Published:Updated:

அனுமன் பாதம் பதித்த இறம்பொடை!

இலங்கைத் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
இலங்கைத் திருவுலா

இலங்கைத் திருவுலா! ஈழ மண்ணில் சோழர் வழித் தடத்தில்..

அனுமன் பாதம் பதித்த இறம்பொடை!

இலங்கைத் திருவுலா! ஈழ மண்ணில் சோழர் வழித் தடத்தில்..

Published:Updated:
இலங்கைத் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
இலங்கைத் திருவுலா

இலங்கை... நம் தொப்புள்கொடி தேசம். பல்லாயிரம் ஆண்டு காலம் தொடர்பினை உடைய நிலம். வரலாற்றில் தமிழர்களின் புகழ் பரவியிருந்த நிலப்பரப்புகளில் முதன்மையானது. சேர தேசத்தின் எழிலும், சோழ தேசத்தின் வளமையும், பாண்டிய தேசத்தின் பண்பும் நிறைந்ததுதான் இலங்கை.

அனுமன் பாதம் பதித்த இறம்பொடை
அனுமன் பாதம் பதித்த இறம்பொடை

கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அதன் காரணமாக அரசியலில் மாபெரும் மாற்றங்கள், மக்கள் புரட்சி என்று கொஞ்சம் பதற்றமான சூழல் நிலைகொண்டிருந்தது. தற்போது, அந்தச் சூழல் கொஞ்சம் தணிந்துள்ளது. புதிய அரசு பதவியேற்றுள்ளது.

இலங்கையில் பொருளாதாரம், பெரும்பாலும் சுற்றுலாவையே சார்ந்துள்ளது. ஆனால் இந்தப் பிரச்னைகளால் சுற்றுலாப் பயணிகள் வரத் தயங்குகின்றனர். நிலைமை சுமுகமாகிவிட்டது, இலங்கை பயணம் செய்ய பாதுகாப்பான நாடு என்பதை, அங்கு சென்று பயணம் செய்து சில நாள்கள் தங்கியிருந்து வந்தவர்கள் சொன்னால் மட்டுமே நம்பிக்கை வரும்.

அதற்காக இலங்கை சுற்றுலாத் துறை ஒரு ஏற்பாடு செய்தது. அதிலும் குறிப்பாக இலங்கையின் ஆன்மிகத் தலங்கள் குறித்த அற்புதமான பயணத்திட்டம் ஒன்றையும் பரிந்துரை செய்தது. அதில் கலந்துகொண்டு, அந்தப் பயணம் நிறைவுற்றபோது நாம் உணர்ந்தது ஒன்றுதான். இலங்கை, நம் ஊர்தான்!

அங்கு இருக்கும் பஞ்ச ஈஸ்வரத் தலங்களும் முருகன் ஆலயங்களும் தமிழக மன்னர்கள் எழுப்பியவை. செல்வச் செழிப்போடு திகழ்ந்த அந்தத் தலங்களின் இன்றைய நிலை என்ன என்பதை அறிவதே நம் சுற்றுலாவின் நோக்கம். அது பூரணமாய் நிறைவேறியது என்பதில் ஐயமில்லை.

ராம்பொடை ஆலயம்
ராம்பொடை ஆலயம்

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழைமை யான முன்னீஸ்வரம், கேத்தீஸ்வரம், நகுலேஸ் வரம், கோணேஸ்வரம், தொண்டீஸ்வரம் என்னும் சிவாலயங்களையும், கதிர்காமம், நல்லூர் ஆகிய முருகன் தலங்களையும் நூற்றாண்டுப் பழைமை வாய்ந்த கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் திருக் கோயிலையும் தரிசித்தோம். ஒவ்வோர் ஆலயமும் மாபெரும் வரலாற்றைத் தன்னுள்ளே வைத்திருந்தது. இவற்றில் தமிழ், தமிழர் வரலாறு பிணைந்து கிடக்கின்றன. இந்தத் தலங்களை எல்லாம் நாம் தரிசனம் செய்த வரிசையின்படியே உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

இலங்கை என்றதுமே நம் நினைவில் தோன்றுவது ராமாயண காவியம். ராவணன் சீதாதேவியை சிறையெடுத்து இலங்கையில் உள்ள அசோகவனத்தில் காவல் வைத்தான். அந்த இடத்தில் அன்னை சீதாவுக்கு ஒரு கோயில் உள்ளது. இன்றைக்கும் வட இந்தியாவில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் ஆண்டு முழுவதும் இந்த இடத்துக்கு வந்து அன்னை சீதையையும் ராமச்சந்திரப்பிரபுவையும் வழிபட்டுச் செல்கிறார்கள். நாமும் அந்த அற்புதமான தலத்தையே முதலில் தரிசிப்போம்; இலங்கையின் எழிலில் கொஞ்சம் திளைப்போம்!

நுவரெலியா... இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி. தமிழகத்தின் நீலகிரி போன்றதொரு அழகும் இயற்கைச் சூழலும் நிலவும் பிரதேசம். இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மலைப்பகுதி. `நுவர எலியா' என்றால் ஒளி பொருந்திய நகரம் என்று பொருள். அதிகாலையில் நுவரெலியாவைத் தொலைவில் இருந்து பார்ப்பவர்கள் அதை அப்படியே ஒப்புக் கொள்வார்கள்.

மலை ஏறத் தொடங்கியதுமே சில்லென்ற காற்று மேனியை வருடத் தொடங்கியது. மேகக் கூட்டங்கள் மலை முகட்டில் உரசியபடியே செல்லும் அழகு நெஞ்சைக் கொள்ளை கொண்டது. எவ்வளவு அழகு என்று எண்ணும்போதே இது சிவபக்தன் ராவணனின் பூமி எனும் நினைவும் மேலோங்குகிறது.

அனுமன் ஆலயம்
அனுமன் ஆலயம்

ஆம், ராவணன் இந்தப் பகுதியில்தான் சீதையைக் கொண்டுவந்து சிறைவைத்தான் என்கிறது உள்ளூர் வரலாறு. நுவரெலியாவின் ஒரு பகுதியான அந்த இடத்துக்கு `சீதா எலியா' என்று பெயர். அசோக மரங்கள் நிறைந்த அந்த இடத்தை நோக்கித்தான் நம் பயணம் தொடங்கியிருக்கிறது.

வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை பசுமையானது. அந்த மலைக்குச் செல்லும் வழியில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. அப்படி ஒரு கிராமம்தான் இறம்போடை. இந்த ஊரின் உண்மை யான பெயர் `ராமர் படை' என்கிறார்கள். சீதாதேவி யைத் தேடி வந்த அனுமன், இந்த இடத்தில்தான் முதலில் வந்து இறங்கினார் என்றும் பிறகு சேனையோடு ராமன் வந்தபோது இங்குதான் வானர சேனைகள் தங்கியிருந்தன என்பதாலும் இந்த இடத்துக்கு ராமர் படை என்றே பெயர் ஆயிற்று. அதன்பின் சிங்களத்தில் மருவி ராம்பொடை என்று ஆனது என்கிறார்கள் ஊர்மக்கள்.

1981-ம் ஆண்டு சுவாமி சின்மயானந்தர் இலங்கைக்கு வந்தபோது இந்த இடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு வந்து பார்த்தார். அப்போது அந்த இடத்தின் அமைதியும், அழகும், உள்ளூர உண்டான அதிர்வும் அவரைச் சிலிர்க்கவைத்தன. அனுமன் முதலில் கால் பதித்த இடத்தில் அனுமனுக்கு ஓர் ஆலயம் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தன் விருப்பத்தை வெளியிட்டார். அவரின் ஆசை 1996-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. சுவாமி தேஜோமயானந்தர் அந்த இடத்தில் கொஞ்ச நிலப்பகுதியை விலைக்கு வாங்கி அங்கே பூமி பூஜை மேற்கொண்டார். மகாபலிபுரத்திலிருந்து சிற்பிகள் வந்து இந்த ஆலயத்தை உருவாக்கினர்.

இயற்கை எழில் கொஞ்சம் மலை முகட்டில் அனுமன் கோயில் அமைந்துள்ளது. அதில் நடந்து செல்வதே மிகவும் அற்புதமான அனுபவம். கோயில் வாசல்வரை செல்லும் தார்ச்சாலையும் உள்ளது. கோயில் வளாகத்திலிருந்து பார்த்தால், எதிரே மகாவலி நதியும் அனுமன் படுத்து இருப்பது போன்ற மாபெரும் மலையும் காட்சிகொடுக்கும்.

ராமர், சீதா, லட்சுமணர்
ராமர், சீதா, லட்சுமணர்

கோயில் இருக்கும் இடத்துக்கு வந்ததும் குளிர்ந்த காற்று நம் மேனியைத் தழுவியது. சில படிகள் ஏறி ஆலயத்துக்குள் பிரவேசித்தோம். உள் நுழையும்போதே அனுமனின் பிரமாண்டத் திருமேனியை தரிசிக்க முடி கிறது. உண்மையிலேயே அன்னை சீதையைத் தேடிக்கொண்டு வந்து நின்ற அனுமனின் திருக்கோலம் இப்படித்தான் இருந்திருக்கும் என்பதை நம்மால் உணர முடிந்தது.

இந்த அனுமனுக்கு, `பக்த ஹனுமான்' என்பது திருநாமம். ஒரே கல்லில் செதுக்கப் பட்ட 16 அடி உயரத் திருமேனியராக கூப்பிய கரங்களோடு காட்சிகொடுக்கிறார் அனுமன். சீதா தேவியின் துயர் தீர்த்த அனுமன் இவர் என்பதால், இவரை வழிபட்டால் நம் மனக் குறைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

துயர் தீர்த்த அனுமன்
துயர் தீர்த்த அனுமன்


பௌர்ணமிதோறும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சுற்றியிருக் கும் கிராமங்களில் இருந்து சுமார் மூவாயிரம் பக்தர்கள் அந்த நாளில் இங்கு திரள்கிறார்கள். அன்று அன்னதானம் வழங்கப்படுகிறது.

பிராகாரத்தில் விநாயகர், சிவலிங்கம், ராமர், சீதா, லட்சுமணர் ஆகியோரின் சந்நிதியும் உள்ளன. ராமபிரானுடன் அன்னை சீதாதேவி எழுந்தருளியிருக்கும் கோலம் மனதைக் கொள்ளை கொள்கிறது.

சிவலிங்கம்
சிவலிங்கம்


பிராகார வலம் வந்து அனுமனை மீண்டும் வழிபட்டோம். பிறகு சிறிது நேரம் அமர்ந்திருந்து ராமநாமம் சொல்லிவிட்டுப் பின் அனுமனின் ஆசியோடு சீதா எலியா என்னும் அசோகவனம் கோயில் நோக்கிப் புறப்பட்டோம். மலைமுகடுகளை மறைந் திருந்த மேகங்கள் விலகி அழகிய தரிசனம் கிடைத்தது. மனதிலும் பாரங்கள் நீங்கி உற்சாகம் பிறந்திருந்தது. புத்துணர்ச்சியோடு நம் பயணத்தைத் தொடர்ந்தோம்.

(ஆலயத் தொடர்புக்கு : 0094 713485229)

- உலா தொடரும்...

`தங்க இடம் உண்டு சுவைமிகு உணவும் உண்டு'

பக்த அனுமன் ஆலயத்திற்கு வரும் வட இந்திய பக்தர்கள் பலரும் சில நாள்கள் தங்கி இருந்து வழிபடுகிறார்கள். பக்தர்கள் தங்குவதற்காக இங்கே சின்மயா நிவாஸ் என்ற பெயரில் விடுதி உள்ளது. நான்கு பேர் தங்கும் வசதிகொண்ட அறைக்கு இலங்கைப் பணத்தில் 8500 ரூபாய் கட்டணம்.

அங்கே அன்னபூரணி என்னும் அற்புதமான சைவ உணவு விடுதியும் உள்ளது. இலங்கையில் நல்ல சைவ உணவு வேண்டும் என்று ஏங்குபவர்களுக்கானது இங்குள்ள அன்னபூரணி உணவகம்.

விசேஷ நாள்களில் இங்கு இலவசமாக அன்னதானமும் நடக்கின்றது. அதேபோல், இங்கு ஒரு ஆடிட்டோரியமும் அமைந்துள்ளது. அங்கே தங்கியிருந்து சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருமணம், பிறந்த நாள், ஆயுஸ்ஹோமம் முதலியனவற்றையும் செய்து மகிழலாம். அனைத்து சேவைகளுக்கும் முன்பதிவு அவசியம்.

கடவுளை வணங்கலாம்
கடவுளை வணங்கலாம்

கோயில் மூடியிருக்கும்போது வணங்கலாமா?

வேதம் பயிலும் மாணவர்கள், ஆசிரியரின் இருக்கையைக் கண்டு வணங்குவர். `இரவு தூங்குவதற்கு முன்பு, உலகநாதனை வணங்கு' என்கிறது சாஸ்திரம். பல மைல் தூரத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை மனதில் நினைத்து வணங்குவது உண்டு.

கோபுரத்தைக் கண்டதும், மனமானது இறைவனை நினைக்கும். எங்கும் நிறைந்தவனுக்கு இருப்பிடத்தை ஏற்படுத்தியது நாம்தான்! இரவில் கோயில் கதவைச் சாத்துவது, அவரது பாதுகாப்புக்காக அல்ல; அடுத்தவரது இடையூறு, நித்தியப்படி பூஜையை அலைக்கழிக்காமல் இருப்பதற்காக!

இறைவனைக் கோயிலுக்குச் சென்று, நேரில் தரிசித்து வணங்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை; மனதில் நினைத்தும் வணங்கலாம். அப்படியே கோயிலுக்குச் சென்று... அங்கே திருக்கதவுகள் சாத்தப்பட்டிருந்தாலும், மனமுருகி அவனை நினைத்து வழிபடும்போது, கருவறைக்குள்ளே உறைந்திருக்கும் அந்த இறையுருவம், வணங்குவதற்குத் தோதாக மனதுள் வந்துவிடும். ஆகவே, கதவு சாத்தியிருந்தாலும் கடவுளை வணங்கலாம்!

- சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்