ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

செவ்வந்தியும் செங்கழுநீர் பூவும்!

சாஸ்தா
பிரீமியம் ஸ்டோரி
News
சாஸ்தா

சாஸ்தாவுக்குப் பிரியமானவை

`எவரொருவர் கடும் விரதமிருந்து செவ்வந்தி மலர்களால் ஐயன் சாஸ்தாவை அர்ச்சித்து வழிபடுகிறார்களோ, அவர்களுக்கு மோட்சம் நிச்சயம்!’ என்பது அகத்திய முனிவரின் திருவாக்கு. செவ்வந்தி மட்டுமல்ல செங்கழுநீர் பூக்களும் சாஸ்தாவுக்கு மிகப் பிரியமானவை ஆகும்! காரணம் என்ன?

சாஸ்தா
சாஸ்தா


ஆதிகாலத்தில் கோசல தேசத்தை நந்தி வர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பீமன் என்றோரு மகன் உண்டு. அதேபோல், சுகுணா, சுந்தராங்கி என இரண்டு மகள்களும் இருந்தனர். ஒருநாள், இளவரசிகள் இருவரும் கானகத்தில் விளையாடச் சென்றார்கள். காட்டில் ஒரு மரத்தின் அடியில் சுவேதபாஜு எனும் முனிவர் தவமிருந்து வந்தார். இவர் மகா சாஸ்தாவின் பக்தர்.

அவரின் தலைக்குமேலாக இருந்த கிளையில் தேன்கூடு ஒன்று இருந்தது. முனிவரின் மகிமையை அறியாத இளவரசிகள், ஆர்வ மிகுதியில் கற்களை எடுத்து வீசி தேன்கூட்டைக் கலைத்து விட்டார்கள். சிதறிப் பறந்த தேனீக்கள் முனிவரின் உடல் முழுவதும் கொட்டித் தீர்த்தன. தவம் கலைந்து எழுந்த முனிவர், வலியால் தவித்தார். தனது தவம் கலைந்ததற்கு காரணம் இளவரசிகளே என்பதை அறிந்து கோபம் கொண்டார். அவர்கள் செடிகளாகக் கடவது என்று சபித்தார்.

அதன்படி, சுகுணா என்பவள் நிலத்தில் வாழும் ஜவ்வந்தித் (செவ்வந்தி) தாவரமாகவும், இளையவள் சுந்தராங்கி நீரில் வாழும் செங்கழுநீர்த் தாவரமாகவும் பிறந்தார்கள். இதை அறிந்த மன்னர், கலங்கினார். மனம் வருந்தி, அவர்களுக்குச் சாப விமோசனம் அளிக்கும்படி முனிவரை வேண்டினார்.

முனிவரும் சற்றே சாந்தம் அடைந்தார். ‘`உன் மகள்களின் சாபம் நீங்கி, நற்கதி கிடைக்க வேண்டும் எனில், மகா சாஸ்தாவை நோக்கித் தவம் செய். நல்லது நடக்கும்’’ என அருளினார். அதன்படியே அந்த மன்னன் தன் மகன் பீமனுக்கு முடிசூட்டிவிட்டு, கானகத்தை அடைந்து, வெறும் காற்றை மட்டுமே உட்கொண்டு, சாஸ்தாவை நோக்கிய தவத்தில் மூழ்கினார்.

அவரது தவத்தில் மகிழ்ந்த சாஸ்தா, யானை மீது அமர்ந்தபடி வந்து, அவனுக்குத் திருக்காட்சி தந்தருளினார். அவரை வணங்கித் தொழுத மன்னன், தன் மகள்களின் சாபம் தீர அருளும்படி வேண்டிக் கொண்டார். புன்னகை புரிந்த சாஸ்தா, ‘`முனிவரின் சாபம் உன் மகள்கள் இரண்டு பேருக்கும் வரமாக அமையட்டும். அதாவது, ஜவ்வந்திப் பூவாகவும் செங்கழுநீர்ப் பூவாகவும் மாறியிருக்கிற உன் மகள்கள், இனி என் பூஜையில் கட்டாயம் இடம்பெறுவார்கள். இந்த மலர்களைக் கொண்டு என்னை அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, யாகங்கள் செய்த பலனையும், ஹோமங்கள் வளர்த்த புண்ணியத்தையும் தந்தருள்வேன்’’ என்றார்.

அன்று முதல், ஐயன் ஐயப்பனின் பூஜைகளில், ஜவ்வந்தியும் செங்கழுநீரும் உகந்த பூக்களாக அலங்கரிக்கத் துவங்கின. நாமும் இந்த விரதக் காலத்தில் ஐயப்பசுவாமிக்கு இந்த மலர்களை அர்ப்பணித்து வழிபடுவோம். அவரின் பேரருளால் நம் வாழ்வும் மணம் பெறும்.

உத்தர நட்சத்திர விரதம்!

சாஸ்தாவின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும் விரதம் இது. உத்திர நட்சத்திர விரதத்தை மேற்கொள்பவர்கள், சித்திரை மாத உத்திர நட்சத்திர நாளில் தொடங்கி, சாஸ்தாவின் ஜன்ம தினமான பங்குனி உத்திரத்தன்று பூர்த்தி செய்வது சிறப்பு. இயலாதவர்கள், பங்குனி உத்திர நாளில் மட்டும் விரதம் மேற்கொள்ளலாம்.

பங்குனி உத்திர விரதம் மேற்கொள்பவர்கள், பங்குனி மாதம் மக நட்சத்திர திருநாளில் விரதத்தைத் துவக்குவது சிறந்தது.

இந்த விரத காலத்தில் தினமும் ஐயப்ப ஸ்வாமியை பூஜித்து வர வேண்டும். பகலில் தூங்காமல் இருப்பது உத்தமம். மேலும், ஆசார நியமத்துடன் தங்கள் இல்லத்திலிருந்து பால்குடம், நெய்குடம், தயிர்க்குடம், இளநீர் ஆகியவற்றை அருகில் உள்ள சாஸ்தாவின் ஆலயத்துக்கு வழிநடையாக எடுத்துச் சென்று அபிஷேகிப்பது விசேஷம். இதனால் வீட்டில் சகல சுபிட்சங்களும் நிறையும்.

விருத்தாசுரனை வெல்ல முடியாமல் தவித்த இந்திரன் சிரத்தையுடன் உத்திர விரதம் இருந்து சாஸ்தாவை வழிபட்டான். அவரருளால் ததீசி முனிவரின் முதுகெலும்பைக் கொண்டு வஜ்ஜிராயுதம் தயார் செய்தான்.

மட்டுமன்றி, சாஸ்தா வழிகாட்டியபடி அகத்தியரின் உதவியையும் நாடினான். அவர், அலைகடல் முழுவதையும், ஓர் உளுந்தின் அளவாக்கி, தன் உள்ளங்கையில் வைத்து, சாஸ்தாவை தியானித்தபடி பருகினார். கடல் நீர் வற்றிப்போனது. உள்ளே இருந்த விருத்தாசுரன் வெளிப்பட்டான். அவன் மீது வஜ்ராயுதத்தை ஏவி அழித்தான் இந்திரன். இவை அனைத்துக்கும் காரணம்... உத்திர நட்சத்திர விரதம்!

தி. நமசிவாயம், சென்னை-44