`பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்' என்று போற்றப்படும் அழகிய மணவாள தாசர் திருமாலை வியந்து பாடிய நூல்கள் 8. அவை அத்தனையும் வைணவத்தில் தேன் சொட்டு என்பார்கள்.
திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து மாலை, திருவரங்கத்தந்தாதி, ரங்க நாயகர் ஊசல் திருநாமம், திருவேங்கட மாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்பன அவை.
திருமலை நாயக்கரின் அமைச்சராக அரசவையில் பணிபுரிந்து இவர் எழுதியதில் திருவரங்கக் கலம்பகத்தில் உள்ள பாடல் பிரசித்தமானது. இது அகரவரிசைப் பாடலாகவும் உள்ளது.

`அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
ஆலிமா முகிலை வாலி காலனை
இந்த ளூருறை எந்தைபெம் மானை
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை
உள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை
ஊரகம் நின்றருள் நீரகத் தடிகளை
எவ்வுள் மாயனைத் தெய்வநா யகனை
ஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை
ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை
ஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே! ஓதநீர் ஞாலத் துழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே.'
சகல உயிர்களிலும் உறையும் மாலவன், இந்த பாடலை பாடினாலோ படித்தாலோ நெக்குறுகுவான் என்பது பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் நம்பிக்கை!