Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

Published:Updated:
வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

ஸ்ரீவீரபிரம்மேந்திரர் இரும்பு காய்ச்சுபவன் கொடுத்த கல் சட்டியை வாங்கி, அதிலிருந்த கொதிக்கும் இரும்புக் குழம்பைப் பருகத் தொடங்கினார். அதைக் கண்ட சீடர்கள் அதிர்ந்துபோனார்கள்.

ஸ்ரீவீரபிரம்மேந்திரர்
ஸ்ரீவீரபிரம்மேந்திரர்


ஸ்வாமியோ பாயசம் பருகுவது போன்று இரும்புக் குழம்பைப் பருகி முடித்ததுடன், ``என் தாகம் தணியவில்லை. இன்னும் கொஞ்சம் இரும்புக் குழம்பைக் காய்ச்சி எடுத்து வா!’’ என்றார். அவன் நடுநடுங்கிப் போனான். ஸ்வாமியின் மகிமையை சடுதியில் உணர்ந்தான்.

கண்களீர் நீர் பெருக நெடுஞ்சாண்கிடையாக அவரின் பாதக் கமலங்களில் விழுந்தான். ``ஸ்வாமி! தக்க பாடம் கிடைத்தது எனக்கு. என்னை மன்னித்து அருளுங்கள்’’ என்று வேண்டினான்.

ஸ்வாமியின் கோபம் தணிந்தது. அவனைக் கனிவுடன் நோக்கியவர், ``குழந்தாய்! நம் பிராணன் தேகம் விடுத்துச் செல்வதற்குள் நம்மால் இயன்ற நற்காரியங்களை இந்தச் சமூகத்துக்குச் செய்யவேண்டும். தாகம் என்று வருபவருக்குத் தண்ணீர் அளிப்பதைக் காட்டிலும் புண்ணிய காரியம் வேறு இருக்க முடியாது. இனி, நீ சாதுக்களைச் சோதிக்க நினைக்காதே. அது உனக்கே ஆபத்தாக முடியும்’’ என்று கூறி அவனைத் தேற்றினார்.

அவன் தெளிந்தான். ஸ்வாமியிடம் ``ஸ்வாமி நீங்கள் தெய்வத்தின் அவதாரம் என்றே கருதுகிறேன். தாங்கள் இன்று ஒருநாள் என் இல்லத்தில் தங்கியிருந்து என் உபசாரத்தை ஏற்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டான். அதன்படியே அன்றிரவு அவன் இல்லத்தில் தங்கி, அவனுக்கு ஞான போதனைகளை வழங்கியவர், மறுநாள் சீடர்களுடன் புறப்பட்டார்.

மக்களை நல்வழிப் படுத்தவும் தர்மத்தை நிலைநாட்டவும் ஞானியர்கள் பல்வேறு தண்டனைகளையும் வரமாக ஏற்றுக் கொள்கின்றனர்.

தொடர்ந்து ஸ்வாமியும் சீடர்களும் மஹாநந்தி கிராமத்தை அடைந்து, அங்குள்ள மகாநந்திஸ்வரரை வழிபட்டுவிட்டு, அங்கிருந்து மீண்டும் நந்தியாலா கிராமத்துக்குச் சென்றனர். அந்தக் கிராமத்தில் வசித்த குறிப்பிட்ட சமூகத்தவர் செல்வந்தர்களாகத் திகழ்ந்தனர். நாம் செல்வந்தர்கள் என்றே பார்க்கலாம். அவர்கள் தங்களின் கிராமத்துக்கு வரும் சாதுக்களைக் கேலி செய்வதையும், அவர்களை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

வீரபிரமேந்திரரையும் அவரின் சீடர்களையும் அவ்வாறே அணுகினர். இவர்களை வரவேற்கவோ உபசரிக்கவோ அவர்கள் முன்வரவில்லை. மட்டுமன்றி, `இவர்கள் வயிற்றை வளர்க்கவே ஊர் ஊராகச் சென்று இப்படிப் பிழைக்கிறார்கள்’ என்று ஸ்வாமியையும் சீடர்களையும் கேலி செய்தனர்.

அந்த ஊரில் நல்லவர்கள் சிலரும் இருந்தனர். ஸ்வாமியை உபசரித்து, அவரிடம் உபதேசம் பெற்று வந்தனர். அதனால் எரிச்சலுற்ற செல்வந்தர்கள், ஸ்வாமியை தரிசிக்கச் செல்லும் அந்த அன்பர்களையும் மிரட்ட ஆரம்பித்தார்கள்.

ஒருநாள் வீரபிரம்மேந்திரர் சீடர்களை அழைத்தார். தாம் செல்வந்தர்கள் இருக்கும் இடத்துக்குத் தனியாகச் சென்று அவர்களைச் சந்திக்கப் போகிறேன். வேறு எவரும் உடன் வரவேண்டாம் என்று அறிவித்தார். சீடர்கள் பதற்றம் அடைந்தார்கள். ``ஆபத்தான காரியம் இது. அவர்கள் ஏளனம் செய்வதோடு மட்டுமன்றி தங்களைத் தாக்கவும் துணியலாம்’’ என்று கூறி தடுக்க முனைந்தனர். ஆனால் ஸ்வாமியோ, அவர்களைச் சமாதானம் செய்துவிட்டுப் புறப்பட்டார்.

செல்வந்தர்கள் தினமும் ஓரிடத்தில் சந்திப்பது வழக்கம். வீரபிரம்மேந்திரர் அந்த இடத்துக்குச் சென்றார். அவர்களின் நடுவில் சென்று அமர்ந்துகொண்டார். அனைவருக்கும் திகைப்பு. ஸ்வாமி அவர்களிடம் ``குழந்தைகளே! எங்கள் மீது ஏன் ஆத்திரத்துடன் இருக்கிறீர்கள். நாங்கள் என்ன தவறு செய்தோம். இந்தச் சாமான்ய சாது. சிறிய முயலைப் போன்றவன். சிறு முயலை பிரம்மாஸ்திரம் கொண்டு தாக்குவது போல் இருக்கிறது உங்களின் அணுகுமுறை. நீங்கள் செல்வந்தர்கள், எங்களைப் போன்ற சாமான்ய சாதுக்களிடம் உங்களைப் போன்றோர் கருணை காட்ட வேண்டாமா?’’ என்று கேட்டார்.

வீரபிரம்மேந்திரர்
வீரபிரம்மேந்திரர்


அவர்களோ ஒருவரையொருவர் பார்த்து கேலி பாவனையுடன் சிரித்துக் கொண்டனர். அவர்களில் ஒருவர் ஸ்வாமியிடம் ``வயிற்றை நிரப்புவதற்காக ஊர் ஊராகச் சுற்றித் திரியும் கூட்டம் நீங்கள். ஒழுங்காக குலத்தொழிலைச் செய்து வந்தால், நீரும் உம்மைச் சார்ந்தோரும் இப்படி அலைய வேண்டிய அவசியம் இல்லையே. செல்வந்தர்களாக இருந்திருக்கலாமே...’’ என்று கூற, மற்றவர்கள் சிரித்தனர்.

ஸ்வாமி, ``ஒருவிதத்தில் நீங்கள் சொல்வது சரியென்றே வைத்துக் கொள்வோம். நாங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக இவ்வாறு செய்தாலும் நீங்கள் என்ன செய்யவேண்டும்? இறைவன் உங்களுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. அவ்வாறிருக்க, உங்களைப் போன்ற செல்வந்தர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் எங்களைப்போன்ற சாதுக்களுக்கும் ஏழைகளுக்கும் உதவவில்லை எனில், வேறு யார் உதவுவார்கள்...’’ என்றார்.

ஸ்வாமியின் பேச்சு அவர்களின் மனதைக் கரைத்தது போலும். தங்கள் நிலையிலிருந்து சற்று இறங்கி வந்தார்கள். அப்போதும் அவர்களின் அகங்காரம் நீங்கவில்லை. ``சரி... சரி... இப்போது உங்களுக்கு எவ்வளவு உணவு தேவைப்படும்? சில நிமிடங்களில் தயார் செய்துவிட்டு அழைக்கிறோம்’’ என்றார்கள்.

``எவ்வளவு அளித்தாலும் உண்ணத் தயாராக இருக்கிறோம். பல நாட்களாக தேவையான உணவின்றி இருக்கிறோம்’’ என்றார் ஸ்வாமி.

``100 கிலோ உணவு தயார் செய்கிறோம். உமக்கும் உம் சீடர்களுக்கும் பத்து நாள்களுக்கு உணவுக்குக் கவலை இருக்காது!’’ என்றனர்.

``ஆஹா அவ்வாறே செய்யுங்கள்’’ என்று கூறிய ஸ்வாமி சீடர்களிடம் வந்து அவர்களை அழைத்துக்கொண்டு நீராடச் சென்றார். அனைவரும் நீராடிய பிறகு உணவு உபசரிக்கும் இடத்துக்கு வந்தனர். அங்கு உணவு மலைபோல் குவிக்கப்பட்டிருந்தது. அங்கும் செல்வந்தர்களின் அகங்காரம் வெளிப்பட்டது என்றே சொல்லலாம்.

அந்த இடம் ஊரின் நடுவில் அனைவரும் பார்க்கும்படியாக இருந்தது. இலை போடப்படுவதற்குமுன் சித்தய்யாவை அழைத்தார் ஸ்வாமி.

``சித்தா! இங்கே வந்து உட்கார். உன்னால் இங்கு மலைபோல் குவிக்கப் பட்டிருக்கும் உணவை விரைந்து உண்ண முடியுமா?’’ எனக் கேட்டார்.

``உங்களின் அருள் இருந்தால் எதுவும் சாத்தியமே’’ என்றார் சித்தய்யா.

``எனில், இந்தச் சோற்று மலையை நிமிட நேரத்துக்குள் நீ காலிசெய்து விடு’’ என்று கூறி சித்தய்யாவின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்ததுடன், சோற்றுக் குவியலில் ஒருபிடி எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டார் ஸ்வாமி. சித்தய்யா உணவின் எதிரில் சென்று அமர்ந்தார். அவர் வாயைத் திறந்ததும்தான் தாமதம், மலைபோல் குவிக்கப்பட்டிருந்த உணவு வகைகள் அவரின் வாய்க்குள் தஞ்சம் புகுந்தன. நிமிட நேரத்துக்குள் அனைத்தையும் விழுங்கி முடித்தார் சித்தய்யா.

வீரபிரம்மேந்திரர்
வீரபிரம்மேந்திரர்

செல்வந்தர்களும் ஊர்க்காரர்களும் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தார்கள். சித்தய்யாவின் கண்களோ ரத்தச் சிவப்பாக் காட்சியளித்தன. அவர் செல்வந்தர்களை நோக்கி ``என் பசி அடங்கவில்லை. இன்னும் நிறைய உணவைக் கொண்டு வாருங்கள்’’ என்று கூக்குரலிட்டார்.

செய்வதறியாது திகைத்துப்போயினர் செல்வந்தர்கள். அவர்களில் ஒருவர் ``ஸ்வாமியின் பாதங்களைப் பற்றி மன்னிப்பு கோருவதே வழி’’ என்றார். அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஸ்வாமியின் பாதங்களில் விழுந்து மன்னிப்பு வேண்டினர். ``கர்வத்தால் அறிவிழந்து போனோம்... மன்னியுங்கள்’’ என்றனர்.

வீரபிரம்மேந்திரர் புன்னகைத்தார். ``இப்போது புலம்பி என்ன பயன். என் சீடன் பசி பொறுக்கமாட்டான். தாமதித்தால் நம் எல்லோரையுமே விழுங்கிவிடுவான். ஆகையால் உடனடியாகச் சென்று நீங்கள் பல தலைமுறையாகச் சேர்த்துவைத்திருக்கும் பொருளையெல்லாம் செலவழித்து அவனுக்கு வேண்டிய உணவை ஏற்பாடு செய்யுங்கள்!’’ என்றார்.

செல்வந்தர்களோ ஆடிப்போனார்கள். ``சுவாமி! எங்கள் அகந்தை ஒழிந்தது. நாங்கள் பேசியதும் நடந்துகொண்டதும் தவறு. மன்னிக்க முடியாத குற்றம். ஒப்புக் கொள்கிறோம். என்ன செய்தாலும், எவ்வளவு காலம் ஆனாலும் தங்கள் சீடருக்கு எங்களால் உணவளிக்க இயலாது. கருணையுடன் எங்களை மன்னித்துக் காப்பாற்றுங்கள்.

சுவாமி கனிவுடன் அவர்களைப் பார்த்தார். ``நீங்கள் மனம் திருந்தியதே போதுமானது. இறையருளால் சேர்த்த செல்வத்தை ஏழை எளியவர்களுக்கும் சாதுக்களுக்கும் உதவிசெய்ய பயன்படுதுவது பெரும் புண்ணியம் ஆகும். பொருளைச் சேர்ப்பதைக் காட்டிலும் புண்ணியத்தைத் தேடுங்கள்’’ என்று அவர்களுக்கு ஆசிபுரிந்தார்.

பின்னர் சித்தய்யாவை நெருங்கியவர், ``சித்தய்யா! இந்தக் குழந்தைகள் இழைத்த தவறை மன்னித்துவிடு. அமைதியாக நான் அளிக்கும் உணவைப் பெற்றுக்கொண்டு சாந்தம் அடைவாயாக!’’ எனக் கூறி, தான் ஏற்கெனவே எடுத்துவைத்திருந்த பிடிசாதத்தை சித்தய்யாவுக்கு ஊட்டிவிட்டார்.

என்ன அற்புதம்... சித்தய்யாவுக்குப் பசி அடங்கியது. அவர் பழைய நிலையை அடைந்தார்.

இந்தச் சம்பவம் ஸ்வாமி வீரபிரம்மேந்திரரின் மகிமையை எட்டுத் திக்கும் பறை சாற்றியது. அவரின் அற்புதங்கள் தொடர்ந்தன.

- தரிசிப்போம்...

இறைவனின் அங்கங்கள் - ஆகமங்கள்!

ஆகமங்கள்
ஆகமங்கள்


சைவ ஆகமங்கள் இருபத்தெட்டு. அவை இறைவனின் அங்கங்களாகச்

சொல்லப்பட்டிருக்கின்றன. அபூர்வமான அந்தத் தகவல்கள் உங்களுக்காக....

காமிகம்: இறைவனின் திருவடிகள்

யோகசம்: கணைக் கால்கள்

சிந்தியம்: திருவடி விரல்கள்

காரணம்: கெண்டைக் கால்கள்

அசிதம்: முழங்கால்கள்

தீப்தம்: தொடைகள்

சூக்குமம் : குஹ்ய ஸ்தானம்

சகச்சிரம்: இடுப்பு

அஞ்சுமான்: முதுகு

சுப்பிரபேதம்: தொப்புள்

விசயம்: வயிறு

நிச்சுவாசம்: இதயம்

சுவாயம்புவம்: மார்பு

அனலம் (ஆக்னேயம்) : திருக்கண்கள்

வீரம்: கழுத்து

ரௌரவம்: காதுகள்

மகுடம்: கிரீடம்

விமலம்: கைகள்

சந்திரஞானம்: நெஞ்சுப் பகுதி

விம்பம்: திருமுகம்

புரோ(ற்)த்கீதம்: நாக்கு

இலளிதம்: கன்னங்கள்

சித்தம்: நெற்றி

சந்தானம்: குண்டலம்,

சர்வோத்தம்: முப்புரிநூல்

பாரமேசுரம்: மாலை

கிரணம் (காலோத்ரம்): நாடிகள் மற்றும் பிராண வாயு

வாதுளம் : நைவேத்தியமாகச் சொல்லப்பட்டுள்ளது