Published:Updated:

தேரோட்டம், விருந்து என களைகட்டிய ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் - பக்தர்கள் பங்கேற்பு!

ஆண்டாள் ரெங்கமன்னார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Published:Updated:

தேரோட்டம், விருந்து என களைகட்டிய ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் - பக்தர்கள் பங்கேற்பு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆண்டாள் ரெங்கமன்னார்

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆடிப்பூரம் தேரோட்டத்திற்கு அடுத்தபடியாக முக்கிய நிகழ்வாக கருதப்படுவது ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவமாகும். அதன்படி, ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்ஸவ திருவிழா ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்

இந்தக் கோயிலில் பெருமாள் ஸ்ரீவடபத்ராசாயி என்ற திருநாமத்துடன் சயனத் திருக்கோலத்துடன் எழுந்தருளியுள்ளது குறிப்பிடத்தக்கது. பெருமாளின் அம்சமான ஸ்ரீவடபத்ரசாயி என்றழைக்கப்படும் ரெங்கமன்னரை, லட்சுமியின் அம்சமான ஆண்டாள் பூவுலகில் பெண்ணாகப் பிறவியெடுத்து திருப்பாவை பாடி, பாமாலை சூட்டிப் பின் பூமாலை சூட்டி திருமணம் செய்து கொண்ட நிகழ்வே ஆண்டாள் திருக்கல்யாண உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

உற்ஸவம்
உற்ஸவம்

ஆன்மிகம் நிறைந்த ஆண்டாளின் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றால் திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும் என்பது ஐதிகமாகும். அதன்படி இந்தாண்டு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 8 நாள்களாக தினசரி சிறப்பு பூஜைகள், அலங்காரம், திருவீதி உலா என வெகு சிறப்பாக நடைபெற்ற இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன. அதன்படி 9-ம் நாள் திருவிழாவான இன்று காலையில் செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளிய திருத்தேர் மாடவீதிகளின் வழியே வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதைத் தொடர்ந்து இரவு ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கனார் திருக்கல்யாண நிகழ்ச்சி கோயிலின் ஆடிப்பூர மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவத்திற்காக திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து பட்டுச்சேலை கொண்டுவரப்பட்டிருந்தது. தொடர்ந்து பூஜைகளுக்குப் பின்னர், ஆண்டாளுக்கு அந்தப் பட்டுச்சேலை அணிவிக்கப்பட்டு மீண்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது பக்தர்கள், 'கோவிந்தா... கோபாலா...' எனும் பக்தி கோஷம் முழங்க திருக்கோயில் அர்ச்சகர்கள் ரெங்கமன்னாரின் திருமாங்கல்யத்தை ஆண்டாளுக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தினர். இதையடுத்து பக்தர்களுக்குத் திருமாங்கல்யக் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.

திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்

ஆண்டாளின் திருக்கல்யாண உற்சவத்தைக் காண்பதற்காக மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் ஆந்திராவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வருகை தந்திருந்தனர். திருக்கல்யாண வைபவத்தையொட்டி கோயிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆண்டாள் ரெங்கமன்னார் கல்யாண விருந்து பரிமாறப்பட்டது.