வேட்டைக்குச் சென்ற சோழ மன்னன், கடும் தாகத்தில் தவிக்க... அங்கே இருந்த கரும்புத் தோட்டத்துக்குச் சென்று, ஒரு கரும்பை அப்படியே பிடுங்கிச் சாப்பிட முனைந்தான்.
விளைவு... அங்கிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சி அடைந்த மன்னன் அந்த இடத்தைத் தோண்ட உத்தரவிட, அங்கிருந்து வெளிவந்தது சுயம்புலிங்கம் ஒன்று!
அந்த லிங்க மூர்த்திக்கு ஸ்ரீஆதிநாதர் எனும் திருநாமம் சூட்டி, பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினான் என்கிறது, வயலூர் ஆதிநாதர் ஆலயத்தின் ஸ்தல வரலாறு. அருணகிரிநாதர் உருகி உருகிப் பாடிய தலம் இது. திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், இந்தக் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகளைச் செய்துள்ளார். இது சிவத் தலம் என்றாலும், ஸ்ரீசுப்ரமணியருக்கு அதிகச் சிறப்பு உண்டு.
தேவியர் இருவருடனும் சேர்ந்து முருகப் பெருமான் சிவனாரைப் பூஜிக்கும் தலம் என்பார்கள் பெரியோர்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதடைப்பட்ட திருமணத்தால் கலங்கித் தவிப்பவர்கள், பிள்ளை பாக்கியம் இல்லையே என வருந்துவோர் இங்கு வந்து பிரார்த்தித்தால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும்; வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்பது ஐதீகம்!

இந்தத் தலத்தில் திருமணம் செய்தால், குடும்ப ஒற்றுமையுடன், கருத்து வேற்றுமையின்றி வாழலாம் என்பதால், ஏராளமான அன்பர்கள் இங்கே திருமணம் செய்துகொள்கின்றனர்.
இந்தத் தலத்தின் கூடுதல் சிறப்பு... சதுர தாண்டவக் கோலத்தில் அற்புதத் திருமேனிய ராகக் காட்சி தரும் ஸ்ரீநடராஜப் பெருமான். சதுர தாண்டவக் கோலத்தில் அருளும் இந்தப் பெருமானின் திருவடியில் முயலகன் இல்லை.
இவருக்கு, தில்லை அம்பலவாணனுக்குச் செய்யப் படுவது போலவே, அனைத்து ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.
திருவாதிரை நட்சத்திர நாளில், இங்கு வந்து ஸ்ரீநடராஜருக்கு அபிஷேகம் செய்து வணங்கினால், நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்கின்றனர், பக்தர்கள். தவிர, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டால், கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதிகம்!
- ஆ.பாண்டியன், திருச்சி