
இலங்கைத் திருவுலா
'நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.'
- திருஞான சம்பந்தர்

இலங்கையின் தொன்மையான இந்துமதக் கோயில்களில் பல இன்று அழிந்துவிட்டன. சில பிற மதங்களால் கைப்பற்றப்பட்டுவிட்டன. பஞ்ச சிவத்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தொண்டீஸ்வரம் இன்று பௌத்த மதம் சார்ந்த கோயிலாக உள்ளது. போர்ச்சுக்கீசியர்கள் படையெடுப்பு இலங்கைத் திருக்கோயில்களுக்குச் செய்த சேதம் மிகவும் அதிகம். முற்றிலும் அழிக்கப்பட்ட கோயில்களில் சில, ஆறுமுக நாவலர் காலத்தில் அவரின் பெரும் முயற்சியால் மீண்டும் எழுப்பப்பட்டன. விடுபட்ட கோயில்களைப் பிற மதங்கள் கைப்பற்றிக்கொண்டன. அப்படி ஒரு கோயில்தான் தொண்டீஸ்வரம்.
தொண்டீஸ்வரத்தில் சிவன் கோயில்கள் இருந்ததற்கான ஆதாரங்களாகத் தேடியபோது, ஆய்வாளர் திருச்செல்வம் நமக்கு அங்கிருந்த இரண்டு மிகப்பெரிய பாண லிங்கங்களைக் காட்டினார். அந்த லிங்கங்கள் பக்தர்கள் வழிபடும் பகுதிகளிலிருந்து விலகி கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றன. ஒரு நந்தியையும் அங்கு காணமுடிந்தது. கழுத்தில் மணிகள் அணிந்த பல்லவர் கால சிற்பமாகத் தெரியும் அந்த நந்திக்கும் அங்கு வழிபாடு கிடையாது. இனி அவற்றை மீட்டெடுக்கப் போராட முடியாது. ஆனால் இருக்கும் கோயில்களைப் பராமரித்தும் பாதுகாத்தும் விடவேண்டும் என்னும் ஆர்வம் இலங்கை வாழ் தமிழர்களிடையே உள்ளது.




பஞ்ச சிவத்தலங்களில் மற்றுமொரு தலம் கேத்தீஸ்வரம். தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 276. அவற்றில் இரண்டு தலங்கள் இலங்கையில் உள்ளன. ஒன்று திருகோணமலை. மற்றொன்று கேத்தீஸ்வரம். ஜூலை மாதம் 2022 - ம் ஆண்டு கும்பாபிஷேகம் கண்ட கேத்தீஸ்வரம் திருக்கோயில் மிகவும் அருமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலயத்தின் திருப்பணிக்கு இந்திய அரசாங்கம் பெரும் நிதி வழங்கியிருக்கிறது.
இலங்கை சிவன் கோயில் என்றதும் அனைவரின் மனத்திலும் தோன்றும் முதல் சித்திரம் திருகோணமலை ஈசன்தான். திருகோணமலை உலக அளவில் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊர். இயற்கைத் துறைமுகமாக விளங்கும் இதனைக் கைப்பற்ற உலக நாடுகளுக்குள் அறிவிக்கப்படாத போட்டி ஒன்று நிலவுகிறது. அதுமட்டுமல்ல திமிங்கலங்களும் டால்பின்களும் துள்ளிக்குதிக்கும் நீலக் கடற்பரப்பு அது. இவற்றைக் காணக் குவியும் சுற்றுலாப் பயணிகள் ஏராளம். எனவே, எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஊர் திருகோணமலை.
இங்குதான் புகழ்பெற்ற திருக்கோணேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கி.மு.150 ஆண்டுகளுக்கு முன் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளன் திருக்கோணேஸ்வரம் வந்து வழிபட்டதாக இந்தக் கோயிலின் தலபுராணம் சொல்கிறது. எனவே, அதற்கும் முன்பாகவே இங்கு சிவாலயம் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
திருக்கோணேஸ்வரத்துக்கும் ராவணனுக்கும் தொடர்பு உண்டு என்கிறது தலபுராணம். திருக்கோணேஸ்வரத்தில் அருளும் சிவனார், ராவணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவராம். மற்றொரு சுவாரஸ்யமான நிகழ்வையும் இந்தத் தலபுராணம் சொல்கிறது.
ராவணனின் தாயார் தினமும் சிவபூஜை செய்த பின்பே உணவருந்துவாராம். வயது முதிர்ந்ததன் காரணமாக அவரால் ஆலயம் சென்று சிவ வழிபாடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதைக் கண்டு வருந்திய ராவணன், தாயார் வழிபட சிவலிங்கத்தைத் தன் அரண் மனைக்கே கொண்டு வர முடிவு செய்தான்.
அதற்காக அவன் கோகர்ணேஸ்வரர் என்று சொல்லப்படும் திருக்கோணேஸ்வரர் திருக் கோயிலுக்கு வந்து அங்கிருந்த மூலவர் விக்ரகத் தைப் பெயர்த்தெடுக்க முயன்றான். ஆனால் அவனால் எவ்வளவு முயன்றும் அசைக்கக் கூட முடியவில்லை.
உடனே, மலையோடு சேர்த்துக் கோயிலைப் பெயர்த்தெடுத்துப்போக முயன்றான். தன் வாளினால் மலையை ஓங்கி வெட்டினான். அதனால் மலை இரண்டாகப் பிளந்தது. ஆனாலும் மலையை அசைக்க முடியவில்லை. இந்நிலையில் தன் பிழையை உணர்ந்த ராவணன் சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டான். அந்த நேரத்தில் ராவணனின் தாயாரின் உயிரும் பிரிந்தது.
ராவணன் தன் தாயின் உடலை திருகோண மலைக்கு எதிரே உள்ள கன்னியா என்னும் மலைக்குக் கொண்டு வந்தான். அங்கிருந்து அவர் அன்னை எப்போதும் சிவனை தரிசனம் செய்யட்டும் என்று எண்ணி அங்கேயே அடக்கம் செய்தான். திருகோண மலைக்கு அருகேயுள்ள கன்னியா குன்றின் மீது இருக்கும் 60 அடி நீளம் கொண்ட சமாதி ராவணனின் தாயாருடையது என்பது சிவனடியார்களின் நம்பிக்கை.
திருகோணமலைக் கோயிலுக்குக் கோகர்ணம் என்று பெயர் உண்டு. இந்தத் தலத்தில் முற்காலத்தில் அடிவாரத்திலும், இடையிலும், மலை மீதும் மூன்று அழகிய பெரிய கோயில்கள் இருந்தன என்கின்றன வரலாற்று நூல்கள். இத்தலத்தில் செய்யப்பட்ட திருப்பணிகள் குறித்துக் கூறும் நூல் கோணேசர் கல்வெட்டு.
இந்த வரலாற்று நூல், திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர் இராஜவரோதயம் என்பவரால் 16 - ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது பாடல்களையும் , உரைநடைப்பகுதிகளையும் கொண்டு அமைந் திருக்கிறது. குளக்கோட்டத்தான் என்னும் மன்னன் இத்திருக்கோயிலுக்குரிய திருப்பணிகளைச் செய்தான். குளமும் (கந்தளாய்க் குளம்), கோட்டமும் கட்டுவித்ததால் இவனுக்கு, `குளக் கோட்டன்' என்று பெயர் ஏற்பட்டதாம்.
அக்காலத்தில் குளக்கோட்டத்து மன்னன் செய்த திருப்பணிகளையும் ஆலயம் குறித்த தகவல்களையும் அதனை நிர்வாகம் செய்வது எப்படி என்பது குறித்தும், `பெரியவளைமை பத்ததி' என்னும் செப்பேட்டில் பொறித்து வைத்தனர். அந்தச் செப்பேட்டை அடிப்படையாகக் கொண்டு கவி இராஜவரோதயரால் உருவாக்கப்பட்டதுதான் `கோணேசர் கல்வெட்டு' என்னும் நூல்.




திருகோணமலையில் எஞ்சியிருக்கும் கல்வெட்டு ஒன்று சொல்லும் சேதி மிகவும் ஆச்சர்யமானது.
`முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே பூனைக்கண்
புகைக்கண் செங்கண் ஆண்ட பின்
தானே வடுகாய் விடும்' - என்று சொல்கிறது. இதன் கருத்து... `இந்தத் திருப்பணிகள் பிற்காலத்தில் பறங்கியர்களால் (வெள்ளையர் களால்) அழிக்கப்பட்டுப் பின் கோயில் அப்படியே கைவிடப்படும்' என்பதாகும்.
கோயில் அமைந்திருக்கும் மலை மிகவும் பசுமையாகக் காணப்படுகிறது. மலைப்பாதையில் பயணப்படும்போது மலைவளத்தை ரசிக்க முடிகிறது. சுற்றிலும் இருக்கும் கடலில் இருந்து குளுமையாக காற்றுவந்து நம் மேனி யைத் தழுவுகிறது. அதனால் நடந்து செல்பவர்கள்கூட சோர்வின்றி மிக வேகமாக மலையேறுகிறார்கள். கோயிலுக்குள் நம்மை வரவேற்கும் விதமாக சந்திரசேகரராக கையில் மானும் மழுவும் ஏந்திய திருமேனியராக பிரமாண்ட சிவபெருமான் காட்சி கொடுக்கிறார். அங்கிருந்து சுற்றிப் பார்த்தால், எங்கும் கடல் சூழ்ந்திருக்கும் அற்புதக் காட்சி யைக் காணலாம்.
கோயிலுக்குள் நுழைந்தால் லிங்க ரூபமாக கோணேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இந்தத் தல இறைவனைப் பாடிய அருணகிரிப் பெருமான்...
`கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்'
- என்று போற்றுகிறார். இதன்பொருள், `மேலான மோட்சகதி அருளுகின்ற தலைவ னாகிய கோனேசப் பெருமானே! உன்னை தேடித் தேடி உன்புகழையே பாடுகின்ற நாயிற் கடைப்பட்ட என்னையும் உனது அருட் பார்வையாகிய கருணையினால் உன் திருவடிப் பேறடைவதற்கு அருளவேண்டும்' என்பதாகும்.
இப்படி ராவணன் முதல் தேவரும் மூவரும் முனிவரும் வழிபட்ட திருக்கோணேஸ்வரரின் சந்நிதி எப்போதும் குளுமை நிறைந்து காணப் படுகிறது. அருள் தரும் அந்த ஈசனை வழிபட்டு பக்தர்கள் பேரானந்தம் அடைகிறார்கள். ஈசனை வலம் வரும்போது மூலவருக்கு இடப் புறம் அம்பிகையின் சந்நிதி உள்ளது. இங்கு கோயில் கொண்டிருக்கும் அம்பிகைக்கு, `மாதுமையாள்' என்பது திருநாமம், அன்னையை வணங்கிப் பிராகார வலம் வந்தால் முருகப்பெருமானையும் விநாயகரை யும் தரிசனம் செய்ய முடியும்.
இந்தத் தலத்தில் இரண்டு சிறப்புகள் உண்டு. ஒன்று கல்லால மரம். போர்ச்சுக்கீசியர்கள் கோயிலை இடித்தபிறகு, மக்கள் இந்தக் கல்லால மரத்தைத்தான் நீண்டகாலமாக வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள். அதன்பின் கோயில் எழுப்பட்டது என்றாலும் இந்த மரத் திற்கான முக்கியத்துவம் குறையவேயில்லை.
இந்த மரத்தின் அடியில் நின்று செய்யும் வேண்டுதல்கள் உடனுக்குடன் நிறைவேறு கின்றன என்று கூறும் பக்தர்கள், இங்கு வரும் போது தவறாமல் இதை வழிபடுகிறார்கள். தினமும் அதிகாலையில் சூரியன் உதிக்கும் போது இந்தக் கல்லால மரத்துக்குச் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. இந்த வழிபாடு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்கிறார்கள். அதன்பின்னரே ஆலயத்துள் மூலவருக்கு வழிபாடுகள் தொடங்கும்.
மற்றொருமொரு சிறப்பு இங்கு காணப்படும் ராவணனின் சிலை. `ராவணன் வெட்டு' என்று சொல்லப்படும் மலை பிளந்திருக்கும் பகுதிக்கு அருகே, ராவணன் தன் வீணையைக் கீழே வைத்துவிட்டுச் சிவபெருமானை வழிபடுவதுபோன்ற தோற்றத்தில் காணப்படுகிறார். அங்கு நின்று ராவணனையும் பக்தர்கள் வழிபட்டுச் செல்கிறார்கள்.
இப்படி சிவபூமியாகத் திகழும் இலங்கையில் நாம் கண்டு தரிசிக்க ஏராளமான கோயில்கள் உள்ளன. வாய்ப்பிருப்பவர்கள் இலங்கை செல்லும்போது வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஆலயங்களை தரிசித்து வாருங்கள்!
- உலா வருவோம்...