திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

கதாயுத சனி பகவானுக்கு விசாக வழிபாடு!

சனிபகவான்
பிரீமியம் ஸ்டோரி
News
சனிபகவான்

நினைத்ததை நிறைவேற்றும் சோழவந்தான் படித்துறை சனிபகவான்!

எஸ்.சின்னதுரை

ருவரின் வாழ்வில் மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவபவர், சனிபகவானே என்கின்றன ஜோதிட நூல்கள். சிவாலயங்களில் நவகிரகங்களில் ஒருவராகவும், தனிச் சந்நிதியிலும் சனிபகவான் அருள்வதை தரிசித்திருப்போம். அவரே மூலவராக அருள்பாலிக்கும் தலங்களும் சில உண்டு. அவற்றுள் சனி பகவான் சுயம்புவாய் - பக்தர்களின் சங்கடங்கள் தீர்க்கும் மங்கள சனியாக அருள்பாலிக்கும் ஊர் சோழவந்தான்.

மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் கிராமத்தில் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது, சோழவந்தான் படித்துறை சனீஸ்வரர் ஆலயம்.

கதாயுத சனி பகவானுக்கு விசாக 
வழிபாடு!

முன்னொரு காலத்தில் நந்தவனமாக விளங்கிய இடம். எழில் கொஞ்சும் இந்தப் பிரதேசத்தில் இறைவனுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட முடிவு செய்தனர் இந்த ஊர் மக்கள். இந்த நிலையில் இந்தப் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் சுத்தம் செய்யும் பணி நடந்துகொண்டிருந்தது. அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

மாவிலங்க மரத்தடியில் சுத்தம் செய்துகொண்டிருந்த பாலகன் ஒருவன் அங்கு தடுக்கி விழுந்தான். எது தடுக்கியது என்று அவன் பார்த்தபோது, கல்லால் ஆன ஒரு விக்ரகம் தட்டுப்பட்டது. ஊர் மக்களைக் குரல் கொடுத்து அழைத்தான் சிறுவன். எல்லோரும் ஓடிவந்து அந்த இடத்தைத் தோண்டினர்.

அழகிய விக்கிரகம் என்றதும் அதை முருகப் பெருமான் என்றே நினைத்தார்கள். அப்போது விக்கிரகத்தில் இருந்த பறவையின் இறகுப் பகுதியில் இருந்து நிஜ இறகு ஒன்று உதிர்ந்தது. என்ன அதிசயம்... அது காகத்தின் இறகு. அப்போது சிற்ப சாஸ்திரம் தெரிந்தவர்கள் நன்கு ஆராய்ந்து அது முருகன் இல்லை சனிபகவான் என்பதை எடுத்துச் சொல்லினர்.

சனிபகவானுக்குத் தனி ஆலயம் எடுக்கலாமா என்பது மக்களின் சந்தேகமாக இருந்தது. அப்போது கருணாமூர்த்தியான காஞ்சி மகாபெரியவர், இந்த விக்கிரகம் கிடைத்த செய்தியைக் கேள்விப்பட்டு இத்தலத்துக்கு வந்து பார்த்து, சனிக்கு அங்கு ஒரு தனிக்கோயில் அமைக்க உத்தரவிட்டார். மகாபெரியவரின் சொல் சீக்கிரம் செயலானது. மகாபெரியவா வந்திருந்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் செய்துவைத்தார் என்கிறார்கள்.

பகவான் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது ஒரு விசாக நட்சத்திர நாளில் என்பதால் விசாக நட்சத் திரக்காரர்கள் அந்த ஆலயத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால் தீராத வினைகள் எல்லாம் தீரும். விசாக நட்சத்திர நாளில் இங்கு 11 வகை அபிஷேகங்கள் நடைபெறும். சனிக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

எந்த மாவிலங்க மரத்தின் அடியில் சுவாமி எழுந்தருளினாரோ அந்த மரமே இங்கு தலவிருட்சமாய் உள்ளது. சமீபத்தில் இங்கு ராகு - கேதுவும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளனர்.

கதாயுத சனி பகவானுக்கு விசாக 
வழிபாடு!

இங்கு பகவானை தரிசனம் செய்யப் படியேறி வரவேண்டும் என்பதால் சுவாமிக்குப் ‘படித்துறை சனீஸ்வரன்’ என்ற திருநாமமும் உண்டு. சனிபகவான் இங்கு அனுமன் போல் கையில் கதாயுதம் வைத்திருப்பது விசேஷம். பக்தர்களின் துன்பங்களை கதாயுதம் கொண்டு விரட்டி அடிப்பார் என்பது நம்பிக்கை.

சனிபகவான் அன்னதானப் பிரியர். இங்கு அன்னதானம் செய்யும் பக்தர்களின் வாழ்வில் உள்ள குறைகள் அனைத்தும் நீங்குவதோடு நினைத்த காரியங்களும் கைகூடுகின்றன. குழந்தையின்மை, சொத்துப் பிரச்னை, உறவுச் சிக்கல்கள், வறுமை போன்ற சகல விதமான துன்பங்களும் நீக்கும் அனுக்கிரக மூர்த்தியாக சனிபகவான் இங்கு விளங்குகிறார்.

காரணமின்றி தொடர்ந்து அழும் குழந்தைகளின் படுக்கைக்கு அடியில், தலவிருட்சமான மாவிலங்க மரத்தின் இலையை வைத்தால் தொல்லைகள் நீங்கிக் குழந்தைகள் நிம்மதியாக உறங்குவர் என்கிறார்கள். ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக இல்லாமல் இருக்கும் விசாக நட்சத்திரக்காரர்கள், இங்கு வந்து வேண்டிக்கொண்டால் மன வலிமை அதிகரிப்பதோடு, துணிவும் தன்னம்பிக்கையும் மேம்படும் என்பது நம்பிக்கை.

சங்கடங்கள் தீர்க்கும் சோழவந்தான் சனீஸ்வரன் கோயில் இந்து அறநிலையத்துறையின் ஒருவேளை பூஜை திட்டத்தில் செயல் பட்டுவருகிறது. விளக்கேற்றி வணங்கினாலே அள்ளி வழங்கும் வள்ளலான இந்த சனிபகவானை நீங்களும் தரிசித்து நல்லருள் பெற்று மகிழலாம்!