Published:Updated:

அமுத மழை பொழிந்தாள் அன்னை!

ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர்

அருப்புக்கோட்டை ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்!

அமுத மழை பொழிந்தாள் அன்னை!

அருப்புக்கோட்டை ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்!

Published:Updated:
ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர்

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் ஓவியம்: வேதா

தேவார மூவர் தரிசித்துப் பாடிய தலங்களைப் பாடல் பெற்ற தலங்கள் என்பர். ஆழ்வார்கள் போற்றி பரவியவை திவ்ய தேசங் களாகும். அருணகிரிநாதர் அழகு முருகனைச் சந்தப் பாடல்களில் கண்டு களித்ததை திருப்புகழ்த் தலங்கள் என்றழைப்பர்.

இதேபோல், வடக்கேயுள்ள திருக்கயிலை மலை தொடங்கி தெற்கில் திருச்செந்தூர் வரையிலும் பல தலங்களில் அறுவகை சமய வழிபாட்டையும் தன்னுடைய கிருதிகளின் மூலம் இசை யாத்திரை செய்தவர் ‘நாதஜோதி’ ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதர்.

சங்கீத மும்மணிகளில் ஒருவரான தீட்சிதர் 1775-ம் ஆண்டு திருவாரூரில் தோன்றியவர். 60 ஆண்டுகள் இப்பூமியில் வாழ்ந்து 60-க்கும் மேற்பட்ட தலங்களை தரிசித்து அருள்பெற்று, இசை பரப்பியவர். மிக அழகான நளினமான சம்ஸ்கிருத மொழியில் ஏறக்குறைய 470 கிருதிகளை இயற்றியவர்.

அவர் காலத்தில் ஆங்கிலேயர்களின் மேற்கத்திய இசையில், 37 என்ற எண்ணிக்கையில் ‘நோட்டு ஸ்வரங்கள்’ என்னும் புதிய பாடல் அமைப்பை உருவாக்கியவர். அதாவது கர்னாடக இசையில் சங்கராபரண ராகத்தில் - மேல்நாட்டு வர்ண மெட்டு அமைத்து பாடியுள்ளது, நமது பாரம்பர்ய இசையின் புதுமையாகும்.

அருணகிரிநாதர் அருணை முருகனின் அருள் பெற்று திருப்புகழ் பாடியது போல, தீட்சிதரும் தணிகைக் குமரனால் ஆட்கொள்ளப் பெற்று அற்புதமான கவிகளைப் பாடியவர். தம்முடைய ஒவ்வொரு கிருதியிலும் ‘குருகுஹ’ என்று (தாம் பெற்ற அருள்) முத்திரையைப் பதித்துள்ளார். வீணை வாசிப்பதில் வல்லவரான இவருடைய கிருதிகளில் சொற்சுவை, பொருள்சுவை, சம்ஸ்கிருத மொழி ஞானம், கவித்துவ அழகு ஆகியவற்றுடன் பக்திபூர்வமான சுகமான இசை அழகை ஆனந்தமாக அனுபவிக்கலாம்.

அவை தனித்தன்மையோடு கூடிய லயச் செறிவுடன் வற்றாத மிடுக்கான மெட்டுகளில் பிரவாகமாகத் திகழ்கின்றன. மந்திர சாஸ்திரம், ஜோதிட விஷயங்கள், புராண வரலாறு, கோயில் கட்டடச் சிறப்பு, பூஜை முறை, சக்தி உபாசனை போன்ற பல செய்திகளின் களஞ்சியமாக விளங்குகின்றன. 72 மேளகர்த்தாவுடன் 190 ராகங்களில் அமைந்த கிருதிகள் மிகச்சிறந்த திட்டமிட்ட முறையில் அமைந்துள்ளது அற்புதமான அமைப்பாகும்.

தாம் தோன்றிய புண்ணியபூமி என்பதுடன், பல்லாண்டுகள் வாழ்ந்த திருவாரூர் திருத்தலத்தில் மிக மிக அதிகமான கிருதிகளை படைத்துள்ளார் தீட்சிதர். குறிப்பாக கமலாம்பிகை நவாவர்ணம், தியாகராஜ விபக்தி மற்றும் நீலோத் பலம்பாள் விபக்தி கிருதிகள் முதலியன அவருடைய மேதாவிலாசத்துக்கும் ஸ்ரீவித்யா தத்துவ நெறிக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தவை. காஞ்சிபுரம், தஞ்சாவூர், மாயூரம், மதுரை முதலான தலங்களுக்கும் அவர் பாடியுள்ளவை அதிகமான எண்ணிக்கை உடையது.

இங்ஙனம் அவர் தம் தலயாத்திரையில், மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் பல தலங்களையும் தரிசித்துப் பாடி, அவரின் சகோதரர் பாலுசாமி தீட்சிதரைக் காண எட்டய புரம் சென்றார். அப்போது கடுமையான கோடை காலம். சூரியனின் வெப்பம் தாங்க முடியாமல் பூமி எல்லாம் காய்ந்து கருகி தரை வெடிப்புற்றிருந்தது.

அந்த வழியாக பயணம் செய்வது, தீட்சிதருக்கும் அவரின் சீடர் களுக்கும் மிகவும் சிரமமாக இருந்தது. நாவறட்சி ஏற்பட, குடிப்ப தற்குத் தண்ணீர் தேட வேண்டியதாயிற்று. அங்கு உள்ள கிராமத்தில் ஒரு சிறு தோட்டத்தில் உள்ள மர நிழலில் தம்முடன் வந்தவர்களுடன் இளைப்பாறினார். தோட்ட உரிமையாளர் இவர்களை வரவேற்று குடிக்க நீர் தந்து உபசரித்தார்.

அந்தப் பகுதி இவ்வளவு வறட்சியாக இருப்பதற்கான காரணம் பற்றித் தோட்ட உரிமையாளரிடம் தீட்சிதர் விசாரித்தார். பல வருடங்களாக மழை இல்லாததால் எல்லா இடங்களும் வறண்டு போய்விட்டன என்றும், அதனால் மக்கள் மிகவும் கஷ்டப் படுகிறார்கள் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். தீட்சிதர் பெரிதும் மனம் வருந்தினார். அருகில் கோயில் ஏதாவது உள்ளதா என்று விசாரித்து அனைவரும் அங்கே சென்றனர். (இந்த வரலாற்றை நீதிபதி டி.எல்.வெங்கடராம ஐயர், தாம் எழுதிய முத்து சுவாமி தீட்சிதர் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்).

தீட்சிதர், அந்தக் கோயிலில் அருள்பாலிக்கும் அமிர்தவல்லி சமேத அமிர்தலிங்கேச்வரர் சந்நிதியில் குருவருளைத் தியானித்தார். `ஆனந்தாம்ருதாகர்ஷினி அம்ருத வர்ஷினி ஹராத பூஜிதே சிவே பவானி’ என்ற பல்லவியுடன் `அம்ருதவர்ஷினி’ எனும் ராகத்தில் பாடத் தொடங்கினார்.

அமுத மழை பொழிந்தாள் அன்னை!

`ஆனந்தமாக அமுதத்தை வசீகரிக்கும் தேவியே; அமிழ்தான மழையைப் பொழிபவளே; சிவனாரின் பத்தினியே பவானித் தாயே; விஷ்ணு முதலானவர்களைக் காப்பவளேல் குருகுஹனின் அன்னையே; சித்ரூபமாக விளங்குபவளே; ஆனந்தமயமான உள்ளத்தில் உறைபவளே... தயைநிறைந்தவளே... இக்கணத்திலேயே இங்கு நல்ல மழை பொழிவதற்காக உன்னை வேண்டுகிறேன்.தண்ணீருக்கு அதிதேவதையான அம்ருதேஸ்வரியே... நீரைப் பொழி... நீரை பொழி...’ என்று உணர்ச்சி வெள்ளத்தில் பாடினார்.

என்னே அதிசயம்! நீல வானத்தில் எங்கிருந்தோ கருமேகங்கள் வந்து கூடின. மின்னல் வெட்டியடித்தது. மேகம் முட்டியடித்தது. எட்டு திசையும் மழை கொட்டித் தீர்த்தது. திக்குகள் எட்டும் சிதறி பக்க மலைகள் உடைந்தது போல் வெள்ளம் பாய்ந்தது! அந்தப் பகுதியில் அதுவரை பார்த்திராத அளவுக்குப் பெரும் மழை பொழிந்து மக்கள் ஆனந்த வெள்ளத்தில் அழுந்தினர்.

தீட்சிதர் பாடிய அம்ருதவர்ஷினி எனும் ராகம் அப்போதுதான் அவரால் முதன்முதலில் பாடப்பெற்றதாகும். இதற்கு முன்பாக வேறு எவரும் இந்த ராகத்தில் பாடவில்லை. ஏனெனில், அந்த நேரத்தில் அமுதவல்லியின் அருளால் அதனை உருவாக்கியவர் முத்துசுவாமி தீட்சிதர்தான் என்பது மிக அற்புதமான செய்தியாகும்.

மழை பருவம் தவறாது பெய்வதால் உலகத்து உயிர்கள் வாழ்ந்து வருதலால், மழை அமிழ்தம் என்று எண்ணத்தக்கதாகும். `வான் நின்று உலகம் வழங்கி வருதலான் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று’ என்னும் வள்ளுவரின் வாக்குக்கு இணங்க அமுத மழை பொழிந்தது.

தீட்சிதர் தம் குரு சிதம்பரநாத யோகியிடம் மந்த்ர தந்திரங்களின் ரகசியங்களை அறிந்து, அதன் பயனைப் (ஸித்தியைப்) பெற்றவர். அமிர்தவர்ஷினி கிருதியில் அமிர்தேஸ்வரியின் பீஜாக்ஷரங்கள் நம் அறிவுக்குப் புலப்படாமல் வந்துள்ளன. அதனால், அமிர்தேஸ்வரியை வருண ஜபம் செய்வது போல் தியானம் செய்து, அவளது அருளால் மழை பொழிவித்தார்.

இப்படி அற்புதம் நிகழ்த்திய அமிர்தேஸ்வரியாகிய அமுதவல்லி அருள்பாலிக்கும் திருத்தலம் அக்காலத்தில் திருநல்லூர் என்று அழைக்கப்பெற்றது. நல்லூரில்தானே நல்ல விஷயங்களைக் காண முடியும். பின்னாளில், இவ்வூரின் அருகிலுள்ள சொக்கலிங்கபுரம், வாழவந்தாள்புரம், புளியம்பட்டி, கரையாம்பட்டி ஆகிய கிராமங் களை இணைத்துப் பேரூராய்த் திகழ்ந்ததை அருப்புக்கோட்டை என்று அழைக்கத் தொடங்கினர். இத்தலத்தில் பாண்டியர் காலத்து சொக்கலிங்கேஸ்வரர் கோயில், அமுதலிங்கேஸ்வரர் கோயில் ஆகிய இரண்டும் தற்போது புகழ் பெற்ற சிவாலயங்களாகும்.

அமுதலிங்கேஸ்வரர் கோயிலின் அருட்சக்தியான அமுதவல்லி அம்பிகையே தீட்சிதரின் பாடலுக்கு இறங்கி அமுத மழை பொழிந்து அற்புதம் நிகழ்த்தியவள். ஒரு முகமும் இரு கரங்களுடனும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். வலக்கரத்தில் மலர் ஏந்தியும் இடக்கரத்தை தொங்கவிட்ட நிலையில் வைத்தும், புன்முறுவல் பூத்த வதனத்துடன் அருட்காட்சி வழங்குகிறாள் இந்த அன்னை.

இந்தத் திருக்கோயிலில் அனவரத செல்வவிநாயகர், முத்துக்குமார சுவாமி, வரதராஜப்பெருமாள், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, சித்திரகுப்தர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களின் சந்நிதிகள் அமைந்துள்ளன. இத்தலத்தைப் பற்றி அருப்புக்கோட்டையென வழங்கும் திருநல்லூர் அமுதலிங்கமாலை, திருநல்லூர்க் கலம்பகம் ஆகிய இரண்டு இலக்கியங்கள் உண்டு. இவை, அரன்வாயில் வித்வான் வேங்கடசுப்புப்பிள்ளை என்பவரால் 19-ம் நூற்றாண்டில் இயற்றப்பெற்றுள்ளன. இந்தத் தலம் குறித்து அற்புதமான இந்தத் தகவலை நமக்கு தந்து உதவிய அன்பர் பெரணம்பாக்கம் வீ.விஸ்வநாதனுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும்.

விருதுநகரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ளது அருப்புக் கோட்டை. இத்திருக்கோயிலைச் சங்கீத வித்வான்களும், இசை ஆர்வலர்களும் சென்று தரிசித்து இன்புற வேண்டும்.

ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் அம்ருதவர்ஷினி இசைக்கு மூழ்கி அமுதவல்லி அம்பிகை அருள் மாரி பொழிந்த அற்புதத்தை ஆண்டு தோறும் நினைவு கூறும் வகையிலான ஒரு விழாவை, இந்தத் திருக்கோயிலின் நிர்வாகிகள் ஆண்டுக்கு ஒரு நாள் நடத்தி, அதன் அருமையையும் பெருமையையும் உலகுக்குக் காட்ட வேண்டும்.

அமுத மழை பொழிந்தாள் அன்னை!

ராகம்: அம்ருத வர்ஷினி

பல்லவி

ஆனந்தாம்ருதா கர்ஷிணி

அம்ருதவர்ஷிணி

ஹாராதி பூஜிதே சிவே பவானி

சமஷ்டி சரணம்

ஸ்ரீநந்தனாதி ஸம்ர க்ஷிணி

ஸ்ரீகுருகுஹ ஜனனி சித்ரூபிணி

ஸானந்த ஹ்ருதய நிலயே ஸதயே

ஸத்யஸ் ஸுவ்ருஷ்டி ஹேதவேத்வாம்

ஸந்ததம் சிந்தயே அம்ருதேச்வரி

ஸலிலம் வர்ஷய வர்ஷய

- ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர்.

அமுத மழை பொழிந்தாள் அன்னை!

அனுமன் அருள்புரிவார்!

சீதாபிராட்டியால் சிரஞ்ஜீவி என்று ஆசிர்வதிக்கப்பட்ட அனுமன், இன்றைக்கும் சிரஞ்ஜீவியாக நம்மிடையேதான் உலவிக் கொண்டிருக்கிறார். அனுமன் இருப்பது, 60 அடி உயர சிலையிலோ, அல்லது அற்புதமாகக் கட்டப்பட்ட ஆலயத்திலோ மட்டுமல்ல; ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் இருக்கிறார்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்

தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்

பாஷ்பவாரி பரிபூரண லோசனம்

மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

- என்று அனுமனைப் பற்றிய ஸ்லோகம் ஒன்று.

‘எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டிருப் பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள்’ என்பது இதன் பொருள்.

கடைசி வரியில் உள்ள ‘ராக்ஷஸாந்தகம்’ என்பது, ‘அவர் உன் உள்ளத்தில் தேங்கி நிற்கும் ஆணவம், அஹங்காரம், கோபம், த்வேஷம் போன்ற ராக்ஷஸ குணங்களை அழிப்பவர்’ என்பதைக் குறிக்கும். அனுமனை உபாஸித்து அருள் பெற, ‘ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்று ராம நாமத்தின் பெருமையைச் சொன்னாலே போதும்; அனுமன் அந்த பக்தர்களுக்கும் சேவகனாகி அருள்புரிவார்.