புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

மூவரின் அருள் கிடைக்கும்!

தத்தாத்ரேயர்
பிரீமியம் ஸ்டோரி
News
தத்தாத்ரேயர்

தத்தாத்ரேயர்

`மும்மூர்த்தியரின் ஸ்வரூபமாக ஒரு குழந்தை வேண்டும்’ எனும் அத்ரிமகரிஷி - அனுசுயா தம்பதியின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களுக்குக் குழந்தையாய் அவதரித்தவரே தத்தாத்ரேயர். மராட்டிய மொழியிலான தத்த சரித்திரம், இவரது அவதாரத் தையும் வழிபாட்டுச் சிறப்புகளையும் விவரிக்கிறது.

தத்தாத்ரேயர்
தத்தாத்ரேயர்


தமது யோகம் மற்றும் ஞான சக்தியால், உலக மக்களுக்குப் பல நன்மைகளை அருளும் தத்தாத்ரேயர், பிரம்மனின் அம்சமாக ஜபமாலை - கமண்டலம்; விஷ்ணுவின் அம்சமாக சங்கு- சக்கரம்; சிவனின் அம்சமாக சூலம், சின்முத்திரை ஆகியவற்றைத் தாங்கி அருள்கிறார். அவர் அருகில் நிற்கும் நான்கு நாய்களும் நான்கு வேதங்களையும், பசு தர்மத்தையும் குறிக்கும் என்கின்றன ஞானநூல்கள்.

வித்யா உபாசனையிலும் இவருக்கு முக்கிய இடம் உண்டு. ஆத்மஞானத்தை ‘த்ரிபுரா ரஹஸ்யம்’ என்ற அற்புதமான நூல் மூலம் உபதேசித்தவர் தத்தாத்ரேயர். யயாதி மஹாராஜா, கார்த்த வீர்யார்ஜுனன், பரசுராமர் ஆகியோர் இவருடைய சீடர்கள்.

மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில், தத்தாத்ரேயர் வழிபாடு பிரசித்தம். தத்தாத்ரேயரின் அவதாரம் அடிக்கடி நிகழ்கிறது என்றும், இவர் பல்வேறு வடிவங்களில் காட்சி தருவதாகவும் கூறுவர். மகாராஷ்டிராவில் வாழ்ந்த நருஸிம்ஹ ஸரஸ்வதி ஸ்வாமிகள், தத்தாத்ரேயரின் அவதாரமாகவே கருதப் பட்டார். நம் தமிழகத்தில் சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி திருக் கோயில் இவரது மகிமைக்குச் சான்றாகத் திகழ்கிறது.

நாமக்கல் மாவட்டம்-சேந்தமங்கலத்தில், மலைச் சிகரத்தின்மீது தத்தாத்ரேயருக்கு ஆலயம் உண்டு. ஸத்குரு சாந்தானந்த ஸ்வாமி களின் குருவான ஸ்வயம்ப்ரகாச அவதூத மஹா ஸ்வாமிகள், தத்தாத்ரேயரின் தெய்வத் திருவுருவத்தை இங்கே பிரதிஷ்டை செய்தாராம்.

தத்தாத்ரேயர் வழிபாட்டில், பாதுகைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குஜராத்தில் கிர்நார் மலைக்கு மேல் தத்தாத்ரேயரின் பாதுகை இருக்கிறது. அத்தி மரத்தின் கீழ் தத்தாத்ரேயருக்குப் பாதுகை பிரதிஷ்டை செய்வது உத்தமமானது.

சேந்தமங்கலத்தில், அன்பர்கள் தங்கள் கரங்களால் மலரிட்டு வணங்கக்கூடிய வகையில், தத்தாத்ரேயரின் பாதுகைகள் அத்தி மரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

`ஓம் திகம்பராய வித்மஹே யோகாரூடாய தீமஹி

தந்நோ தத்த: ப்ரசோதயாத்’

எனும் தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி தினமும் இவரை வழிபட, மும்மூர்த்தியரின் திருவருளையும் ஒருங்கே பெற்றுச் சிறக்கலாம்.

-எஸ்.கண்ணன், சென்னை-87