ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

முருகன் அருளால் முதல் கீர்த்தனை!

முத்துஸ்வாமி தீட்சிதர்
பிரீமியம் ஸ்டோரி
News
முத்துஸ்வாமி தீட்சிதர்

முத்துஸ்வாமி தீட்சிதர்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் முத்துஸ்வாமி தீட்சிதர். இவருக்குக் காசியில் வைத்து அம்பாள் மந்திரத்தையும், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் உபதேசித்தவர் சிதம்பரநாத ஸ்வாமிகள். அத்துடன், ``திருத்தணிக்குப் போய் முருகனை வழிபடு. முருகன் உனக்கு தரிசனம் தந்து அருள் புரிவான்’’ என்றும் வழி காட்டினார்.

முத்துஸ்வாமி தீட்சிதர்
முத்துஸ்வாமி தீட்சிதர்


அதன்படி திருத்தணியை அடைந்த முத்துஸ்வாமி தீட்சிதர், முருகனை தரிசிக்க மலை ஏறியபோது வழியில் முருகப் பெருமான் வயோதிகர் ஒருவரின் வடிவில் வந்து, ‘‘முத்துஸ்வாமி... வாயைத் திற!’’ என்றார். முத்துஸ்வாமி தீட்சிதர் வாயைத் திறந்தார். அவர் வாயில் கற்கண்டைப் போட்ட முருகன், ஆசி கூறினார்.

உள்ளச் சிலிர்ப்போடு முத்துஸ்வாமி தீட்சிதர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் உண்மையான வடிவைக் காட்டி மயில் மேல் ஏறி, அபயம் அருளி மறைந்தார் முருகப் பெருமான். ஆனந்தக் கண்ணீர் பெருக ஆறுமுகனைத் துதித்து, ‘நாதாதி குரு குஹோஜயதி’ என்ற கீர்த்தனையைப் பாடினார் தீட்சிதர். அவரது முதல் கீர்த்தனம் இதுவே. பின்னாளில் முத்துஸ்வாமி தீட்சிதர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

திருவாரூரில் இருந்த தம்பியப்பன் என்பவன் தீராத வயிற்று வலியால் துடித்தான். ‘குரு, சனி ஆகிய கிரகங்களின் பலம் போதாது அவனுக்கு. அதனால் விளைந்ததே இந்தத் துன்பம்’ என்று அறிந்தவன், முத்துஸ்வாமி தீட்சிதரின் திருவடிகளில் விழுந்து, தனது நோயைத் தீர்க்க வேண்டினான். குரு, சனி ஆகிய இரண்டு கிரகங்கள் மீதும் கீர்த்தனைகளைத் தம்பியப்பனுக்குச் சொல்லிக் கொடுத்து, ‘‘பக்தியோடு பாடி வா! நோய் தீரும்’’ என்றார். அதன் படியே நடந்தது.

பூரண குணமான தம்பியப்பன் முத்து ஸ்வாமி தீட்சிதரை தரிசித்து வணங்கி, ‘‘ஸ்வாமி! நவக்கிரகங்களின் கோபத்திலிருந்து மக்கள் தப்பி, கிரகங்களின் அருள் பார்வை பெற வேண்டும். ஆகவே, மற்ற கிரகங்கள் மீதும் கீர்த்தனைகள் செய்து அருள வேண்டும்’’ என வேண்டினான். அவனுடைய அந்த விருப்பத்தையும் நிறைவேற்றி அருளினார் முத்துஸ்வாமி தீட்சிதர்.

- பி.சந்திரன், சென்னை-44