Published:Updated:

அசோகவனம் என்னும் அழகுவனம்

இலங்கைத் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
இலங்கைத் திருவுலா

இலங்கைத் திருவுலா

அசோகவனம் என்னும் அழகுவனம்

இலங்கைத் திருவுலா

Published:Updated:
இலங்கைத் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
இலங்கைத் திருவுலா

இறம்பொடையில் இருந்து 20 நிமிட தொலைவில் உள்ளது நுவரெலியா. இலங்கை மலைகளின் அரசி. பசுமை போர்த்திய மலைகள், மேகங்களைத் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்ட முகடுகள் எனப் பார்ப்பதற்கே பேரழகு.

அசோக வனம்
அசோக வனம்


நுவரெலியாவுக்கு நாம் வந்ததன் நோக்கம் அன்னை சீதை கோயில் கொண்டிருக்கும் அசோக வனத்தை தரிசிப்பதற்குதான். அங்கு இப்போது அன்னை சீதைக்கு அற்புதமான ஆலயம் அமைந்துள்ளது.

ராமாயணத்தின் படி ராமர் வனவாசம் மேற்கொண்டபோது சீதாதேவியும் லட்சுமணப் பெருமாளும் உடன் சென்றனர். ஆரண்யத்தில் பல இடங்களில் தங்கி, முனிவர்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த அசுரர்களை வதம் செய்தார் ராமர். பிறகு அகத்தியரின் வழிகாட்டுதலின் படி பஞ்சவடி என்னும் பகுதியில் குடில் அமைத்துத் தங்கினார். அங்குதான் சூர்ப்பணகையின் தூண்டுதலால் மாரீசன் மாய மானாக வந்து அன்னையின் கண்ணில் படும்படி மேய்ந்துகொண்டிருந்தான். பொன் மானைக் கண்ட அன்னை சீதை, அதைப் பிடித்துத் தருமாறு கேட் ராமச்சந்திர மூர்த்தியும் அதன்பின் சென்றார். ஒருகட்டத்தில் ராமபிரானின் அம்பு பட்டு வீழ்ந்த மாய மானான மாரீசன் தந்திரமாக, `லட்சுமணா' என்று சத்தமிட்டான்.

இதைக்கேட்ட அன்னை சீதை, ராமனின் நிலையை அறிந்து வரும்படி லட்சுமணனை வற்புறுத்தி அனுப்புகிறார். இதற்கிடையில் சந்நியாசி வேடம் அணிந்து வந்த ராவணன், சூழ்ச்சி செய்து அன்னையைப் புஷ்பக விமானத்தில் தன் தேசமான இலங்கைக்குக் கவர்ந்து சென்றான். வழியில் ஜடாயு அவனோடு யுத்தம் செய்ய அவரை வீழ்த்திய பிறகு, பயணத்தைத் தொடர்ந்தான் ராவணன். இலங்கையை அடைந்தவன், அன்னை சீதையை அசோக மரங்கள் சூழ்ந்த வனத்தில் சிறைவைத்தான்.

இலங்கைத் திருவுலா
இலங்கைத் திருவுலா

இலங்கை ராவணனின் தேசம். தன் சகோதரணான குபேரனிடம் இருந்து ராவணன் அந்த தேசத்தைக் கைப்பற்றினான். இலங்கையில் பல இடங்களில் ராவணன் வழிபட்ட சிவாலயங்கள் உள்ளன.

சிகிரியா எனும் இடத்திலுள்ள கோட்டையை `ராவணன் கோட்டை' என்றே சொல்கிறார்கள். சில நூறு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட அங்கிருக் கும் ரகசிய அறையில் ராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தின் பாகங்கள் இருந்தன என்றும், அவற்றைச் சில மேலை நாட்டு ஆய்வாளர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர் என்றும் செவிவழித் தகவல்கள் இங்கே உலாவுகின்றன.

ராம - ராவண யுத்தத்தின் போது ராமர் படை இருந்த இடம் `ராமர் படை' என்று அழைக்கப் பட்டதுபோல எதிர்ப்புறம் உள்ள மலைப்பகுதி `ராவணன் படை' என்று அழைக்கப்படுகிறது. எனவே ராம-ராவண யுத்தம் நடைபெற்றது நுவெரெலியா மலைப்பகுதிகளில்தான் என்று இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.

சீதா எலியா
சீதா எலியா
சீதை அம்மன் கோயில்
சீதை அம்மன் கோயில்
அனுமன் காலடி
அனுமன் காலடி

நுவரெலியாவில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது, `சீதா எலியா' என்னும் சீதை அம்மன் கோயில். மலைப் பாதையிலேயே ஆலயம் அமைந் திருக்கிறது. புறப்படும்போது இருந்த சாரல் மழை அங்கு சேர்கையில் இல்லை. பொன்னிறமான கோபுரத்தின் மீதும் `ராமஜயம்' என்று ஆங்கிலத் தில் எழுதப்பட்ட வரவேற்பு வளையத்தின் மீதும் சூரிய ஒளி பட்டு ஜொலித்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

ஆலயத்தின் வாயிலில் தங்க நிறத்தில் ராமர், சீதா, லட்சுமணன், அனுமன் ஆகியோரின் ஆளுயர சிற்பங்கள் உள்ளன. தனியாகவும் ஒரு பெரிய அனுமன் சிலை உள்ளது. ஆலயத்துக்குள் சென்று வழிபட நேரமில்லாத உள்ளூர் மக்கள், செல்லும் வழியில் ஒரு கணம் நின்று அங்கு இருக்கும் ஆஞ்ச நேயரை வழிபட்டுச் செல்கிறார்கள்.

சாலையில் இருந்து கீழ்நோக்கி இறங்கிச் செல்வது போல் அமைந்துள்ளது கோயிலின் அமைப்பு. சுமார் 20 படிகள் இறங்கிச் சென்றால் கோயில்.மிகச் சிறிய அந்தக் கோயிலில் நுழைந்ததும் நேர் எதிரில் ராமரின் சந்நிதி அமைந்துள்ளது. முன் மண்டபத்தில் இடதுபக்கத் தூணில் பத்து தலை ராவணனின் சிற்பம். ஆலயத்தின் மேற்கூரையில் ராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப் பட்டுள்ளன. இதில் சீதாதேவி, இளைய பெருமாள் சகிதராகக் காட்சி கொடுக்கிறார் ராமபிரான். இந்தச் சந்நிதி சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டதாம்.

அதற்கு அருகிலேயே மிகப் பழைமை வாய்ந்த மற்றொரு ராமர் சீதா சந்நிதி உள்ளது. இதில் காணப்படும் விக்கிரகங்கள் மிகவும் பழைமையான பாணியில் அமைந்துள்ளன. இடதுபுறம் விநாயகப் பெருமானின் சந்நிதி அமைந்துள்ளது. அதற்கு அருகிலேயே நாகர் சந்நிதி ஒன்றும் உள்ளது.

நாகர் சந்நிதிக்கு அருகில் ஸ்தல விருட்சம் ஒன்று உள்ளது. பலரும் சிறு துணியை நாணயம் வைத்து முடிச்சிட்டு அந்த மரத்தில் கட்டிவைக்கிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் தங்களின் வேண்டுதல் நிறைவேறும் என்று நம்புகிறார்கள் பக்தர்கள்.

ஆலயத்தில் நுழைந்த உடனேயே ஓங்காரம் ஒலிப்பதைப் போன்ற ஒரு பேரோலியைக் கேட்கமுடியும். அது கோயிலுக்குப் பின் பாயும் அருவியின் ஓசை. அன்னை சீதா இங்கே இருந்த காலத்தில் இந்த அருவியில்தான் நீராடினார் என்கிறார்கள்.

ராமாயணத்தின் அழகு சுந்தரகாண்டம். அதில் முக்கியமான நிகழ்வு, அனுமன் அன்னை சீதையைச் சந்தித்து கணையாழியைக் காட்டி அன்னைக்கு நம்பிக்கை கொடுப்பது. இது நிகழ்ந்தது இந்த இடத்தில்தான் என்கிறார் கள். அனுமன் அன்னையிடம் கணையாழி யைக் கொடுத்துப் பணிந்து நிற்கும் இதிகாசச் சிறப்பு மிக்க காட்சி, கோயிலில் ஒரு சிறு மண்டபத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

அனுமன் இங்கு வந்து சென்றதன் அடையாளமாகத் தன் காலடியை இங்குள்ள பாறையில் பதித்தார் என்கிறார்கள். ஓடைக்கு அருகில் மிக பிரமாண்டமான பாதம் போன்ற தடம் ஒன்று உள்ளது. அந்தக் காலடித்தடம் அனுமனின் திருவடியே என்றும்... அதற்கு அருகில் சில குழிகள் உள்ளன. அவை ராவணன் ஏறிவந்த யானைகள் ஏற்படுத்திய தடங்கள் என்றும் சொல்கிறார்கள். வெள்ளப்பெருக்கு இல்லாத நேரங்களில் அந்தப் பாறைக்குச் சென்று அனுமனின் காலடியை பக்தர்கள் தொட்டு வணங்கு கிறார்கள்.

இங்கு ஆஞ்சநேயருக்குத் தனிச் சந்நிதி ஒன்று உள்ளது. அந்த ஆஞ்சநேயரின் சந்நிதியில் வந்து வேண்டிக்கொண்டால் சகல துன்பங்களும் விலகும் என்கிறார்கள். குறிப்பாகத் திருமண வரம் வேண்டிவருபவர்கள் இந்த அனுமனை வழிபட்டால், விரைவிலேயே முகூர்த்தம் கூடிவருமாம்! கருத்து வேற்றுமையால் பிரிந்திருக்கும் தம்பதிகள் இந்த அனுமனை வணங்கி வழிபட்டால் விரை வில் ஒன்றுபடுவார்கள் என்பதும் பக்தர் களின் நம்பிக்கை.

உள்ளூர் பக்தர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து அன்னை சீதையை வழிபட்ட பிறகே, தங்கள் இல்லத்தில் அனைத்துவிதமான நல்ல காரியங்களையும் தொடங்குகிறார்கள். வட இந்தியாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இலங்கை சுற்றுலாத் துறையினர் ராமாயணம் தொடர்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலாவையும் ஏற்பாடு செய்கிறார்கள். அயோத்தியில் தற்போது கட்டப்படும் ராமர்கோயிலுக்குக் கடந்த ஆண்டு இந்தப் புனித பூமியில் இருந்து கல் ஒன்று பூஜை செய்து அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த அற்புதமான தலத்திலிருந்து சில நிமிடப் பயணங்களில் ஓர் அருவியை அடையலாம். அதற்கு `ராவணன் அருவி' என்றே பெயர். ஆண்டு முழுவதும் அந்த அருவியில் நீர் வற்றுவதே இல்லை என்கிறார்கள்.

நாமும் அந்த அருவியை தரிசித்துவிட்டு அன்னை சீதை வாழ்ந்த புண்ணிய பூமி யில் இருந்து விடைபெற்றோம். அப்போது மேகம் சூழ்ந்து மழை தூறத்தொடங்கியது. அது அன்னை சீதையின் ஆசிபோல் குளுமையாக இருந்தது.

- உலா தொடரும்...

`படகு சவாரி!'

நுவரெலியாவில், இந்தியப் பணத்துக்கு 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை சொகுசான தங்கும் விடுதிகள் கிடைக்கின்றன. நுவரெலியாவின் சந்தை மிகவும் கவர்ச்சிகரமானது. இலங்கையின் அனைத்து இடங்களிலும் தயாராகும் பொருள்களும் இங்கு கிடைக்கும். பேரம் பேசி வாங்கத் தெரிந்தவர்கள் மலிவான விலைக்குப் பொருள் களை வாங்கிக் கொள்ளலாம். இங்கு உள்ள ஏரியில் படகு சவாரி செய்வது மிகவும் தனித்துவமான அனுபவம்.

மதுரை காமாட்சிக்கு ஆறு வார வழிபாடு!

காமாட்சி அம்மன் என்றதுமே காஞ்சிபுரம்தான் நம் நினைவுக்கு வரும். மீனாட்சி அரசாளும் மதுரையிலும் ஒரு காமாட்சி கோயில் கொண்டிருக்கிறாள்.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில், தெற்கு மாசி வீதியில் அமைந்திருக்கிறது காமாட்சியம்மன் ஆலயம். சிவ சாபத்தால் பிரம்மதேவனுக்கு ஏற்பட்ட தரித்திர நிலை நீங்கிட அருள்பாலித்தவளாம் இந்த அம்பிகை. ஸ்வாமியின் திருநாமம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர்.

இந்தக் கோயிலில் ஆறு வார வழிபாடு என்பது சிறப்பு. அதாவது, தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகள், செவ்வரளிப்பூ, தேங்காய், பழம், வெற்றிலை- பாக்கு வைத்து அர்ச்சித்து வழிபட்டால், திருமண தோஷம் விலகும்; சந்தான பாக்கியம் கிடைக்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதிகம்!

- வி.ஆனந்தி, சென்னை-4

`அகழியும் பொய்கையும்!'

கல்விக்கு அதிபதி சரஸ்வதி. சரஸ் என்றால் `பொய்கை’ என்றும், வதி என்றால் `வாழ்பவள்’ என்றும் பொருள். எனவே, சரஸ்வதி என்றால் மனம் எனும் பொய்கையில் வாழ்பவள் என்று பொருள் கொள்ளலாம் என்று சிறப்பாக வர்ணிப்பார்கள் ஆன்மிக ஆன்றோர்கள்.

துர்கையைத் தமிழில் `கொற்றவை’ என்பர். துர்கை என்றால் `அகழி’ என்றும் பொருள். அதாவது, அடியார்களுக்கு அகழி போல் அரணாக இருந்து அவர்களைப் பாதுகாப்பவள். துர்க்கமன் என்ற அரக்கனைக் கொன்று அடியார்களைக் காத்ததால், நாம் அவளை துர்கை என்று அழைக்கிறோம். மூன்று சக்திகளின் ஒன்றிய வடிவமாகத் தோன்றியவள் துர்கை.

நவராத்திரி விழாவை அலங்கரிக்கும் கொலு, 9 படிகளைக் கொண்டதாக இருக்கும். கீழேயுள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை தாமச குணத்தைக் குறிக்கும்; அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், அரசி, மந்திரி, வேலையாட்கள் போன்ற உருவங்கள் ரஜோ குணத்தைக் குறிக்கும்; மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்வ குணத்தை அடையும் வழியை நமக்கு உணர்த்தும் என்பார்கள் பெரியோர்கள்.

- எஸ்.ராதா, திருநெல்வேலி