சஸபதி என்ற மகாஞானி உலக நன்மைக்காக ஸ்ரீகௌரி அன்னையை தியானித்து தவம் புரிந்து வந்தார். ஒவ்வொரு ஆண்டின் சித்திரை திருவாதிரை நாளின்போதும் கண் விழிக்கும் அந்த ஞானி அந்த ஆண்டில் தாம் செய்த தவ, யோக, தியான, விரத பூஜா பலன்களை இந்த லோகத்தில் உள்ள சகல ஜீவன்களின் நன்மைக்காக அர்ப்பணித்து விடுவார். லோக க்ஷேமமே தன்னுடைய விருப்பம் என்று வாழ்ந்த பெரும் தவசீலர் அவர்.
தன்னையே வணங்கி வாழும் சஸபதி முனிவரின் மீது லோகமாதாவான அன்னை ஸ்ரீகௌரி கருணை கொண்டாள். அவருக்கு வேண்டியதைத் தாமே செய்து கொடுக்க விரும்பினாள். அதற்காக சஸபதி முனிவருக்கு ஏற்ற மணப்பெண்ணை தாமே தாயாக நின்று தேர்ந்தெடுத்து, அவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க விரும்பினாள். இந்த விருப்பத்தை அறிந்து கொண்ட ஈசன், "தேவி நீ மண்ணுலகில் தோன்றி உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்!" என்று சம்மதமும் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதன்படி மண்ணுலகம் வந்த ஸ்ரீகௌரி தேவி, அத்ரி முனிவரின் தர்மபத்னியான அனுசூயா தேவியிடம், தான் அனுஷ்டிக்க இருக்கும் தவம் குறித்து ஆலோசனை கேட்டார். அப்போது ஸ்ரீலாவண்ய கௌரி விரதம் குறித்தும் அதை அனுஷ்டிக்க வேண்டிய விதங்கள் குறித்தும் ரிஷி பத்தினி விளக்கினார். எனினும் அந்த விரதம் அனுஷ்டிக்க வேண்டிய நாள், நேரம் குறித்து எவருக்கும் தெரியவில்லை. ரிஷிகள் பலரும் கூடி கணித்தும் அந்த விரத காலம் எதுவென்று தெரியவில்லை.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇறுதியில் பொதிகை மலையை அடைந்த அன்னை அகத்திய மாமுனிவரை சந்தித்தார். அவரும் அன்னையின் விருப்பத்தை அறிந்து, 'தாங்கள் விரதம் இருக்க நல்ல நேரம் எது என்பதை ஈசனே அறிவிப்பார், எனவே உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள ஈசனை குறித்து தவம் இயற்றுங்கள்' என்றார். அன்னையும் பொதிகை மலைச் சாரலில் வலதுகால் கட்டைவிரலில் நின்று கடுந்தவம் புரிந்தாள். அன்னையின் தவத்துக்கு அண்டசராசரங்களும் வியந்தன. சகலமும் தனக்குள் கொண்ட தேவி, எதை நோக்கி தவம் இயற்றுகிறார். இது என்ன நாடகம்! என்று வியந்தது.

ஈசனின் கருணையால் தவத்தின் நோக்கம் நிறைவேறியது. ஆதிபராசக்தியாக, அன்னை காமாட்சியாக, ஸ்ரீகௌரியாக, மூன்று நிலைகளிலும் தவம்புரிந்த அம்பிகையின் வலது காலில் இருந்து ஒரு ஜோதி எழும்பியது. அது திரண்டு ஒளிமிக்க மந்த்ரதரணி மணியானது. அந்த மணியில் இருந்து ‘ஹேலை’ என்ற உத்தமி எழுந்தாள். அவளே சஸபதி முனிவருக்கு ஏற்றவள் என்று ஆசீர்வதித்த அன்னை தன் தவத்தை நிறுத்தினாள். பாவம் தீண்டாப் பாவையவள், அலங்கரிக்கப்பட்டு மணப்பெண் ஆனாள். கௌரி அன்னையின் தலைமையில் தேவர்களும் மூவர்களும் சூழ, அகத்திய முனிவர் முன்னின்று சஸபதி-ஹேலை திருமணத்தை நடத்தி வைத்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தம் நோக்கம் நிறைவேறியதும் லாவண்ய கௌரி விரதத்தை தொடங்க எண்ணினாள் தேவி, அந்த விரதத்துக்கான நேரத்தை ஈசனாரும் கணித்துச் சொன்னார். அது சஸபதி முனிவர் கண் விழித்து தம் தவப்பலன்களை அர்ப்பணிக்கும் நேரமே. அன்னையும் சஸபதி-ஹேலை தம்பதியரை ஆசீர்வதித்து, 'இனி நீங்கள் லோக நன்மைக்காக உங்கள் வாரிசுகளை உருவாக்கி, நலம் அடையுங்கள். இந்த லோக க்ஷேமத்துக்காக நானே லாவண்ய கௌரி விரதத்தை ஆரம்பிக்கிறேன்' என்று விரதம் தொடங்கினார். அந்த விரதத்தை சகல ரிஷிகளும் ஆசிர்வதித்து, இந்த விரதத்தை யார் அனுஷ்டித்தாலும் அவர்களுக்கு எங்கள் பரிபூரண ஆசிகள் உண்டு. அவர்களின் விருப்பங்கள் யாவும் எங்களால் நிறைவேற்றப்படும் என்று அன்னையிடம் உறுதி அளித்தார்கள்.
தேவியும் சகல ஜீவன்களின் நன்மைக்காக இந்த விரதம் இருந்து, சகலரையும் வாழவைத்து, இறுதியில் கூவம் என்னும் தலத்தில் அருளும் தீண்டாத திருமேனியான ஈசனிடம் (திரிபுராந்தகர்) கலந்தார் என்கிறது புராணம்.

இந்த விரதம் இருப்பது எப்படி?
1. அதிகாலையில் எழுந்து நீராடி மஞ்சள், சந்தனம், குங்குமம் மூன்றும் தரித்து, மூன்று திரிகளுடன் கூடிய பசு நெய் தீபம் ஏற்றி, அகத்தியர், அத்திரி, அனுசுயா, சஸபதி , ஸ்ரீஹேலை உள்ளிட்ட ரிஷிகளை மானசீகமாக வணங்கி விரதத்தைத் துவங்க வேண்டும்.
2. மௌனம், உபவாசம் இந்நாளில் இருப்பது நல்லது.
3. 60 வயதிற்கு மேற்பட்ட ஒரு தம்பதிக்கு பாத பூஜை செய்து, அந்த சுமங்கலிப் பெண்மணிக்கு கால் விரல்களில் மெட்டி அணிவித்து இருவரையும் 3 முறை வலம் வந்து வணங்க வேண்டும்.
4. இருவருக்கும் உணவு படைத்து துணிகள், மஞ்சள், குங்குமம், தாலிச் சரடு, வெற்றிலை, பாக்கு, பூ, தேங்காய், பழம், வளையல், கண்ணாடி, சீப்பு, மெட்டி, இனிப்புகள் போன்ற மங்கலப் பொருட்களை வழங்க வேண்டும்.
5. இந்த விரதத்தில் தாமரை மலர்கள், செவ்வரளி, அட்சதை மலர்கள் வைத்து அம்பிகையை வழிபடுவது விசேஷம்.
6. மாலையில் சிவாலயத்தில் வழிபட்டு விரதத்தை முடிக்கலாம்.
இந்த நாளில் கூவம் என்னும் ஊரில் எழுந்தருளி உள்ள தீண்டாத் திருமேனியராக விளங்கும் இந்தச் சிவலிங்கத்தை தரிசிக்க பூரண பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
இந்த விரதத்தை கவனத்தோடு செய்யும் பெண்களுக்கு நிச்சயம் மாங்கல்ய பலம் கிட்டும். அற்புதமான வரன் அமையும். திருமண வாழ்க்கை சுகமாக மலரும். அம்பிகை இருந்த ஸ்ரீலாவண்ய கௌரி விரதம், உறவு பலத்தை அளிக்கும் அற்புத வழிபாடு என்றே ஆன்மிகம் சொல்கிறது.