திருக்கதைகள்
Published:Updated:

காட்டுப் பாதையில் கந்தன் யாத்திரை!

இலங்கைத் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
News
இலங்கைத் திருவுலா

இலங்கைத் திருவுலா-5

கதிர்காமத்தின் சிறப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கதிரைமலையை ஒட்டி இருக்கும் அழகிய கிராமமே கதிர்காமம். கதிரைமலையின் சிறப்புகளை இலக்கியங்களும் வரலாற்றுக் குறிப்பு களும் தெரிவிக்கின்றன. ஆனால் இதன் தொன்மை, புராண காலம்வரை நீள்கிறது.

கதிர்காமம்
கதிர்காமம்

கதிரைமலையில் சிவபெருமான் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் அவரை தரிசனம் செய்ய முருகப்பெருமான் வீரபாகுத் தேவரோடு தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் தங்கத் தோணியில் வந்து, உகந்தை என்னும் கிழக்குக் கடற்கரையில் இறங்கிக் கதிரைமலைக்கு நடந்தே வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்தக் கதிரைமலைக்கு எதிரே இருக்கும் இடம் சூரன்கோட்டை. அங்குதான் சூரபத்மன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. முருகப் பெருமானின் அவதார நோக்கமே சூரனை சம்ஹாரம் செய்வதுதான். அதற்காகவே இலங்கை வந்த முருகப்பெருமான் கதிரை மலையில் இருந்த சிவபெருமானை வணங்கி அன்னை பார்வதியிடம் வேல் வாங்கி சூரசம்ஹாரம் செய்ததாகத் தலபுராணம் சொல்கிறது.

‘தட்சிண கயிலாய மகான்மியம்’ என்னும் நூல் கதிரைமலையில் முருகப்பெருமான் அருவ நிலையில் எழுந்தருளியிருப்பதாகவும் எனவே இதற்கு ‘ஜோதிஷ் காமகிரி’ என்று திருநாமம் உண்டு என்றும் சொல்கிறது. இப்படிப் பல சிறப்புகளை உடைய கதிர்காமத்தில் நிகழும் சிறப்புகளில் ஒன்று ஆடி மாதப் பௌர்ணமித் திருவிழா. இந்தத் திருவிழாவையொட்டி இலங்கையின் பல பகுதிகளிலிருந்து மக்கள் பாதயாத்திரையாகக் கதிர்காமம் வருவார்கள்.

திருச்செல்வம், இலங்கையில் வாழும் ஓர் ஆய்வாளர். இலங்கைக் கோயில்கள் குறித்து ஆய்வு செய்து பல்வேறு நூல்களை எழுதியவர். குறிப்பாகக் கதிர்காம யாத்திரையில் ஆண்டுதோறும் கலந்துகொள்பவர். மற்ற பாத யாத்திரைகளிலிருந்து கதிர்காம யாத்திரை எப்படி வேறுபடுகிறது... இதன் சிறப்புகள் என்னென்ன என்று அவரிடம் கேட்டோம்.

“முருகப்பெருமான் சூரனை வதம் செய்ய இலங்கைக்கு வந்தபோது உகந்தை என்னும் துறைமுகத்தில் இறங்கிக் கதிரைமலை வந்தார் என்கிறது புராணம். அதன்பின் வள்ளியைத் திருமணம் செய்துகொண்டு முருகப்பெருமான் இங்கிருக்கும் கதிர்காமத்திலேயே கோயில் கொண்டார் என்பது தலபுராணம்.

அவ்வாறு கோயில்கொண்ட முருகப் பெருமானை தரிசனம் செய்ய அகத்திய மாமுனிவர் இலங்கை வருகிறார். முருகப் பெருமான் வந்திறங்கிய அதே துறைமுகம் வழியாக வந்து முருகப்பெருமான் சென்ற பாதையிலேயே நடந்து கதிரைமலையை அடைந்தார்.

முதன்முதலில் கதிர்காம முருகப்பெருமானை தரிசிக்கப் பாதயாத்திரை சென்றவர் என்றால் அது அகத்தியர்தான். அவர் சென்ற வழியில் தான் தற்போதும் பாதயாத்திரை நடை பெறுகிறது. சுமார் 2,400 ஆண்டுகளுக்கு முன்பாக கதிர்காமத்தைத் தலைநகராகக் கொண்டு இந்தப் பகுதியைப் பாண்டிய மன்னர்கள் ஆண்டார்கள். அவர்களை, ‘கச்சிர காமப் பிரபுக்கள்’ என்கிறது மகாவம்சம் நூல்.

இந்தப் பிரபுக்கள் கதிர்காமத்தைச் சுற்றிய பகுதிகளில் வசித்தபோது இங்குள்ள குகைகளில் தங்கியிருந்தனர். இந்தக் குகைகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில் சுவஸ்திக் சின்னமும் மீன் சின்னமும் பொறிக்கப் பட்டுள்ளன. இதுவே இவர்கள் பாண்டிய வம்சத்தினர் என்பதற்கான முக்கியமான ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது. அப்படி வாழ்ந்த பாண்டியர்கள் வழிபட்ட தெய்வமாகக் கதிர்காம முருகன் திகழ்ந்தார்.

கதிர்காமம்
கதிர்காமம்
கதிர்காம யாத்திரை
கதிர்காம யாத்திரை

புத்தபகவான் இலங்கைக்கு விஜயம் செய்த போது 16 இடங்களுக்குச் சென்று தம் கொள்கைகளைப் பிரகடனம் செய்தார். அவ்வாறு அவர் சென்ற இடங்களில் ஒன்று கதிர்காமம். புத்தர் கதிர்காமம் வந்தபோது இங்கே, ‘தேவ மைந்தன் மகாசேனன்’ என்று ஒருவர் ஆட்சி செய்ததாகவும், புத்தர் அவரிடம் இலங்கைக்குக் காவல் இருக்கும்படிக் கூறிச் சென்றதாகவும் மகாவம்சம் தெரிவிக்கிறது.

இதில் உள்ள குறிப்பின்படி அந்த மகாசேனன் என்பவர் முருகப்பெருமான்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தேவன் எனக் குறிப்பிடப்பதுவது சிவபெருமானையே என்றும் சொல்கிறார்கள்.

மகாசேனன் என்றாலே பெரும் படைக்குத் தலைவன் என்றுதானே பொருள். முருகனின் திருநாமங்களில் ஒன்று தேவசேனாபதி என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. சூரனை அழிக்கப் பெரும்படையோடு வந்தவர் என்பதால் மகாசேனன் என்னும்பெயர் அவருக்கு உண்டானது. இலங்கையிலே கோட்டை ராஜ்ஜியக் காலத்திலே கட்டப்பட்ட முருகன் கோயில்களுக்கு, ‘மகாசேனன் கோயில்’ என்றே பெயர். எனவே மகா சேனனும் முருகனும் ஒன்றே என்றும் கதிர்காமம் முருகனின் பூமி என்பதும் வரலாற்றுப்படியே நிறுவப்பட்ட ஒன்று.

முருகன் இருக்கும் இடம் தேடி சித்தர்களும் ரிஷிகளும் வருவதுதானே வழக்கம். அப்படித்தான் கதிர்காமத்துக்குச் சித்தர்களும் ஞானிகளும் நாடிவந்தனர். வந்தவர்கள் அனை வரும் பாதயாத்திரையாகவே கதிர்காமம் வந்து வழிபட்டனர் என்கிறது தல புராணம். இந்தப் பாதயாத்திரை செல்வச்சந்நிதி என்னும் திருத் தலத்திலிருந்து தொடங்குகிறது.

செல்வச்சந்நிதி வீரபாகுத் தேவர் முருகனை வழிபட்ட தலம். சூரபத்மனிடம் தூது செல்லச் சென்றபோது இத்தலத்தில் கால்பதித்த வீரபாகு, மாலை வேளையானதால் முருகனை வழிபட அங்கே வேல் ஊன்றித் தொழுததாகத் தலபுராணம் சொல்கிறது. அப்படிப்பட்ட சிறப்புமிக்க சந்நிதிப் பகுதியிலிருந்து இந்த யாத்திரை தொடங்கும்.

முதன்முதலில் அகத்தியரே இந்த யாத்திரையை மேற்கொண்டவர் என்று சொன்னேன். அவர் சென்ற வழியில் புலஸ்தியர், தன்வந்திரி முனிவர், கபில முனிவர், விஸ்ரவஸ் முனிவர், சட்டை முனி. காக்கைவண்ண சித்தர், போகர், பாபாஜி, பதஞ்சலி, அருணகிரிநாதர் உள்ளிட்ட ஏராள மான அடியவர்களும் சித்தர்களும் வந்து சென்றதாகச் சொல்லப்படுகிறது.

இந்த யாத்திரைப் பாதையிலே, ‘தலை குருமலை’ என்று ஒரு மலை உண்டு. அந்த மலையே சிவலிங்கம் என்பது நம்பிக்கை. இங்குள்ள சிவபெருமானை அகத்தியர் வழிபட்டதாகவும் குருபரம்பரையில் மூத்தவராக விளங்கும் அகத்தியர் வழிபட்ட மலை என்பதால் தலை குருமலை என்று அதற்குப் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

அதேபோன்று இங்கு சித்தர் மலை என்று ஒன்று உண்டு. அதை இன்று ‘சித்தர பப்பது’ என்கிறார்கள். கோரக்கர் மலை, பதஞ்சலித் துறை (பதஞ்சலி தஸ்தோட்ட) ஆகிய இடங்கள் அந்தந்த மகான்களின் பெயரிலேயே விளங்குகின்றன. இவை எல்லாமே பாத யாத்திரை வழியிலேயே உள்ள இடங்கள்.

நான் கடந்த 2012 - ம் ஆண்டு முதல் இந்தப் பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறேன். எங்களின் யாத்திரை உகந்தை மலையிலிருந்து தொடங்கும். உகந்தை மலையிலிருந்து கதிர் காமம் செல்லும் பாதையில் உள்ள காட்டுப் பகுதி இலங்கையின் மிகப்பெரிய வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயங்களில் ஒன்று.

பறவைகள் சரணாலயத்தை, ‘குமண’ என்றும் விலங்குகள் சரணாலயத்தை, ‘யால’ என்றும் அழைப்பார்கள். இந்த இரண்டு சரணாலயங்களையும் கும்புக்கன் என்கிற ஆறு பிரிக்கிறது. உவந்தையிலிருந்து குமணம் வந்து கும்புக்கன் நதியைக் கடந்தால் யால சரணாலயம். அதைக் கடந்து சென்றால் கதிர்காமம் மாணிக்க கங்கை நதியை அடையலாம்.

இந்தக் காட்டுப்பாதை மிகவும் ஆபத்தானது. இதில் நடந்து செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. காரணம் யானை முதலிய விலங்கு களும் விஷப்பாம்புகளும் நிறைந்திருக்கும் காட்டுப் பகுதி இது. ஆனால் முருக பக்தர்கள் மட்டும் இந்தக் காட்டுப்பாதையில் நடந்து செல்லலாம். சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் கதிர்காமப் பாதயாத்திரையை மேற்கொள் வார்கள். அவர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

காரணம் இத்தனை ஆயிரம் ஆண்டுகளிலும் கதிர்காமம் வரும் பக்தர்களுக்கு இந்த விலங்கு களாலும் விஷ ஜந்துக்களாலும் எந்த பாதிப்பும் நேர்ந்ததில்லை. முருகப்பெருமானின் அருளே அதற்குக் காரணம் என்று அனைவரும் நம்புகிறார்கள். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. உண்மையும் கூட.

அதற்குப் பல சம்பவங்கள் என் வாழ்விலேயே கண்டிருக்கிறேன். அவற்றில் ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்” என்று சொல்லி கதிர்காம யாத்திரை குறித்து மேலும் பேசினார் திருச்செல்வம்.

- உலா தொடரும்...