ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

தீமைகள் அழியட்டும்

ஶ்ரீமகாசுதர்சன ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீமகாசுதர்சன ஹோமம்

இனிதே நிறைவுபெற்றது ஶ்ரீமகாசுதர்சன ஹோமம்

திருமாலைவிட்டு ஒரு நொடிகூடப் பிரியாது அவரைத் தொழும் நித்யசூரி ஶ்ரீசுதர்சனர். இவரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள் விலகும். ராஜ மந்திரங்களில் ஶ்ரீசுதர்சன அஷ்டகமும் ஒன்று. அதை தினமும் சொல்ப வருக்கு எந்த பயமும் அணுகாது.

மேலும், சக்கரத்தாழ்வாரை வழிபடுவதால், முன் பிறவிகளில் செய்த பாவங்கள், அதன்வழித் தொடரும் தோஷங்கள், அச்சங்கள், தீங்குகள், தீவினைகள், துன்பங்கள் முற்றிலும் நீங்கும். கடன் தொல்லை, தீயசக்திகளின் தொல்லைகள் விலகும். எதிரிகள் பயம் நீங்கி ஆனந்த வாழ்வு கிட்டும். சுதர்சனரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்து, சிவப்பு வஸ்திரம் சாத்தி, சுதர்சன காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டு அருள்பெறலாம்.

ஶ்ரீசுதர்சனர், ராம அவதாரத்தில் ஶ்ரீராமரின் வில்லில் இருந்தார். பரசுராமரின் ஏர்க் கலப்பையாக இருந்தார். கிருஷ்ண அவதாரத் தில் சக்ராயுதமாகவே இருந்து துஷ்ட நிக்கிரஹம் செய்தார்.

தீமைகள் அழியட்டும்



இத்தகு மகிமைகள் நிறைந்த ஶ்ரீசுதர்சனரை, `சுதர்சன ஹோமம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு. சுதர்சன ஹோமத்தில் கலந்துகொள்வ தாலும் உரிய சங்கல்பம் செய்து பிரார்த் திப்பதாலும் நம்முடைய சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கும்; நோய்கள் விலகும் என்கின்றன ஞான நூல்கள்.

அவ்வகையில் வாசகர்களும் அவர்களின் குடும்பத்தாரும் உற்றார் உறவினர்களும் பலன்பெறும் பொருட்டு, 20.11.22 ஞாயிறு அன்று திண்டிவனம் அருகில் இறையானூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஶ்ரீமகாசுதர்சன ஹோமம் சிறப்புற நடைபெற்றது.

திண்டிவனத்துக்கு அருகே சென்னை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந்துள்ளது இறையானூர். இங்கு ஶ்ரீதேவி பூதேவி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஆதிகேசவப் பெருமாள்.

கேசன்-கேசி எனும் அசுரரை அடக்கி, அவர்கள் மீது ஆதிசேஷனை அமர்த்தி பாம்பணை யாக்கிக் கொண்டு சயனித்ததால், திருமாலுக்கு `கேசவன்' என்ற திருநாமமும் உண்டானது என்கிறது புராணம். இந்த அசுரர்களுக்கு அஞ்சி தேவர்கள் ஒளிந்திருந்த திந்திரிவனத்துக்கு (திண்டிவனம்) வந்து காட்சி தந்தாராம் கேசவர். இங்ஙனம், இறைவன் திருமால் கேசவனாக தேவர்களுக்கு முதன்முதலில் அருளிய தலம் என்பதால் அது `இறைவனூர்' என்றானது. இங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் தனிச் சந்நிதியில் அபூர்வ கோலத்தில் எழுந்தருளி உள்ளார் ஶ்ரீசுதர்சனர்.

தீமைகள் அழியட்டும்



அற்புதமான இந்த ஆலயத்தில், சக்தி விகடனும் கோயில் நிர்வாகமும் இணைந்து நடத்திய சுதர்சன ஹோமம் சிறப்புற நிகழ்ந்தது. பதிவு செய்துகொண்ட வாசகர்கள் அனைவரின் பெயரிலும் முறைப்படி சங்கல்பம் செய்யப்பட்டு அவர்களின் பிரார்த்தனைகள் ஶ்ரீசுதர்சனரின் திருவடியில் சமர்ப்பிக்கப்பட்டன.

காஞ்சிபுரம், சென்னை, புதுச்சேரி ஆகிய ஊர்களிலிருந்து திரளான வாசகர்கள் வந்திருந்து ஹோம வழிபாட்டில் கலந்து கொண்டனர். உள்ளூர் பெண்களின் கும்மி, அம்மானை ஆட்டம் என களைகட்டியது வைபவம்.

``இறைப்பணியில் சக்திவிகடனின் பங்கு அளப்பரியது. இதுபோன்ற அபூர்வ வழிபாடுகளில் சங்கல்பம் செய்து வழிபட வாய்ப்பு கிடைத்த தில் மிக்க மகிழ்ச்சி. இதோ... கும்மி அம்மானை ஆட்டம் எல்லாம் எங்களின் பால்ய பருவத்தை ஞாபகப்படுத்துகின்றன. மட்டுமன்றி, எங்களின் மனப் பாரம் எல்லாம் குறைந்தது போன்று உணர்கிறோம். பெருமாள் திருவருளால் எங்களின் பிரச்னைகள் எல்லாம் விரைவில் தீரும் என்று நம்புகிறோம்’’ என்று பல்லாவரம் வாசகத் தம்பதி சண்முகம்-காஞ்சனா நெகிழ்ச்சியுடன் தெரிவிக்க, மற்ற வாசகர்களும் அதை ஆமோதித்தார்கள்.

சக்தி விகடன் வாசகர்கள்
சக்தி விகடன் வாசகர்கள்

அவர்களின் நம்பிக்கை நிச்சயம் பலிக்கும். பெருமாள் திருவருளாலும் சுதர்சனரின் அருள் கடாட்சத்தாலும் ஒவ்வொருவர் வாழ்விலும் சந்தோஷம் பொங்கிப் பெருகும்!