திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

இங்கு வழிபட்டால் ஆயுள் பலம் கூடும்! - காஞ்சியின் திருக்கடவூர்!

இறவா ஸ்தானம் சிவாலயம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இறவா ஸ்தானம் சிவாலயம்!

- காஞ்சிபுரம் பாபுமனோ

காலனை உதைத்து மார்க்கண்டேயருக்கு ஆயுள் பலம் அளித்து, காலகாலனாக ஈசன் அருளிய திருத்தலம் திருக்கடவூர் என்பதை நாமறிவோம். அதேபோல், தன்னை நாடி வந்து வணங்கும் பக்தர்களின் மரண பயத்தைப் போக்கும் மகேசனாக ஈசன் கோயில் கொண்டிருக்கும் தலம் ஒன்று காஞ்சிபுரத்திலும் உண்டு. ஞானநூல்களும் புராணக் கதைகளும் `இறவா ஸ்தானம்' என்று இந்த க்ஷேத்திரத்தைச் சிறப்பிக்கின்றன!

இங்கு வழிபட்டால் ஆயுள் பலம் கூடும்! - காஞ்சியின் திருக்கடவூர்!

ஈசன் மிருத்யுஞ்ஜயேஸ்வரர் என்ற திருப்பெயரில் கோயில் கொண்டிருக்கும் இத்தலம் குறித்து காஞ்சிபுராணம் விவரிக்கிறது. முன்னொரு காலத்தில் முனிவர்கள் சிலர் தவம் புரிந்தனர். அதன் பலனாக பிரம்மதேவன் அவர்கள் முன் தோன்றினார். ``வேண்டும் வரம் என்ன?'' என்று நான்முகன் கேட்டதும், மரண பயம் நீங்க வழி கூறுமாறு அந்தத் தவசீலர்கள் அவரிடம் வேண்டிக்கொண்டனர்.

``தேன் பெருகும் பூங்கொத்துகள் நிறைந்த பூஞ்சோலைகளால் சூழப்பட்ட காஞ்சி எனும் புண்ணியப் பதிக்குச் செல்லுக்கள். அங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வாருங்கள்'' என்று அறிவுரை வழங்கினார் பிரம்மன். அதன்படி காஞ்சிக்கு வந்து சிவவழிபாடு செய்த முனிவர்கள், சிவனார் அருளால் சாகா வரம் பெற்று வாழ்ந்தார்களாம். மார்க்கண்டேயனைப் போன்று சுவேதன் என்றொரு பக்தர் குறித்த திருக்கதையும் உண்டு.

தனக்கு மரண காலம் நெருங்கியதை உணர்ந்த சுவேதன், தன் ஆயுள் முடியும் தருணத்தில் காலன் தேடி வருவதை அறிந்தார். சிறிதும் பயமின்றி, தான் வழிபட்டு வரும் சிவலிங்க மூர்த்தத் தைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். காலன் வந்ததும் ``சிவன் தாளைப் பற்றியோருக்கு எவராலும் துன்பம் இல்லை'' என்றார் சுவேதன்.

காலதேவன் கோபம் கொண்டான். பாசக் கயிற்றை சுவேதன் மீது வீசினான். கயிறு இறுகத் தொடங்கியது. மறுகணம் லிங்கத்திலிருந்து தோன்றிய பரமன் கோபத்துடன் யமனை நோக்க, அக்கணமே தரையில் வீழ்ந்தான் யமன். பரமன் சுவேதனுக்கு அழியா வாழ்வைக் கொடுத்ததுடன், தம் கணங்களில் ஒருவராக இருக்கும்படி அவருக்கு அருள் செய்தார். பின்னர் காலனுக்கும் உயிர் தந்தார்.

இங்கு வழிபட்டால் ஆயுள் பலம் கூடும்! - காஞ்சியின் திருக்கடவூர்!

சுவேதனைப் போன்று சாலங்காயினன் என்ற முனிவரின் பெயரனும் இத்தல சிவனாரை வழிபட்டு, அவரின் அருளால் மரணத்தை வென்று சிவகணங்களுக்குத் தலைவன் ஆனதாகப் புராணங்கள் விளக்குகின்றன.

மார்க்கண்டேயனும் இந்த ஊருக்கு வந்து சிவனாரைப் பூஜித்து சிரஞ்ஜீவி வரம் பெற்றான் என்றும் ஒரு தகவல் சொல்கிறார்கள்!

பல்லவப் பேரரசன் ராஜசிம்மனால் கட்டப் பட்ட கற்றளி இந்தத் திருக்கோயில். 1300 வருடங்கள் பழைமையானது என்கிறார்கள். `மணற் கல்' எனப்படும் ஒருவகைப் பாறை களைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தியுள்ளார்கள்.

இந்தக் கோயிலின் கருவறை விமானத் தொகுப்பு வியக்க வைக்கிறது. அதிட்டானம், பித்தி, பிரஸ் தரம், கிரீவம், சிகரம், கலசம் என அங்கங்களுடன் விமானம் திகழும். அவ்வகையில் இந்த ஆலய விமானம் பாதபந்த அதிட்டானத்துடன், சிறு திரியாங்க உபபீடத்தின் மீது, இரு தள நாகர விமானமாக அமைந்துள்ளது.

விமான `பிரஸ்தர' பகுதிக்கு மேலுள்ள கர்ணக் கூடுகளில் இறை உருவங்கள் உள்ளன. இப்படி அமைக்கும் முறை இந்தக் கோயிலிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்டிருக்கக் கூடும் என்கிறார்கள் சிற்ப ஆர்வலர்கள்.

இங்கு வழிபட்டால் ஆயுள் பலம் கூடும்! - காஞ்சியின் திருக்கடவூர்!

கருவறையில் லிங்கத்தின் பின்புறம் சோமா ஸ்கந்தர் திருவடிவம் உள்ளது. வெளிப்புறத்தில் நான்கு மூலைகளிலும் பாயும் நிலையிலான வ்யாளம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு பக்கத்தில் தட்சிணாமூர்த்தி அருள்கிறார். இருபுறமும் சிம்மங்கள், திருவடியில் முனிவர்கள், துவாரபாலகர்கள், உச்சியில் விநாயகர் என்று அற்புதமாய்த் திகழ்கிறது, இந்தச் சிற்பத் தொகுப்பு.

மேலும் பிட்சாடனர், பத்தினிகளுடன் முனிவர்கள், விருச்சிக கரணத்துடன் கூடிய சிவ தாண்டவம், கஜ சம்ஹாரர் ஆகிய சிற்ப வடிவங்களும் மிக அற்புதம்.யானைத் தோல் உரிக்கும் மூர்த்தியாய் எட்டுக் கரங்களுடன் கஜசம்ஹாரர் காட்சி தர, அருகில் பயந்த நிலையில் பார்வதியாள் அமைந்திருக்கும் சிற்பம், கலைத் திறனின் உச்சம்!

கருவறை வெளிப்பாகத்தில் வடக்குப் புறம் கங்காதர மூர்த்தி சிற்பம் உள்ளது. எம்பெருமா னின் திருமேனியைத் தொட்டபடி தேவியும் அருள்கிறாள். ஜலந்தரனை வதம் செய்தபிறகு யோக நிலையில் அருளும் சிவனின் வடிவமும் இங்கு உண்டு. இவரின் திருவடியில் ஜலந்திரன் உள்ளான். இந்தச் சிற்பத்தின் அருகிலேயே கால சம்ஹாரக் காட்சியைக் காண்கிறோம்.

ஈசன் காலனை மிதித்தபடி திகழ, அருகில் சிவ லிங்கத்தைக் கட்டியணைத்தபடி சுவேதன் இருக்கிறான் (மார்க்கண்டேயர் என்றும் சொல்வர்).

இந்தச் சிற்பத் தொகுப்புகளில் துர்கையும் எழில் ஓவியமாய் காட்சி தருகிறாள். சிம்மவாகினி யாய் அருளும் இந்தத் தேவி, எட்டுத் திருக்கரங்களுடன் அருள்கிறாள். அருகில் திகழும் மானும், அதற்கும் கீழே வில் ஏந்தி காட்சி தரும் பெண்ணின் சிற்பமும் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

இங்கு வழிபட்டால் ஆயுள் பலம் கூடும்! - காஞ்சியின் திருக்கடவூர்!

கருவறை வெளிச் சுவரில் அமைந்த இந்தச் சிற்பங் களின் மேலுள்ள பகுதி மகர தோரணம் ஆகும்.மகர தோரணங்களில் யோக மூர்த்தி, விநாயகர், சன்னவீரம் அணிந்த முருகன் ஆகியோரின் வடிவங்கள் சிறு சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளன.

விமானச் சிற்பத் தொகுப்பு களில் பூதகணங்களும் இடம் பெற்று உள்ளன. அவற்றுக்கு இயற்கை வர்ணம் பூசப்பட்டுள்ளது. எனினும், வர்ணம் முழுமையாக இல்லாமல் ஆங்காங்கே பெயர்ந்துள்ளது.

மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், காஞ்சிபுரம் புதிய ரயில்நிலையம் செல்லும் வழியில் கம்மாளத்தெரு என்ற இடத்தில் உள்ளது. பக்தர்கள் கடுமையான நோய்கள் குணமாகவும், ஆயுள் விருத்திக்காகவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். அறுபதாம் கல்யாணம், சதாபிஷேகம் முதலான வைபவங்களும் நிகழ்கின்றன.

காஞ்சிக்குச் செல்லும் அன்பர் கள் அவசியம் இந்த ஆலயத் துக்கும் சென்று வாருங்கள்; ஈசன் அருளால் நீண்ட ஆயுளையும் துன்பம் இல்லா வாழ்வையும் வரமாகப் பெற்று மகிழுங்கள்!