தொடர்கள்
Published:Updated:

அருவுருவமாய் அருளும் நாகபூசணி அம்மன்

இலங்கைத் திருவுலா
பிரீமியம் ஸ்டோரி
News
இலங்கைத் திருவுலா

இலங்கைத் திருவுலா

அவன் பெயர் மாநாயக்கன். காவிரிப்பூம்பட்டிணத்தைச் சேர்ந்தவன். கப்பலில் சென்று வாணிபம் செய்யும் பெரு வணிகன். ஒருமுறை தன் கப்பலில் பொருள்களை ஏற்றிக்கொண்டு செல்கையில் இலங்கையில் உள்ள தீவுப்பகுதி ஒன்றில் கப்பலை நிறுத்தினான். அந்தத் தீவில் கண்ட காட்சி அவனை சிலிர்க்க வைத்தது.

இலங்கைத் திருவுலா
இலங்கைத் திருவுலா
நாகபூசணி அம்மன்
நாகபூசணி அம்மன்


ஒரு நாகத்தை கருடன் தாக்கிக்கொண்டிருந்தது. நாகமோ சண்டைபோட முயலாமல் கருடனிடமிருந்து தப்பிச் செல்லவே முயன்றது. இதைக் கண்ட மாநாயக்கனுக்கு மனம் இரங்கியது. கருடனை விரட்ட முயன்றான். அப்போது கருடன் பேசியது.

"வணிகனே, நாகம் என் உணவு. அதை நான் அடைய விடாமல் தடுப்பது ஏன்?" என்று கேட்டது கருடன். மாநாயக்கன் அதிர்ச்சியில் நிற்க அப்போது நாகம் பேசியது. "ஐயா, நான் அருகே இருக்கும் புளியத்தீவில் இருந்து நாகத் தீவுக்குச் செல்கிறேன். அனுதினமும் நாகத்தீவில் கோயில்கொண்டிருக்கும் நாகபூசணி அம்மனை வணங்குவதுதான் என் வேலை. இன்றும் அன்னைக்குப் பூ சாத்தி வழிபாடு செய்யச் செல்கிறேன். என்னைப் போக விடாமல் தடுக்கிறது இந்த நாகம்" என்றது நாகம்.

இதைக் கேட்ட மாநாயக்கனுக்கு மேலும் வியப்பு. மாநாயக்கனுக்கு நாகத்தின் மீது கருணை பிறந்தது. "கருடனே நீ செய்வது தவறு. நாகத்தின் பக்தியைக் கெடுக்கலாமா... அன்னைக்கு நிகழவேண்டிய பூஜையைத் தடுக்கலாமா?" என்று கேட்டான். கருடன் சிரித்துக்கொண்டே, "ஐயா, சொல்வது யாருக்கும் எளிது. ஆனால் செய்வது கடினம். உங்களையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கப்பல் நிறையப் பொருளும் பணமும் இருக்கிறது. அதைக் கோயிலுக்காகக் கொடுத்துவிடுங்கள் என்றால் நீங்கள் கொடுப்பீர்களா... முடியாதல்லவா... அப்படியிருக்க நான் மட்டும் என் உணவை ஏன் விட்டுத் தர வேண்டும்? " என்று கேட்டது.

மாநாயக்கனுக்கு கருடனின் வாதம் புதிராக இருந்தது. எப்படி இருந்தாலும் தான் கொண்ட முடிவில் மாறுவது அழகல்ல என்று முடிவு செய்தான். "கருடனே... நீ சொல்வதை நான் ஏற்கிறேன். என் திரவியங்கள் அனைத்தையும் நாகபூசணி அன்னையின் கோயிலுக்கு தானமாகத் தந்துவிடுகிறேன். நீ அந்த நாகத்தை விட்டுவிடு" என்று சொல்ல அந்த கணமே கருடன் அவனை வணங்கி மறைந்ததாம்.

மாநாயக்கனும் தான் சொன்னபடி தன் கப்பலில் இருந்த செல்வங்களை எல்லாம் அந்த அம்மன் கோயிலுக்கு தானமாகத் தந்தானாம். அப்படி அவன் தந்த பொருளின் மூலம் ஓர் அழகான கோயில் கட்டப்பட்டது. அந்தக் கோயில்தான் இலங்கையில் நயினா தீவில் இருக்கும் நாகபூசணி அம்மன் கோயில் என்கிறார்கள்.

இப்படிப் பழைமையும் பெருமையும் கொண்டது நயினா தீவு. இந்தத் தீவுக்குப் பல புராணச் சிறப்புகளும் சரித்திரச் சிறப்புகளும் உண்டு என்கிறார்கள். 51 சக்தி பீடங்களில் ஒன்று நாகபூசணி அம்மன் ஆலயம். தந்திர சூடாமணி என்னும் நூல் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடம் இது என்கிறது.

நாகபூசணி அம்மன்
நாகபூசணி அம்மன்
பக்தர்கள்
பக்தர்கள்
விநாயகர்
விநாயகர்
நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில்
நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில்
நாகபூசணி அம்மன் கோயில்
நாகபூசணி அம்மன் கோயில்


இந்திரன் இத்தலத்து அன்னையை பூஜித்துத் தன் சாபம் நீங்கப் பெற்றான் என்று சொல்கிறது தலபுராணம். காண்டவ வன தகனத்தின் போது பல நாகர்களைக் கொன்ற பாவம் நீங்க அர்ஜூனன் இத்தலத்துக்கு வந்து அன்னையை வழிபட்டுப் பாவம் நீங்கப் பெற்றான் என்கிறார்கள்.

இங்கு வந்த அர்ஜூனன் நாகர் குல இளவரசி ஒருத்தியை மணந்து சில காலம் இங்கே வாழ்ந்தான் என்றும் அவர்களுக்குப் பப்பரவன் என்கிற மகன் இருந்தான் என்றும் சொல்கிறார்கள். நாக பூசணி அம்மன் ஆலயம் இருக்கும் திடலுக்குப் பப்பரவன் திடல் என்றே பெயர்.

மணிமேகலைக் காப்பியத்தில் சுட்டப்படும், 'மணிபல்லவத்தீவு' இதுவே என்கிறார்கள் பௌத்தர்கள். குலோதர, மகோதர என்ற இரண்டு நாக அரக்கர்களுக்கிடையே நிகழ்ந்த போரை விலக்கி வைக்க புத்தபிரான் இங்கு எழுந்தருளியதாகச் சொல்லப்படுகிறது. நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குச் சற்றுத் தொலைவில் புனரமைக்கப்பட்ட பௌத்த ஆலயம் ஒன்றும் உள்ளது.

ஆதியில் இந்திரன் வழிபட்டதும் மாநாயக்கனின் பொருளுதவியால் கட்டப்பட்டதுமான பழைய கோயில் போர்ச்சுக்கீசியரின் படையெடுப்பின் போது இடிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். கி.பி 1620 - ம் ஆண்டு ஒல்லாந்தர் என்னும் போர்ச்சுக்கீசியர் காலத்தில் இக்கோயில் தரைமட்டமாக்கப்பட்டது. பிரமாண்டமான அந்தக் கோயிலின் சுவடுகள் இன்றும் கடலின் அடியில் காணக்கிடைக்கின்றன என்கிறார்கள்.

சமயக்குரவர் நால்வர்
சமயக்குரவர் நால்வர்

பிறகு டச்சுக்காரர்கள் ஆட்சிக்குப் பின்பு 1788 ம் ஆண்டில் இந்த ஆலயம் மீண்டும் எடுத்துக் கட்டப்பட்டது. போர்ச்சுக்கீசியர்களின் படையெடுப்பின்போது, பக்தர்கள் கோயிலின் மூல மூர்த்தியை மரத்தின் பொந்துகளில் ஒளித்து வைத்தனர். அதை மீட்டெடுத்துக் கோயிலில் பிரதிஷ்டை செய்தனர்.

1935-ம் ஆண்டு ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கிழக்கு ராஜகோபுரம் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் விமானம் 1951-ம் ஆண்டு அமைக்கப்பட்டது என்கிறார்கள். 108 அடி உயரமான நவதள நவகலச ராஜ கோபுரம் கட்டப்பட்டு 2012 -ம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இந்தக்கோயிலின் கருவறையிலுள்ள ஐந்து தலை நாகச்சிலை பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானது என்றும் காந்தார சிற்ப மரபைச் சார்ந்தது என்றும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். சுயம்புவாகத் தோன்றிய அம்பிகையின் வடிவத்தை இந்தியாவில் இருந்து வந்த நயினாபட்டர் என்கிற அந்தணர் ஆதியில் வழிபாடு செய்தார் என்றும் அவர் பெயராலேயே இது 'நயினா தீவு' என்று அழைக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள்.

ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோயிலின் கருவறைக்குள் கருநாகச் சிலை வடிவமும் அதன் கீழ் உள்ள அழகிய பீடத்தில் சுயம்புவாகத் தோன்றிய நாகபூசணி அன்னை அருள்பாலிக்கிறாள் அன்னை நாகபூசணி. லிங்கரூபமான திருமேனியில் அம்மன் எழிலாகக் காட்சி கொடுக்கிறாள். கோயிலில் நாயன்மார்களின் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முருகப்பெருமானுக்கும் விநாயகருக்கும் தனிச்சந்நிதிகள் அமைந்துள்ளன.

ஒவ்வோர் ஆனி மாதமும் இங்கு தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆலயத்தில் தேர்த்திருவிழாவும் விசேஷம். நாகபூசணி கோயிலின் தேர் மிகவும் எழில் வாய்ந்தது. இந்தத் தேரில் நாகம் பூப்பறித்து வரும்போது கருடன் அதனுடன் சண்டையிடும் காட்சி தத் ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணன், அஷ்ட லட்சுமி, லிங்கத்தை வழிபடும் காமாட்சி அம்மன் போன்ற பல்வேறு இறைச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து 431 கி.மீ. தூரத்திலும் யாழ்ப்பாணம் நகரில் இருந்து 38 கி.மீ. தூரத்திலும் இருக்கும் இந்த நயினா தீவுக்குப் படகில் மட்டுமே செல்ல முடியும். அதற்காகப் படகுசேவை இங்கே அடிக்கடி உள்ளது. இந்த ஆலயத்தில் வெள்ளிக்கிழமைகளில் வந்து வேண்டிக்கொண்டால் விஷ ஐந்துக்களால் நமக்குத் தொந்தரவு இருக்காது என்று சொல்கிறார்கள் பக்தர்கள்.

மேலும் ஜாதகத்தில் ராகு - கேது தோஷம் இருப்பவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கே வந்து அம்மனை வேண்டிக்கொண்டால் அம்மனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும், குழந்தை வரம் கேட்டு வரும் பக்தர்களுக்கு விரைவில் அது கிடைக்கிறது என்றும் சொல்கிறார்கள் அதேபோன்று தீய பழக்கங்களில் இருந்து விடுபட விரும்புபவர்களும் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் நல்ல நிலைக்கு மாறுவார்களாம். இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்திருக்கும் இந்தத் திருத்தலத்தை ஒருமுறை தரிசித்து வந்தால் வாழ்வில் நல்ல மாற்றம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.