Published:Updated:

வீட்டில் செல்வகடாட்சம் நிறைந்திருக்க... ஸ்ரீலட்சுமி குபேர பூஜை

குபேர பூஜை
News
குபேர பூஜை

வட திசைக்கு அதிபதியான குபேரனே அனைத்து செல்வங்களையும் அருள்பவன்.

வேத காலத்தில் நைமிசாரண்யத்தில் இருந்த மகரிஷிகள் பல விரதங்கள் மற்றும் பூஜைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கே வந்த திரிலோக சஞ்சாரியான நாரத மகரிஷி,

‘`வரப்போகும் கலியுகத்தில் செல்வம் இருந்தால்தான் பூஜை வழிபாடுகள் சாத்தியப் படும். அந்த செல்வத்தைப் பெற உகந்த வழிபாடு தீபாவளித் திருநாளில் அனுஷ்டிக்க வேண்டிய லட்சுமி குபேர வழிபாடுதான்'' என்று விளக்கினார். அப்போது ``அப்படி என்ன மகிமை அந்த பூஜைக்கு?'' என்று முனிவர்கள் கேட்க, நாரதர் அதுபற்றியும் விவரித்தார்.

``வட திசைக்கு அதிபதியான குபேரனே அனைத்து செல்வங்களையும் அருள்பவன். அவன் அன்னை மகாலட்சுமி தேவியை பூஜித்து சங்க நிதி, பதும நிதி உள்ளிட்ட நவநிதி களையும் வரமாகப் பெற்றவன். ஆகவே, கலியுகத்தில் தீபாவளி நன்னாளில் ஸ்ரீலட்சுமி குபேர பூஜை செய்வதால் அனைத்து செல்வங் களையும் பெற்று வளமுடன் வாழலாம்’’ என்று கூறி, அனைவருக்கும் ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் நியதிகளை விரிவாக எடுத்துரைத்தார்.

வீட்டில் செல்வகடாட்சம்  நிறைந்திருக்க... ஸ்ரீலட்சுமி குபேர பூஜை

நாமும் வரும் தீபாவளிநாளில் ஸ்ரீலட்சுமி குபேர பூஜை செய்து, சகல செல்வ வளங்களை யும் பெறுவோம். அதற்கேற்ப அந்த பூஜைக்கான நியதிகளை அறிந்துகொள்வோம்.

ஸ்ரீலட்சுமி குபேர பூஜை வழிபாட்டு நியதிகள்

ஐப்பசி மாதம் வரும் அமாவாசையன்று இப்பூஜை செய்வது விசேஷம். பெரும்பாலும் இது, தீபாவளி தினத்துடன் சேர்ந்தே வரும். தவிர வெள்ளிக் கிழமையிலோ, பௌர்ணமி தினங்களிலோ இந்த பூஜையைச் செய்யலாம்.

குபேர பூஜையைத் தொடங்குமுன் எப்போதும் போல் விநாயகரை முதலில் பூஜிக்க வேண் டும். தொடர்ந்து மகாலட்சுமியை பூஜிக்க வேண்டும். தன்னிடம் உள்ள செல்வ வளத்தை மற்றவர்களுக்கும் அடியவர்களுக்கும் வரமாக வழங்கும் வரத்தை குபேரனுக்கு அருளியவள் திருமகள். ஆகவே, அவளை வழிபட்ட பிறகு குபேரனை வழிபடவேண்டும்.

லட்சுமி தேவியை விளக்கு வடிவிலோ அல்லது படமாகவோ அல்லது கலசத்தில் ஆவாஹனம் செய்து வைத்தோ, ஸ்ரீசூக்த பாராயணத்துடன் தூபதீபம் போன்ற பதினாறு உபசரனைகள் செய்து பூஜிக்கவேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கலச பூஜையை அடுத்து நவகிரகங்களை பூஜித்து, தொடர்ந்து தேவி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர், வடக்குத் திக்கில் குபேரனின் படம் அல்லது தர்ப்பைகளாலான கூர்ச்சத்தால் குபேரனை ஆவாஹனம் செய்து குபேரனின் தியான ஸ்லோகம் சொல்லி தியானித்து, பூஜையைத் தொடங்க வேண்டும்.

குபேரனின் தியான சுலோகம்

மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திகம்

கருடரத்ந நிபம் நிதிதாயுகம்!

ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம்

வரகதம் தநதம் பஜ துந்திலம்

கருத்து: மனிதர்களால் தாங்கப்படும் சிறந்த விமானத்தில் அமர்ந்திருப்பவரும், மரகதம் போன்று ஒளி வீசுபவரும், நவநிதிகளின் தலைவரும், சிவபெருமான் தோழரும், சிறந்த கதையை கையில் ஏந்தியவரும், பொன்முடி முதலிய ஆபரணங்கள் அணிந்தவரும், தொந்தியுடையவரும், செல்வம் தருபவருமாகிய குபேரப் பெருமானை தியானிக்கிறேன்.

வீட்டில் செல்வகடாட்சம்  நிறைந்திருக்க... ஸ்ரீலட்சுமி குபேர பூஜை

இந்தத் தியான மந்திரத்தைக் கூறி வழிபட்ட பிறகு, கீழ்க்காணும் குபேர மந்திரத்தை குறைந்தது 108 முறை ஜபித்து வணங்கவேண்டும்.

குபேர மந்திரம்

ஓம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய!

தநதாந்யாதிபதயே தநதாந்ய ஸம்ருத்திம் மே

தேஹி தாபய ஸ்வாஹா!!

தொடர்ந்து குபேரனுக்கு 108 திருநாமங்களால் புஷ்பார்ச்சனை செய்து, இனிப்பு பண்டங்களை நைவேத்தியம் செய்து, பூஜையை நிறைவு செய்யவேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகாலட்சுமி தியான மந்திரம்!

குபேரனை பூஜிப்பதற்கு முன்பாக மகாலட்சுமி தேவியை பூஜிக்கவேண்டும் என்று பார்த்தோம் அல்லவா?

ராவணனிடம் இழந்த செல்வத்தை திரும்பப் பெறுவதற்காக சிவபெருமானைக் குறித்து தவம்செய்த குபேரனுக்குச் சிவபெருமான் தரிசனம் தந்து, நவநிதிகளையும், வடக்கு திசையின் அதிபதி பதவியையும் கொடுத்தார்.

செல்வம் என்றால் நிலையில்லாதது என்பதை ராவணன் மூலமாகப் புரிந்து கொண்டதால், சிவனருளால் தான் பெற்ற செல்வம் எப்போதும் நிலைத்திருக்கும் பொருட்டும் அந்தச் செல்வங்கள் மென்மேலும் பெருகவும் மகாலட்சுமிப் பிராட்டியை பிரார்த்தித்தார் குபேரன்.

வீட்டில் செல்வகடாட்சம்  நிறைந்திருக்க... ஸ்ரீலட்சுமி குபேர பூஜை

அவருக்குக் காட்சி தந்த தாயார், ‘`என்னை முறைப்படி பூஜித்து, பின்னர் உன்னையும் பூஜிக்கும் அன்பர்களுக்கு நீ அளவற்ற செல் வத்தை வழங்கி நிலைத்திருக்கச் செய்வாய்’’ என்று வரம் அருளினாராம். ஆகவே, குபேரனை பூஜிக்குமுன் மகாலட்சுமிதேவியை வழிபட வேண்டும். அவ்வண்ணம் அலைமகளை வழிபடுவதற்கு ஏற்ப, ஸ்ரீமகாலட்சுமி தியான ஸ்லோகம் இங்கே உங்களுக்காக...

ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா

வாஸினீம் பராம்

ஸரத்பார்வண கோடீந்து

ப்ரபாமுஷ்டிகராம் பராம்

ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம்

ஸுகத்ருஸ்யாம் மனோஹராம்

ப்ரதப்த காஞ்சனநிப ஸோபாம்

மூர்திமதீம் ஸதீம்

ரத்நபூஷண பூஷாட்யாம்

ஸோபிதாம் பீதவாஸஸா

ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம்

ஸஸ்வத்ஸுஸ்திரயெளவனாம்

ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச

மஹாலக்ஷ்மீம் பஜே ஸுபாம்

கருத்து: ஆயிரம் தளத்துடன் கூடிய தாமரைப் புஷ்பத்தின் நடுவில் வசிப்பவளும் சிறந்தவளும் சரத் காலத்திலுள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான காந்தி உள்ளவளுமாகிய மகாலட்சுமி அன்னையே!

தனது காந்தியால் மிகவும் பிரகாசிக்கின்றவளும், ஆனந்தமாகக் காட்சி அளிப்பவளும், பக்தர்களுடைய மனத்தைக் கவருகின்றவளும், உருக்கி வார்த்த தங்கத்தின் காந்தியே உருவெடுத்து வந்தது போல் இருப்பவளுமாகிய அலைமகளே!

பதிவ்ரதையும், ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், தங்கப் பட்டாடையால் விளங்குகிறவளும், மந்தஹாஸத்தால் பிரஸன்ன முகமுடையவளும், சாச்வதமாய் அமைந்துள்ள யெளவனத்தை உடையவளும், பக்தர்களுக்கு ஸர்வ ஸம்பத்துகளையும் நன்கு அளிப்பவளும், மங்களத்தைச் செய்கிறவளுமான ஸ்ரீமகாலட்சுமியே நின்னைத் தியானிக்கிறேன்.

செல்வ யோகம் அருளும் குபேர யந்திரம்!

ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின்போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும். பெரும் செல்வத்தை அளிக்கும் இந்த குபேர யந்திரத்தை, தீபாவளித் திருநாளில் மட்டுமன்றி, வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நாளிலும் வழிபடலாம்.

இனி குபேர யந்திரம் வரைவது எப்படி என்பதை அறிவோம். புரசு இலையில் பலாச மலர்ச் சாறும் கோரோசனையும் சேர்த்து நாணல் தட்டையினால் எழுத வேண்டும். அல்லது சந்தனம், பால் குங்குமம் கலந்த குழம்பால் எழுதலாம். அல்லது 3x3 அளவுள்ள தாமிரம், வெள்ளி அல்லது தங்கத் தகட்டில் யந்திரத்தை எழுதலாம்.

வீட்டில் செல்வகடாட்சம்  நிறைந்திருக்க... ஸ்ரீலட்சுமி குபேர பூஜை

இந்த யந்திரத்தைச் சிவப்பு நிற பட்டின் மீது வைத்துத் தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். வழிபாட்டின்போது, 5 முகங்கள் கொண்ட குத்துவிளக்கு நெய் தீபம் எரிய வேண்டும். மேற்சொன்ன புண்ணிய தினங்களில் தொடங்கி 72 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்வது நலம். ஒவ்வொரு நாளும் குபேர மந்திரத்தை 1008 முறை ஜபம் செய்ய வேண்டும். வடக்கு முகம் நோக்கி அமர வேண்டும். பால் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

குபேர பூஜையுடன் தனலட்சுமி அல்லது ஸௌபாக்ய லட்சுமி படத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும்.

வீட்டில் செல்வகடாட்சம்  நிறைந்திருக்க... ஸ்ரீலட்சுமி குபேர பூஜை

வசதி உள்ளவர்கள் ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜையுடன் நவகிரக பூஜையையும் செய்வது விசேஷம். கோதுமையில் சூரியனையும், நெல்லில் சந்திரனையும், துவரையில் அங்காரகனையும், பச்சைப் பயறில் புதனையும், கொண்டைக் கடலையில் குரு பகவானையும், மொச்சையில் சுக்கிரனையும், கறுப்பு எள்ளில் சனீஸ்வர பகவானையும், கறுப்பு உளுந்தில் ராகுவையும், கொள்ளில் கேதுவையும் ஆவாஹனம் செய்து, நவகிரக ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்து பூஜிக்கலாம்.