Published:Updated:

ஆறு மனமே ஆறு!

ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

நம்பிக்கைத் தொடர் தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

தனி மரம் தோப்பாகாது!

தனியொரு மரம் தோப்பாகாது அல்லவா? உன்னிகிருஷ்ணன் மட்டும் போதுமா? அக்கம்பக்கத்து கிராமங்களிலிருந்து அம்மாவின் புகழை அறிந்து, வெவ்வேறு வாழ்க்கை முறை வெவ்வேறு மனநிலை கொண்ட பாலகோபால், வேணுகோபால், ஶ்ரீகுமார், ரமேஷ்ராவ், ராமகிருஷ்ணன் எனும் பக்தர்கள் ஆன்மிகப் பாதையில் இணைந்தனர்.

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

அப்போது எங்களுக்கு இருந்ததோ சிறிய இடம்தான். எங்களில் சிலர், அங்கு தங்குவதற்குப் போதிய இடம் இல்லாமல் வெளியில் படுத்துக்கொண்டு காலம் கழிப்பது சகஜமாயிற்று. அந்தச் சிறிய இடத்தில்தான் அனைவரும் ஜப-தபங்களில் ஈடுபடவேண்டிய நிர்பந்தம். இருப்பினும் என்னுடன் இணைந்த பிரம்மசாரிகளுக்குச் சேவை ஒன்றே பிரதானமாக இருந்தது. ஆகவே இடமோ, மற்ற வசதிகளோ ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை.

அவர்களில் ஒருசிலரைப் பற்றியும் அவர்களின் உழைப்பு, சிரத்தை, அவர்களால் மடம் உருவான விதம், சமஸ்தானத்தின் பிரமாண்ட வளர்ச்சி போன்றவற்றையும் அறிவது அவசியம். அதுமட்டுமா? அம்மாவின் பூரணமான அருளாசியோடு `உலகையே அரவணைப்போம்' என்ற கோஷத்துடன், நலிந்தோருக்கு உதவுவது, உலகளவில் நல்ல திட்டங்களை தொடங்கி, இன்றளவும் அவற்றைச் செயல்படுத்தும் விதம் ஆகியவை குறித்தும் வரும் நாட்களில் தெரிந்து கொள்வோம். முன்னதாக `ஆசிரமம் தேவையா' என்று அம்மாவின் மனதில் எழுந்த கேள்வி குறித்துச் சொல்கிறேன் செல்லங்களே!

அம்மா
அம்மா


ஆசிரமம் தேவையா?

ஆசிரமம் அமைப்பதில் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் முயற்சிகள் மேற்கொண்டிருந் தனர். ஆரம்பத்திலிருந்தே அம்மாவுக்கு ஆசிரமம் என்ற தனிப்பட்ட அமைப்பை உருவாக்க மனம் இல்லை. ஆசிரமம் தேவையா எனும் கேள்வி அம்மாவின் மனதில் இருந்தது.

ஏனென்றால்... பல ஆசிரமங்கள், அவற்றின் செயல்பாடுகள் பற்றியெல்லாம் அம்மா நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு அப்படிப் பட்ட ஓர் ஆசிரமம் தேவையில்லை என்றே தோன்றியது. அது ஒரு நிரந்தர பந்தமாகிவிடுமே என்ற எண்ணம் மனதை உறுத்தியது.

ஒன்றைத் தெரிந்துக்கொள்ளுங்கள்... அத்தகைய வாழ்க்கை, ஒரு கிளியானது ஜோதிடரின் கூண்டில் அடைபட்ட நிலை போன்றதாகிவிடும்! இப்படியான எண்ணமும் பயமும்தான் அம்மாவின் தயக்கத்துக்குக் காரணம். ஜோதிடரின் கூண்டுக்குள் இருக்கும் கிளி தனது சுதந்திரத்தை இழந்துவிடும்.

அதுபோன்ற வாழ்க்கையில் அம்மாவுக்கு விருப்பம் இல்லை. ஶ்ரீகிருஷ்ணன் மற்றும் தேவியின் தியானம், பஜனை, தரிசனம் என்பவை மட்டுமே என் ஆன்மிகப் பாதையின் சங்கல்பமாக இருந்தன. அத்தகைய சுதந்திரத்தை என்றுமே நான் இழக்க விரும்பியதில்லை!

சிக்கல்களும் – மனமாற்றமும்!

ஆனால் பக்தர்களின் எண்ணிக்கையும் பிரம்மசாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித் தன. என்ன செய்வதென்று புரியவில்லை. எல்லோரும் ஆசிரமம் அமைக்கும் பணியை மேற்கொள்ளவேண்டும் என்று வேண்டியும் வலியுறுத்தியும் வந்தனர். அவர்களில் வெளி நாட்டவரும் அடக்கம்.

இதில் இன்னொரு சிக்கலும் இருந்தது. நம் நாட்டில் வெளிநாட்டவர் தங்குவதற்கான சட்டதிட்டங்கள் சற்றுக் கடுமையானவை. அவர்கள் நீண்டகாலம் தனிப்பட்ட நபர்களின் வீட்டிலோ, வேறு எங்குமோ தங்கமுடியாது. அதற்கென விசா போன்ற பல அனுமதிகள் வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அம்மா இவை அனைத்தையும் கருத்தில்கொள்ள வேண்டிய நிலை. ஆகவே என் மனம் மாறியது!

ஓர் ஆசிரமம் அமைக்கவேண்டும் என்றால்... அதனை வீட்டில் உள்ளவர்கள் அமைத்துக் கொடுக்கும் வாய்ப்பில்லை. அவர்களின் வாழ்க்கை முறையே வேறு.

ஆகவே, அவர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்க வேண்டாம், அவர்களிடம் அனுமதி வாங்கவேண்டிய அவசியமும் இல்லை என்று எண்ணினோம். எல்லாமும் தெய்வ அனுக்கிரஹத்தின்படி நடக்கும் என்று பிரம்மசாரிகளுக்கு உணர்த்தினேன்.

1978-ம் ஆண்டில் தொடங்கி படிப்படியாக என்னுடன் இணைந்த பிரம்மசாரிகளைக் கொண்ட, `மாதா அமிர்தானந்தமயி மிஷன் அறக்கட்டளை' 6.5.1981 அன்று கொல்லத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டது. அம்மாவின் ஆன்மிக உபதேசங்கள், லட்சியங்களைப் பாதுகாத்து மக்களிடம் பரப்புவது எனும் இலக்குடன் பணிகள் ஆரம்பித்தன.

ஒருமுறை பிரம்மாசாரிகள் சிலர் என்னிடம், `மேலும் பலர் தங்கவேண்டியிருப்பதால், சுகுணானந்தரிடமிருந்து உத்தரவும் நிலமும் பெறவேண்டும்' என்று வேண்டிக்கொண்டனர். `சந்நியாச தர்மத்தில் வாழும் அம்மா அவரிடம் கேட்க முடியாது' என்று நான் கூறினேன்.

அவர்கள், `எனில், நாங்கள் கேட்கலாமா?' என்று கேட்டனர். `முயற்சி செய்யுங்களேன்' என்றேன் நான். அதன்படி அவர்கள் வளர்ப்புத் தந்தை சுகுணானந்தரிடம் கேட்டபோது, அவர் சிறிய இடம் ஒன்றை எங்களுக்கு அளித்தார்.

அம்மாவின் ஆன்மிக உலகம் இதைவிட பிரமாண்டமாக அமைய வேண்டும் என்பது தெய்வத்தின் கட்டளை என்றே சொல்ல வேண்டும். மேலும் மேலும் மக்களுக்கு நன்மை செய்யும் வாய்ப்பு கிடைத்ததால், இலக்கை நோக்கி தெய்வத்தின் சக்தியானது வழிநடத்திச் சென்றது என்றால் மிகையாகாது செல்லங்களே!

மாதா அமிர்தானந்தமயி ஆசிரமப் பத்திரப்பதிவுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பிக்க உன்னிகிருஷ்ணன் தயாராக இருந்தார். ஆவணங்களில், ஆசிரமத் தலைவரின் பெயர், ஆசிரமத்தின் பெயர் ஆகியவை பிரத்யேகமாக இருக்கவேண்டும். அரசாங்க விதிகளின்படி அரசுப் பதிவேடுகளில் அவை பதிவு செய்யப்படும். அருகிலிருந்தவர்கள் அம்மாவிடம் நினைவூட்டி, நல்ல பெயர் ஒன்றை வாழ்த்தியருள வேண்டினர்.


உலகெங்கும் உள்ள கோடானகோடி பக்தர்கள் `அம்மா... அம்மா...' என்றழைத்தலும், ஆசிரமத் தலைவருக்கு ஆன்மிகப் பட்டப்பெயர் சூட்டப்பட வேண்டுமே.. அதுதானே முறை?

அம்மா உன்னிகிருஷ்ணனிடம் “நீயே ஒரு பெயரைச் சூட்டிவிடேன்” என்றேன். அவர் சிறிதும் தாமதிக்காமல், “மாதா அமிர்தனந்தமயி'' என்றார். ``சரி அதுவே போதும்” என்றேன்.

`எப்படி நடந்தது?' என்று அங்கிருந்த ஒரு சிலர் உன்னி கிருஷ்ணனிடம் கேட்க, அவர் பதில் சொன்னார்: “இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. தனக்குப் பெயர் சூட்ட அம்மா என்னைப் பயன்படுத்திக்கொண்டார். இந்தத் திருப் பெயர் அவரின் இதயத்திலிருந்து தோன்றி என் நாவின் வழியாக வந்ததாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்!”

அவர் இப்படி பதிலளித்தது என் காதுகளில் தெளிவாக விழுந்தது அந்தப் பெயர் காளியின் விருப்பமும்கூட! 21.1.1988 அன்று எல்லோரும் எதிர்பார்த்த, விருப்பப்பட்ட மாதாஅமிர்தானந்தமயி மடம் அதிகாரபூர்வமாக அரசாங்க ஏடுகளில் பதிவு செய்யப்பட்டு உருவானது!

- மலரும்...

அம்மாவின் பயணம்...

ன்னதான் அம்மாவுக்கு எதிராக நடந்திருந்தாலும், சுபகனின் மறைவு சுற்றத்தார் மத்தியில் துக்கத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஒருபுறம் ஆசிரமப் பணிகள் தொடங்கின என்றாலும் மறுபுறம் பல்வேறு சிரமங்களையும் தொல்லைகளையும் அம்மா சந்திப்பதும் தொடர்கதையானது.

அமிர்தானந்தமயி
அமிர்தானந்தமயி

குடும்பம் பலவிதத்தில் பல்வேறு காரணங்களுக்காகக் கஷ்டப்பட்டது. நாத்திகர்களின் தொடர் இம்சைகள், அம்மாவிடம் சொத்தோ பணமோ இல்லை என்பதால் சொந்தங்கள் அவரை எதிர்த்து நின்று அவமதித்தது, சகோதரனின் மறைவு, தமயந்தி அம்மா பக்கவாத நோயினால் அனுபவிக்கும் துன்பங்கள், சகோதரிகளின் திருமணம், திருமணமான சகோதரி நிலையான வாழ்க்கையின்றி பிறந்த வீடு திரும்புதல்... குடும்பப் பந்தங்களால் ஏற்பட்ட இத்தகைய நிகழ்வுகள், ஆன்மிகத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட அம்மாவிடம் எத்தகையை பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

சில தருணங்களில் ஆசாரங்களை மேற்கோள் காட்டி, சுகுணானந்தர் பக்தர்கள் சிலரைச் சங்கடப்படுத்தியதை அம்மா கண்டித்தார். ஆசிரமத்தின் தொடக்கக் காலம் முதல் பல காலம் வரை சுகுணானந்தர் தீவிர நோய்வயப்பட்டு படுத்த படுக்கையானதும் நிகழ்ந்தது. இவை ஒருபுறம் என்றாலும் ஆன்மிகப் பணிகளும் உலகுக்கான சேவையும் தங்குதடையின்றி தொடர்ந்தன!