`சாஸ்தா வியாஸர்’ அரவிந்த் ஸுப்ரமண்யம்

சபரிமலை தரிசனம் ஆனந்தத்தைத் தருவது. ஐயப்பன் என்ற ஒற்றைச்சொல்லே ஒரு மந்திரச் சொல்லாக பக்தர்களுக்குப் பரவசத்தை ஊட்டுவது.

சுவாமி ஐயப்பனைத் தங்களில் ஒருவனாக, தங்கள் வீட்டுக் குழந்தையாகக் காணும் அன்பர்கள் எண்ணற்றோர். ஆகவேதான், ஐயப்பமார்கள் மட்டுமல்ல ஐயனின் மீது அன்புகொண்ட சகலரும் ஐயப்பன் என்ற பெயரைக் கேட்கும்போதே மனம் உருகிப் போகிறார்கள்!

அந்த ஐயனைக் காண சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பமார்கள், கடும் விரதமிருந்து முறையாக இருமுடி கட்டிச் சுமந்துசென்று, முறைப்படி யாத்திரை செய்து, பதினெட்டாம் படி ஏறி ஐயனை தரிசிக்கிறார்கள். ஆம்! சபரிமலையில் 18-ம்படி ஏறி ஐயனை தரிசிக்க பலவகையான கட்டுப்பாடுகள் உண்டு; அது பகவான் ஐயப்பனே நியமித்த விதிமுறைகள்.

நம் தமிழ்நாட்டில் ஐயப்பன் அருளும் ஒரு திருக்கோயில் உண்டு. `சுதந்திர ஐயப்பன் திருக்கோயில்’ என்று பெயர்பெற்ற ஆலயம். சபரிமலைக்குச் செல்ல முடியாத பக்தர்கள் பலருக்கும் ஆனந்தம் அளிக்கும் வண்ணம் - தாங்களே ஐயன் ஐயப்பனைத் தொட்டு வணங்கும் வகையிலான திருக்கோயில் அது.

தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை பகுதியில், ஆயக்குடி - சுரண்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சாம்பவர்வடகரை எனும் ஊர். இங்குதான் சுவாமி ஐயப்பன் அருளும் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இங்கு சபரிமலை போலவே பதினெட்டுப் படிகள் உண்டு. மேலே சந்நிதானம் திகழ, அதனுள் சுவாமி ஐயப்பன் கருணாமூர்த்தியாய் அருள்பாலிக்கிறார்.

இருமுடி என்பது சபரிமலைக்கு மட்டும்தான் என்பதை உணர்த்தும் முகமாகவோ என்னவோ, இந்தக் கோயிலில் இருமுடி இல்லாமல், ஆண் - பெண் பேதமின்றி அனைவரும் பதினெட்டாம் படி ஏறி ஐயனை வழிபடலாம்.

இது ஆகம முறைகள், தாந்த்ரீக முறைகளுக்கு உட்பட்டதா என்றால் இல்லைதான்! அதனால்தானோ என்னமோ இந்தக் கோயிலுக்குச் சுதந்திர திருக் கோயில் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதேநேரம், இந்த வழிமுறைகள் பிரச்னத்தில் பகவானிடம் உத்தரவு கேட்கப்பட்டு, அதன்பின்னரே நிர்ணயிக்கப்பட்டன என்று ஆலய நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

குளத்துப்புழையில் பாலகனாகவும், அச்சன் கோவிலில் அரசனாகவும், ஆரியங்காவில் ஐயனாகவும், சபரிமலையில் யோகியாகவும் இருக்கும் பகவான், இங்கே குடும்ப நலனை காக்கும் காப்பாளனாகச் சங்கல்பிக்கப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்!

சபரிமலையில் வனத்தில் பிரம்மசார்ய யோகத்தில் இருக்கும் பகவான், இங்கே நாட்டில் - தன் குழந்தைகளான பக்தர்களுடன் வசிக்கிறார். ஆகவே, அந்தக் குழந்தைகளின் குடும்ப நலனைக் காப்பவராக சுவாமி திகழும் வண்ணம், இந்த ஆலயத்தை உருவாக்கி யவர்கள் சங்கல்பம் செய்திருக்கிறார்கள் போலும்!

தேவப் பிரச்னம் மூலம் பகவானின் அனுமதி யைப் பெற்றே இக்கோயிலின் விதிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன; சபரிமலையில் அமைந்திருக்கும் விதிமுறைகளை ஒட்டி இல்லாமல், இந்தக் கோயிலுக்கான தனித்த விதிகளாக பிரச்னத்தில் கண்டறியப் பட்டிருக் கின்றன என்று பார்த்தோம் அல்லவா?

அதன்படி, பக்தரானவர் தன்னுடைய தாய் - தந்தை, மனைவி - மக்களுடன் குடும்ப சமேதராகப் பதினெட்டாம்படி ஏறி வர வேண்டும். தாங்களே கருவறைக்குள் சென்று இறைவனுக்கு அபிஷேகங்கள் செய்து, மாலை சாற்றி, நைவேத்தியங்கள் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி இறைவனை வழிபடலாம் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம்.

முன்னதாக பக்தர்கள் செய்யவேண்டியவை என்ன?

மண்டல விரதம் முழுமையாக இருக்கவேண்டும்; மாதா, பிதா, குரு, தெய்வங்களைப் போற்றி வணங்கவேண்டும்; கணவன் மனைவி உறவில் உண்மையான அன்பும் தூய பண்பும் கொண்டிருக்க வேண்டும். தூய விரத நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவராக இருக்கவேண்டும். இவையே இந்தக் கோயிலில் 18-ம் படிகளில் ஏறி வருவதற்கான தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தான் செய்த தவறுக்காக வருந்தி, அந்த தவறை மீண்டும் செய்யமாட்டேன் என்று உறுதி பூண்ட பக்தர்கள், தாங்களே கருவறைக்குச் சென்று இறைவனுக்கு தன் கையாலேயே நெய் அபிஷேகம் செய்யலாம் எனும் வழக்கம் இக்கோயிலில் கடைப் பிடிக்கப்படுகிறது.

வயதான தாய்மார்கள் தங்களின் சொந்தப் பிள்ளையாகக் கருதி, ஐயன் ஐயப்பனுக்கு எண்ணெய் தேய்த்து அபிஷேகித்து அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள். இளம் வயதினரோ இந்த ஐயப்பனைத் தங்களின் தகப்பனாராகக் கருதி வணங்குகிறார்கள். குழந்தைகளோ தங்களில் ஒருவனாக ஐயனைப் போற்றுகிறார்கள்.

நடப்புச் சூழலில், கொரோனா பெருந்தொற்று பாதிப்புத் தடுப்பு நடைமுறைகளின் காரணமாக, பக்தர்கள் பலபேருக்குச் சபரிமலைக்கு போக முடியாத ஒரு சூழல். ஆகவே, பக்தர்கள் பலரும் இந்தக் கோயிலுக்குச் சென்று ஐயனை வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.

ஒருவர் மலைக்குச் செல்கிறார் என்றால், அவரின் குடும்பத்தாரே அவருக்குப் பக்கத் துணையாக இருப்பார்கள். ஒருவர் மாலை அணிந்தால், அவரின் பொருட்டு அந்தக் குடும்பமே விரதம் இருக்கும். அந்தக் குடும்பத்தார் அனைவரும் ஐயனை தரிசித்து, தாங்களே வழிபட்டு மகிழும் விதமாக இந்தத் திருக்கோயில் அமைந்திருப்பது சிறப்பு.

ஆகவே, சபரிமலைக்குச் செல்ல முடியாத பக்தர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று ஐயனின் அருள்பெற்று வரலாம். இந்த ஆலயம் காலை 6 முதல் 9 மணி வரை திறந்திருக்கும்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!