Published:Updated:

ரங்கராஜ்ஜியம் - 24

ரங்கராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்கராஜ்ஜியம்

இரண்டாம் பாகம்

ரங்கராஜ்ஜியம் - 24

இரண்டாம் பாகம்

Published:Updated:
ரங்கராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்கராஜ்ஜியம்

திருவரங்கனின் திருச்சந்நிதியில் தினமும் நிகழும் வழிபாடுகளாலும் ஆராதனை களாலும் ததும்பி வழியும் தண்ணருளை, ஒரு கலயத்தில் ஆவிர்பவிக்கச் செய்து, ஆலயத்தில் பொலிவு இல்லாதபடி செய்யவேண்டும் என்று செயல்படத் தொடங்கினான் மாந்திரீகன் ஒருவன்!

ரங்கராஜ்ஜியம் - 24


`இது சாத்தியமா? அரங்கனின் அருளையே ஒருவன் அபகரிக்க இயலுமா?’ என்கிற ஒரு கேள்வி உங்களுக்குள் எழலாம். இங்கேதான் நாம் நம் ஆகம விதிகளை உணர்ந்து சிந்திக்க வேண்டும்.

பரம்பொருளாகிய எம்பெருமான் இந்த உலகைப் படைத்து, இதனுள் பஞ்சபூதங்களைப் படைத்து, பின்னர் எல்லா உயிரினங்களையும் படைத்தார். மேலும் அவற்றை இயக்கும் நிமித்தம் விதிகளையும் வகுத்தளித்திருந்தார். அந்த விதிகள் என்றைக்கும் எவருக்காகவும் எதன் பொருட்டும் மாறாதவை.

அந்த வகையில் தீயென்றால் சுடவேண்டும்; நீரென்றால் பாய வேண்டும்; காற்றென்றால் வீசித் திரியவேண்டும்; நிலம் எனில் கனிமங்களுக்கு ஏற்ப பயன்தர வேண்டும்; ஆகாயம் இவை அனைத்துக்கும் இடம் அளித்திடல் வேண்டும். இங்ஙனம், தான் விதித்த விதிகளில் இறைவன் எந்நாளும் குறுக்கிடுவது இல்லை.

ஆனால், இவற்றால் ஏற்றத்தாழ்வுகள் மிகும்போதோ, வேறு ஏதேனும் உத்பாதம் ஏற்படும்போதோ, அவதாரம் எடுத்து வந்து அதைச் செப்பனிட்டுத் தருவார். அதேபோல், ஆசார்ய புருஷர்கள் மூலம் வழிநடத்தவும் செய்வார். இறைவனின் அலகிலா விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என்று நாம் உணரவேண்டும்.

ஒரு மந்திர சக்தியானது தவறாகப் பயன்படுத்தப்படும்போதுதான், அதை அடக்கி ஒடுக்கவல்ல - அதைவிடவும் மேலான ஒரு சக்திக்குத் தேவை உண்டாகும். அப்படி உருவாகும் மேலான சக்தியானது பெரும் காவலாகவும் விளங்கிடும். திருவரங்கத்தில் மாந்திரீகன் விஷயத்திலும் விதிப்படியே சம்பவங்கள் நிகழ்ந்தன எனலாம்.

சுயநலத்துடன், பிறர் கண்களுக்குப் புலப்படாதவாறு புருவத்திலும் கண்களிலும் மை தரித்துக்கொண்டு, தினமும் கலயத்துடன் வந்து பெருமாளின் தண்ணருளை ஸ்வீகரிக்க லானான் மந்திரவாதி. கோயிலில் பலிபீடத்தில் சாதிக்கப்படும் அன்னத்தையே சாப்பிட்டான். இங்ஙனம் எதற்காகவும் வெளியேறாமல் ஆலயத்தின் உள்ளேயே கிடந்தான்.

ஆலய வழிபாடுகள் நிறைவுற்று ஆலயத்தைத் தாழிட்டுவிட்டு அனைவரும் சென்றபிறகு, மந்திரவாதி தன்னுடைய மந்திரப் பிரயோகங் களால் பெருமாளையே ஆகர்ஷிக்கவும் செய்தான். இதன் விளைவாக திருவரங்கம் பெருமாளின் தோற்றப்பொலிவு - தேஜஸ் குன்றத் தொடங்கியது. சுற்றுச் சூழலிலும் கருமை படர ஆரம்பித்தது. திருவரங்க நகரில் அடிக்கடி விபத்துகள் நிகழத் தொடங்கின. பட்டர்கள் வழுக்கி விழுவதும், ரத்தக் காயம் படுவதும் வழக்கமாயின.

திருச்சந்நிதியிலும் நகரிலும் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த ஜீயரும் அறிஞர்களும் இதுகுறித்து கூரநாராயண ஜீயரிடம் பிரஸ்தாபித் தார்கள். அவரும் அரங்கனின் கோயிலுக்கு எழுந்தருளினார்.

அங்கே ஓர் இடத்தில் அமர்ந்து மந்திர தியானத்தில் மூழ்கினார். அங்ஙனம் கூரநாராயண ஜீயர் தியானத்தில் அமர்ந்திருப் பதை மந்திரவாதியும் கண்டுகொண்டான். ஆனால் அவனைக் கூரநாராயண ஜீயர் கண்டுகொள்ள முடியாதபடி, மாந்திரீகனின் மாயாஞ்சனம் காப்பாற்றிக்கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் ஆடிப்பெருக்குத் திருநாள் வந்தது. அதன் பொருட்டு எம்பெருமா னும் நாச்சியார் பிராட்டியும் காவிரி ஆற்றில் தெப்பத்தில் அனைவருக்கும் சேவை சாதித்தனர். இதற்கு ‘திருப்பள்ளி ஓடம்’ என்று பெயர்.

எவரின் கண்களுக்கும் புலப்படா வண்ணம் ஆலயத்துக்குள் திரிந்துகொண்டிருந்த மாந்திரீகன், காவிரியில் திருப்பள்ளி ஓடம் நிகழும்போது, தானும் ஓடத்தில் ஏறிக்கொள்ள வேண்டும்; சட்டென்று ஓடத்தைத் திசை திருப்பித் தனது போக்குக்குக் கொண்டு சென்று, மூர்த்தங்களையும் கவர்ந்து செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான்.

ஆனால், எதிர்பாராதவிதமாக இந்த வைபவத்தின்போது காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஓடம் கட்டுப்பாட்டை இழந்தது. வெள்ளம் அதை இழுத்துச் செல்லும் நிலை! அருகிலிருந்த கூரநாராயண ஜீயர், தன்னுடைய மந்திர ஸித்தியினால் ஒரு பெரும் காரியம் செய்தார்.

தர்ப்பைப் புல்லால் ஆன பவித்ரத்தை ஆற்றின் நீர்ப்பரப்பில் தொடும்படி வைத்து, மந்திரப் பிரயோகம் செய்தார். அவ்வேளையில் நீரின் விசையை மீறி, திருப் பள்ளி ஓடம் அப்படியே நேர் எதிராகத் திரும்பி, எவ்வித பாதிப்பும் இன்றிக் கரையை அடைந்தது. ஆம்! அவரின் பவித்ரம் வலிமையான துடுப்பாக மாறி, தன் மகிமையை எல்லோரும் உணரும்படி செய்தது.

இதற்குப் பிறகு திருப்பள்ளி ஓடம் காணும் வைபவம், திருக்குளத்தில் நடக்கும் தெப்போத்ஸவமாக மாறியது. இப்படியான மாற்றத்துக்கு, அப்போது திருக்கோயில் அதிகாரியாகத் திகழ்ந்த முதலியாண்டானும், அவரின் பேரனான கந்தாடை தோழப்பரும் பெரிதும் உதவினர். கூரநாராயண ஜீயரே இதை நடைமுறைப்படுத்தினார். அதுவே இன்றளவும் தொடர்கிறது. இதற்காகவே திருவரங்கத்தின் மேற்கில் பெருங்குளம் ஒன்று வெட்டப்பட்டு, அதில் காவிரி நீர் வந்து சேர்ந்திடும் வகையில் நீர் வழித் தடங்களும் அமைக்கப்பட்டன இன்று அவை தூர்ந்து போய்விட்டதாகத் தெரியவருகிறது.

அதேபோல், அக்காலத்தில் தெற்குக் கோபுரம் வரை பரவியிருந்த காவிரியின் போக்கு, இன்றைக்கு அம்மா மண்டபத்தைத் தொடும்படி செல்கிறது. இவ்வளவு தூரம் விலகி நகர்வதற்குக் காரணமும் கூரநாராயண ஜீயரே!

தனது முயற்சியில் தோல்வியைச் சந்தித்த மாந்திரீகன், ஆலயத்துக்கு உள்ளேயே தனது திட்டத்தைச் செயல்படுத்துவது என்று முடிவு செய்தான். அதன்பொருட்டு மூர்க்கத்துடன் செயல்படத் தொடங்கினான். இதனால் எம்பெருமானின் சௌலப்யமும் தேஜஸும் மட்டுப் பட்டு வருவதை எல்லோரும் உணர்ந்து தவித்தனர்.

கூரநாராயண ஜீயர், இந்த நிலைக்கு யார் காரணம் என்பதைக் கண்டறியத் தயாரானார். முதற்கட்டமாக எவனோ மாந்திரீகன் ஒருவன் கோயில் பலிபீடத்தின்மீது இடப்படும் சாதத்தை உண்டு, உள்ளேயே உயிர் வாழ்ந்துவருகிறான் என்பதைத் தமது ஞானதிருஷ்டியால் அறிந்துகொண்டார். பலீபீடத்தை வைத்தே அவனைப் பிடிக்கத் திட்டமிட்டார்.

அதன்படி சில திட்டங்களைச் செயல்படுத்தினார். பலி பீடத்து அன்னத்தில் காரமிளகை அதிகம் சேர்க்கச் சொன்னார். பின்னர் தானும் அணுக்கர்கள் சிலருடன் சேர்ந்து கோயிலுக்குள் ஒளிந்துகொண்டு நடப்பதைக் கவனிக்கத் தொடங்கினார். சூட்சும உருவில் வந்த மாந்திரீகன் பலிபீடத்து அன்னத்தை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான். காரத்தின் காரணமாக அவன் கண்களில் நீர் பெருகியது. கண்ணீரை அவன் துடைத்தபோது, புருவத்திலும் இமைகளிலும் பூசிக்கொண்டிருந்த மாயாஞ்சனம் அழிய, மாந்திரீகனின் தேகம் பார்வைக்குத் தெரியத் தொடங்கியது.

அடுத்தநொடியே கந்தாடை தோழப்பனுடனும் மேலும் சில ஆலய சேவகர்களுடனும் அவனைச் சுற்றிவளைத்துப் பிடித்தார் கூரநாராயண ஜீயர். இவ்வாறு தான் அகப்பட்டுக்கொண்ட நிலையிலும் அவன் கூரநாராயண ஜீயரைப் பாராட்டினான்.

``ஜீயர் பெருமானே! நீர் என்னிலும் பெரிய சாதகர்’’ என்று கூறி அவரை வணங்கவும் செய்தான்.

``உனது இந்தச் செயல் சரியா? இறையருளை முறைப்படி பெற முயலாமல், இறைவனையே திருட முயன்ற உன்னுடைய செயல் எப்படிப்பட்டது தெரியுமா?’’ என்று கேட்டார் ஜீயர் பெருமான்.

``இதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. பெருமானை என் நாட்டுக்குக் கொண்டு சென்று, அங்கு அவரை எல்லோரும் வழிபட வேண்டும் என்கிற ஆசையில்தான் இவ்வாறு நடந்து கொண்டேன்’’ என்றான் அந்த மாந்திரீகன்.

``மூடனைப்போல் பேசாதே. எம்பெருமான் சர்வ வ்யாபி. உன் கருத்துப்படி பார்த்தால், அவர் இங்கு மட்டுமே இருப்பதுபோல் ஆகிறது. உனக்கே இது அபத்தமாகப் படவில்லையா?’’

``உண்மைதான்! அந்தச் சர்வ வ்யாபி கல்லிலும் மண்ணிலும் புல்லிலும் பூண்டிலும் கூட இருக்கிறார்தான். ஆயினும் விண்ணி லிருந்து மண்ணுக்குப் பிரணவாகாரமாய் ஒரு வடிவமெடுத்துதானே வந்தார். அப்படிப்பட்ட அந்த பிரணவாகாரம் சில காலம் அயோத்தியில் இருந்தது. பின்னர் இங்கு வந்தது. அதேபோல், என்னுடைய ரங்க பட்டணத்துக்கும் இவர் எழுந்தருள வேண்டும் என்று நான் விரும்பியது எப்படித் தவறாகும்?’’ என்று மாந்திரீகன் திருப்பிக் கேட்டான்.

``அதற்கு நீ அவரிடம் அல்லவா அனுமதி கேட்க வேண்டும். அதை விடுத்து களவில் இறங்கலாமா? அதிலும் இது மந்திரக் களவு. மிகப் பாதகமான குறுக்கு வழி. உன் செயலால் ஆலயம் தன் தேஜஸை இழந்துவருவதைப் பார்த்தாயா?’’

``நான் அதையெல்லாம் கவனிக்கத் தயார் இல்லை. அவர் என்னுள் வசப்பட வேண்டும் என்பதே குறியாக இருந்தது.’’

``இனி, இதுபோல நடந்துகொள்ளாதே. உன்னைப் பொருள் திருடனாகக் கருதி தண்டனை தர மனம் வரவில்லை. நீ அருளைத் திருட வந்தவன். மந்திர சாஸ்திரம் கற்றவன். எனவே, உன் வித்தையை மதித்து உனக்கு மன்னிப்பு அளிப்பதுடன், உன்னை உன் ஊருக்குத் திரும்பிச் செல்லப் பணிக்கிறேன். மட்டுமன்றி, உன்னை வெறுங்கையுடனும் நான் அனுப்பப் போவதில்லை’’ என்று கூறிய கூரநாராயண ஜீயர், முதல் காரியமாக மாந்திரீகன் தன் கலயத்தில் சேகரித்திருந்த எம்பெருமானின் அருள் சக்தியை மீண்டும் திருச்சந்நிதியில் சென்று சேரச் செய்தார்.

திருச்சந்நிதி மீண்டும் பொலிவு பெற, எம்பெருமான் எழிலுடன் காட்சி தந்தார். எல்லோரும் மகிழ்ந்தனர். அதன்பிறகு, மாந்திரீகனை அங்கப்பிரதட்சணம் செய்யச் செய்து, பரிகாரத்துக்கு ஆட்படுத்தினார் கூரநாராயண ஜீயர். அப்படியே அவனைக் கருவூலத்துக்குக் கூட்டிச் சென்றார்!

- தொடரும்...

முடிக்காணிக்கை ஏன்?

மனிதர்கள் தங்களின் அகங்காரத்தைக் களைந்து ஆண்டவன் பாதங்களில் சரணடையும் தத்துவத்தையே திருப்பதி முடிக்காணிக்கைப் பிரார்த்தனை உணர்த்துகிறது. அதேபோல், வேறு தாத்பரியமும் இருக்கலாம் என்று புராணத்தைச் சுட்டிக்காட்டி விளக்குவார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.

திருப்பதி திருமலையில் வ்ருஷபன் என்ற ராட்சஸன், தும்புரு தீர்த்தக் கரையில் அருளும் நரசிம்ம விக்கிரகத்துக்கு பூஜை செய்வது வழக்கம். அதுவும் எப்படி? பூஜையின் முடிவில் தமது தலையையே பூவாகக் கிள்ளி எடுத்து எம்பெருமான் திருவடிகளில் அர்ப்பணம் செய்வானாம். மறுகணம் அவனது தலை மீண்டும் முளைத்துவிடுமாம்! நம்மால் தலையை அறுத்து அர்ப்பணிக்க முடியாது என்பதால், தலைமுடியை மட்டும் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் பிற்காலத்தில் தோன்றியிருக்கலாம் என்பார்கள். வேறொரு தகவலும் உண்டு.

ஸோம யாகம் செய்யும் கர்த்தா மொட்டையடித்துக்கொண்டு அந்த யாகத்தைச் செய்ய வேண்டும் என சாஸ்திரம் கட்டளையிடுகிறது. திருமலை எம்பெருமானை சேவிப்பதும் ஒரு வகையில் ஸோம யாகம் செய்வதற்குச் சமம். ஆகையால் மொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கம் வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.

-சக்திதர், சென்னை-44

`ஆடி வேல்’ வைபவம்!

வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை: உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள்.

ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

இலங்கையில் மிகவும் கோலாகலமாக கொண் டாடப்படும் விழா ஆடிவேல் வைபவம். ஆடி மாதத்தில் வேல் எடுத்து கொண்டாடப்படுவதால் ஆடிவேல் என அழைக்கிறார்கள். கதிர்காமத்தில் இந்த ஆடிவேல் திருவிழா நான்கு தினங்கள் நடைபெறும்.

- கே.லதா, திருச்சி-4