திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

உள்ளங்கள் ஒளிரட்டும்!

ஶ்ரீமகாவிஷ்ணு
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீமகாவிஷ்ணு

தீபாவளிக் கதைகள் - பி.என்.பரசுராமன்

பூமாதேவியின் மைந்தன் என்பதால் பெளமன் என்று பெயர் நரகாசுரனுக்கு. தவத்தால் பெற்ற வரத்தால் அதர்மத்தை விதைத்தான் நரகன். நிறைவில் ஶ்ரீகிருஷ்ணன் - சத்யபாமாவால் வதைக்கப்பட்டான். மரணத் தறுவாயில், `இந்த நாளை அதர்மம் அழிந்த ஒளித் திருநாளாகக் கொண்டாட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டான். அதன்படி தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது.

உள்ளங்கள் ஒளிரட்டும்!

தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். ஒளி விழாவாகக் கொண்டாடப்படும் இந்நாளில், நம் உள்ளங்களில் அறியாமை எனும் இருளகற்றி மெய்ஞ்ஞான விளக்கேற்ற வேண்டும் என்பார்கள் பெரியோர்கள்.

அதற்கு உந்துதல் தரும் விசேஷமான புராணச் சம்பவங்களும் திருக்கதைகளும் நிகழ்ந்தது தீபாவளித் திருநாளில்தான். அவற்றில் சில உங்களுக்காக...

ஶ்ரீராமனும் தீபாவளியும்

ரதன் 14 வருடங்களாக ராமனை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ராமன் வருவதாகக் குறிப்பிட்டிருந்த நாளும் வந்துவிட்டது. ஆனால் ராமனோ வந்தபாடில்லை. ‘`எனது சங்கல்பப்படி இன்று அக்னிப்பிரவேசம் செய்யப் போகிறேன்’’ என்று அறிவித்தான்; ‘ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்’ என்று சத்ருக்னனை வற்புறுத்திப் பணித்தான். அக்னி குண்டமும் வளர்க்கப்பட்டது.

உள்ளங்கள் ஒளிரட்டும்!

அவன் அக்னியை வலம் வந்து முடிக்கும் தறுவாயில் ஒரு குரல், `வந்துவிட்டான் ராமன்...’ என்று! ஆமாம், அனுமன்தான் விரைந்து வந்து ராமனின் வருகையை அறிவிக்கிறான். அப்போது பரதனின் நிலை எப்படி இருந்ததாம்?

`வேதியர் தமைத்தொழும் வேந்த ரைத்தொழும்
தாதியர் தமைத் தொழும் தன்னை யே தொழும்
ஏதும் ஒன்று அறிகிலான் இருக்கும் நிற்குமால்
காதல்என் றீதுமோர் கள்ளின் தோற்றிற்றே '
என்கிறார் கம்பர்.

ஆம்! பரதனின் நிலை இப்படி என்றால், அயோத்தி மக்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும். சீதாவுடன் ராமனும் வந்துசேர ‘`அயோத்தி இனி ஒளி பெற, விளக்கேற்றி வை, சீதா!’’ என்று கோசலை பணிக்க, சீதா தீப ஒளி ஏற்றினாள். அயோத்தி மக்களும் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடினார்கள். தீபாவளிக்கான கதைகளில் இதுவும் ஒன்று என்பர்.

மகாபலி பெற்ற வரம்

க்த பிரகலாதனின் பேரன் மகாபலி. பண்பும் பரிவும் கொண்டவன். ஆனாலும், தான் செய்யும் புண்ணிய காரியங்கள் குறித்த கர்வமும் இருந்தது அவனுக்கு. அவன் பெற்றிருந்த வரங்களால் இந்திர பதவிக்கு ஆபத்து வரக்கூடும் என்று தேவர்களும் அச்சத்தில் இருந்தனர். மகாபலியை தடுத்தாட்கொள்ள நினைத்த பரம்பொருள் வாமன அவதாரம் எடுத்தார்.

உள்ளங்கள் ஒளிரட்டும்!

மகாபலி இந்திர பதவி வேண்டி யாகம் செய்து கொண்டிருந்த யாகசாலைக்குச் சென்றார். மகாபலியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டார். ஒப்புக்கொண்டான் மகாபலி. வாமனருக்கு மூன்றடி நிலம் கொடுப்பதாகக் கூறி, தாரை வார்த்துக் கொடுத்தான். மறுகணம் வாமனர் திரிவிக்கிரமனாக விஸ்வரூபம் எடுத்து தம் ஒரு திருவடியால் பூமியை அளந்தார். மற்றொரு திருவடியால் விண்ணை அளந்தார்.

இன்னும் ஓர் அடியை எங்கே வைப்பது என்று கேட்க, மகாபலி தன் தலையைக் காட்ட, பகவான் அவன் தலைமீது மூன்றாவது அடியை வைத்தபடி, ‘`என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டார். மகாபலி ‘`நான் தங்களுக்கு தானம் கொடுத்த சதுர்த்தசி திதியில் மக்கள் எல்லோரும் வரிசையாக தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும்'’ என்று வரம் கேட்டான். பகவானும் அப்படியே அனுக்கிரஹம் செய்தார். இது, மகாபலிக்கான தீபாவளித் திருக்கதை!

திருமகளின் திருமண நாள்

மிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த திருக்கதை நமக்குத் தெரியும். அப்போது, முதலில் ஆலகால விஷம் வந்தது. உலகை காக்கும் பொருட்டு, அந்த விஷத்தை சிவபெருமான் ஏற்று திருநீலகண்டன் ஆனார்.

தொடர்ந்து பாற்கடல் கடையப்பட்டது. அதன் பலனாக அடுத்தடுத்து ஐராவதம், உச்சை ச்ரவஸ், காமதேனு, சந்திரன், மூதேவி ஆகியோர் தோன்றினர். பின்னர் பேரெழில் பெட்டகமாக, கோடி சூரிய பிரகாசத்துடன் திருமகள் தோன்றினாள். அவளை மணந்துகொள்ள அனைவரும் போட்டி போட்டனர்.

உள்ளங்கள் ஒளிரட்டும்!

ஆனால் திருமகள் திருமாலே தனக்குக் கணவனாக வர வேண்டும் என்று விரும்பி, தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தாள். அப்போது மூத்தாள், ‘நானே முதலில் தோன்றியவள் என்பதால், எனக்கே முதலில் திருமணம் நடைபெற வேண்டும்’ என்று வாதிட்டாள். ஆனால், அவளை மனைவியாக ஏற்க ஒருவரும் முன்வரவில்லை.

அப்போது அங்கு வந்த உத்தாலகர் என்ற முனிவர், மூத்தாளை தான் ஏற்றுக்கொள்வதாக கூறி மணந்துகொண்டார்; திருமகளை திருமால் மணந்தார். இருள் போன்ற மூதேவியை ஏற்றுக்கொண்ட உத்தாலகரின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், திருமகளின் திருமண நாளைக் கொண்டாடும் வகையிலும் வரிசையாக தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பார்கள்.

பார்வதியின் விரதக் கதை

பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டுமே வழிபடுபவர். ஒருநாள் கயிலைக்குச் சென்றார். அங்கே, ஸ்வாமியுடன் பார்வதியும் இருந்தாள். ‘ஸ்வாமியை மட்டுமே வணங்கிச் செல்லும் பிருங்கி இன்று நம்மையும் வணங்கட்டுமே’ என்று, ஸ்வாமிக்கு நெருக்கமாக அமர்ந்துகொண்டாள் அம்மை.

உள்ளங்கள் ஒளிரட்டும்!

ஆனால், பிருங்கி முனிவர் வண்டின் உருவமெடுத்து, பரமேஸ்வரனை மட்டும் வலம் வந்து வணங்கி வழிபட்டார். அம்பிகை மனம் வருந்தினாள். தான் வேறு, சிவம் வேறு இல்லை என்பதை உலக மக்களுக்கு உணர்த்த பூலோகம் வந்தாள். பூமியில் கௌதம முனிவரின் ஆசிரமத்தை அடைந்தவள், முனிவரின் ஆலோசனைப்படி கடும் விரதமும் தவமும் இருந்து சிவனாரை வழிபட்டாள். அதன் பலனாக உமையவளுக்கு பரமேஸ்வரரின் திருமேனியில் ஒருபாதி இடம் கிடைத்தது. இந்த அருட்சம்பவம் நிகழ்ந்ததும் ஒரு தீபாவளித் திருநாளில்தான் என்பர்.

அம்பிகை கடைப்பிடித்தது கேதாரீஸ்வர விரதம். இப்போது அம்பிகைக்கும் சேர்த்து கேதாரகௌரி விரதமாகக் கடைப்பிடிக்கிறார்கள். புரட்டாசி மாதம் வளர் பிறை தசமி திதி நாளில் இருந்து துவங்கி ஐப்பசி அமாவாசை வரையிலும் 21 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. இயலாதவர்கள் கடைசிநாளில் மட்டுமாவது விரதம் இருந்து, அம்மையப்பனை அர்த்தநாரீஸ்வர திருவடிவில் தியானித்து வழிபடுவது, சகல நன்மைகளையும் கொண்டு வந்து சேர்க்கும்.