திருக்கதைகள்
Published:Updated:

400 ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் பெண்ணின் தலைமுடி!

இலங்கைத் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
News
இலங்கைத் திருவிழா

இலங்கைத் திருவிழா

ஆயிரம் ஆண்டுகள் என்று நாம் சொன்னாலும் உண்மையில் இதன் தொன்மை கணிக்க முடியாதது என்கிறார்கள் பக்தர்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அன்னை இந்தத் தலத்தில் கோயில்கொண்டு விட்டாள் என்கிறார்கள்.

இலங்கைத் திருவிழா
இலங்கைத் திருவிழா


முன்னொரு காலத்தில் அம்பிகையின்மீது பற்றுக்கொண்ட அந்தணர் ஒருவர் ராமேஸ்வரத்தில் வாழ்ந்தார். ஒரு நாள் அவர் கனவில் ருத்திர ரூபமாக தேவி ஒருவள் காட்சி கொடுத்தாள். அவளைக் கண்டு அஞ்சிய அந்தணரை அந்த அன்னை தேற்றினாள்.

“நான் இவ்வுலகுக்கு அருள்வதற்காகத் தோன்றியிருக்கும் பத்ரகாளி. திருகோணமலை எனும் தலத்தில் ஒரு மரத்தடியில் திருமேனியாக எழுந்தருளியிருக்கிறேன். அதைக் கண்டெடுத்து ஆலயம் அமைப்பாயாக” என்று சொல்லி மறைந்தாள்.

விழித்தெழுந்த அந்தணர், விரைவில் இலங்கையை வந்தடைந்தார். திருகோணமலையில் இருந்தவர்களிடம் அன்னை சொன்ன மரத்தின் அடையாளங்களைச் சொல்லி `அது எங்கே இருக்கிறது?’ என்று விசாரித்தார். அவர்களும் வியப்போடு அந்த மரம் இருக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர். உரிய அனுமதியோடு அந்த இடத்தில் தோண்டிப் பார்த்தபோது, அற்புதமான அம்மனின் திருவுருவம் கிடைத்தது. ஊரே மகிழ்ந்தது. அன்னைக்கு அங்கு கோயில் எழுப்பி வழிபாடுகள் செய்யத் தொடங்கினர்.

அந்தக் காலத்தில், திருகோணமலையில் ஆலயம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து கடல் மிக அருகிலேயே இருந்ததாம். கரை வரையிலும் கப்பல் வந்துபோகும் அளவுக்கு அமைந்த இயற்கைத் துறைமுகப் பகுதி அது. அதனால், கப்பலில் அந்தப் பகுதி வழியா கப் பயணிக்கும் அயல்நாட்டு வணிகர்களும் அன்னையின் பக்தர்கள் ஆயினர். இந்த அம்பிகையை வணங்கிச் சென்றால், இயற்கைச் சீற்றங்களில் சிக்காமல் பயணிக்க முடிவதை உணர்ந்து அன்னைக்குப் பெரும் காணிக்கைகள் செலுத்தினர். இதனால் ஆலயம் செல்வச் செழிப்போடு விளங்கியது

ஒருமுறை, தமிழகத்திலிருந்து புறப்பட்ட ஒரு கப்பலில் கோயில் ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட சிம்ம வாகனம் இருந்தது. திருகோணமலைக் கடற்பகுதிக்குள் அந்தக் கப்பல் வந்தபோது, அன்னையின் ஆலயத்துக்கு நேராக அப்படியே நகராமல் நின்று விட்டது. பலவாறு முயன்றும் கப்பல் நகரவில்லை. சோர்வுற்ற கப்பலின் கேப்டன் அப்படியே கண் அயர்ந்தான்.

அப்போது அவன் கனவில் தோன்றிய காளி, “எனக்குச் சொந்த மான சிம்ம வாகனத்தை எடுத்துச் செல்லாதே. அதை இங்கே என் ஆலயத்தில் சமர்ப்பித்துவிடு” என்று கட்டளையிட, திடுக்கிட்டு விழித்தான் கேப்டன். கனவில் கண்டதை மற்றவர்களிடம் சொல்லி `எங்கிருக்கிறது காளி கோயில்’ என்று விசாரித்து ஆலயத்துக்கு வந்து, அன்னையைப் பணிந்து சிம்ம வாகனத்தைச் சமர்ப்பித்தான். மேலும் பல பொருள்களை கொடையாகக் கொடுத்துப் பின் புறப்பட்டான் என்கிறார்கள் பக்தர்கள்.

இப்படி இந்த ஆலயத்தின் பல மகிமைகளைப் பட்டியலிடுகிறார்கள் பக்தர்கள். அவற்றில் முக்கியமான ஒன்று, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஜாவா பெண் ஒருத்திக்கு நிகழ்ந்த அற்புதம்.

இலங்கைத் திருவிழா
இலங்கைத் திருவிழா

அன்னையின் கோயிலையும் அதன் சுற்றுப்புறத்தையும் மிகவும் பவித்ரமாக பக்தர்கள் பாதுகாத்து வந்தனர். அதேபோன்று அன்னையை வணங்காமல் அந்தப் பகுதியை யாரும் கடந்து செல்வதில்லை. ஒருநாள், ஜாவா தீவிலிருந்து ஓர் இளம் பெண் அந்தப் பகுதியைச் சுற்றிப்பார்க்க வந்திருந்தாள். உள்ளூர் மக்கள் அவளிடம் அன்னையின் மகிமையை விவரித்து, கடற்கரைப் பகுதிக்குச் சென்றால், அன்னையைக் கட்டாயம் வணங்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தனர். ஆனால் அவளோ அதில் நம்பிக்கைக் கொள்ளவில்லை.

தலைவிரிகோலமாகக் கோயில் பகுதிக்குச் சென்றவள், அன்னையை வணங்காமல் ஏளனமாகப் பார்த்தபடி ஒய்யாரமாக நடந்து சென்றாள். அன்னையின் கோபத்துக்கு ஆளானாள். அதேவேளையில் அந்தப் பெண்ணை எவரோ அழைப்பது போல் கேட்க, அவள் திரும்பிப்பார்த்தாள். திரும்பிய தலை அப்படியே நின்றுவிட்டது.

எவ்வளவு முயன்றும் தலையை நேராக்க முடியவில்லை. உள்ளூர் மருத்துவர்களை நாடினாள். அவர்களும் சரிசெய்ய முடியாமல் திண்டாடினர். இதற்குக் காரணம் அன்னையின் கோபமே என்று உள்ளூர்வாசிகள் சொல்ல, உடனே அந்தப் பெண் ஆலயத்துக்குச் சென்று அன்னையிடம் மன்னிப்பு வேண்டினாள். அன்னை மனம் இறங்கினாள்.

அசரீரியாக அனைவரும் கேட்கும் வண்ணம் பேசினாள். “பெண்ணே! உன்னை மன்னித்தோம். ஆனால் உன் சாபம் நீங்க உன் தலைக்குப் பதிலாக உன் தலைமுடியைக் காணிக்கை செலுத்து” என்று உரைத்தாள். அந்தப் பெண்ணும் அப்படியே செய்ய, அவள் தலை இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இதற்குச் சான்றாக, அந்தப் பெண் அளித்த காணிக்கை முடியை இன்றும் கோயிலில் பாதுகாக்கிறார்கள். நவராத்திரி பூஜையில் ஒன்பதாவது நாள் அன்னை எழுந்தருளும்போது, அந்தச் சிகையையே தன் அலங்காரங்களில் ஒன்றாக ஏற்றருள்கிறாள்.

இந்தக் கோயிலின் வரலாற்றுத் தொன்மையும் குறிப்பிடத்தக்கது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலுக்கு சோழ மன்னர்கள் பலரும் வந்து வழிபட்டுச் சென்றிருக்கிறார்கள் என்கிறார்கள். 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் இந்த ஆலயத்தின் பழைய கட்டுமானத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கற்றூண்களில் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி.

பெரும் கற்கோயிலாக விளங்கிய இந்த ஆலயத்தைப் போர்ச்சுக் கீசியர்கள் படையெடுப்பின்போது இடித்துப் போட்டனர். எனவே, அந்தக் கோயிலின் கற்றூண்கள் அங்கேயே கிடந்தன. அவற்றில் ஒரு தூண் ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி. ஒரு தூணின் நான்கு பக்கங்களிலும் தொடர்ந்து அந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. நான்கில் ஒரு பகுதி வர்ணப்பூச்சினால் மறைந்துவிட்டது. மற்றபகுதிகளும் சிதைவுறும் நிலையில் இருக்கிறது. என்றாலும் 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே இதைப் படி எடுத்து ஆவணப்படுத்தி வைத்துள்ளனர்.

‘ஸ்வஸிஸ் த திருமன்னிவ ளர இரு தில மட(ந்தை)...’ என்று தொடங்கும் இந்த மெய்க்கீர்த்தி 37 வரிகளுக்கும் மேலாக நீள்கிறது. இதன் மூலம் சோழ மன்னர்களுக்கும் இந்த ஆலயத்துக்கும் உள்ள தொடர்பினை அறிய முடிகிறது. (தற்போது, அந்தக் கல்வெட்டு கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் கிடக்கின்றன என்பது கவலைக்குரியது)

போர்ச்சுக்கீசியர்களால் அழிக்கப்பட்ட ஆலயத்தில் கருவறை மட்டும் எஞ்சியிருக்க, அந்த இடத்திலேயே புதிய கோயிலை எழுப்பியிருக்கிறார்கள். மிக பிரமாண்டமாகவும் கலை அழகோடும் காணப்படும் இந்தக் கோயில், நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஒன்று.

ஆலயத்தின் முன்புறம் விநாயகர் சந்நிதி ஒன்று தனிக்கோயில் போலவே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் விநாயகருக்கு ஆலடிப் பிள்ளையார் என்பது திருநாமம். விநாய கரை வழிபட்டு பத்திரகாளி அம்மன் கோயிலுக்குள் நுழைந்தால் அன்னையை தரிசனம் செய்யலாம். கருவறையில் சூலம், டமருகம், கட்கம், கபாலம் ஆகியவற்றைத் தன் திருக்கரங்களில் ஏந்திக் காட்சி அருள்கிறாள் பத்ரகாளி அம்மன். அன்னையின் திருவுருவம் காண்போரைச் சிலிர்க்க வைக்கிறது. இந்தச் சந்நிதியில் சக்கரமும் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பது விசேஷம்.

ஆலயத்தின் மகாமண்டபத்தில் ஆதியில் கண்டெடுக்கப்பட்ட காளிதேவியின் விக்ரகம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு முருகப்பெருமான் மற்றும் விநாயகருக்கும் சந்நிதிகள் உள்ளன. ஸ்நபன மண்டபத்தில் சரஸ்வதிதேவிக்கும் மகாலட்சுமிக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தின் விதானத்தில் அமைந்திருக்கும் அஷ்ட நாக சிற்பங்கள், கண்ணைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கேதார கௌரி விரதம், நவராத்திரி ஆகிய மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன.

(நிறைவுற்றது)

`அர்ஜுனனின் சங்கு!’

மங்கலப் பொருள்களில் உயர்ந்தது சங்கு. திருமகளைப் போன்றே சங்கும் கடலில் பிறப்பதால், அதை லட்சுமிகடாட்சம் மிக்கதாகக் கூறுவர். திருமணச் சடங்கில் சங்கொலி சுப சகுனமாகக் கருதப்படுகிறது. ஆண்டாள், ‘மத்தளம் கொட்ட வரிச்சங்கம் நின்றூத...’ எனப் பாடுகிறாள். அன்பர்களைக் கூட்ட சங்கு ஒலிக்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

வெற்றியை அறிவிக்க முழங்கும் சங்கநாதத்தை, `வெற்றி சங்கம்’ என்று குறிப்பிடு வார்கள். விநாயகப் பெருமான் சங்காசுரன் என்பவனை அழித்து, அவனுக்கு மோட்சம் அளித்தபின், அவனுடையக் கூடாக இருந்த சங்கினை, வெற்றிச் சங்காக ஏந்தியதாகப் புராணம் கூறும்.

திருமாலின் சங்குக்கு பாஞ்சசன்யம் என்று பெயர். அர்ஜுனன் வைத்திருந்த சங்கு, தேவதத்தம். சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் விசேஷம். பெருமாள் ஆலயங்களில் சங்கு தாரை, சக்கர தாரை என்ற பெயரில் அபிஷேகங்கள் நிகழும்.

- எல்.கீர்த்தனா, வள்ளியூர்