Published:Updated:

ஸ்ரீராமகிருஷ்ணர்

ஸ்ரீராமகிருஷ்ணர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீராமகிருஷ்ணர்

சிகாகோ பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் சுவாமி விவேகானந்தர், பரமஹம்சரின் கதையைச் சொல்வதுபோல் நாடகத்தை அமைத்தது நல்ல உத்தி.

முதலில் சமூக நாடகங்களை மட்டுமே எழுதி மேடையேற்றி வந்தார் பாம்பே ஞானம். ஒரு கட்டத்தில், ஆன்மிகப் பாதையைத் தேர்வு செய்து மகான்களிடம் தஞ்சமடைந்தார். தனது மகாலெட்சுமி லேடீஸ் நாடகக் குழுவுக்காக பகவான் நாமபோதேந்திராளின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதி மேடையேற்றினார். அமோக வெற்றி. தொடர்ந்து ஆதிசங்கரர், காஞ்சி மகாபெரியவர், ரமண மகரிஷி, ஷீர்டி சாயிபாபா ஆகியோர் குறித்த நாடகங்கள் மேடையேறின. அனைத்து நாடகங்களுக்கும் பக்தர்கள் திரண்டு வந்தார்கள்.

நாடகத்துக்கான உழைப்பு, ரத்தம் உறிஞ்சியது. களைத்துப்போனார் பாம்பே ஞானம். போதுமென்ற முடிவுக்கு வந்தார். ஒருநாள் செல்போனில் ஒரு வாட்ஸ்அப் தகவல். எடுத்துப் பார்த்தபோது, `ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்' என்ற வரி ரிப்பன் மாதிரி ஓடியது. அனுப்பியது யாரென்று தெரியவில்லை.

ஸ்ரீராமகிருஷ்ணர்

இந்த நிலையில் ஒருநாள், சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று பரமஹம்சர் தொடர்பான புத்தகங்களைத் தேடிக்கொண் டிருந்தபோது, அங்கே சுவாமிஜியிடமிருந்து அழைப்பு வந்தது பாம்பே ஞானத்துக்கு. தலைமீது கைவைத்து ஆசீர்வதித்தார் சுவாமிஜி. ‘பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் கதையை மேடையேற்றுங்கள்’ என்றார். அதையே ஆசியாகக்கொண்டு ஆரம்பக்கட்டப் பணிகளில் இறங்கிவிட்டார் ஞானம்.

சிகாகோ பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் சுவாமி விவேகானந்தர், பரமஹம்சரின் கதையைச் சொல்வதுபோல் நாடகத்தை அமைத்தது நல்ல உத்தி.

கதாதரர் என்று அழைக்கப்பெற்ற ராமகிருஷ்ணர் தமது பதினேழாவது வயதில் சகோதரருடன் கொல்கத்தா வருகிறார். சகோதரர் மறைவுக்குப்பின் தட்சிணேஸ்வர் காளி கோயிலில் பூசாரியாகிறார் கதாதரர்.

சிறு பிராயம் முதல் தன்னிலை மறந்து பித்துப் பிடித்தவனாகி, மயக்கமாகி விழுந்து, ஊராரின் கிண்டல் பேச்சுக்கு கதாதரர் உள்ளாவதையும், காளிகோயிலில் பித்தனாகி ஆடித்திரிந்து, பரவசத்துடன் பாடி காளியின் வாளை எடுத்துத் தன்னை மாய்த்துக்கொள்ள கதாதரர் முனைய, அப்போது காளிதேவி காட்சி அருள்வதையும் அசத்தலாகக் காட்டுகிறார் பாம்பே ஞானம்.

ஸ்ரீராமகிருஷ்ணர்
ஸ்ரீராமகிருஷ்ணர்

ஆரம்பத்தில் கதாதரராகவும் பின்னர் ராமகிருஷ்ணராகவும் நடிக்கும் வர்ஷா, ஞானத்துக்குக் கிடைத்திருக்கும் வரம்! உடம்பு சொன்னபடியெல்லாம் கேட்கிறது வர்ஷாவுக்கு. கண்களில் ஒளி மின்னுகிறது. முக்கியமாக நரேந்திரருடனான காட்சிகளில் உலுக்கி எடுக்கிறார் வர்ஷா.

பரமஹம்சரின் மனைவி சாரதாதேவிக்கு அப்போது பதினெட்டு வயது (திருமணமான போது ஐந்து வயதுக் குழந்தை). கணவர் பைத்தியமாகி அலைவதாக சிலர் சொல்லவும் தட்சிணேஸ்வரம் வருகிறாள்.

“நான் உன்னிடம் என் தாய் காளியைத்தான் பார்க்கிறேன்...” என்று பரமஹம்சர் சொல்கிறார். “உலகத்துக்கே நீ அம்மா...” என்று புரிய வைக்கிறார். இவை, நாடகத்தில் பார்வையாளர் களைச் சிலிர்க்க வைக்கும் இன்னொரு கட்டம்.

‘கடவுளைக் காண வேண்டும்’ என்ற தேடலு டன் திரியும் நரேத்திரன், பரஹம்சருக்குப் பிரதான சீடராகி உயர்ந்தார். நரேனின் கேள்விகளும் வலுமிக்க வாதங்களும் குருவை மிகவும் கவர்ந்தன. ராமகிருஷ்ண பரமஹம்சர் - விவேகானந்தர் தொடர்பான காட்சிகள்... முக்கியமாக முன்னவர் சமாதி நிலைக்குச் சென்றுவிடுவது வரையிலான சம்பவங்கள் விறுவிறு… சுறுசுறு!

அதேநேரம், சில காட்சிகள் பார்வையாளர் களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. குறிப்பாக ஒரு கட்டத்தில், நரேனுடன் கதைசொல்லி விவேகானந்தரும் இணைந்து வசனம் பேசுவதும் உணர்ச்சிப் பொங்குவதுமான காட்சி!

அதேபோல் உச்சக்கட்டக் காட்சியில், இன்னொரு விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றுவதை, ஏற்கெனவே உரைநிகழ்த்தி திரும்பிவிட்ட நிஜமான (நமக்கு) விவேகானந்தர் வேடிக்கை பார்ப்பது எப்படி மேடம்? நாடக மேடையில் இரட்டை வேடத்தைச் சாத்தியப் படுத்துவது சிரமம்தான். இருப்பினும்..!

ராமகிருஷ்ணர் பற்றி பல்வேறு நூல்களில் படித்ததையும், பிறர் சொன்னதையும் மையமாகக் கொண்டு நாடகத்தை எழுதி யிருக்கிறார் பாம்பே ஞானம். அங்கங்கே ‘டிராமா லைசென்ஸைப்’ பயன்படுத்தி சில விஷயங்கள் புகுத்தப்பட்டிருக்கின்றன. நிஜ வரலாற்றுடன் அவை முரண்படுவதாக ஒரு சில முணுமுணுப்புகளையும் கேட்க முடிகிறது!

ஸ்ரீராமகிருஷ்ணர்
ஸ்ரீராமகிருஷ்ணர்

வழக்கம்போல் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வசனங்களை நடிகைகள் பேசி நடிக்கிறார்கள். இந்த முறை இவர்களின் வாயசைப்புகள் கன கச்சிதம். டிரில் வாங்கிய டைரக்டருக்கு ஸ்பெஷல் பாராட்டு!

திவாகரின் இசையும், மோகன்பாபுவின் மூன்று அடுக்கு மேடையமைப்பும், நாடகத்தின் தரத்தை ஒருபடி மேலே உயர்த்துகின்றன.

ஒவ்வொரு முறையும் நாடகத்தை மேடை யேற்ற ஆகும் செலவைப் பட்டியலிடுகிறார் ஞானம். குழுவினர் யாருமே காசு வாங்காமல் நடிப்பதைக் குறிப்பிடுகிறார். ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை என்றும் வருத்தப்படுகிறார்.

இதுபோன்ற நல்ல முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதும் வளர்த்தெடுப் பதும் தனியொருவருக்கு மட்டுமேயான பொறுப்புகளல்ல. இதில் நம் அனைவரது பங்களிப்பும் அவசியம். ஆன்மிக ஆர்வலர் களும் புரவலர்களும் கரம்கோத்து உதவ முன்வரவேண்டும். நாடகங்களின் வடிவில் அறம் செழிக்க நாமும் துணைநிற்போம்.