்டிசத்திரம் என்ற இடமும் சற்றுத் தொலைவிலுள்ள சங்கரன்பாடி சத்திரமும் இந்த ஊருக்குச் சொந்தமாகவே இருந்துள்ளன. காலப்போக்கில் ஊரும் சிறிதாக, அந்நியர் ஆதிக்கத்தால் பாழ்ப்பட்ட ஆலயம், கால ஓட்டத்தில் அடையாளம் இன்றி அழிந்தே போனது என்கிறார்கள்.

‘சங்கரன்பாடி’ என்ற ஊர்ப் பெயரே, சகல தேவர்களும் இங்கு வந்து சங்கரனாரைத் தொழுத இடம் என்பதை உணர்த்துகிறது.

ஆண்டுகள் பல கடந்து விட்டாலும் இப்போது மீண்டும் கருணை கொண்டு இங்கு வந்துவிட்டார் சுவாமி.

திருவருணையிலிருந்து கிளம்பி வந்த மாணிக்கவாசகப் பெருமான் காஞ்சிக்குச் செல்லும் வழியில் இங்கே கால் பதித்திருப்பார். கருணையுடன் இங்கே வீற்றிருந்த ஆத்மநாதரையும் தரிசித் திருப்பார். அவரைப் பாடி தொழுதிருப்பார் என்றே இங்குள்ள அடியார் பெருமக்கள் நம்புகிறார்கள்.

அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்திப் பேசிய அருள் ஐயா, ``அதனால்தான எங்கள் ஆத்மநாதரான இந்த ஈசன், வேறெங்கும் போக மாட்டேன் என்று இங்குஅமர்ந்துவிட்டார். எங்கள் பிறவிப் பயன் ஐயா இது’’ என்று நெக்குருகினார்.

“ஐயா! உழைப்பு உங்களுடையதாக இருக்கலாம், தளவாடப் பொருள்கள் எல்லாம் வாங்க பணம் வேண்டுமே... என்ன செய்யப் போகிறீர்கள்? இங்கிருக்கும் அடியார்கள் எல்லோருமே எளிய விவசாயிகள்தானே” என்று நாம் கேட்டோம்.

“பணம் என்ன ஐயா பணம்... சுவாமியின் திருவருள் இருந்தால் போதுமே. அவர் நினைத்தால் மேருமலைக்கு ஒப்பான ஒரு பெரும் கோயிலைத் தனக்காக நிர்மாணித்துவிட மாட்டாரா என்ன?

எங்களுக்குப் பின்னால் நல்ல ஆன்மாக் களை அனுப்பி, அவரே திருப்பணியைச் சிறப்பாக முடித்துக் கொள்வார் ஈசன். அவரின் அருளால் ஊரில் நல்லோர் பலர் பணிக்கு உதவுவார்கள். சிவனருள் இருக்க, தாமாக நடக்கும் அனைத்தும்...’’ என்று நம்பிகை பொங்க பேசுகிறார்கள் அடியார்கள்.

அவர்களின் பாதங்களைத் தொட்ட வணங்கத் தோன்றியது நமக்கு. எவ்வளவு புண்ணியம் மிகுந்த காரியத்தில் இந்த அடியார்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்! அற்புதமான இந்தப் பணியில் நம்முடைய பங்களிப்பும் இணையவேண்டாமா? இப்படியான எண்ணத்தின் விளைவே... `தீபம் ஏற்றுவோம் திருப்பணியில் பங்கேற்போம்’ வைபவம்!

வரும் 29.11.2020 ஞாயிறு அன்று திருக் கார்த்திகை வருகிறது. தீபத் திருநாளான அன்று, அருள்மிகு ஆத்மநாதருக்குப் புது ஆலயம் அமையப்போகும் இந்த க்ஷேத்திரத்தை தீபங்களால் ஒளிரவைக்கப் போகிறோம். ஆத்மநாத சுவாமியை தீபம் ஏற்றி வழிபடப் போகிறோம். இந்த அற்புத வைபவத்தில் வாசகர்களாகிய உங்களின் பங்களிப்பும் அவசியம் இணையட்டும்.

தீபம் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் ரூ.501 எனும் வகையில் வாசகர்கள் நன்கொடை வழங்கலாம். நன்கொடை வழங்கும் அன்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் சார்பில் - அவர்கள் நலன் வேண்டி சங்கரன் பாடி தலத்தில் ஒரு தீபம் ஏற்றி வைக்கப்படும்.

உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேற ஆத்மநாதரிடம் விண்ணப்பம் செய்து திரு முறைகள் ஓதப்படும். விசேஷ பிரார்த்தனையும் அபிஷேகமும் செய்விக்கப்படும். அன்பர்கள் வழங்கும் தீப நன்கொடை, ஆத்மநாதரின் திருக்கோயில் திருப்பணிக்கு வழங்கப்படும்.

சிறுதுளி பெருவெள்ளம் அல்லவா. நாம் மனமுவந்து பங்களிக்க முன்வரும்போது, தலத்தில் ஒளிவெள்ளம் பெருகும்; திருக் கோயில் திருப்பணிகள் இன்னமும் வேகம் எடுக்கும். ஆகவே, நம் உள்ளம் ஒளிர - வாழ்க்கை மிளிர, சங்கரன்பாடி தலத்தில் தீபம் ஏற்ற நம் பங்களிப்பை வழங்குவோம்!

தன்னிலிருந்து நம்மை உருவாக்கி அலகிலா நாடகம் நடத்துவிக்கும் சிவபெருமானுக்குச் சிவாலயத் திருப்பணி செய்வது, தர்மங்களில் எல்லாம் உயர்ந்தது என்பர். அந்தத் தர்மத்தில் நாம் ஒவ்வொருவரும் தவறாமல் பங்கேற்போம்.

தொழுத கை துன்பம் துடைக்கும் சிவனார், நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்; நம் சந்ததியை அறம் செழிக்க வாழவைப்பார்; நம் குடும்பம் தழைக்க அருள் தருவார். அரனாரின் திருவருளோடு அடியார்தம் ஆசியும் அன்பும் நம் வாழ்வில் பெரும் வெற்றிகளைப் பெற்றுத் தரும்!

பக்தர்கள் கவனத்துக்கு...

தலம்: சங்கரன்பாடி

சுவாமி: அருள்மிகு ஆத்மநாதர்

தலச் சிறப்பு: ஆன்மாக்களுக்கு அருளும் ஈசன் தேடிவந்து கோயில் கொண்ட தலம். ‘சங்கரன்பாடி’ என்ற ஊர்ப் பெயரே, சகல தேவர்களும் இங்கு வந்து சங்கரனாரைத் தொழுத இடம் என்பதை உணர்த்தும்.

எப்படிச் செல்வது?: காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 18 கி.மீ.தொலைவில் உள்ளது இந்தக் கிராமம். காஞ்சியிலிருந்து தாமல் வழியாக இவ்வூருக்குச் செல்ல இயலும்.

வங்கிக் கணக்கு விவரம்:

ARUL THARUM KAMATCHI AMBAL

UDANURAI

ARULMIGU EKAMBARESHWARAR

ERAIPANI ARAKKATTALAI

A/c.No: 130900101002414

IFSC Code: CORP0001309

Bank Name: Corporation Bank,

Branch: Lalapet

மேலும் விவரங்களுக்கு:

சிவ.சண்முகம் (90038 03959; 74060 33046)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு