ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

குருவே திருவே!

குருவே திருவே
பிரீமியம் ஸ்டோரி
News
குருவே திருவே

குருவே திருவே!

"ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம

ஜய ரகுவீர ஸ்மர்த்த"

காவிரி பெரும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கோடையிலும் சலசலத்து சன்னமாக ஓடிக் கொண்டிருந்தது. அதைக் கரையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதுவே ஒரு தியானம்தான். இருக்காதா என்ன... எத்தனை மகான்களின் பாதம்பட்ட பூமி இது!

குருவே திருவே
குருவே திருவே


இந்தக் கரையில்தானே மகான் ராகவேந்திரரும் கோவிந்த தீட்சிதரும் சதாசிவபிரம்மேந்திராளும் மற்றும் பல ஞானியர்களும் நீராடித் தவம் செய்து அன்றாடம் வாழ்ந்திருப்பார்கள். அந்தத் தவ வாசனை இன்னும் இந்த ஆன்மிக பூமியில் ஒட்டிக்கொண்டுதான் உள்ளது. அதுதான் உலகெங்கும் இருந்து மக்களைத் தஞ்சையை நோக்கி இழுத்துவருகிறது.

தஞ்சையின் அரசியல் வரலாற்றைப் போலவே ஆன்மிக வரலாறும் பிரமிப்பூட்டுவது. ஒவ்வொரு முறையும் தஞ்சைக்கு வருகிறபோது, அதுவரை அறிந்துகொள்ளாத ஓர் அற்புதம் கவனத்துக்கு வரும். பின்னாளில் அதுவே ஆன்மிக வாழ்வின் ஓர் அங்கமாகிப்போகும். இந்தமுறை அறிமுகமான ஓர் அற்புத அறிமுகம்தான் ராம யந்திரம்.

``ராம யந்திரம் பார்த்திருக்கீங்களா?'' என்று நண்பர் ஒருவர் கேட்டபோது, நினைவுகளை முழுமை யாக அலசிப் பார்த்தும் எங்கும் ராமச்சந்திர மூர்த்திக்கான யந்திரத்தைப் பார்த்த நினைவில்லை என்று தோன்றியது.

``இங்கே பார்க்கலாம். தஞ்சைல பார்க்கலாம். அதுவும் 350 ஆண்டுகளுக்கு முன்பாக மகான் ஒருவர் ஸ்தாபித்த யந்திரம் அது. ராமனின் கருணையைக் குழைத் துச் செய்யப்பட்டது அந்த யந்திரம் என்றே சொல்லலாம். அதுக்கு முன்னாடி நின்னாலே மனம் லேசாகிடும். அவ்வளவு சிறிய கற்பகத் தரு உலகத்தில் எங்கேயுமே இல்லைன்னு தோணும். `எதுவுமே இல்லை'ன்னு அங்கே போய் நின்னு வேண்டிக்கிட்டு வந்தா, சீக்கிரமே நமக்கு என்ன வேணுமோ அது கிடைச்சிடும். அந்த அற்புதமான யந்திரத்தை இந்த முறை கட்டாயம் தரிசனம் செய்துட்டுதான் நீங்க போகணும்.''

தெய்வம் நேரிடையாக முன்னே வந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்தக் கலியுகத்தில் அது அவ்வளவு எளிது அல்ல. `தெய்வம் மனுஷ்ய ரூபேண!' என்பதுதானே ஆன்றோர் வாக்கு. எனக்கும் நண்பரின் வாக்கு அந்த ராமனின் சங்கல்பம் என்றே தோன்றியது.

முரளிதர் லஷ்மண் கோஸ்வாமி
முரளிதர் லஷ்மண் கோஸ்வாமி
முரளிதர் லஷ்மண் கோஸ்வாமி
முரளிதர் லஷ்மண் கோஸ்வாமி


`அவனே முன்வந்து ஆட்கொள்ளும் தருணம்' என்று உள்ளம் நெகிழ்ந்தது. இப்போது காவிரியின் சலசலப்பு ராமநாமம் போல் கேட்டது. கை குவித்துக் காவிரியை வணங்கிவிட்டு நண்பரோடு ராம யந்திரத்தை தரிசனம் செய்யப் புறப்பட்டோம்.

தஞ்சையின் மையப்பகுதியில் பரபரப்பான கீழ ராஜவீதியில் இருந்து பிரியும் ஒரு குறுகிய சந்துக்குள் திரும்பினோம். அது முடியும் இடத்தில் ஒரு குளமும் அதன் நான்கு பக்கமும் வீடுகளும் இருந்தன. அதற்கு, `சாமந்தன் குளம்' என்று பெயர்.

சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரைச் சுற்றிலும் அகழி அமைக்கப்பட்டது. அதில் மழை நீரும் காவிரி நீரும் கலந்து எப்போதும் நீரோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். சில நேரங்களில் கடும் கோடை ஏற்பட்டு நீரோட்டம் குறையும்போது, சமாளிப்பதற்காகப் பல குளங்களையும் வெட்டினார்கள்.

பிற்காலத்தில் வல்லப பாண்டியன் ஆட்சிக் காலத்தில் அவரின் சேனாதிபதியான சாமந்தன், இங்கே ஒரு குளம் வெட்டினான். அதற்கு அவன் பெயரில் சாமந்தன் குளம் என்றானது. அவன் கட்டயதுதான் சாமந்த விண்ணகரப் பெருமாள் கோயில். சமீபத்தில் அந்தக் குளத்தைப் புதுப்பித்திருக்கிறார்கள். குளத்தின் தென்கரை வழியாக நடந்து சென்றோம். அதன் நடுவே சிறு திருப்பம். உள்ளடங்கிய அந்தத் தெருவின் கடைசியில் கோயில் போன்ற ஒரு கட்டுமானம் இருந்தது.

``இதுதான் முன்னூறு ஆண்டுகள் பழைமையான மடம். இதன் பின்னணியில் இந்த பாரத தேசத்தின் மாபெரும் சரித்திரம் படிந்திருக்கிறது. வாங்க... ஒவ்வொன்றாக அறிந்துகொள்வோம்'' என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

எங்களைப் புன்னகையோடு வரவேற்றார் ஒரு பெரியவர். மிகவும் மெலிந்த தேகம். சராசரியான உயரம். மார்பில் தவழும் பூணூல். இடுப்பில் சாதாரண வேட்டி. அதை இறுக்கிக் கட்டிய அங்கவஸ்திரம் என சாமானியர் போன்ற தோற்றம். ஆனால் அவரின் முகமோ தாமரை மலர் போல மலர்ந்து தேஜஸோடு திகழ்ந்தது. நண்பர் அவரின் கால்களில் விழுந்து நமஸ்கரித்து எழுந்தார்.

ராம யந்திரம்
ராம யந்திரம்
சமர்த்த ராமதாசர்
சமர்த்த ராமதாசர்


``சுவாமிதான் மடாதிபதி. திருநாமம், முரளிதர் லஷ்மண் கோஸ்வாமி '' என்றார்.

ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒருசேரத் தாக்கியதுபோல் இருந்தது. மடாதிபதிகள் என்றால் பீடத்தில் அமர்ந்து சீடர்கள் சூழ தரிசனம் செய்தே பழக்கப்பட்ட நமக்கு, இவர் ஓர் ஆச்சர்யம்தான்.

அடுத்த கணம் அவர் கால்களில் விழுந்தேன்.

``ராம் ராம்...'' என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

அதன்பின் அவர் அங்கிருந்த ராமர் சந்நிதி நோக்கி நகர்ந்தார். நாங்களும் பின் தொடர்ந் தோம். சந்நிதிக்கு முன்பாக இருந்த மண்டபத் தில் ஒரு சிறு பலகையை எடுத்துப் போட்டு, ``இதுதான் என் சிம்மாசனம்'' என்று சொல்லிச் சிரித்தார் சுவாமிகள். சிறிது இடைவெளியில் நாங்களும் அமர்ந்தோம்.

``சுவாமி, ராமனையும் யந்திரத்தையும் தரிசனம் செய்யணும்னு ஆசைப்படுறார்'' என்று நண்பர் சொன்னதும் ``அதனால் என்ன... சிறப்பா பண்ணலாமே...'' என்றபடியே எழுந்துகொண்டார் சுவாமிகள். கருவறைக்குள் சென்று விளக்கைத் தூண்டிவிட்டார். பின்பு ஏக தீபம் ஏற்றி ஆரத்தி காட்டினார். தீப ஒளியில் ராமனை தரிசிக்க முடிந் தது. சீதா, லட்சுமணன் சமேதராக ராமன் கம்பீரமாகக் காட்சி அளித்தார். சிறிய அந்தத் திருமேனியின் அழகும் கம்பீரமும் நம் சிந்தையை நிறைத்தன. அருகில் இருக்கும் யந்திரத் துக்கும் தீபாராதனை செய்தார். நாம் பக்தியோடு வணங்கினோம். நண்பர் சொன்னது உண்மை. அதுவரை மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் நீங்கி பெரும் ஆனந்தம் நிறைந்துவிட்டதைப் போன்ற உணர்வு!

மீண்டும் தன் இடத்துக்கு வந்து அமர்ந்த சுவாமிகள் நம்மைப் புன்னகையோடு பார்த்தார். நாமோ ராமன் விக்ரகத்திலிருந்து நம் பார்வையை மாற்றமுடியாமல் திண்டாடினோம். ராமனின் பேரழகு ஒரு காந்தம்போல் ஈர்த்தது. அதைப் புரிந்துகொண்டவர்போல் சுவாமி சிரித்தார்.

``பஞ்சலோகத் திருமேனிகள் செய்றது தமிழ்நாட்டுக்கே உரிய கலை. வேற எந்த மண்ணிலேயும் இவ்வளவு அழகான விக்ரகங்களைச் செய்துவிட முடியாது. சமர்த்த ராமதாசர்னு ஒரு மகான் கேள்விப் பட்டிருக்கீங்களா... ஆதிசங்கரருக்கு அடுத்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விஜயம் செய்து பக்தி நெறியை வளர்த்த மகான். அவர் பிரதிஷ்டை செய்ததுதான் இந்த விக்ரகம். 1677-ம் வருஷம் அவர் தஞ்சைக்கு வந்தார். அப்போ இங்கே இந்த மடத்தை நிறுவினார். ஏறக்குறைய 350 வருஷத்துக்கு முன்னாடி.

சுவாமிக்குப் பஞ்சலோகத்துல திருமேனி வேணும்னு சொல்லி அதன்படி செஞ்சு வாங்கிப் பிரதிஷ்டை செய்தார். கூடவே ராம யந்திரம் ஒண்ணையும் பிரதிஷ்டை செய்தார். அதுதான் நீங்க பார்த்தது. உங்களுக்குத் தெரியுமோ... இந்த சந்நிதியில வந்து நின்னு நியாயமான தேவைகள் எதைக் கேட்டாலும் உடனே கிடைக்கும். அப்படி ஒரு சக்தி அந்த யந்திரத்துக்கு இருக்கு. ஏன் இத்தனை வருஷம் இந்த மடம் இங்கே நிலைச்சிருக்குன்னா அதுக்கு அதன் மகிமையும் சக்தியும்தான் காரணம்.

அந்தக் காலத்துல வசிஷ்டர் ஆசிரமத்துல காமதேனுவின் மகளான நந்தினின்னு ஒரு பசு இருந்ததுன்னு புராணம் சொல்றது. அந்தப் பசு கேட்கிறதெல்லாம் கொடுக்குமாம். எனக்கு நந்தினி இந்த யந்திரம்தான். அது இருக்கிறவரைக்கும் கவலையே இல்லை.

இங்கே ராமநவமி உற்சவம் ஒவ்வொரு வருஷமும் கொடியேற்றி சீரும் சிறப்புமா நடக்கும். ஆனா, எந்த ஓர் உற்சவத்துக்கும் கையில் பைசா வச்சிக்கிட்டு கொடியேற்றியதில்லை. காசு இருக்கு... இல்லை... குறிப்பிட்ட நாளில் உற்சவம் தொடங்கணும்னா தொடங்கிடுவோம்!

அப்படி ஒருமுறை உற்சவம் தொடங்க வேண்டிய நாள். ஆனா மடத்தில் கைப்பிடி அரிசிகூட இல்லை. சொந்தக் காரியமா இருந்தா நாம யோசிக்கணும். இது பகவத் கைங்கர்யம். இதை ஆரம்பிச்சி வச்சவங்க மகான்கள். அவர்கள் தொடங்கிய உற்சவம் எப்படித் தொடர்ந்து நடக்காமப் போகும்... கொடியேத்திட்டேன். அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா..?''

தொடர்ந்து அவர் சொன்ன அற்புதச் சம்பவம் நம்மைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது. கலியுகத்திலும் குருவருளாலும் இறையருளாலும் அற்புதங்கள் நிகழும் என்பதற்குச் சான்று அந்தச் சம்பவம்!

- குருவருள் தொடரும்...