மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 32

ரங்கராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்கராஜ்ஜியம்

இரண்டாம் பாகம்

கோதை பிறந்த ஊர் - கோவிந்தன் வாழுமூர்

சோதி மணி மாடந் தோன்றுமூர்- நீதியால்

நல்ல பக்தர் வாழுமூர் நான் மறைகளோதுமூர்

வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

ரங்கராஜ்ஜியம்
ரங்கராஜ்ஜியம்

திருவில்லிபுத்தூரின் தலபுராணத்தை - வேடன் வில்லிக்கும் முனிவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலை மிக அருமையாக விவரித்தார் மணவாள மாமுனிகள்.

``மனிதப் பிறப்பே ஒரு கஷ்டமான பிறப்புதான். பிறக்கும்போதே பசி என்கிற பிணியோடு பிறக்கிறோம். பின்னர் அதற்காகத் தொழில் புரிகிறோம். நீயும் உனது பசிக்காகத்தானே வேட்டையாடுகிறாய்?’’

``ஆமாம் சாமி!’’

``நம்மால் சாப்பிடாமல் இருக்க முடியுமா... இல்லை இந்த உடம்புதான் அதற்குச் சம்மதிக்குமா?’’

`` அது எப்படிங்க... சாப்பிடாட்டி சக்தியே இல்லாம சுருண்டுல்ல விழுந்துடுவோம்.’’

``சரியாகச் சொன்னாய். இந்த வயிறு நிமித்தமே ஆரம்பமாகிறது நம் வாழ்வு. பின்னர் பல ஆசைகளை வளர்த்துக்கொள்கிறோம். திருமணம், மனைவி, பிள்ளைகள், உற்றார் - உறவு என்று வளர்கிறது. இதனால் பற்று - பாசம் உண்டாகி, நாம் இந்த உலக பந்தத்தில் பெரியளவில் சிக்கிக்கொள்கிறோம். இதனால் பல பாவங்களையும் செய்துவிடுகிறோம். பிறகு அவற்றுக்கான தண்டனையை அனுபவிக்க திரும்பத் திரும்ப பிறக்கிறோம்.

ஒரு சேற்றுக் குழிக்குள் விழுந்த யானை, மீள முடியாமல் அதில் மூழ்கித் தவிப்பது போல் தவித்து மருகுவதே நம் வாழ்வாக உள்ளது. இடையில் வரும் எந்த இன்பமும் நிரந்தரமாக நீடிப்பதில்லை. துன்பமும் அப்படித்தான்.

ஒரு கட்டத்தில் `இப்படி இன்ப-துன்பங்களில் மாறி மாறி உழல்வதா வாழ்வு’ என்ற எண்ணம் உருவாகிறது. தொடர்ந்து `துன்பம் இல்லாத இன்பம் மட்டுமே உள்ள வாழ்வை வாழ முடியாதா?’ என்ற கேள்வியும் எழும்பிவிடுகிறது. அதற்கு `இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்வு’ என்ற விடை கிடைத்தது.

`எனில், இரண்டும் இல்லாத நித்ய இன்பம் எங்கே உள்ளது’ என்ற கேள்வி எழும்பியபோது, `அது அந்த நாராயணன் திருவடி நிழல்தான்... அதுவே நித்ய இன்பம்’ என்பதை அறிந்தேன். ஆக, அவனுடைய திருவடி நிழலை அடையவே நான் இங்கு தவம் புரிகிறேன்’’ என்றார் முனிவர்.

வடபத்ரசாயி
வடபத்ரசாயி
TopPhotoImages


இந்த விளக்கம் வேடுவனான வில்லியையும் சிந்திக்கவைத்தது.

``சாமி! நானும் இப்படி தவம் செய்ய முடியுமா?’’ எனக் கேட்டான். முனிவர் சிரித்தார்.

``என்ன சாமி சிரிக்கிறீங்க?’’

``உன் விருப்பத்தை நினைத்தேன்... சிரிப்பு வந்துவிட்டது. ஓர் உயிரைக் கொன்று புசிக்கும் உன்னைப் போன்றவர்களுக்குப் புலனடக்கம் மிகக் கடினமப்பா. எனவே, உன்னால் அது முடியாது’’ என்றார்.

``இல்ல சாமி! நான் கொஞ்சம் வைராக்கியமானவன். முயற்சி செய்து பார்க்கிறேனே?’’ என்றான் வில்லி.

``வேண்டாம். உன் வாழ்வை நீ வாழப் பார். இதற்குப் பெரும் பக்குவமும் மன உறுதியும் வேண்டும். தவம் புரியும்போது மிருகங்கள் வந்து தாக்கலாம்; உன்னைக் கொன்று புசிக்கலாம். அப்போதே உன் வாழ்வு முடிந்துவிடும். எனவே, இது உனக்கு வேண்டாத வேலை’’

முனிவர் இங்ஙனம் மறுப்பாகப் பேசப் பேச வில்லிக்குள் ஆவேசம்தான் அதிகமானது. இருப்பினும் அதை அடக்கிக்கொண்டு ``சரி சாமி... நான் வர்றேன்...’’ என்று அவரிடம் விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தான்.

அதேவேளையில் அவன் சகோதரனான கண்டனைச் சிங்கம் ஒன்று அடித்துக்கொன்று, அவன் உடம்பைத் தின்றுவிட்டுத் தலையை விட்டுவிட்டுப் போயிருந்தது. அதைக் கண்டு வில்லி பதறிப் போனான். மனித வாழ்வு என்பது எப்படியும் முடியக் கூடியதுதான் என்கிற உண்மையை உணர்ந்தான்.

`இப்படி வேட்டையின்போது மிருகங்களிடம் தோற்றுப் பலியாவதைவிட, தவம் புரிந்து அதனால் இறப்பு நேர்ந்தால் அது எவ்வளவோ மேல்’ என்றும் அவனுக்குத் தோன்றியது. அதன்பிறகு ஒரு விநாடிகூட அவன் தாமதிக்கவில்லை. முனிவர் தவத்தின்போது இடையறாது சொல்லிக்கொண்டிருந்த `ஓம் நமோ நாராயணாய’ என்கிற அஷ்டாட்சரம் நினைவுக்கு வந்தது. அதைச் சொல்லிக்கொண்டே, மிருகங்களின் தொந்தரவு இல்லாத ஒரு குகைக்குள் போய் அமர்ந்துவிட்டான் வில்லி.

முனிவரின் கருத்தும் சகோதரனின் பிரிவும் அவனுக்குள் பெரும் உறுதியை உருவாக்கிவிட்டிருந்தன. அவன் தவம் நாள், வாரம், மாதம், வருடம் என்று நீடித்தது. 12 வருடங்கள் கழிந்தபோது அவனுடைய உருவமே மாறிவிட்டிருந்தது. அந்த வேட்டைக்காரன் வேதக்காரன் ஆனான். எம்பெருமானும் அவன் முன் தோன்றினார்.

``வில்லி உனக்கு என்ன வேண்டும்?’’

``இறைவா! என்றும் உன்னை மறவாத உள்ளம் வேண்டும். நான் மட்டுமல்ல என்னைப் போன்ற மனிதர்கள் யாவரும் உன்னை மறவாமல் தொழுது, உன் அருள் கிடைத்து இன்புற்று வாழவேண்டும். அதற்கு நீ அருள்புரிய வேண்டும்’’

``தோண்டினால்தான் நீர் கிடைக்கும். அதேபோல் தேடினால்தான் நான் கிடைப்பேன். அசைவுதானே வாழ்வு. அதில் தன்னை அறியும் முயற்சியினாலேயே ஒருவன் என்னை அறிந்து என்னை அடைவான். அதற்காகவே வாழ்வு அருளப்பட்டது’’

``உன்னை அடைய எனக்கு ஒரு முனிவர் கிடைத்ததுபோல, எல்லா மாந்தர்களுக்கும் ஒருவர் கிடைக்கவேண்டுமே?’’

``அப்படியான முனியாக நீயே இருந்திடு. உன் முயற்சியும் என்னைக் கண்ட பயனும் செய்தியாகட்டும். உன் பொருட்டும் மாந்தர்கள் பொருட்டும் நான் கோயில் கொள்கிறேன். நீயே அதைக் கட்டி எழுப்பு. அங்கே என் அருள் அனைவருக்குமாக வெளிப்படும். காலத்தால் அங்கே பல அற்புதங்கள் நிகழ்ந்து, அதுவொரு க்ஷேத்திரமாகவும் திகழ்ந்திடும்’’ என்று அருளிச்செய்து மறைந்தார் மாலவன்.

வில்லியும் இறைச்சொல்லை நிறைச்சொல்லாக்கி, தான் வேட்டையாடிவந்த மல்லிநாட்டு வனப்பகுதியில் ஓர் ஊரை உருவாக்கி, அதில் ஆலயமும் கண்டான். அவன் பெயராலேயே மல்லிநாட்டு வனத்தின் அந்தப் பகுதி `வில்லிபுத்தூர்’ என்றாயிற்று. அங்கே வடபத்ரசாயியாக எம்பெருமானும் கோயில் கொண்டார். இப்படித்தான் இந்தத் திருவில்லிபுத்தூர் தோன்றிற்று!

- மணவாள மாமுனிகள் இங்ஙனம் விவரித்து முடிக்க அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் பேரானந்தம் உண்டானது. வேடுவன் வில்லியின் மன உறுதி, சமூகச் சிந்தனை ஆகியவற்றைக் குறித்துப் பெருமிதமும் உண்டானது.

தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் என்ற அந்த க்ஷேத்திரத்தில் நிகழ்ந்த பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் தொடர்பான வரலாற்றுக்குள் புகத் தொடங்கினார் மணவாள மாமுனிகள்.

`முகுந்தப் பட்டர்-பதுமவல்லி’ என்ற சோழியர் குலத்து தம்பதியின் மணிவயிற்றில் உதித்தவர்தான் விஷ்ணுசித்தர். பெற்றோருக்கு இவர் ஐந்தாவது பிள்ளை. நினைவு தெரிந்த நாள் முதலாய் வடபத்ரசாயியைக் காட்டி அந்தப் பெருமாள் மீதான பக்தியையும் ஊட்டியே தன் பிள்ளைகளை வளர்த்தார் முகுந்தப் பட்டர். எனினும் ஐந்தாவதாகப் பிறந்த விஷ்ணு சித்தரே, அந்தப் பக்தியில் பெரிதும் ஊறியவரானார்.

ஆலயம் என்றாலே ஆயிரம் கைங்கர்யம் இருக்கும். ஆலயத் தூய்மைக்கான குப்பையைக் கூட்டி அகற்றுவதில் தொடங்கும் கைங்கர்யப் பணிகள், இரவு கோயிலைச் சுற்றிவந்து காவல் காப்பது வரையிலும் நீடிக்கும். இடையில் மடைப்பள்ளியில் பிரசாதம் தயாரிப்பது, அபிஷேகத்துக்கு நீர் இறைப்பது, பெருமாளின் அலங்காரத்துக்கு மாலைகள் தயாரிப்பது, தீபம் போடுவது, வேதம் சொல்வது, பாசுரங்கள் படிப்பது, பல்லக்கு சுமப்பது என்று பணிகளுக்கா பஞ்சம்?

ஒரு மனித உயிர் உலக மாயையில் இருந்தும் பிறவித் தளையாகிய கர்மங்களிலிருந்தும் மெள்ள இலகுவாக விடுபட, இந்தக் கைங்கர்யங்கள் துணை செய்கின்றன. வனத்தில் புலன்களை அடக்கித் தவம் செய்வது என்பது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. அதேவேளை, அந்தத் தவத்தால் கிடைக்கும் பயனை... கர்ம வாழ்வு வாழ்ந்தபடியே சுலபமாகப் பெற்றிட இந்தக் கைங்கர்யங்கள் துணை நிற்கின்றன.

அதற்காகவே எம்பெருமானும் கோயில் கொண்டுள்ளான். கோயில் இல்லாத இடத்தில் கைங்கர்யம் என்கிற வார்த்தைக்கே இடம் இல்லை அல்லவா? எனவே கைங்கர்யம் புரிய வாய்ப்புள்ள கோயில்களைச் சார்ந்து வாழ்வதும் ஒரு தவமே.

அப்படியொரு வாழ்வு வாழ்ந்த முகுந்தப் பட்டர், தனக்குப் பின்னர் தன் ஐந்தாவது பிள்ளையான விஷ்ணுசித்தரை அதில் பூரணமாக ஈடுபடுத்தினார். முகுந்தப்பட்டர் மலர் மாலைகள் தயாரித்து அளிப்பதைத் தன் கடமையாகக் கொண்டிருந்தார். அதற்கென்றே மலர்வனம் அமைத்துப் பராமரித்து வந்தார். அந்த வனத்தில்தான் எத்தனை எத்தனை மலர்கள்?

மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம், செங்கழுநீர், தாமரை, கொன்றை... என்கிற அவற்றிலும் எத்தனை எத்தனை ரகங்கள்! இந்த மலர்களின் பின்னே நாம் அறியவும் ஒரு ரசமான செய்தி உண்டு. என்ன தெரியுமா?

- மணவாள மாமுனிகள் முக்கியமான இடத்தில் தன் உரையைச் சற்று நிறுத்தினார்.

- தொடரும்...

பாம்பன் சுவாமிகள் வழிபட்ட பாலன்!

சென்னையைச் சுற்றியுள்ள முருகன் தலங்களை தரிசித்த பாம்பன் சுவாமிகள் ஆண்டார்குப்பத்துக்கும் வந்தார். அவர் வந்த வேளையில் கோயில் நடை சாத்தியிருந்தது. மனம் கலங்கினார் சுவாமிகள். இந்த நிலையில் அங்கே வந்த வயதான அந்தணப் பெண் ஒருத்தி, அர்ச்சகர் ஒருவரின் சிறு வயது மகனை அழைத்து, 'இவருக்கு சாமி தரிசனம் செய்துவை' என்றாளாம்.

சுவாமிகளுக்கு முருக தரிசனம் கிடைத்தது. அத்துடன் அடியவர் ஒருவரின் உதவியால் இரவு தங்குவதற்கு இடமும் உணவும்கூடக் கிடைத்தது. இதனால் மகிழ்ந்த சுவாமிகள், 'யாக்கையே பனிப்பென்று...' எனத் துவங்கி ஆண்டார்குப்ப நாயகனைப் போற்றிப் பாடினாராம்!’’

- வி. பரமேஸ்வரன், சென்னைமல்லிநாட்டு வனத்தின் அந்தப் பகுதி `வில்லிபுத்தூர்’ என்றாயிற்று. அங்கே வடபத்ரசாயியாக எம்பெருமானும் கோயில் கொண்டார். இப்படித்தான் இந்தத் திருவில்லிபுத்தூர் தோன்றிற்று!

தீர்த்தம் சிறப்பு!

கேரளாவின் பிரசித்திபெற்ற தலங்களுள், சோட்டானிக்கரையும் ஒன்று. சோட்டானிக்கரை பகவதி அம்மனுக்கு, அபிஷேகிக்கப்படும் தீர்த்தம் கருவறையில் தேங்குவதும் இல்லை; கோமுகம் வழியே வெளியேறுவதும் இல்லை!

கருவறையின் தரைக்கு அடியில் உள்ள சிறு குகை வழியாக வழிந்தோடும் அபிஷேக தீர்த்தம் கோயிலில் இருந்து சுமார் ஒரு பர்லாங் தொலைவில் உள்ள வனதுர்கா ஆலயத்தில் இருக்கும் சிறிய குளத்தில் சேர்கிறதாம். எனவே, இந்தக் குளத்தில் நீராடுவது வெகுசிறப்பு என்கிறார்கள்!

- சிவா, சென்னை-68