திருத்தலங்கள்
Published:Updated:

ஸ்ரீகோகுலாஷ்டகம்

ஸ்ரீகோகுலாஷ்டகம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீகோகுலாஷ்டகம்

ஸ்ரீகோகுலாஷ்டகம்

ஸ்ரீகோகுலாஷ்டகம்

‘தூய பெருநீர் யமுனைத் துறைவனை’ என்று கண்ணனோடு யமுனையையும் சேர்த்துப் போற்றுகிறாள் ஆண்டாள். அதர்மங்களை அழித்து புவனம் காக்க வந்த கிருஷ்ணக் கடவுள், அவதாரக் காலத்தில் தன் தோழர்களுடனான விளையாடல்களையும், யதுகுலத்த வருடனான தம்முடைய அருளாடல்களையும் நிகழ்த்தியது, யமுனையின் கரையில் - கோகுலத்தில்தான்.

ஸ்ரீகோகுலாஷ்டகம்
ஸ்ரீகோகுலாஷ்டகம்

அந்தக் கண்ணனை - மாதவனை யமுனை வணங்குகிறாள். `மாலவா! உனது எழிலுருவைப் பாதாதிகேசமாய் தரிசிக்க ஆசை. ஆகவே, உனது பேருருவைச் சுருக்கிக் கொள். ஒரு குழந்தையாய் கொஞ்சி தவழ்ந்து வா. முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும் தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற்போல் திகழும்... உன் பொற்பாதங்களின் விரல்கள் பத்தையும் பற்றி கண்களில் ஒற்றி மகிழும் பெரும் பாக்கியத்தை எனக்குத் தா!’ என்றெல்லாம் பிரார்த்தித்துப் போற்றியதாகச் சொல்கின்றன ஞானநூல்கள்.

அவளின் பிரார்த்தனை மட்டுமா? கோகுல

வாசிகளின் முன்வினைப் புண்ணிய பலன்கள் எல்லாம் ஒன்றிணைந்து, கிருஷ்ணனை கோகுலத்துக்கு அழைத்து வந்தன என்றே சொல்லவேண்டும்.

அற்புதமான அந்த கோகுலத்தின் மாணிக்கமாய், கோகுலவாசிகளின் உயிராய்த் திகழ்ந்த கண்ணனைப் போற்றும் அற்புதமான துதிப்பாடல்களில் ஒன்றுதான் கோகுலாஷ்டகம். மனிதனது சாதாரண அறிவுக்கு எட்ட முடியாதவன் பகவான். அவரை கோபியர் தங்களின் உள்ளங்களால் விரைவில் நெருங்கி விட்டார்கள். அதற்கு அவர்களின் திடமான பக்தி உதவியது என்று சிலாகிக்கிறார்கள் ஆழ்வார் பெருமக்கள்.

நாராயண பட்டத்திரியும் கண்ணனிடம் வேண்டுகிறார்... `தேவகி, தங்களைத் தன் கர்ப்பத்தில் தரித்தாள். நான் தங்களை என் இதயத்திலே தரிக்கவேண்டும். அதற்குத் தேவை அசையாத பக்தி. அதை தாங்கள் எனக்கு அருள வேண்டும்!’ என்று.

இங்ஙனம் கோபியர் பெற்றிருந்த திடமான பக்தியும் நாராயணப் பட்டத்திரி வேண்டிக்

கொண்ட அசையாத பக்தியும் நமக்கும் கைகூட அருள்புரியும் துதி நூல்தான் கோகுலாஷ்டகம்.

ஸ்ரீவிட்டலேச ஆசார்யார் அவர்கள் அருளிய இந்தத் துதியைப் படித்து, வழிபடுவதால் பாலகிருஷ்ணனாக நம் உள்ளத்தில் தோன்றுவான் கண்ணன். அவன் அருளால் எப்போதும் மங்கலங்கள் பொங்கிப் பெருகும்.

ஸ்ரீமத் கோகுல ஸர்வஸ்வம்

ஸ்ரீமத்கோகுல மண்டனம்

ஸ்ரீமத்கோகுல த்ருக்தார:

ஸ்ரீமத்கோகுல ஜீவனம் 1

ஸ்ரீமத்கோகுல மித்ரேச:

ஸ்ரீமத்கோகுல பாலக:

ஸ்ரீமத்கோகுல லீலாப்தி:

ஸ்ரீமத்கோகுல லம்ச்ர்ய: 2

ஸ்ரீமத்கோகுல ஜீவாத்மா

ஸ்ரீமத்கோகுல மானஸ:

ஸ்ரீமத்கோகுல துக்கக்ன:

ஸ்ரீமத்கோகுல வீக்ஷித: 3

ஸ்ரீமத்கோகுல ஸெளந்தர்ய:

ஸ்ரீமத்கோகுல ஸத்பலம்

ஸ்ரீமத்கோகுல கோப்ராண:

ஸ்ரீமத்கோகுல காமத: 4

ஸ்ரீமத்கோகுலராகேச:

ஸ்ரீமத்கோகுல தாரக:

ஸ்ரீமத்கோகுல பத்மாளி:

ஸ்ரீமத்கோகுல ஸம்ஸ்துத: 5

ஸ்ரீமத்கோகுல ஸங்கீத:

ஸ்ரீமத்கோகுல லாஸ்யக்ருது

ஸ்ரீமத்கோகுலபாவாத்மா

ஸ்ரீமத்கோகுலபோஷக: 6

ஸ்ரீமத்கோகுலஹ்ருத்ஸ்தான:

ஸ்ரீமத்கோகுல ஸம்வ்ருத:

ஸ்ரீமத்கோகுலத்ருக்புஷ்ப:

ஸ்ரீமத்கோகுலமோதித: 7

ஸ்ரீமத்கோகுல கோபீச:

ஸ்ரீமத்கோகுலலாலித:

ஸ்ரீமத்கோகுலபோக்ய:

ஸ்ரீமத்கோகுல ஸர்வக்ருத் 8

இமானி கோகுலேசஸ்ய

நாமானி வதனே மம

வஸந்து ஸந்ததம் சைவ

லீலா ச ஹ்ருதயே ஸதா 9

கருத்து:

1. ஸ்ரீகோபாலன் தேவியுடன் இணைந்து நந்தகோகுலத்துக்கு யாதுமாகித் திகழ்பவர். ஸ்ரீயுடன் கூடிய நந்தகோகுலத்துக்கு அலங்காரமாக இருப்பவர். நந்தகோகுலத்து அன்பர்களுக்குக் கருவிழி போன்றவர். ஒளி நிரம்பிய கோகுலத்துக்கு உயிராக இருப்பவர்.

2. ஸ்ரீயுடன் கூடிய நந்தகோகுலத்தில் உள்ள அன்பர்களுக்குத் தலைவன், காக்கும் தெய்வம், அங்கு நிகழ்ந்த லீலைகளுக்கெல்லாம் காரணமானவர், நந்தகோகுலத்துக்கு ஆச்சர்யமாய் திகழ்பவர்.

3. ஸ்ரீகோகுலத்துக்கு உயிரளிக்கும் ஆத்மாவாக இருப்பவர், ஸ்ரீகோகுல வாசிகளின் மனதுக்கு இருப்பிடமானவர், கோகுலத்தின் துக்கத்தைப் போக்குபவர், கோகுலவாசிகளால் அன்புடன் தரிக்கப் பட்டவர்.

4. ஸ்ரீகோகுலத்துக்கு அழகை அளிப்பவர். கோகுலத்தின் புண்ணிய பலனாக இருப்பவர். கோகுலத்தில் உள்ள பசுக்களின் உயிராக இருப்பவர். கோகுலத்துக்கு இஷ்டத்தை அளிப்பவர்.

5. ஸ்ரீகோகுலத்துக்குச் சந்திரன் போன்றவர். கோகுலத்தைத் துக்கத்தில் இருந்து கரையேற்றுபவர். கோகுலமாகிய தாமரையில் வண்டாக இருப்பவர். கோகுலவாசிகளால் துதிக்கப்பட்டவர்.

6. ஸ்ரீகோகுலவாசிகளால் பாடப்பட்டவர். நந்தகோகுலத்தில் நர்த்தனம் செய்தவர். கோகுலவாசிகளின் எண்ணத்துக்கு உயிராக இருப்பவர். கோகுலத்தை வளர்ப்பவர்.

7. ஸ்ரீகோகுலவாசிகளின் உள்ளத்தை இருப்பிடமாகக் கொண்டவர். ஸ்ரீகோகுல வாசிகளால் சூழப்பட்டவர். ஸ்ரீகோகுலவாசிகளின் கண்களாகிய புஷ்பத்தால் அர்ச்சிக்கப்பட்டவர். கோகுலத்தில் உள்ளவர்களால் மகிழ்ச்சி அடைந்தவர்.

8. ஸ்ரீகோகுலத்தில் உள்ள கோபியருக்கு நாயகன். ஸ்ரீகோகுல வாசிகளால் கொண்டாடப்பட்டவர். அவர்கள் மெச்சும் அழகை - ஆனந்தத்தை உடையவர். ஸ்ரீகோகுலத்துக்கு வேண்டிய எல்லா நன்மைகளையும் செய்பவர் ஸ்ரீகோபாலன்.

9. எப்போதும் நம் வாக்கில் கோகுலத்தின் இறைவனான ஸ்ரீகிருஷ்ணனின் நாமங்களும் நம் உள்ளத்தில் அவரின் லீலைகளும் ஒளிர்ந்து திகழட்டும்.