திருக்கதைகள்
Published:Updated:

ரங்கராஜ்ஜியம்-31

ரங்கராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்கராஜ்ஜியம்

ரங்கராஜ்ஜியம்

`திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே

பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே...'

ரங்கராஜ்ஜியம்
ரங்கராஜ்ஜியம்


இறைவனுக்கு நாம் சாற்றும் மலர்களின் பின்னே நாம் உணர்ந்திட ரசமான செய்திகள் இருப்பதாக மணவாள மாமுனி கள் கூறவும் எல்லோரிடம் ஒரு அதீத எதிர்பார்ப்பு. மாமுனியும் அதை பற்றி கூறத் தொடங்கினார்.

``எம்பெருமானின் சிருஷ்டியில் உன்னதமா னவை மலர்களே. ஐம்பூதங்களுக்கும் மலர்கள் மட்டுமே முழுமையான பெருமையைச் சேர்க்கின்றன. மண்ணில் புதைந்து, நீரைக் குடித்து, நிலம் பிளந்து வெளிவந்து, காற்றில் அசைந்து, ஒளியை வாங்கித்தான் மலர்ச் செடிகள் மலர்களைத் தருகின்றன.

மற்ற தாவரங்களும் இப்படித்தான் காய் கனிகளைத் தருகின்றன. ஆனால் மலர்கள் மட்டுமே கண்களுக்கு இனியதாகி, பல வண்ணங்கள் கொண்டு, ஒளிக்குப் பெருமை சேர்க்கின்றன. மணத்தைப் பரப்பிக் காற்றுக் கும், தேனைத் தந்து நீருக்கும், மென்மையாக விளங்கி நிலத்துக்கும், வெளியில் பரவி காட்சியாகி வெளிக்கும் பெருமை சேர்க்கின்றன. பஞ்சபூதங்களின் சமநிலை மலர்களிடம்தான் மிகுதியாக உள்ளன.

`காயோ, கனியோ புளிக்கவும் செய்யலாம்; இனிக்கவும் செய்யலாம். சில வெம்பிப் போக லாம். ஆனால் மலர்களில் தீயதோ, குணம் கெட்டதென்றோ ஒன்றில்லை. அதனால் மலர்கள் எனக்கு மிகப் பிரியமானவை. அந்த மலர்களைக் கொண்டு மாலை தொடுப்பவர் களும் மிகப் பிரியமானவர்கள்' என்கிறார் அந்த மகாவிஷ்ணு.

இந்தக் கருத்தை வைகுண்டத்தில் லட்சுமிப் பிராட்டியிடமும் எம்பெருமான் எடுத்துக் கூறினார். உடனே லட்சுமிப் பிராட்டிக்கு, தானும் அப்படி ஒரு மலர்ப் பெண்ணாக மாறவேண்டும் எனும் எண்ணம் தோன்றியதாம். வைகுண் டத்தில் எம்பெருமானின் காலடியில் கிடப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இவருக்கு மிகப்பிரியமான மலர்ப் பெண்ணாக மாறி ஓர் அவதாரம் எடுத்தால் என்ன என்று தோன்றியதாம். அப்படி அவள் ஆசைப்பட்டு எடுத்ததே ஆண்டாள் அவதாரம்!''

இங்ஙனம் மணவாள மாமுனிகள் சொல்லி நிறுத்தவும் கூட்டத்தில் இருந்த பெண்கள் எல்லோருமே ஒருவரை ஒருவர் பார்த்து தங்களுக்குள் வியப்பைப் பரிமாறிக் கொண் டனர். இது புதிய கருத்து. கற்பனை கருத்து. ஆனாலும் கேட்க இனிதாய் இருக்கிறதே?

ஆண்டாளின் திருச்சரிதம்
ஆண்டாளின் திருச்சரிதம்

அதேவேளை மகாலட்சுமியைக் கருவில் சுமக்கும் கணக்கும் ஜாதக பலமும் உடைய ஒருவர்தான் அப்போது பூவுலகில் இல்லாது போய்விட்டார். இதனால் அயோனியாக அதாவது எந்த ஒரு கர்ப்பவாசத்திற்கும் இடம் தராமல் ஒரு பெண் குழந்தையாக மாறி பூதேவியின் மடியில் அவள் மகளாக விழுந்துவிட தீர்மானம் செய்தாள். அப்படித் தீர்மானித்ததுபோலவே திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் மலர் வனத்தில் தோன்றவும் செய்தாள்.

ஓர் ஆடித் திங்களில், நல்ல வளர்பிறை நாளில், பூரம் நட்சத்திர காலகதியில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. பெரியாழ்வார் தன் தோட்டத்து நிலத்தை கோதி வரும் தருணத்தில்... கோதி வந்த அந்தக் கலப்பையின் முன்னால் பெரியாழ்வாரின் கண்ணில் பட்டு நட்சத்திர மின்னலாக அந்தப் பெண் குழந்தை சிரித்தது.

பெரியாழ்வார் சிலிர்த்துப் போய் அந்தக் குழந்தையை தொட் டுத் தூக்கினார். இங்கே ஒரு செய்தியும் உண்டு. பெரியாழ்வார் அன்று அதிகாலையில் ஒரு கனவு கண்டாராம். அக்கனவில் மகாலட்சுமி அவர் இல்லம் புகுந்து அவரின் தோள்மேல் தன் தலை சாய்த்து `அப்பா...' என்றாளாம். நொடியில் அக்கனவு கலைந்து அவரும் கண் விழித்தாராம்!

அந்தக் கனவுக்கான பொருள், மலர் வனத்தில் குழந்தை ஆண் டாளை பார்க்கையில் அவருக்கு புரிந்துவிட்டதாம். `அம்மா என் பிள்ளையில்லா குறை தீர்க்க நீயே வந்துவிட்டாயா? கனவில் வந்து கட்டியம் கூறினாய். நிஜத்தில் இதோ என் கைகளில் கிடக்கிறாய் இது நான் செய்த பாக்கியம்... நான் செய்த பாக்கியம்...' என்று குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்தார்.

திரும்பி வந்து தன் மனையாள் வசம் குழந்தையைத் தந்து `இது அவன் தந்த பரிசு. இவள் அந்த பூதேவி... அந்த தேவி...' என்று சிலிர்த்துப்போகிறார்.

நிலம் கோதும் போது கிடைத்த தால் `கோதை' என்கிற பெயர் அப்போது அவளுக்கானது. இப்படிக் கோதையாகப் பிறந்தவள், எம்பெருமானின் விருப்பப்படி எப்படி மலர்ப்பெண்ணானாள் என்பதை இனி பார்ப்போம்...'' - என்று மணவாள மாமுனிகள் கூட்டத்தாரிடையே ஓர் இடை வெளி விடவும் கூட்டமும் தங்களின் கோதையின் கதையை அவர் வாயிலாக மேலும் தெளிவுபட தெரிந்துகொள்ளத் தயாராயிற்று.

மணவாள மாமுனிகளும் கோதை எனும் ஆண்டாள் பிராட்டியின் வரலாற்றைக் கூறத் தொடங்கினார். அதில் ஒரு விவேகமும் காட்டலானார்.

“வில்லியின் திவ்ய பெருமக்களே! உங்களுக்கெல்லாம் ஆண்டாளின் திருச்சரிதம் நன்கு தெரியும். அவள் பெரியாழ்வார் கட்டிய மாலையை, தான் சூடிப் பார்த்து அளித்ததும் தெரியும். அதனாலேயே அவள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆனாள் என்பதும் தெரியும். மேலினும் மேலாக... அவள் பாவை நோன்பு நோற்றுப் பாடல்கள் பாடி, உங்களுக்கெல்லாம் வழிகாட்டினாள் அல்லவா..? நான் இப்போது அந்தத் திருப்பாவை பாடல் தொட்டே நுட்பமான பல செய்திகளை உங்களோடு பகிரப்போகிறேன்.

அவள் அவதாரம் எடுத்து வந்ததே உங்களுக்கு வழிகாட்டத்தான். அவள் காட்டிய வழியில் அவளே நடந்து சென்று அவனை அடைந்தும் காட்டியதுதான் இதில் தீரம். நீங்களும் அவள் காட்டிய வழியில் பாவை நோன்பு நோற்றுப் பக்தி செய்தால், அவனது திருவடி நிழலில் சென்று சேரலாம்.

அவனை அடைய எவ்வளவோ வழிகள்... ஆசார்ய மார்க்கம், அனுஷ்டான மார்க்கம் என்ற வழிகளும் இரண்டு உண்டு. இதில் அனுஷ்டானங்களும் ஆசார்ய மும் கலந்த மார்க்கமாய்த் திகழ்வதே பாவை நோன்பு.

அதிகாலை கண்விழித்து, குளிர்ந்து நீராடி, அலங்காரங்கள் தவிர்த்து, அந்த ஆண்டாளை மனதில் எண்ணிக்கொண்டு, அவளது திருப்பாவைப் பாடல்களை மனதில் பாடியபடி எம்பெருமான் குடி கொண்டிருக்கும் ஆலயத்திற்குச் செல்லவேண்டும். அங்கே அவனின் திருமுன் நின்று `எம்பெருமானே என்னையும் உன் ஆண்டாளாகவே கருதி ஆட்கொள் வாயாக' என்று வேண்டிக் கண்ணீர் மல்கிட பக்தி புரிதல் வேண்டும். இதில்தான் பெண் மக்களாகிய உங்களுக்கு விமோசனமும், விமுக்தியும் உள்ளன.

இதனால் உங்களின் பூர்வ கர்மங்கள் அகலும். உங்களுக்கான மணவாளனும் உங்களை நோக்கி வருவான். நல்ல சந்தான பாக்கியம் உண்டாகவே உங்கள் வயிற்றில் மணிப்பிள்ளைகள் பிறப்பார்கள்.

மார்கழிச் சத்து உங்களை நோயற்றவர்களாக ஆக்கும். திடத் தேகம், திடச் சித்தம் இரண்டும் ஒருசேர உண்டாகும். உங்கள் வாழ்நாள் முடிவில் ஒரு பூவானது தன் செடியில் இருந்து வலியின்றி உதிர்ந்து விழுவது போல, உங்கள் உயிர் உடம்பைப் பிரிந்து அவன் திருவடி நிழலில் சென்று சேர்ந்து விடும்.

உங்கள் வாழ்வு இப்படிச் சிறக்க வேண்டும் என்றே கோதை வாழ்ந்து வழிகாட்டியுள்ளாள். அவளின் பாசுரம் ஒவ்வொன்றும் வேத மந்திரங்களுக்கு நிகரானது. நம் சமூகத்தில் வேதபாராயணம் என்பது ஆண் மக்களுக்கே உரித்தான ஒன்று. நால்வகை வேதங்கள் - பதினெட்டுப் புராணங்களுடன், உப புராணங்களை ஆராதனை செய்திடும் கடமை ஆண்களுக்கே விதிக்கப்பட்டது.

ஏன் ஒரு பெண் மகளுக்கு அது விதிக்கப்படவில்லை என்றால், அந்த ஆண் மக்களைப் பெற்றுத் தருபவர்களாகவும் அவர்களே இருப்பதால், அவர்கள் தனியே அதை அனுசந்திக்கத் தேவையில்லை என்பது முதல் காரணம். அடுத்து அவர்களின் உடற்கூறும் அவர்கள் கர்பவிதானம் கொண்டிருப்பதும் முக்கிய காரணம். இன்னமும் நுட்பமான காரணங்கள் பல உள்ளன. இதனாலேயே ஒரு வேதபாராயணன், தான் பாராயணம் செய்திடும் வேதத்தின் பலனில் கால் பங்கை தன் தாய்க்கும், இன்னொரு கால்பங்கைத் தன் பார்யைக்கும் கொண்டு சேர்க்கிறான். மீதமுள்ள அரை பங்கே அவன் பங்கு ஆகும்.

எனவே ஒரு வேதகன் தன் சார்புடைய பெண்களுக் காகவாவது பாராயணத்தை விடாது தொடர்ந்திட வேண்டும். இதுவே நம் வாழ்வியலாகும். ஆயினும் `தாங்களும் வேதம் சொல்லி மகிழவேண்டும்' என்கிற நம் பெண் மக்கள் சகலருக்குமாகவே ஆண்டாள் திருப்பாவையை அருளிச் செய்துள்ளாள். நாச்சியார் திருமொழியும் அதுபோன்றதே. இது நம் மண்ணின் பெண்மக்கள் சகலருக்கும் பொதுவானது.

இப்பாடல்களைப் பாடுவோர் சகலரும் ஜீவாத்மாக் கள். அவனே பரமாத்மா. ஜீவாத்மா பரமாத்மாவிடம் சென்று சேர்வதே முக்தி. அந்த முக்திக்கு வழி திருப் பாவை. வழிகாட்டி ஆண்டாள் நாச்சியார்.

அவளை நாம் பெண் ஆசார்யனாகவும் கொள்ளலாம். அவள் அனுஷ்டானங்களும் புரிந்து வழிகாட்டினாள். அதனால்தான் ஆசார்ய மார்க்கம் அனுஷ்டான மார்க்கம் என இரண்டும் கலந்த ஒரு பெரு மார்க்கமாக அவள் திகழ்கிறாள்.

அதனால்தான் அவளால் அந்தப் பரம்பொருளான எம்பெருமானையே ஆளவும் முடிந்தது. ஆள முடிந்த தாலேயே `ஆண்டாள்' என்றும் ஆனாள். இந்த ஆண்டாள் என்பது கடந்த காலம் இல்லை. அவள் எக்காலமும் தன் பக்தியால் அவனை ஆண்டு, அவனுள் கிடந்து, முக்காலத்திலும்... அதாவது நேற்று, இன்று, நாளை என்கிற எக்காலத்திலும் அவள் அவனை ஆண்டவண்ணமே உள்ளாள். அவளை நாம் பற்றிக்கொண்டால் நாமும் நம்முள் அவனை ஆளலாம்.

இங்கே `ஆள்வது' என்பது அதிகாரம் சார்ந்தது அல்ல. `மமகாரம்' சார்ந்தது. அவனை நாம் ஆட்சிப் படுத்தும்போது அவனுடைய கல்யாணக் குணங்கள் எல்லாமும் நமக்கென்றாகி விடுகின்றன. அதனால் நம்முள் பரமக்கருணை, சாந்தம், சந்தோஷம் என்று எல்லாமும் உண்டாகி விடுகின்றன. மனிதர்களாகிய நாமெல்லாம் வேண்டுவதும் அதைத்தானே? அதை நாம் இலகுவாய் எளிதாய் அடைந்திடத்தான் ஆண்டாள் பிராட்டி மண் மீது உதித்து, நல்வழியும் காட்டிச் சென்றுள்ளாள். எனவே அவளை சிக்கென பற்றுவோம்'' - என்று மாமுனிகள் உரை நிகழ்த்தி முடிக்கவும், வில்லிபுத்தூர் வாழ் மக்கள் அவ்வளவு பேரும் அன்று ஒரு புதிய வியாக்கியானம் கேட்ட நிறைவுடன், தாங்கள் வில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு அருகிலேயே வாழ்கிற பேரு பெற்றமைக்காக உள்ளம் குளிர்ந்து போனார்கள்.

மணவாள மாமுனிகள் அங்கேயே மேலும் சில காலம் தங்கியிருந்துவிட்டு, பின்னர் திருவரங்கம் நோக்கிச் செல்லலானார். திருவரங்கமும் மாமுனியின் வருகைக் காகவும், பல மாற்றங்களுக்காகவும் காத்திருந்தது!

- தொடரும்...

பால சயனம்

ஸ்ரீமந் நாராயணன் பள்ளிகொண்ட கோலத்தில் அருளும் திருத்தலங்களில் ஒன்று, கோபுரப்பட்டி. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகில் அமைந்துள்ளது இந்தத் தலம். இங்கே, மூலவர் ஆதிநாயக பெருமாள், தெற்கு நோக்கி மரக்கால் படியுடன், பால சயனத்தில் காட்சி தருவது சிறப்பு. தாயாரின் திருநாமம் ஆதிநாயகித் தாயார்.

இந்தக் கோயிலின் மண்டபத்தில் ஆழ்வார் பெருமக்கள் பன்னிருவரையும் தூண்சிற்பங்களாகத் தரிசிக்கலாம். ஒவ்வொரு தூணிலும் அந்தந்த ஆழ்வாருக்கு உரிய நட்சத்திரம், அவதார ஸ்தலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பம்சம்.

கயா திருத்தலம் போன்று இத்திருக்கோயின் அமைவிடம் திகழ்வதால், இன்றைக்கும் அதிக அளவிலான பக்தர்கள் இங்கு வந்து, திதி கொடுத்துச் செல்கின்றனர்.

- எம். ராமு, சென்னை-44

பத்மவாசினி

தாமரையில் விரும்பி உறைவதால் தாமரையாள், பத்மா, பத்மவாசினி, பத்மினி, நளினி, நளினாசனி, கமலவல்லி, கமலினி, கமலா, நாண்மலராள் என்று பல்வேறு பெயர்கள் திருமகளுக்கு உண்டு. ஆக தாமரைப் பூ சமர்ப்பித்து திருமகளை வழிபடுவது சிறப்பு. அதேபோல் தாமரை பூத்துக்குலுங்கும் திருக்குளங்களில் வசிக்கும் மீன்களுக்கு உணவிடுவதால், லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

வில்வமரத்துக்கு லட்சுமி வாசம் என்பது பெயராகும். அதாவது வில்வத்தில் லட்சுமி வசிக்கிறாள் என்று பொருள். வெள்ளிக் கிழமைகளில் லட்சுமிதேவியை வில்வத்தால் அர்ச்சிப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவார்கள்.

வேதங்கள் திருமகளைப் பலவாறு போற்றுகின்றன.  சூக்தம் அலைமகளைப் போற்றும் முதன்மையான நூல். சிவமகா புராணத்திலுள்ள காசிக்காண்டத்தில் இடம்பெற்றுள்ள பகுதி லட்சுமி பஞ்சகம் ஆகும். இந்தத் துதிகளால் மகாலட்சுமியைப் போற்றி வழிபட்டால் சகல சம்பத்துகளும் உண்டாகும்.

- பா.சங்கரி, கரூர்