Published:Updated:

‘சின்னஞ்சிறு பெண்போலே...’

ஸ்ரீவாலாம்பிகை
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீவாலாம்பிகை

அற்புதம் நிகழ்த்தும் மாத்திரைப் பிரசாதம் சித்தர்கள் வழிபட்ட பாலாம்பிகை!

ளுந்தூர்ப்பேட்டை சண்முகம் ஓர் அற்புதக் கவி. ‘சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி...’ எனும் அற்புதமான பாடல் அவர் எழுதியதுதான். அன்னை பராசக்தியைச் சின்னசிறு பெண்ணாக வர்ணித்து, மனதைக் கொள்ளைகொள்ளும் அம்பிகையின் அந்தச் சுந்தர ரூபத்தை வர்ணித்துப் பாடியிருப்பார். அந்தப் பாடலைக் கேட்கும்போது நம் மனக்கண்ணில் எழும் சக்தியின் ரூபமே, ‘வாலாம்பிகை.’

அன்னை பராசக்தியைப் போற்றி வழிபடுவது, சாக்த வழிபாடு. தாயுள்ளம் கொண்ட அன்னை ஆதிசக்தி தீமைகளை அழித்து தம் பிள்ளைகளான மக்களைக் காப்பவள். இதற்குப் புராணங்களில் பல உதாரணங்கள் உண்டு.

தவத்திலிருந்த ஈசன்மீது, உலக நன்மைக்காக தேவர்கள் கேட்டுக்கொண்டதன்படி, மலர் அம்பு தொடுத்தான் மன்மதன். ஆசைகளைக் கடந்த ஆதிசிவன் வெகுண்டார்; தன் நெற்றிக்கண் நெருப்பின் மூலம் சுட்டெரித்தார் காமனை. மன்மதன் சாம்பலானான். ஆசைகளின் ஊற்றான காமனின் சாம்பல்கூட இந்த அகிலத்தை ஆட்டிவிக்கும் வல்லமையுடையது. அந்தச் சாம்பலிலிருந்து ஓர் அசுரன் தோன்றினான். அவன் பெயர் பண்டாசுரன்.

‘சின்னஞ்சிறு பெண்போலே...’

வலிமையில் பெரியோனாய் இருந்தபோதும், மூவுலகையும் ஆள் சில வரங்களும் வேண்டும் என்று எண்ணித் தவம் செய்தான். அதன் பலனாக, ‘பெண் ஒருத்தியால் அன்றி வேறு யாராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது’ என்று வரம் பெற்றான். பெண் என்றால் வலிமை குறைந்தவர்கள் என்பது அவன் எண்ணம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனால், அகிலத்தை ஆட்டுவிக்கும் ஆதிசக்தி ஒரு பெண் என்பதை மறந்தான். தேவர்களையும் முனிவர்களையும் தன் அகந்தையால் வாட்டினான். அவனால் அல்லலுற்றவர்கள், அன்னையின் சந்நிதிக்குச் சென்று சரண் புகுந்தனர். ஆதிசக்தி, லலிதா பரமேஸ்வரியாய் ரூபம் கொண்டு பண்டாசுரனோடு யுத்தம் செய்யச் சென்றாள்.

அவளோடு யுத்தம் செய்ய தன் முப்பது புதல்வர்களையும் அனுப்பினான் பண்டாசுரன். யுத்தத்துக்குப் பிள்ளைகளை அனுப்பிய அசுரன் நாணுமாறு, தன் அம்சத்துடன்கூடிய ஒரு சிறுமியைத் தோற்றுவித்தாள் அன்னை.

செந்நிற ஒளிக்கதிர்களால் சூழப்பட்டு, ஜொலித்தாள் அந்தச் சிறுமி. ஒரு கையால் அபயம் காட்டி, மறு கையில் அக்ஷ மாலையும் புத்தகமும் ஏந்தி, தாமரைப் பூவில் அமர்ந்தவளாகக் காட்சியளித்தாள், அந்த பால அம்பிகை.

அவளைக் கண்டதும் தேவர்களும் முனிவர்களும் பூமாரிப் பொழிந்து போற்றினர். அவளை பாலா என்று புகழ்ந்தனர். ‘ஸதாநவவர்ஷா’ என்று ஸ்தோத்தரித்தனர். ‘ஸதா’ என்றால் `எப்போதும்' என்று பொருள்; ‘நவ வர்ஷா’ என்றால் `ஒன்பது வயதுடையவள்' என்று பொருள். எப்போதும் சின்னஞ்சிறு பெண்ணின் ரூபம்கொண்டு அருள்பவள் அவள் என்பதை உணர்ந்து அவர்கள் அவ்வாறு துதித்தனர். பாலாம்பிகா, பண்டாசுரனின் முப்பது புத்திரர்களையும் யுத்தத்தில் வீழ்த்தினாள். தேவரும் மூவரும் அன்னை லலிதா பரமேஸ்வரியின் பால ரூபமாகக் காட்சிகொடுத்த பாலாம்பிகையைப் போற்றித் துதித்தனர்.

பாலாம்பிகா என்பது வடமொழித் திருநாமம். அதை அழகுத் தமிழில் `வாலாம்பிகை' என்று போற்றுகிறோம். வாலாம்பிகை மனதை வெல்லும் வல்லமை தருபவள், ஞானத்தின் ஊற்று. அவளைச் சரணடைந்தால், மெய்ஞ்ஞானம் ஸித்தியாகும். லலிதாபரமேஸ்வரியை உபாசிப்பது சிரமம் என்றால், அன்னை பாலாவை பற்றிக்கொள்வது மிக எளிது. அதனால்தான் சித்தர்கள் அன்னை வாலாம்பிகையையே தங்களின் தாயாகக் கொண்டு துதிக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘சக்தி சடாதரி வாலைப் பெண்ணாம்

சித்தர்கள் போற்றும் ஸ்ரீவாலைப் பெண்ணாம்

எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண்ணாம்’

- என்று கொங்கணிச் சித்தர் வாலாம்பிகையின் சிறப்பைப் போற்றிப் பாடுகிறார்.

‘சின்னஞ்சிறு பெண்போலே...’

800 ஆண்டுகளுக்கு முன்பு, கயிலைமலையில் தவம் செய்துகொண்டிருந்த குருசாமி சித்தர், பாரத தேசத்தின் புண்ணிய க்ஷேத்திரங்களுக்கெல்லாம் விஜயம் செய்து, பராசக்தி வடிவங்களை தரிசித்து வழிபட்டு வந்தார். நிறைவில் அவர், கொம்மடிக்கோட்டை எனும் ஊரில் வந்து தங்கினார். அங்கு அன்னை வாலாம்பிகையின் அருள் பரிபூரணமாக நிரம்பியிருப்பதை அறிந்து, அங்கேயே ஆசிரமம் அமைத்து அன்னை வாலாம்பிகையை வழிபட்டார். அதன் மூலம் அன்னையின் அருளைப் பெற்ற குருசாமி, தன் பெயரோடு `வாலை' என்கிற அன்னையின் திருநாமமும் சேர்ந்து அழைக்கப்பெறலானார்.

வாலைகுருசாமி சித்தரின் அற்புத ஆற்றலைக் கண்ட காசியானந்தர் என்பவர், சித்தருக்குச் சீடரானார். இருவரும் வாலாம்பிகையை அந்தத் தலத்தில் பூஜிக்க ஒரு சந்நிதியை ஏற்படுத்தி வழிபாடு செய்தனர்.

அதன்பின்னர் அந்தச் சந்நிதியின் சாந்நித்தியத்தை அறிந்து சித்தர்கள் பலரும் அங்கு கூடி வாலாம்பிகையைப் பூசித்து பேறு பெற்றனர். தமிழ்ச் சித்தர் மரபில் நந்தீசர், போகர், கொங்கணர் முதற்கொண்டு பல சித்தர்கள் கொம்மடிக்கோட்டை தலத்துக்கு வந்து, அன்னை வாலாம்பிகையைப் பூசித்து மகிழ்ந்தனர். வாலாம்பிகையின் மூல மந்திரத்தை உச்சாடனம் செய்தே பல்வேறு ஸித்திகளையும் பெற்றனர். மஸ்தான் சாகிபு என்ற அன்பர் , ‘பத்து வயதினை உடைய பாவையன்றோ நீ சித்தர்க்கெல்லாம் தாயாய் செய்தாய் மனோன்மணியே’ என்று போற்றுகிறார்.

‘சின்னஞ்சிறு பெண்போலே...’

தம்மை அன்போடு நோக்குகிறவர்களைத் தானும் அன்போடு நோக்குவர் குழந்தைகள். அப்படியே அன்னை வாலாம்பிகையும், தன்னை அன்போடு அணுகி பக்தி செய்யும் அனைவருக்கும் அருள்பாலிக்கிறாள். அவள் வழிபாட்டில் நவாவரணம், ஸ்ஹஸ்ர நாமம், கட்க மாலா போன்ற பல்வேறு பூஜை முறைகள் உண்டு. இருந்தாலும் அன்போடு சிறு மலரைச் சமர்ப்பித்து வணங்கினாலே, அவள் பேரன்போடு அருள்வாள்.

வாலைகுருசாமி சித்தர் பிரதிஷ்டை செய்த வாலாம்பிகை திருக்கோயில் கொம்மடிக்கோட்டையில் உள்ளது. இந்த ஆலயத்தில் அணிக்கை விநாயகர், ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜர், மாணிக்கவாசகர், ஸ்ரீமனோன்மணி அம்பாள் சமேத ஸ்ரீசந்திரசேகர மூர்த்தி, ஸ்ரீகன்னி விநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீசண்டிகேஸ்வரர், நவகிரக மூர்த்தியர் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. கோயிலின் ஸ்தல விருட்சம் - மஞ்சணத்தி மரம். ஆதிகாலத்தில் இருந்த மஞ்சணத்தி மரம் பட்டுப்போனது. புதிய மரக்கன்றை நட்டு வளர்க்கலாம் என்று ஊர் மக்கள் முடிவெடுத்தபோது, ‘பட்ட மரம் துளிர்க்கும்’ என்று உத்தரவு வந்ததாகவும், அதன்படியே பட்டுப்போன மஞ்சணத்தி மரத்தின் நடுவிலிருந்து ஒரு கன்று முளைத்து வளர்ந்ததாகவும், அந்த மரம்தான் தற்போது தல விருட்சமாக உள்ளது என்றும் ஊர்மக்கள் கூறுகிறார்கள்.

சித்தர் வாலைகுருசாமியின் ஜீவ சமாதியும் அங்கு அமைந்துள்ளது. சித்தர்கள் அனைவரும் குருமுகமாக தீட்சை பெற்றே வாலையை அடைந்தனர். அதேபோல், ஸ்ரீவாலைகுருசாமி, அவரின் சீடர் ஸ்ரீகாசியானந்தர் ஆகிய இருவரையும் முழுமையாக வணங்கியபின்னரே, வாலையை வழிபடவேண்டும். அப்போதுதான் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நாமும் அதேபோல் சித்த புருஷர்கள் இருவரையும் வழிபட்டுவிட்டு, தொடர்ந்து வாலையை வழிபடுவோம்; அவளின் பேரருளால் மகிழ்ச்சியான வாழ்வையும் வளத்தையும் பெறுவோம்.

மாத்திரைப் பிரசாதம்!

‘சின்னஞ்சிறு பெண்போலே...’

குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள், தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் அனைவருக்கும் இந்தக் கோயிலில் வழங்கப்படும் மருந்து ‘திருமாத்திரை’. மஞ்சணத்தி இலை இரண்டு பங்கு, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஆகியவை ஒரு பங்கு என்று எடுத்து, கோயிலில் உள்ள அம்மியில் இட்டு, அத்துடன் எலுமிச்சைச் சாறு, திருநீறு, சிறிது கோயில் மண் சேர்த்து அரைத்துக் கோயில் பூஜையில் வைக்கின்றனர். பிறகு அதை 41 சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்துத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் திருமாத்திரையைத் தொடர்ந்து 41 நாள்கள் சாப்பிட்டு வர, தீராத பிணிகளும் தீரும் என்று பலன் பெற்ற பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

பக்தர்கள் கவனத்துக்கு!

தலத்தின் பெயர்: கொம்மடிக்கோட்டை

அம்பிகை: ஸ்ரீவாலாம்பிகை

சித்தர்கள்: ஸ்ரீவாலைகுருசாமி, ஸ்ரீகாசியானந்த சுவாமி

சிறப்புப் பிரசாதம்: திருமாத்திரை

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 முதல் மதியம் 1 வரை மாலை 5 முதல் 8.30 வரை

எப்படிச்செல்வது..?: திருச்செந்தூரில் இருந்து உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் சாலையில் சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீவாலைகுருசாமி கோயில்.