ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

திருவருள் பரிபூரணம்! சாயி சங்கல்ப பூஜை

சாயி சங்கல்ப பூஜை!
பிரீமியம் ஸ்டோரி
News
சாயி சங்கல்ப பூஜை!

சாயி சங்கல்ப பூஜை!

விஜய தசமி- மங்கலகரமான நாள். அம்பிகை வெற்றித் திருமக ளாக அருளும் நாள். அன்று தொடங்கும் செயல்கள் யாவும் வெற்றியை நோக்கிச் செல்லும் என்பது நம்பிக்கை. அற்புதமான அந்த நாளுக்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. அதுதான் ஷீர்டிநாதர் சாயிபாபா மகாசமாதி அடைந்த தினம்.

சாயி சங்கல்ப பூஜை!
சாயி சங்கல்ப பூஜை!


கலியுகத்தில் நடமாடும் தெய்வமாய் வந்துதித்து, சாதி - மத பேதமின்றி அனைவருக்கும் அருள்பாலித்து, நன்மைகள் பல புரிந்த அற்புதர் சாயிநாதர். மகாசமாதி அடைந்தாலும் இன்றும் ஷீர்டியில் சூட்சும ரூபமாய் எழுந்தருளித் தன்னை நாடி வருபவர்களுக்கு அருளும் தயாளர் சாயி. அவரின் 104-வது ஆராதனை தினம் கடந்த விஜயதசமி அன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, சக்திவிகடன் மற்றும் துவாரகாமயி ஆத்ம ஞானியர் மையம் இணைந்து வழங்கிய சாயிசங்கல்ப சிறப்பு பூஜை வழிபாடு சிறப்புற நடைபெற்றது. சென்னை - புழுதிவாக்கம், பாலாஜி நகர் 28-வது தெருவில் உள்ள சாயி இல்லத்தில் நடந்தேறிய இந்த பூஜையில் பிரார்த்திக்கும்விதம் வாசகர்கள் பலரும் சங்கல்ப முன்பதிவு செய்திருந்தார்கள்.

காலை 10 மணிக்கு சாயி பக்தர்கள் அநேகர் அங்கு கூடினர். உரிய சங்கல்பப் பிரார்த்தனையுடன் வழிபாடு தொடங்கியது. துவாரகாமயி ஆத்ம ஞானியர் மையத்தைச் சேர்ந்த `பாபா மாமி’ ரமா சுப்பிரமணியன் சாயி பாதுகா அபிஷேகத்தைத் தொடங்கி வைத்தார். வந்திருந்த பக்தர்கள் பலரும் சாயியின் பாதுகைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர், மையத்தைச் சேர்ந்த சாயி பக்தர்கள் பஜனை செய்தனர். சாயியின் புகழைப் பரப்பும் அந்த கானங்கள் கேட்பவரை மெய்சிலிர்க்கச் செய்தன.

சாயி பக்தர்கள்
சாயி பக்தர்கள்


தொடர்ந்து நிகழ்ந்த சத்சங்கத்தில் `பாபா மாமி’ ரமா சுப்பிரமணியம் பாதுகா மகிமை எனும் தலைப்பில் உபன்யாசம் நிகழ்த்தினார். சாயிநாதனின் பாதுகை மகிமையையும் அதைப் பெற்றுக்கொண்ட பக்தர்கள் அடைந்த பயனையும் எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து சாயி சங்கல்ப பூஜையில் பதிவு செய்த வாசகர்களின் பெயர் மற்றும் நட்சத்திரம் சொல்லி, அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேற பிரார்த்தனைச் சங்கல்பம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாயி ஆரத்தி நடைபெற்றது. சாயியின் பாதுகை பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டது.

பாபா மாமி ரமா சுப்பிரமணியம்
பாபா மாமி ரமா சுப்பிரமணியம்


அன்னதானப் பிரபு என்று சுவாமி ஐயப்பனைச் சொல்வதுண்டு. சாயி வழிபாட்டில் அன்னதானம் பிரதானம் ஆகும். சாயி சங்கல்ப பூஜையில் கலந்துகொள்ள வந்திருந்த பக்தர்கள் அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சாயிபாபா மதியம் 2:20-மணிக்கு மகாசமாதி அடைந்தார் என்கின்றன நூல்கள். எனவே, அந்த நேரத்தில் அனைவரும் அமர்ந்து அமைதியாக சாயி சத்சரிதத்தை வாசிக்கும் வைபவம் நடைபெற்றது. நிறைவில் சாயி பிரசாதத்துடன் அவரின் திரு வருளையும் பரிபூரணமாகப் பெற்றுக்கொண்ட மகிழ்வோடு பக்தர்கள் விடைபெற்றனர்.