Published:Updated:

பிணிக்கு மருந்து பாபா!

பாபா
பிரீமியம் ஸ்டோரி
News
பாபா

பாபா

அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்கள் நீங்கப் பெற்றவர்களுக்கும் சாயியை வழிபடும் பேறு கிட்டுகிறது.’

- ஷீர்டி சாயிபாபா

பிணிக்கு மருந்தானவர் ஷீர்டி சாயிபாபா என்பது அடியார்கள் பலரும் அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மை. பார்வையாலேயே பல்வேறுபட்ட நோய்களையும் பஸ்மம் செய்பவர் பாபா. அவருடைய கனிவும் கருணையும் கவசங்களாக இருந்து கடும் பிணிகளின் தாக்குதல்களைத் தடுத்திடும் வல்லமை மிக்கவை.

பல தருணங்களில் அவர் அளித்த மருந்துகளும், அவரின் மருத்துவ முறைகளும் விசித்திரமானவையாகவும், வழக்கத்துக்கு மாறானவையாகவும், மருத்துவ விதிகளுக்கு முரண்பட்டவையாகவும் இருப்பது உண்டு. மருத்துவத்தால் குணமாகாத கொடிய நோய்களை அவர் தெய்விக மகத்துவத்தால் குணப்படுத்தி வந்தார்.

அப்போது பாபா, ஷீர்டிக்கு வந்து சில ஆண்டுகளே ஆகியிருந்தன. பெரும்பாலான மக்கள் அவரை ஒரு மருத்துவராகவே அறிந்திருந்தனர். வெகுசிலர் மட்டுமே அவர் ஒரு மகான் என்பதை உணர்ந்திருந்தனர். அவர்களில் ஒருத்தி ஆமன்பாய் என்ற பெண்மணி.

ஆமன்பாய் பாபாவின் மீதும் அவரது அருளாற்றலின் மீதும் அளவு கடந்த நம்பிக்கை கொண்டவள். அவளுடைய மகன் கண்பத்ஷரி கனாடே கொடிய தொழுநோயினாலும் கடுமையான காய்ச்சலினாலும் அவதிப்பட்டான். அந்தத் தாயுள்ளம் பதறித் தவித்தது. இருப்பினும் அவள் நம்பிக்கை இழக்கவில்லை. பாபா தன் மகனைக் கண்டிப்பாகக் குணப்படுத்துவார் என்று பரிபூரணமாக நம்பினாள்.

அவள் மீது கருணை கொண்ட பாபா அவளது வீட்டுக்குச் சென்று, கண்பத்ஷரி கனாடேயின் உடல்நிலையைப் பரிசோதித்தார். பின், அவனுக்கு வந்திருக்கும் தொழுநோயை நிச்சயமாகக் குணப்படுத்த முடியும் என்று கூறிய சாயிபாபா, அதற்குரிய மருந்து தயாரிக்க நல்ல பாம்பின் விஷம் தேவை என்பதையும் தெரிவித்தார். நல்ல பாம்பு ஒன்றைப் பிடித்துக் கொண்டு வர அவனைப் பணித்தார்.

அச்சத்தாலும் அவநம்பிக்கையாலும் தயங்கினான் கனாடே. தொழுநோயாளியை நல்ல பாம்பு கடிக்காது என்றும், எவ்வித அச்சமும் இன்றிப் பாம்பைப் பிடிக்கலாம் என்றும் அவனை ஊக்கப்படுத்தினார் பாபா.

கனாடேயின் உள்ளத்தில் நம்பிக்கை துளிர்த்தது. காடு முழுவதும் அலைந்து திரிந்து ஒரு நல்ல பாம்பைப் பிடித்து வந்தான். பாபா சொன்னதுபோன்று, அந்தப் பாம்பு அவனது கைகளில் இருந்து தப்பிக்க முயன்றதே தவிர, அவனைக் கடிக்கவில்லை.

பாபா
பாபா


நல்ல பாம்பின் விஷத்தைக் கொண்டு மருந்து தயாரித்து அவனுக்குக் கொடுத்தார் பாபா. உட்கொள்ள வேண்டிய முறைகளையும் பத்தியங்களையும் பற்றி உரைத்த பாபா, அவற்றை மிகச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கண்பத்ஷரி கனாடே மருந்து உட்கொள்ள ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல பலன் தெரிந்தது. ஆச்சரியப்படத்தக்க விதத்தில் அவன் வெகு விரைவில் குணமடையத் தொடங்கினான். பாபாவிடம் ஏதோ தெய்விக சக்தி குடிகொண்டு இருக்கிறது என்ற எண்ணம் ஷீர்டி மக்களிடையே தோன்ற ஆரம்பித்தது.

பகோஜி என்பவன் கடுமையான காய்ச்சலால் மிகவும் அவதிப்பட்டான். அவன் உடல் அனலாகக் கொதித்தது. கண்களைத் திறந்து பார்க்கக்கூட முடியாமல் காய்ச்சல் மிகுதியில் உளற ஆரம்பித்தான். மரணத்தின் எல்லைக்கே சென்று விட்டதால், அவன் பிழைப்பான் என்ற நம்பிக்கை உறவினர்களுக்குக் கொஞ்சம் கூட இருக்கவில்லை.

அப்போது பாபா அவனுக்கு ஏதோ மருந்தைப் புகட்டினார். பிறகு அதிர்ச்சியளிக்கும் வகையில், விசித்திரமான ஒரு வைத்திய முறையைக் கையாண்டார். இரும்புக் கம்பி ஒன்றைப் பழுக்கக் காய்ச்சி அவன் செவித் தடங்களிலும், முதுகிலும் சூடு வைத்தார்.

பார்ப்பதற்கு முரட்டு வைத்தியமாகத் தோன்றினாலும் அது உடனடியாக பலன் தந்தது. பகோஜியின் காய்ச்சல் சட்டென்று குறைந்தது. அவன் மரணத்தின் பிடியிலிருந்து விடுபட்டு முழுமையாகக் குணமடைந்தான்!

ஒரு முறை காகா மகாஜனி என்பவர் கடுமையான வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டார். அந்த நேரத்தில் அவர் மசூதிக்கு முன் தாழ்வாரம் கட்டும் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரது வயிற்றுப் போக்கு, வேலைக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்தது. ஆனால், அவர் பாபாவிடம் தனது பிரச்னையைத் தெரிவிக்கவில்லை.

‘பாபா தானாகவே அதை அறிந்து கண்டிப்பாகக் குணப்படுத்தி விடுவார்’ என்று அவர் நம்பினார்.

வேலையின்போது, திடீரென்று பாபா பெருங்குரலில் கூச்சலிட்டார். அனைவரும் அங்குமிங்கும் கண்டபடி ஓடத் தொடங்கினர். அங்கு ஏற்பட்ட குழப்பத்தில் யாரோ ஒருவர் ஒரு பையைப் போட்டு விட்டு ஓடிவிட்டார். அந்தப் பையில் நிலக் கடலைப் பருப்பு இருந்தது. பாபா தன் கைநிறைய நிலக் கடலையை எடுத்தார். அவற்றைத் தேய்த்து, ஊதித் தோலை நீக்கினார். சுத்தம் செய்யப்பட்ட அந்தக் கடலையை அவர் காகாவிடம் தந்து சாப்பிடச் சொன்னார். தானும் கொஞ்சம் சாப்பிட்டார்.

காகாவைத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி சிறிது குடித்தார்; காகாவையும் குடிக்கச் சொன்னார். பிறகு, “உனது வயிற்றுப்போக்கு சரியாகி விட்டது. நீ போய் உன் வேலையைத் தொடர்ந்து கவனிக்கலாம்” என்று உறுதிபடக் கூறினார்.

காகா மகாஜனியின் வயிற்றுப்போக்கு உடனடியாக நின்றுவிட்டது. அவர் மீண்டும் தெம்புடன் வேலையில் ஈடுபட்டார்.

சாதாரணமாக, வயிற்றுக் கோளாறு இருந்தால், கடலை போன்றவற்றைத் தின்றால் நோய் இன்னும் அதிகமாகிவிடும். விளைவும் விபரீதமாகிவிடும். ஆனால், நோயை அதிகரிக்கச் செய்யும் பொருளையே அதற்கு மருந்தாகத் தந்து குணப்படுத்திய பாபாவின் அற்புத சக்தியை அனைவரும் வியந்து போற்றினர்.

பாபா கூச்சலிட்டது, நோயை விரட்டவே என்றும், அவர் ஊதி பறக்கச் செய்தது நோய்க் கிருமிகளையே என்றும் அவர்கள் உறுதியாக நம்பினர்!

வாசகர்கள் கவனத்துக்கு...

சக்தி விகடன் - துவாரகாமாயி ஆத்மஞானியர் மையம் இணைந்து வழங்கும் `ஷீர்டி சாயிபாபா அருள் அனுபவங்கள் - சிறப்புக் கட்டுரைப் போட்டி குறித்த அறிவிப்பை கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம்.

அந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இ.மெயில் மற்றும் தபால் மூலம் நூற்றுக்கணக்கான வாசகர்கள், தங்களின் சாயி அருளனுபவக் கட்டுரைகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவை ஆசிரியர்குழுவின் பரிசீலனையில் உள்ளது. வெற்றிபெறும் வாசகர்கள் குறித்த விவரம் அடுத்த இதழில் வெளியாகும்.

வெற்றியாளர்கள் 51 பேருக்கும் பாபாவின் அருள் பிரசாதப் பரிசுகளாக... விசேஷ சங்கல்பத்துடன் பூஜிக்கப்பட்ட பாபா விக்கிரகம், சாயி குரு சரித்திரம், ஷீர்டி உதி பிரசாதம் ஆகியவை ஜனவரி-25-ம் தேதிக்குள் அனுப்பிவைக்கப்படும்.

முன்னதாக இந்த அருள்பிரசாதங்கள்... வரும் புத்தாண்டு தினத்தில், (1.1.2022) சென்னை- புழுதிவாக்கம் துவாரகாமாயி ஆத்மஞானியர் மையத்தில் நடைபெறவுள்ள புத்தாண்டு சாயி சங்கல்பல்ப சிறப்பு பூஜையிலும் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசேஷ பூஜையில், வெற்றிபெற்றவர்கள் மட்டுமன்றி போட்டியில் கலந்துகொண்ட அனைவரின் நலனுக்காகவும் அவர்களின் பெயர்-நட்சத்திரத்துடன் சிறப்புச் சங்கல்பப் பிரார்த்தனை செய்யப்படும்.