Published:Updated:

பூனைக்கும் அருள்புரிந்த புனுகீசர்!

அருள்மிகு புனுகீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
அருள்மிகு புனுகீஸ்வரர்

தினமும் சிவலிங்கத் திருமேனி முழுவதும் நறுமணம் கமழும் புனுகினைப் பூசி, வில்வ தளங்களை வாயினால் கவ்வி எடுத்துக்கொண்டு வந்து இறைவனுக்குச் சமர்ப்பித்து, வலம் வந்து வழிபட்டது.

பூனைக்கும் அருள்புரிந்த புனுகீசர்!

தினமும் சிவலிங்கத் திருமேனி முழுவதும் நறுமணம் கமழும் புனுகினைப் பூசி, வில்வ தளங்களை வாயினால் கவ்வி எடுத்துக்கொண்டு வந்து இறைவனுக்குச் சமர்ப்பித்து, வலம் வந்து வழிபட்டது.

Published:Updated:
அருள்மிகு புனுகீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
அருள்மிகு புனுகீஸ்வரர்

‘இறைவனை தேவர்களும், முனிவர்களும், மனிதர்களும் மட்டும்தான் வணங்கவேண்டுமா, பூச்சிகளுக்கும், விலங்குகளுக்கும், பறவை களுக்கும் அந்த உரிமை இல்லையா’ என்று கேட்பவர்களுக்கு, ‘ஏன் இல்லாமல்... எத்தனையோ தலங்கள் இருக்கின்றன’ என்று சொல்வதுபோல், திருக்காளத்தி, திருவானைக்கா, திருக்குரங் காடுதுறை, திருமயிலை, திருமயிலாடுதுறை என்று பல தலங்கள் உள்ளன.

இந்த வரிசையில், புனுகுப்பூனை ஒன்று பூர்வ ஜன்ம நல்வினைகளின் பயனாக, இறைவனை வழிபட்டு அவரை அடையும் பேறுபெற்ற தலம் ஒன்றும் உண்டு.

அது, மயிலாடுதுறையின் ஒரு பகுதியாகத் திகழும் `கூறைநாடு'. முற்காலத்தில் இந்தப் பகுதி தனியூர் என்று அழைக்கப்பட்டதாம்.மயிலாடுதுறை பேருந்துநிலையத்திலிருந்து நடந்தே சென்றுவிடலாம், புனுகீசர் கோயிலுக்கு!

அந்தக் காலத்தில், மயிலாடுதுறைக்கு மேற்கே அமைந்திருந்த வனத்தில் எண்ணற்ற புனுகுப் பூனைகள் வாழ்ந்து வந்தன. அதன் காரணமாக அந்த வனத்தின் காற்றில் புனுகு மணம் கமழ்ந்தது.

அங்கு வசித்த புனுகுப்பூனைகளில் ஒன்று, முற்பிறவி வாசனையின் காரணமாக இறை ஞானம் பெற்று, அந்த வனத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த இறைவனை வழிபடும் பேற்றினைப் பெற்றது.

பூனைக்கும் அருள்புரிந்த புனுகீசர்!

தினமும் சிவலிங்கத் திருமேனி முழுவதும் நறுமணம் கமழும் புனுகினைப் பூசி, வில்வ தளங்களை வாயினால் கவ்வி எடுத்துக்கொண்டு வந்து இறைவனுக்குச் சமர்ப்பித்து, வலம் வந்து வழிபட்டது. நெடுங்காலம் தொடர்ந்தது இந்த வழிபாடு. புனுகுப்பூனையின் பக்திக்கு இரங்கிய சிவபெருமான், அதற்குத் தேவ வடிவம் கொடுத்து ஆட்கொண்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையறிந்து, இறைவனின் கருணைத்திறன் கண்டு வியந்த பிரம்மா, திருமால் உள்ளிட்ட தேவர்கள் அந்த இடத்துக்கு வந்து, பவளமல்லி விருட்சத்தின் நிழலில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவனாரைப் போற்றி வழிபட்டனர்.

பிற்காலத்தில், இறைவனின் அற்புத லீலையை அறிந்த சோழ மன்னன் வனத்தைத் திருத்தி, இறைவனுக்கு அழகியதோர் ஆலயம் எழுப்பி, நித்திய பூஜைகளும் விழாக்களும் நடைபெறும்படிச் செய்தான். இதுகுறித்து மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தாம் இயற்றிய, ‘தனியூர்ப் புராணம்’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தவிர மற்றுமொரு வரலாறும் சொல்லப் படுகிறது. அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு ஆலயத்தை தரிசித்துவிடலாமே!

ஐந்து நிலைகளுடன் மேற்கு நோக்கி அமைந் திருக்கும் ராஜகோபுரத்தை தரிசித்தபடி ஆலயத் துக்குள் செல்கிறோம். கொடிமரம், பலிபீடம், நந்திமண்டபம் கடந்து சென்றால், கோயில் பிராகாரத்தின் வலப்புறத்தில் அம்பிகையின் சந்நிதி அமைந்திருக்கிறது.

கருவறையில் அருள்மிகு சாந்தநாயகி எனும் திருப்பெயர் ஏற்று, மேலிரு திருக்கரங்களில் பாச, அங்குசம் ஏந்தி, கீழிரு திருக்கரங்களில் வர, அபய ஹஸ்தம் காட்டி, பெயருக்கேற்ப சாந்தம் தவழும் திருமுகத்துடன் எழிலார்ந்த கோலத்தில் திருக்காட்சி அருள்கிறாள் ஸ்ரீசாந்தநாயகி!

அம்பிகைச் சந்நிதியை வலம் வரும்போது, தனிச்சந்நிதியில் அருளும் சண்டிகேஸ்வரியை தரிசிக்கலாம். இக்கோயிலில் அம்பிகை சந்நிதி யிலும் பலிபீடமும் நந்தியும் காணப்படுகின்றன. அருகிலேயே பிரதோஷ நாயகர் மண்டபமும் பள்ளியறையும் அமைந்துள்ளன. அதேபோல், திருக்கோயிலுக்குள் திருக்குளமும் அதன் மத்தியில் நந்திமண்டபமும் அமைந்துள்ளன. திருக்குளத்தின் கரையில் தியான மண்டபமும், விநாயகர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன.

இரண்டாவது கோபுரத்தைக் கடந்து ஐயனின் சந்நிதிக்குச் செல்கிறோம். கருவறையில் ஐயன் அருள்மிகு புனுகீஸ்வரர் மேற்கு நோக்கி திருக்காட்சி அருள்கிறார். புனுகுப்பூனைக்கு அருள்புரிந்த அந்த ஐயனின் கருணைத்திறத்தை வியந்து போற்றிப் பணிந்து வணங்கியபின், அவர் சந்நிதியின் பிராகாரத்தை வலம் வருகிறோம்.

வில்லேந்திய வேலவர் (உற்சவர்), ஷண்முகக் கடவுள், லட்சுமிதேவி ஆகியோரின் சந்நிதிகள் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. மற்றொரு சந்நிதியில் சர்வாலங்கார சொரூபியாக ஆனந்த நடனம் புரிந்தபடி காட்சி அருள்கிறார், நடராஜர்.

கருவறையின் வடக்குக் கோஷ்டத்தில் துர்கை, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் காட்சி அருள்கின்றனர். சண்டிகேஸ்வரர் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். அருகிலேயே தலவிருட்சமான பவளமல்லி மரம் உள்ளது. மேலும் தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், சூரியன், சந்திரன், பைரவர் ஆகியோரின் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு எதிரில் அறுபத்து மூன்று நாயன்மார்களுடன், தனி மண்டபத்தில் நேசநாயனாரும் காட்சி அருள்கிறார். வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் நர்த்தன விநாயகர், சகஸ்ரலிங்கேஸ்வரர் சந்நிதி, சனீஸ்வரர் பகவான் சந்நிதி அமைந்திருக்கின்றன. இந்தத் தலத்தில் நேசநாயனாருக்குத் தனிச் சந்நிதி அமைந் திருப்பதன் காரணம் பற்றி, இந்த ஆலயத்தை நிர்வகிக்கும் ராஜு என்பவரிடம் கேட்டோம்.

பூனைக்கும் அருள்புரிந்த புனுகீசர்!

‘`அறுபத்து மூவரில் ஒருவரான நேசநாயனார், காம்பிளி நகரத்தில் சாலியர் குலத்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். ‘பொருள்செல்வத்தை விடவும் சிவனருள் செல்வமே நித்தியமானது’ என்ற பேருண்மையை உணர்ந்தவராக, எப்போதும் சிவபெருமானின் சிந்தனையிலேயே லயித்திருந்தார். அத்துடன், தம் குலத்தொழிலின்படி ஆடைகளும் கோவணமும் நெய்து சிவனடியார்களுக்கு அளித்து, சிவப் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்.

அவருடைய சிவபக்திக்கும் சிவத்தொண்டுக்கும் இரங்கிய சிவபெருமான், அவரை ஆட்கொண்டு அருளினார். அவர் இந்த ஊரில் வாழ்ந்ததாக ஒரு செவிவழிச் செய்தி உண்டு. இந்துசமய அறநிலையத்துறையின் ஆணையராக இருந்த உத்தண்டராம பிள்ளை என்பவர், அறுபத்துமூன்று நாயன்மார்கள் பிறந்த அல்லது அவர்கள் வாழ்ந்த ஊரில் தனியாக ஆலயம் அமைத்துச் சிறப்பிக்க வேண்டும் என்று நினைத்து, பக்திச் சிரத்தையுடன் நாயன்மார்களின் திருவுருவச் சிலைகளை வடிவமைத்துக் கொடுக்கச் செய்தார். அதன்படி நேசநாயனாரின் திருவுருவச் சிலை எங்கள் முன்னோரிடம் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று நேச நாயனாருக்குச் சிறப்பான முறையில் குருபூஜை செய்து வருகிறோம்’’ என்றார், ராஜு.

இந்தத் தலத்தின் மற்றுமொரு வரலாறு...

தட்சனின் யாகத்தில் கலந்துகொண்டதால், புனுகுப்பூனையாக மாறும்படி சிவனாரால் சபிக்கப்பட்டான் இந்திரன். பின்னர், அவன் தன் தவற்றை உணர்ந்து இறைவனிடம் விமோசனம் வேண்டினான். சிவபெருமான் விமோசனத்துக்கு வழி கூறினார். அதன்படி, இங்கு வந்து பவளமல்லி விருட்சத்தின்கீழ் சுயம்புவாக எழுந்தருளியிருந்த இறைவனை வழிபட்டு அருள்பெற்றதாகவும் ஒரு தலவரலாறு சொல்லப்படுகிறது.

நீங்களும் ஒருமுறை, கூறைநாடு எனப்படும் இவ்வூருக்குச் சென்று புனுகீசரை வழிபட்டு வாருங்கள். அவரருளால் உங்கள் எதிர்காலம் சிறக்கும்; வாழ்க்கை செழிக்கும்.

திருமணம் கைகூடும்!

மேற்கு நோக்கிக் காட்சி தரும் அருள்மிகு புனுகீசரைத் தொடர்ந்து ஒன்பது பிரதோஷங்கள் தரிசித்து வழிபட்டால் வறுமை, கடன், பிணிகள் நீங்கும் என்பது ஐதிகம். பௌர்ணமி தினத்தில் அம்பிகை சாந்தநாயகிக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் கூடி வருவதாகவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

அதேபோல், கோயிலின் திருக்குளத்தில் மாதப்பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி நாள்களிலும், கிரகண காலத்திலும் நீராடி இறைவனை வழிபட்டால் பல்வேறு பிணிகளும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.