Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 28

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

இந்திரா செளந்தர்ராஜன்

ரங்க ராஜ்ஜியம் - 28

இந்திரா செளந்தர்ராஜன்

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

மணவாளன் மாறன் மனமுரைதான் வாழி

மணவாளன் மன்னுகுலம் வாழி - மணவாளன்

வாழி முடும்பை வாழி வட வீதிதான்

வாழியவன் உரை செய்த நூல்...


ரங்க ராஜ்ஜியம்
ரங்க ராஜ்ஜியம்

கிருஷ்ணராய உத்தம நம்பி, தம்முடைய காலத்தில் திருவரங்கம் கோயிலில் ஏராளமான திருப்பணிகளை மேற்கொண்டார். திருவரங்க யானை மண்டபம் இவரால் சீரமைக்கப் பட்டது. இதனால் இவருக்கு யானையின் அங்குசமான பூமாங்குத்தி என்கிற புஷ்பம், மரியாதை நிமித்தம் அளிக்கப்பட்டது. இந்த மரியாதை இன்றும் தொடர்கிறது எனத் தெரிகிறது.

பின்னர் இவர், எம்பெருமானுக்கென்று திருப்பள்ளிக்கட்டில் எனும் திவ்ய சிம்மாசனத் தையும் செய்து தந்தார். இன்று இந்தக் கட்டில் இல்லை; காலத்தால் அழிந்திருக்கலாம். எனினும், இன்றும் திருக்கார்த்திகை நாளில் திருமுகப்பட்டயம் வாசிக்கும் தருணத்தில் இந்தக் கட்டிலும் குறிப்பிடப்படுகிறது. கிருஷ்ணராய உத்தம நம்பி 99 வருடங்கள் வாழ்ந்ததாகத் தெரிகிறது.

இவரைத் தொடர்ந்து நாகமங்கலம் அண்ணப்ப உடையார் என்பவர் கைங்கர்ய பரராகத் திகழ்ந்ததை அறிய முடிகிறது. இவர் காயத்ரீ மண்டபத்தில் உள்ள அமுது மண்டபத் தூண்களுக்குச் செப்புத் தகடு சேர்த்தும், அவற்றின் மீது பொன் முலாம் பூசியும் செப்பனிட்டாராம். இதன் பின்னர் திம்ம ராகுத்தர், ஹரிஹர ராயர் போன்றோரும் திருப்பணிகளைத் தொடர்ந்தனர்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் வைஷ் ணவ நெறியைப் பின்பற்றவிரும்பியும், பெரும் தொண்டாற்றவும் முன்வருவோருக்குக் குருமுகமாய் சங்கு, சக்கர திரு இலச்சினையை இரு தோள்களிலும் சாதிப்பது ஒரு வழக்க மாயிருந்தது.

இதை உடையவர் சந்நிதியில் கந்தாடையார் செய்து வந்தனர். மிலேச்சர் படையெடுப்பு, அதனால் உண்டான அழிவுக்குப் பிறகு, சிறிது காலம் இவ்வழக்கம் நின்றுபோனது. பின்னர் 1383-ல் மீண்டும் இவ்வழக்கம் நடை முறைக்கு வந்ததை சரித்திரக் குறிப்புகளால் அறியமுடிகிறது.

எம்பெருமானின் திருவடிகளில் எழுந் தருளப் பண்ணப்பட்ட சங்கு சக்கராதிகளை நெருப்பில் இட்டுக் காய்ச்சி, ஒருவரின் தோள் களில் இலச்சினைகளாய்ப் பொறிப்பது வழக்கம். வேதாச்சார்யா பட்டர் என்பவரால் மீண்டும் தொடங்கப்பட்ட இந்த வழக்கம், கி.பி.1418 வரை தொடர்ந்தது. அதன்பிறகு விகாரி வருடத்தில் கந்தாடை வம்சத்தவர்கள் மீண்டும் தொடர்ந்ததாகத் தெரிகிறது.

திருவரங்கம் கோயில்
திருவரங்கம் கோயில்
உற்சவ மூர்த்தி
உற்சவ மூர்த்தி

திருவரங்கம் கோயிலின் வரலாற்றில் பெரிய கருட மண்டபத்துக்கும் பல சிறப்புகள் உண்டு. ரங்கநாராயண ஜீயரின் வழியில் 5-வது மடாதிபதியாக பட்டத்துக்கு வந்தவர் உத்தமர்கோவில் ரங்கராஜர். இவர், தற்போது காட்சி தரும் பெரிய கருடனுக்குப் புனுகு சாற்றி, கருட சாந்நித்தியத்தை விளங்கச் செய்தவர். இவ்வாறு இவர் புனுகு சாற்றி வழிபடும் முன் இங்கே தாமிரத்தாலான கருடன் சிலை இருந்ததாகவும், இது மிலேச்சர் படையெடுப்பின்போது சேதப்படுத்தப் பட்டதாகவும் தெரிகிறது.

இங்கே உற்சவ மூர்த்தியாக இருந்த கருடன் சிலை, மிலேச்சர்களின் வசப்படாமல் இருக்க, பக்தர்களால் கோயிலின் கிழக்குப் பகுதியில் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாம். அதையும் ரங்கராஜ ஜீயர் தன் காலத்தில் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். அப்படியே சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நரசிம்மரைப் பிரதிஷ்டை செய்ததும் இவரே. இங்ஙனம், உத்தமர்கோவில் ரங்கராஜர் 25 வருடங்கள் பொறுப்பில் இருந்து பல திருப் பணிகள் செய்தார்.

இவர் காலத்தில்தான் உத்தம நம்பி என்பவர் ஆலய கார்யமாக இருந்தார். இவரது ஆசார்யரே பெரிய நம்பி. இந்தக் காலகட்டத் தில்தான் ராமாநுஜரின் அடியொற்றியும் அவரின் பிரதிபிம்பமாகவும் திகழ்ந்த மணவாள மாமுனிகள் திருவரங்கம் ஏகினார். வைஷ்ணவத்தைக் கசடற கற்றுத் தெளிந்து வைஷ்ணவனாய் வாழ விரும்புவோர் அவசியம் அறியவேண்டியவை... திருவரங்க வரலாறு, ராமாநுஜர் வரலாறு, வேதாந்த தேசிகன் வரலாறு, மணவாள மாமுனிகள் வரலாறு ஆகும்.

இத்தொடரில் ராமாநுஜர், வேதாந்த தேசிகன் குறித்து அறிந்துகொண்டோம். இனி நாம் அறிய வேண்டியது மணவாள மாமுனிகளின் வரலாறேயாகும்.

கலி வருடம் 4471; கி.பி 1370-ல் ஒரு ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் ஒரு வியாழக் கிழமையன்று (24.10.1370-ல்) அவதரித்தவர் மணவாள மாமுனி. இவர் பிறந்தது ஆழ்வார் திருநகரியில் என்றும், சிக்கில்கிடாரத்தில் என்றும் இரண்டு கருத்து கள் நிலவுகின்றன. அவற்றில் தெளிவில்லை. ஆனால், பிறந்த நாள்-நட்சத்திரத்தில் குழப்பம் இல்லை.

இவரின் தந்தையார் திருநாவீறுடைய பிரான். தாயாரின் பெயர் ரங்கநாச்சியார். பெற்றோர்களாகிய இவர்கள் இவருக்கு இட்ட திருநாமம் அழகிய மணவாளன். இதுவே காலத்தால் மணவாள மாமுனி என்றாகி இன்றளவும் சிந்திக்கப்படுகிறது.

இவரை வைணவக் கோட்பாடுகளுக்குள் ஆஸ்ரயித்தே இவரின் தந்தையார் வளர்த்ததாகத் தெரிகிறது. மூன்று வயதாயிருக்கும்போதே, தன் மேனியில் பளீரென திருமண் காப்புத் தரித்துக் கொள்வாராம் அழகிய மணவாளன். மட்டுமன்றி, தந்தையார் சந்தியாவந்தன உபாகர்மத்தைச் செய்யும்போது, இவரும் அதுகுறித்து கவனித்து அதேபோல செய்வாராம்.

ஐந்து வயதிலேயே இவருக்கு விஷ்ணு சகஸ்ர நாமம் மனனமாகிவிட்டிருந்ததாம். ஆறு வயதில் இவருக்கு உபநயனம் செய்துவைத்து பிரம்ம வித்தாக்கிய இவரின் தந்தை, அதன்பிறகு தினமும் மூன்று வேளை சந்தியை விடாது செய்யும்படி ஆட்படுத்தினார்.

இதன் பொருட்டு தந்தை திருநாவீறுடையார் சந்தியா வந்தனம் குறித்து செய்த உபதேசம் இவரின் மனதில் பசைபோட்டது போல் ஒட்டிக்கொண்டு விட்டது. பின்னாளில் இவர் திருவரங்கம் ஆலயத்தில், பக்தர்களிடையே உபன்யாசம் செய்கையில் ‘சந்தி’ குறித்து அழுத்தமாய் பேசிட அதுவே காரணமானது. அந்தப் பேச்சின் சாரம் ஆழ்ந்த பொருளுடையது.

பிராமணர் ஒருவர் உரிய கடமைகளால் பிறப்பின் நோக்கத்தை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்பது அவரின் உபதேசமாக இருந்தது. அவர்கள் சந்தியாவந்தனம் செய்வதன் அவசியத்தையும் விரிவாக விளக்குவார் அழகிய மணவள மாமுனிகள்.

``பக்த மகா ஜனங்களே! ஓர் உயிர் இம்மண்ணில் பிறப்பது... அதிலும் மனிதராய் பிறக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். குறிப்பாக பிராமணப் பிறப்பு என்பது பொறுப்பும் சுமையும் நிறைந்தது. சுமை என்ப தைக் கடன் என்றும் கூறலாம். ஆம்! அது ஒரு கடன்காரப் பிறப்பு. அதுவும் மூவகைக் கடன்கள் உண்டு.

ஒன்று ரிஷிகளுக்கான கடன். அடுத்தது தேவர்களுக்கான கடன். மூன்றாவது பித்ருக் களுக்கான கடன். இந்தக் கடன்களை அடைப்பதற்காகவே ஒருவன் பிராமணனாகப் பிறக்கிறான்.

அப்படிப் பிறப்பவன், உபநயனம் செய்விக்கப்படுகையில் கடனை அடைக்கத் தொடங்குகிறான். காலையில் சந்தியாவந்தனம் செய்து அர்க்கியம் விடுவதால், ரிஷிக் கடன் அடைபடத் தொடங்கும். மதியம் - நண்பகலில் தேவ கடனும், மாலை அந்திச் சந்தியில் பித்ருக் கடனும் அடைபடத் தொடங்கும்.

இந்தக் கடனை ஒரு பிராமணன் தன் வாழ் நாளில் உயிர்பிரியும் வரையிலும் செய்தாக வேண்டும். தவறினால் கடன் கட்டத் தவறிய பாவம் வந்து சேரும். வட்டி போட்டு கடன் கட்டுவது போல், மீண்டும் பிறந்து வந்து நெடுங்காலம் வாழ்ந்து இதைச் செய்யவேண்டி வரும். அதேவேளை, தவறாமல் இந்தக் கடமையைச் செய்து வந்தால், அந்தப் பிராமணன் செளந்தர்யனாய்த் திகழ்வான்.

அவன் கேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும்; சொல்வதெல்லாம் அப்படியே நடக்கும். அவரைச் சார்ந்து வாழ்வோருக்கும் எல்லா நலன்களும் உண்டாகும்.

சந்தியாவந்தன உபாகர்மாவும், காயத்ரீ ஜபமும் மிக வலிமையானவை. தெய்வங்களில் விஷ்ணு; விரதங்களில் ஏகாதசி; நதிகளில் கங்கை போன்று, மந்திரங்களில் காயத்ரீயே தலையானது. இந்தக் கருத்தை என் தந்தை எனக்கு உபதேசித்தார்.

அத்துடன் `ஏழையாக கூட இருக்கலாம். கடன்காரனாக மட்டும் இருந்துவிடாதே’ என்றும் வலியுறுத்தினார். அது என் மனதில் தங்கிவிட்டது. ஆகவே நான் இந்தக் கடமையைச் செய்ய தவறியதே இல்லை. நீங்களும் தவற விடக்கூடாது.

ஓர் ஊரில் பிராமணர்கள் இந்தக் கடமை யைக் குறையின்றி செய்து வந்தால், அந்த ஊரே செழிக்கும். காயத்ரீயைத் தினமும் அனுசந்திப்பவருக்கு விரோதிகளே இருக்க மாட்டார்கள்.

காயத்ரீ ஒரு அஸ்த்ரம் மட்டு மல்ல; அது ஒரு சஸ்த்ரமும் கூட. அஸ்த்ரம் என்பது புலன்களுக்குப் புலனாவது; சஸ்த்ரம் புலனாகாதது. அவ்வளவே வித்தியாசம். இதை யெல்லாம் நன்கு உணர்ந்து பிராமணர்கள் தங்களின் கடமையை ஆற்ற வேண்டும்.

பிராமணப் பெண்டிரும் இக்கடமையைக் குறித்து அறிய வேண்டியது ஒன்று உண்டு. அவர்கள் தாங்களும் இதுபோல் கடமையாற்றத் தேவையில்லை. தேகம் தொடர்பான அசெளகரியங்கள் மற்றும் பிள்ளைப்பேறு முதலான காலகட்டங்களில் இந்தக்கடமையை அவர்களால் செய்ய இயலாது. அதேநேரம், `இக்கடமையை இயலும்போது செய்யலாம்’ என்பதும் கூடாது. மூச்சுவிடுவது போன்று இதுவோர் இடையறா கடமையாகும்.

ஒவ்வொரு சந்தியாவந்தனத்தின் பயனிலும் சரிபாதி, அதைச் செய்பவனின் பத்தினியைச் சென்றடைகிறது. சொல்லப்போனால் தனக்காக இல்லாவிட்டாலும் தன் பத்தினிக்காக இக்கடமையை ஒரு பிராமணன் செய்தாக வேண்டும்.’’

இப்படியாக அழகிய மணவாள மாமுனி களின் உபதேசம் தொடர்ந்தது!

- தொடரும்...