புராண காலப் பெருமை வாய்ந்த சிவத் தலம் அது. பல்குணனும் சூரியனும் ஈசனை வழிபட்ட தலம். ஆனாலும் அந்நியரின் ஆதிக்கத்தால் சில காலம் புகழ் மங்கிற்று. பரம்பொருள் வழிபாட்டில் குறை நேர்ந்தால் பஞ்சபூதங்களும் பொறுக்குமா? மழை பொய்த்தது. நிலம் விளைச்சல் இன்றி பாழ்பட்டது. பசிப்பிணி மக்களை வருத்தத் தொடங்கியது.
அப்போதுதான் அருள்மழைபொழிய திருஞானசம்பந்தர் அங்கு வந்தார். பகைவரின் தலைவன் வழிமறித்து வாதிட்டான். ஞானசம்பந்தரோ சிவத்தைத் துணைகொண்டு தர்க்கத்தில் வென்றார். சொற்போரிட்டவர் எல்லாம் திருநீறிட்டவரானார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வாதில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெல்ல சைவம் துணையிருக்கும் என்பதை உணர்த்த விரும்பினார் சம்பந்தர். அத்தல இறைவனைப் போற்றிப் பதிகம் பாடினார். பிள்ளை வேண்டினால் இரங்காத பெற்றவர் உண்டா... மழை பொழிந்தது; நிலம் குளிர்ந்தது; குளமும் ஏரியும் நிறைந்து வழிந்தன.

பிறவிப்பிணி தீர்க்கும் ஈசன் பசிப்பிணி தீர்க்க முடிவு செய்தார். தானே கிராத மூர்த்தி யாகி மண்வெட்டி, ஏர் கலப்பை சுமந்து வயல்களில் இறங்கி உழுதார். விதைகளைத் தெளித்து விவசாயம் தளைக்கச் செய்தார். அவை நன்கு விளைந்து பஞ்சம் தீர்ந்தன. இவ்வளவு சிறப்புகளையும் உடைய தலம் திருத்தெளிச்சேரி. ஈசனே விதை தெளித்ததாலே திருத்தெளிச்சேரியானது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகாரைக்கால் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து 2 பர்லாங் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது
இந்தத் தலத்தில், ஈசன் ஸ்ரீசுயம்வர தபஸ்வினி அம்பாள் சமேத ஸ்ரீபார்வதீஸ்வர சுவாமியாய் அருள்பாலிக்கிறார். மேலும், சிவனார் கிராத மூர்த்தி எனும் அழகிய வேட்டுவ உருவில் தனிச் சந்நிதியில் ஒரு கையில் ஏர்க் கலப்பையையும் மறு கையில் மண் வெட்டியையும் தாங்கி உழவனாகக் காட்சி அருள்கிறார்.

பார்வதிதேவி காத்யாயன முனிவரின் மகளாகப் பிறந்து சிவபெருமானை வழிபட்டு, அவரைத் திருமணம் செய்து கொண்ட திருத்தலம் இது என்கிறது புராணம். சூரியன், முனிவர் ஒருவரின் இரண்டு பெண்களையும் மணந்து, அவர்களில் ஒருவரான சாயாதேவியை கவனிக்காமல் விட்டதால், முனிவரின் சாபத்தைப் பெற்று, தனது வலிமையை இழந்தான். சாபம் நீங்க வேண்டி இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டான். ஈசனின் கருணையால் சாப விமோசனம் நீங்கியது என்கிறது தலவரலாறு.

இத்தலத்தில் அருளும் விநாயகருக்கு ‘ஞானசம்பந்த விநாயகர்’ என்ற திருநாமம் வழங்கப்படுகிறது. இத்தலத்தில் இருந்த பஞ்சமும் அந்நியரால் ஏற்பட்ட பாதிப்பும் நீங்கிட, தூய அடியவரின் பாதம் இம்மண்ண்ணில் பட வேண்டும். அப்படி ஓர் அடியவரான திருஞானசம்பந்தர் இத்தலத்து வழிச் செல்லும்போது விநாயகப்பெருமான் அவரை பத்துமுறை பெயர் கூவி அழைத்தாராம். விநாயகர் பத்துமுறை கூவி அழைத்ததால் இத்தலம் ‘கூவிப்பத்து’ என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி ‘கோயில்பத்து’ என்றும் பெயர் பெற்றது என்கிறார்கள். இதனாலேயே இந்த விநாயகரின் திருநாமத்தோடு ஞானசம்பந்தர் நிலைத்துவிட்டார்.

ஈசனே இங்கு விவசாயியாக மாறிப் பணிசெய்த திருவிளை யாடலை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ஆனி மாதம் இத்தலத்தில் ‘விதைத்தெளி உற்சவம்’ கொண்டாடுகிறார்கள். இப்பகுதி விவசாயிகள் இந்த உற்சவத்தில் கலந்து கொண்ட பிறகுதான் தங்கள் வயல்களில் விவசாயப் பணிகளை மேற்கொள்
கிறார்கள். இத்தலத்தில் பணி செய்யும் ஈசான சரவணபவ சிவாசார்யரிடம் பேசினோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
“மேற்கு திசை நோக்கிய சிவாலயம் இது என்பது சிறப்பு. இங்குள்ள இறைவன் அடியவர்களின் அல்லல் போக்கும் பிரானாகவும், எழில் கோலத்தில் காண்போரை பிரமிக்க வைக்கும் வகையி லும் திருக்காட்சி தருகிறார். நான்கு திருக் கரங்களுடன் தெற்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். அம்பாள் சந்நிதிக்கு மேலே, மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் உள்ளது. இது சிறப்பான அமைப்பாகும். அதன் கீழ் நின்று அம்பாளை மனமுருக வேண்டினால், பக்தர்களின் பிரார்த்தனைகள் அனைத் தும் பலிக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தின் தீர்த்தமான சூரிய புஷ்கரணி அடியில் இரும்புச் சத்துடைய மணல் இருப்பதால், எப்போதும் தண்ணீர் கதகதப்பாகவே இருக்கும். இதில் நீராடுபவர்களுக்கு ஜுரம், சளி பிடிக்காது என்பது வியப்பான செய்தியாகும்.

மற்ற சிவாலயங்களில் நடை பெறும் அனைத்து விழாக்க ளும் இங்கு நடைபெற்ற போதிலும், ஆனி மாதத்தில் நடைபெறும் விதைத்தெளி உற்சவமும், பங்குனி மாதம் 13 முதல் 19 -ம் தேதி வரை சூரியனின் கதிர்கள் ஈசனின் மீது விழுகின்ற சூரிய பூஜை வைபவமும் இங்கு பிரசித்தி பெற்றதாகும்.

‘இத்தலத்து ஈசனை திங்கட்கிழமைகளில் வழி பட்டால், எல்லா நலன்களும் பெற்று இன்புறுவர்’ என்பது திருஞானசம்பந்தரின் திருவாக்கு. இங்குள்ள பார்வதீஸ்வரரை மனங்குளிர அபிஷேக ஆராதனை செய்வோருக்கு இன்மை பிணிகளும், மறுமை வினைகளும் நீங்கி வீடுபேறு அடையும் தன்மையைப் பெறுவர். மகாசிவராத்திரியில் இந்த இறைவனை வழிபடுவோர் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம்.
அம்பாள் தவமிருந்து சிவபெருமானைத் திருமணம் செய்த தலம் என்பதால், இங்கு வந்து அம்பாளை வேண்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும் என்பது திண்ணம்” என்றார்.
தற்போது இக்கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. உலகம் செழிக்க உழவு செய்த ஈசனின் திருவருளை நாமும் பெறுவோம்; கோயில் திருப்பணியில் பங்கேற்று சிவனருளை அடைவோம். .